கைகாட்டி

This entry is part [part not set] of 14 in the series 20010318_Issue

தி.ஜானகிராமன்


இடம்–வடசென்னை.

காலம்–விடியற்காலை.

ஒரு மிக நீளத் தெருவின் கோடியில் ஒரு கடை இன்னும் திறக்கவில்லை. திறந்த பிறகு தான் வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட்கடையா, மளிகைக்கடையா, ரிப்பன்–வளையல் குங்குமம்–சவுரி கடையா என்று தெரியும்.

கடைக்கதவுகளுக்கு முன்னால் நாலு சவுக்கைக் கழிகள் மேல் போட்டிருக்கிற பலகை. கீழே சாக்கடை. பலகை மேல் ஒரு ஆசாமி படுக்கலாம். படுத்திருக்கிறார். கண்ணைத் திறந்து படுத்திருக்கிறார். கால் மணிக்கு முன்பு ஒரு காக்காய்க் கூட்டம் கத்திக் கத்தி அவர் தூக்கத்தைக் கலைத்து விட்டது. எல்லாம் பறந்து போய் மிச்சம் இரண்டு காக்காய் எதிர் வீட்டு மாடிக்கூரையில் உட்கார்ந்து கரைந்து கொண்டிருக்கிறது.

‘காலங்காத்தாலெ கூரை மேலே காக்கா கத்தினா விருந்து வரும். கத்துறதைக் கேட்டவங்களுக்குத் தானே ‘ மாடியிலெ குடக்கூலிக்கு இருக்கிறவங்க தூங்கிக்கினு இருக்காங்க. கீளெ ஊட்டுக்காரங்களுக்கும் தூக்கம். தெரு முளுக்க உறங்குது. சாணச் சத்தம் கூட கேக்கலெ. அப்பன்னா. காக்கா கத்தினதை நான் தானே கேட்டுக்கினே இருக்கேன். அப்ப நம்ம ஊட்டுக்கு விருந்தா ஹ்ஊம் ‘ நல்ல தமாசு ‘ நம்ம ஊடு பேசின்ப்ரிஜ்ஜாண்ட காவா ஓரமா அப்பன்னா எனக்கா விருந்து ‘ நல்ல தமாசுதான் போ. ‘

இதையெல்லாம் நினைத்துக் கொண்டே அவர் எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்து வேட்டியைச் சரிப்படுத்திக் கொண்டு கண்ணைக் கசக்கி தெரு நீளம் முழுவதையும் வடக்காலும் தெற்காலும் பார்க்கிறார். நடமாட்டம் இல்லை.

தெற்கே தெரு மத்தியில் யாரோ நடந்து வருவது தெரிகிறது. சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு வருகிறார். தெருவுக்கு நடுவின் ஒரு சந்தின் முன் நின்று பலகையைப் பார்த்து விட்டு மீண்டும் நடந்து வருகிறார். கடை முன் வந்து விட்டார். பேட்டைக்குப் புது ஆசாமி போல் இருக்கிறது.

‘மேஸ்த்ரி சந்துக்கு எப்படிப் போறது ? ‘

‘மேஸ்த்ரி சந்தா ? ‘

‘ஆமா, ‘

‘ரொம்ப தொலைவு வந்திட்டியே. அது இந்தக் கோடிலெல்ல இருக்குது. ‘

‘இல்லெ இந்தக் கோடிக்கு அப்பாலெ தான் இருக்காம். ‘

‘இந்தக் கோடிக்கு அப்பாலென்னா–கொஞ்சம் இரு….ஆமா. இங்கியும் இருக்குது, ஆனா மேஸ்திரி சந்து ரண்டு இருக்குதே. அர்ணாஸல மேஸ்திரி சந்துன்னு ஒண்ணு இருக்கு. பெரியண்ண மேஸ்திரி சந்துன்னு ஒண்ணு. அதுவும் ரோடு தாண்டி மூலக் கொத்தலம் போறவளியிலெ போய் அப்பாலெ சின்மா தியேட்டர் தாண்டில்ல போகணும். ‘

‘டி.ஏ.மேஸ்திரி சந்துன்னு சொன்னாங்க. ‘

‘டி.ஏ.மேஸ்த்ரி சந்துன்னா இரு இரு தோப்பு அருணால மேஸ்த்ரி சந்தா ? ‘

‘டி.ஏ.மேஸ்த்ரி சந்து. தோப்பு அர்ணாசல மேஸ்த்திரி சந்து. டி.ஏ. மேஸ்திரின்னா தோப்பு அர்ணாசல மேஸ்த்திரி சந்துன்னுதான் இருக்கணும். ‘

‘ஆமா. அதேதான். ‘

‘அதானே பாத்தேன். பெரியண்ண மேஸ்த்திரியில்லேன்னா தோப்பு அர்ணாசல மேஸ்த்ரி சந்தாதான் இருக்கோணும். ‘

‘கிட்டத்தால் இருக்கா ? ‘

‘ரொம்ப கிட்டவும் இல்லே. தொலைவும் இல்லே.நீங்க எங்கேர்ந்து வர்றீங்க ? ‘

‘சைதாப்பேட்டையிலேருந்து. ‘

‘பஸ்லே வறீங்களா ? ‘

‘ட்ரெய்ன்லே வந்தேன். ‘

‘எலெட்டி ட்ரெய்ன்லே ? ‘

‘ஆமா ‘ ‘

‘பீச் டேஸன்லே எறங்கி வறீங்களா ? ‘

‘ஆமா ‘ ‘

‘அதான் இமாம் தொலைவு நடந்து வறீங்க. பீச் டேசன் எங்க இருக்கு ? தோப்பு அர்ணாசலமேஸ்த்திரி தெரு எங்க இருக்கு ? அட கடவுளே பஸ்லே வந்திருந்தீங்கன்னா இம்மாந் தொலைவு நடக்க வாணாமே. சின்மாவைத்தாண்டி, லாண்ட்ரிக்கு முன்னால ஸ்டாப்பு இருக்கு. அங்க எறங்கினீன்னா அங்கேர்ந்து அஞ்சே நிமிசம். போயிருக்கலாமே ‘

‘சைதாப்பேட்டையிலேர்ந்து நேரா பஸ் இல்லியே. ‘

‘இல்லாட்டி என்னா ‘ பீச் ஸ்டேசன்லே எறங்கினீல்ல. அங்கேர்ந்து ஒரு நிமிசம் நடந்தா கப்பல் ஆபீசு. அங்கேர்ந்து திருவொத்தியூரு, தண்டையார்பேட்டை, ராயபுரம் அல்லாத்துக்கும் பஸ் ஓடுதே. ‘

‘நான் பீச் டேசன்லே வந்தப்ப ஒரு பஸ்ஸ்உம் வல்லியே. ‘

‘இன்னா வல்லே. காலங்காத்தாலே எந்திரிச்சா டஜன் டஜனா பஸ் ஓடுது– ‘

‘என்னமோ–நான் நடந்து வந்திட்டேன். இப்ப இப்படி நேரபோலாம்ல. ‘

‘நேரப் போயி பீச்சக்கைப் பக்கம் திரும்பனும், அப்பாலே ஏழு கெணறு வரும். அப்பாலே சோத்துக் கைப்பக்கம் திரும்பனும்….அப்பால குறுக்காலே போனும்னா மாதா கோயில் தெருவிலே திரும்பி–நேர நடந்து அங்க ஒரு சைக்கிள் கடையிருக்கு.– அதுக்கு எதிரா பேரி கிஷ்டய்யா தெருவிலே நடந்துக்கினே போனா, ஒரு ரொட்டி கடை, அதுக்கப்பால் தம்மாத்தூண்டு ஒரு காளியம்மன் கோயிலு இருக்கு. பச்சை பெயிண்ட் அடிச்சிருப்பாங்க அத்தோட கம்பிக் கதவுக்கு. எதுக்கு சொல்றேன்னா அதுக்கு கொஞ்சம் தோலவிலே ஒரு புள்ளையார் கோயில் இருக்கு அதுக்குப் பக்கத்திலேயும் ஒரு சந்து இருக்குது. நீ அந்த சந்திலே பொக கூடாதுன்னு சொல்றேன். காளி கோயிலுக்குப் பக்கத்து சந்திலெதான் போவனும், அதுலே போயி ராயப்பன் சாமியார் தெருவுலெ போனே, நேரா தோப்பு அர்ணாசல மேஸ்த்ரி சந்துக்குள்ளார போயிடலாம். சாமியார் தெரு பாதிக்கு மேலே இருக்கறதுதான் தோப்பு அர்ணாசல மேஸ்த்ரி சந்து. அதை சாமியார் தெருவுன்னே சொல்லுவாங்க– ‘

‘ரொம்பவும் சுத்தலா இருக்கும்போல் இருக்கே. ‘

‘அதுக்கு என்ன செய்யிறதாம் குறுக்குப் பாதையா ஜல்தி போவோணும்னா இத்தான் –லெப்ட்டு ரைட்டெல்லாம். கவனமா வச்சிகினுபோவோணும். ‘

‘நேர் ரோட்லே போனா ? ‘

‘போலாம். இந்த மாதிரி ரண்டு தொலவாகும். இப்படியே ரோடுக்குப் போனா ஏழுகிணறாண்ட சைக்கிள் ரிக்ஷா நிற்கும். மூண் ரூபா கேப்பாங்க. ‘

‘மூண் ரூபாயா ? ‘

‘மூண் ரூபா கேப்பாங்க, நீ போய்க்கினே இரு. பின்னாலியே வண்டியைத் தள்ளிகினெ வருவான். ரண்டு ரூவாக்கு மேல தரமுடியாதப்பான்னு சொல்லு–ஏறு சாமிம்பான். ‘

‘ரண்டு ரூவாயா ? ‘

‘ரண்டு ரூவா தரக்கூடாதா ? சின்மாக்குப் போறதுக்கு முன்னாலெ ரண்டு ஏத்தம் வருது. மிதிச்சாக்காலுதான் ஒடயும். ரண்டு ஏத்தத்திலேயே அது அல்லாம் வேத்தே போயிரும். குறுக்குப் பாதையிலியும் போவாங்க. அது ரொம்ப பேஜாரு. சந்திலெ எருமை கட்டியிருப்பாங்க. எச்சிக்கலெ போட்டிருப்பாங்க. சாக்கடெ வெட்டி உட்ருப்பாங்க ஒடிச்சு ஒடிச்சு திருப்புவாங்க. லொங்கா லொங்கான்னு சாக்கடையிலே உயுந்து உயுந்து ஏறணும். முதுகு குந்துற பட்டையெல்லாம் இடிச்சு இடிச்சு நோவு கண்டு போகும். ‘

‘சரி–எப்படியோ பாக்கறேன் வரேன்யா ரொம்ப தாங்க்ஸ். ‘

‘அவ்ளோ தானா ? ‘

‘– ‘

‘சார் ‘ ‘

‘என்னாய்யா ? ‘

‘அவ்ளோதானா ? ‘

‘என்ன ‘ ‘

‘அவ்ளோதானான்றென். ‘

‘அப்படான்னா ‘ ‘

‘சொம்மா பேசாத போறியே ‘ ‘

‘என்னய்யா சொல்றே நீயி ‘ ‘

‘என்ன சொல்றேனா ‘ இம்மாந்தூரம் சொல்லியிருக்கேன் அல்லாம் தெரிஞ்சிக்கினு சொம்மா போயிக்கினேக்கிறியே ‘ ‘

‘சும்மா போறன்னா ? ‘

‘நான் சொன்னாத்தான் தெரியுமா உனக்கு ‘ காலங்கார்த்தாலெ சொம்மா குந்தியிருந்த ஆளைக் கூப்டு எல்லாம் கேட்டுக்கினே. நானும் இம்மா நேரம் தொண்டை தண்ணி போகச் சொல்லிகினே இருந்தேன்… ‘

‘தொண்டைத் தண்ணிபோகவா ‘ ‘

‘ஆமா, நீ சொம்மா மேஸ்த்ரி சந்துன்னுதான் சொன்னே. தோப்பு அர்ணாசல மேஸ்த்ரி சந்துனு நானா உன்னெக்கேட்டுத் தெரிஞ்சுக்கினேன். வெளக்கமா போற பாதை சொன்னேன். இல்லாட்டி நீ எங்கெல்லாம் போயி கஷ்டப்பட்டிருப்பெ ‘ உன்னெ ரிக்சாக்காரன் இதோ இதோன்னு தண்டையார்பேட்டை ராயபுரம்லாம் சுத்தி இட்டுகினு போயி அஞ்சு ரூவா பறிச்சிருப்பானே. நான் ஒழுங்கா. கரெக்டா சொன்னேன். நீ அல்லாத்தியும் கேட்டுக்கினு பேசாம போறே ‘ எனக்கு நல்லா வேணும் ‘…

‘காசு வேணுமா; ‘

‘என்னா சார் அப்படி கேட்டிட்டே ‘ நான் பிச்சையா கேக்கறேன் ‘ ‘

‘இது என்னவாம் ?…. ‘

‘என்னா சார் நாலணா கொடுக்கிறே ‘ ஒரு சிங்கிலே நாப்பது பைசா. இப்பல்லாம். ரண்டு இட்லி அம்பது பைசா சார். டூர்ஷ்ட் பஸ்லெ அதோ பாருங்க இதோ பாருங்கன்னு கைகாட்டி கில்லாடிப் பையனுக்கெல்லாம் எனாமே ஆளுக்கு எட்டணா ஒரு ரூவான்னு கொடுக்கறாங்க–இன்னா சார் ‘ ‘

‘உன்னோட பேசிக்கிட்டிருக்கிற நேரம் நான் மேஸ்த்ரி தெருக்கே போயிருக்கலாம் போல்ருக்கே. ‘

‘எந்த மேஸ்த்ரி தெருக்கு சார் போயிருப்பே ? ‘

Series Navigation

- தி. ஜானகிராமன்

- தி. ஜானகிராமன்