இலவசக் கொத்தனார்
தலையெழுத்து பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் குறுக்கெழுத்து தெரியுமா? தெரிய வைப்பதற்கான ஒரு சிறிய முயற்சி இது. குறுக்கெழுத்து பொதுவாக இரு வகைப்படும். நேரடியாகக் கேள்வி ஒன்றை கேட்டு அதற்கான விடையை கட்டங்களில் நிரப்புவது என்பது முதல் வகை. ஆங்கிலத்தில் இவற்றை Quick Clues எனச் சொல்லுவார்கள். நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்து வெவ்வேறு கோணங்களில் யோசித்து விடை கண்டுபிடிப்பது இரண்டாம் வகை. இவை Cryptic Clues என்ற வகையைச் சாரும். இந்த வகைப் புதிர்களே ஆர்வலர்களுக்கு மிகுந்த சுவாரசியம் தருபவை. இந்த முறைப் புதிர்களை அவ்வப்பொழுது திண்ணையில் தரலாம் என்பது என் எண்ணம்.
பொதுவாக குறிப்புகள் இரண்டு பாகங்களாக இருக்கும். ஒரு பகுதி விடையின் பொருளை தருவதாகவும் மற்றொரு பகுதி அந்த விடையை அடைய ஒரு வித்தியாசமான கோணத்தை தருவதாகவும் இருக்கும். உதாரணமாக ”குதிரையைக் குளிப்பாட்டினால் தூய்மையாகுமே (6)” என்று ஒரு குறிப்பு இருந்தால் குதிரை என்றால் பரி, குளிப்பாட்டுவது என்பது சுத்தம் செய்வது. இரண்டும் சேர்ந்தால் பரிசுத்தம் அதாவது தூய்மை ஆகிறது. ஆக பரிசுத்தம் என்பது இந்தக் குறிப்பிற்கான விடை. இன்னும் சில உதாரணங்கள் பார்த்தோமானால்.
நடு இரவில் சூரியன்! (2)
விடை: ரவி. இதன் பொருள் சூரியன், இந்த விடையே `இரவில்’ என்ற வார்த்தையின்நடுவில் வந்துள்ளது.
லக்ஷ்மி தமிழ்ப்பெண்ணாக முடியாவிட்டாலும் குறிக்கோளை அடைவாள் (4)
விடை: இலக்கு. இந்த வார்த்தையின் அர்த்தம்`குறிக்கோள்’. லக்ஷ்மி எப்படித் தமிழ்ப் பெண்ணாவாள்? `இலக்குமி’ என்றாகும்போது! `இலக்குமி’ என்ற வார்த்தை முடியாவிட்டால் (அதாவது, முழுதாக வராவிட்டால்) விடை வரும்.
தொடர்ந்து போடப் போட இந்த முறைகள் எளிதாகக் கைவசப்படும். தமிழில் இது போன்ற புதிர்கள் மிகவும் குறைவு. டாக்டர் வாஞ்சிநாதன் மட்டுமே எனக்குத் தெரிந்து அம்பலம், தென்றல் என தொடர்ந்து புதிர்கள் அளித்து வருகிறார். மேற்கண்ட உதாரணங்கள் அவரின் கைவரிசைதான். என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் அவருக்கு நன்றி. இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.