கே.ஆர்.மணியின் கவிதைகள் பழைய மரபும் படியும் காமமும்

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

வளவ.துரையன்


வாழ்க்கை மிகவும் வியப்புக்குரியதாக இருக்கிறது. எத்தகைய மாந்தனுக்கும் அதன் சூட்சுமங்கள் புரிவதில்லை. அதன் ஓட்டத்தில் பல சமயங்களில் திட்டமிட்டவை நடப்பதில்லை. திடீரென எதிர்ப்படும் நிக்வுகளைத் தாங்கமுடிவதில்லை. இதைத்தான் ஆற்றோட்ட வழியில் செல்லும் தெப்பம் போன்ற வாழ்க்கை என்றார் கணியன் பூங்குன்றனார்.

கே.ஆர்.மணி எழுதி புதிதாக வெளிவந்திருக்கும் கவியைத் தொகுதி “மெட்ரோ பட்டாம்பச்சி”. பறந்துகொண்டே இருக்கும், பலவித நிறங்களால் மயக்கிக்கொண்டே இருக்கும் பட்டாம்பூச்சி நகரத்துக்குப் பொருத்தான படிமம். மகா மசானமாக புதுமைப்பித்தனுக்குத் தோன்றிய நகரம் கே.ஆர்.மணிக்கு பட்டாம்பூச்சியாகத் தோன்றியிருக்கிறது. மணியின் கவிதைகளில் காணப்படும் வேகம் ஒரு பொதுஇயல்பாகவும் நகர வாழ்வுக்குப் பொருத்தமானதாகவும் அமைந்துள்ளது. உற்சாகமாகப் படிக்கும் வகையில் பல கவிதைகள் விளங்குகின்றன.

அரசியல்வாதியோ, அறிவியல் அறிஞரோ, ஆன்மிகவழியில்நடப்பவரோ எவருக்கும் வாழ்க்கை பிடிபடாததைக் கவிதையில் சரியாகக் கணித்துள்ளார் கே.ஆர்.மணி. “இந்தக் கணம் / அமைதியாய் அழகாயிருக்கிறது/ சந்தோளஷமாயிருக்கிறது போனகணம்/ துக்கங்களின் சுமைகளோடு/ கனமாயிருந்தது/ ஏன் அது அப்படியிருந்தது/ இது இப்படியிருக்கிறது/ என்று புரியவுமில்லை/ புரிய முயற்சித்தலில் பிடிபடவுமில்லை” என்னும் கவிதை எல்லாருடைய உள்மன ஆழத்தின் வெளிப்பாடாக இருப்பதால் எளிதாக உள்வாங்கமுடிகிறது.

“சங்க இலக்கியமும் மரபுக்கவிதைகளும் நன்கு படித்து உள்வாங்கியவர்களால் நவீனகவிதையை மிகநன்றாக எழுதமுடியும்” என்பார் விக்ரமாதித்யன். அதுவும் மணியைப்போன்று மும்மையின் பெருநகர இயந்திர வாழ்வில் ஈடுபட்டவர்களுக்குத் தங்களின் மரபான வாழ்வும் சிறுவயதின் நிகழ்வுகளும் அடிக்கடி மனத்தில் தோன்றுவது இயல்பான ஒன்றுதான். தாத்தா, பாட்டியின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடந்தவர்களால் அவர்களுடன் படுத்துக்கொண்டு கதைகள் கேட்டவர்களால் அவர்களை எளிதில் மறந்துவிட இயலுமா?
“நீ இறந்தது நிஜம்/ ஆனாலும் நான் உன்னைத் தேடுவேன்/ தேடிக்கொண்டே இருப்பேன்/ என் மனைவியாய் மகனாய்/ பேத்தியாய் சுற்றமாய்” என்ற வரிகள் பாட்டியைமட்டும் குறிப்பிடுவனாக இல்லாமல் மறந்த உறவ,களை, மறைந்துபோன மரபுகளை, குணாதியசங்களைக் குறியீடாகக் காட்டுகிறது.
ஆனால் தாத்தாவை, அப்பா வெறுத்து, அப்பாவைப் பிள்ளை வெறுத்ததெல்லாம் போதும். அவனது பேரன். உள்ளேயும் உதட்டிலும் /வெறுக்காதிருப்பான் என்ற அடிகள் கவிஞரின் உறவுபற்றி எதிர்கால நம்பிக்கையைக் காட்டுகின்றன. நான் நகரத்தான் என்னும் கவிதையும் கடந்துபோன சிறுவயதின் கிராம வாழ்வை எண்ணிப்புலம்புகிறது. ஆனாலும் வாழ்க்கையை வாழ்ந்துதானே தொலைக்கவேண்டியிருக்கிறது. அதனால்தான் கவிஞர் “நானும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” என்று முடிக்கிறார்.

இத்தொகுப்பின் சில கவிதைகள் காமம் குறித்து நிறைய பேசுகின்றன. அடையத் துடிக்கும் முன்னால் இருக்கும் ஆசையும் அவசரமும் ஆர்வமும் காமத்தை முடித்தபிறகு காணாமற் போகின்றது. மோகமுள் நாவலின் நாயகி யமுனா கேட்பதுபோல இதற்காகத்தானா என்று அசதி ஏற்படுத்துகிறது. “அப்படி ஒன்றும் /பெரியதாய்ப் பொக்கிஷம் /கிடைத்துவிடப் போவதில்லை/ எதற்காக அலைகிறது/ இவன் உடம்பு முழுக்க / எல்லாம் தெரிந்தும்” என்று கவிதை முடியும்போது உண்மை உணரப்படுகிறது.

இதேபோல காமத்தை மீற முடியாமல் தத்தளிப்பதையும் மணி அந்தக் காமவேர்ச்சொல்லைக் /கத்தரிக்க வாய்ப்பிருந்தும் / ஏன் மறுத்துவிட்டேன் என்று/ பிடிபடவேயில்லை என்று எழுதும்போது அவரின் உணர்வு எல்லாரும் அறிந்த ஒன்றாக இருக்கிறது.

ஆணின் வைதவ்யம் பற்றி யாருமே அதிகம் எழுதவில்லை. மணியின் கவிதை பேசுவது பாராட்டுக்குரியது.
கிராமமோ, நகரமோ அடைமழை பொழியும் போது தாபாகவே பல இடர்கள் தோன்றுகின்றன. அதுவும் மும்பையில் நானே நேரடியாய் அதை அனுபவித்திருக்கிறேன். மணியின் மழைக்கால அவஸ்தைகள் கவிதை மழைக்காலத்தில் நமக்கு ஏற்படும் தொல்லைகளைப் பட்டியலிடுகிறது. அதற்காக மழை வேண்டாம் என்று சொல்லமுடியுமா? மழையை வெறுத்துவிட இயலுமா? முடியாதல்லவா? அதனால்தான் அக்கவிதை இப்படி முடிகிறது “இத்தனை எரிச்சலுக்குப் / பிறகும் / எனக்குள் ஒரு குழந்தை/ அடைமழையாய்த் தவம்”

கவிஞர் தன் கவிதைகளை மறுவாசிப்புக்குட்படுத்த இருந்தால் “ஒரு புத்தகம் போடவேண்டும்”, “நாம் கே வாஸ்தே”, “கொசு”, “காலம்”, “யானை வரும் முன்னே” போன்ற கவிதைகளைத் தொகுப்பில் சேர்க்காமல் தவிர்த்திருக்கலாம். நவீன இலக்கியப் படைப்பாளர்களுக்கு மொழியைப்பற்றிய அக்கறை இல்லை என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டு. கவிதைகளில் பல பிறமொழிச்சொற்களைத் தவிர்த்திருக்கலாம். தலைப்பகளும் அப்படியே . மும்பைவாசியாகிவிட்டதால் முடியவில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால் தொகுப்பை வாசித்துமுடித்ததும் இனம்புரியாத கவிதைமனப் பித்துணர்வும் மகிழ்ச்சியும் தோன்றியது உண்மை.

Series Navigation

வளவ.துரையன்

வளவ.துரையன்