அஸ்வகோஷ்
சிலுசிலுக்கும் காலைக் காற்று. சூடேறி வரும் வெளுப்பு வெயில். மொட்டைமாடியில் நெல்மணிகள் காயப்போட்டிருந்தார்கள்.
‘கீச்கீச் ‘ சென்று சிட்டுக்குருவிகள், நெல்மணிகளைக் கொறித்துக் கொண்டிருந்தன. காச்மூச்சென்று சப்தம். சின்ன சலனம் ஏற்பட்டால் கூடப் போதும், கும்பலாக சிறகடித்துப் பறந்து சென்றன; பிறகு தயங்கித் தயங்கி, கட்டைச்சுவரில் உட்கார்ந்து, கூரையில் உட்கார்ந்து மறுபடியும் நெல்மணிகளை வந்து கொறித்தன.
ஒரு பக்கம் நெல் பரப்பின் அடுத்த முனையில் ஒரு குருவி–பார்வைக்கு சிட்டுக் குருவி மாதிரியேயிருந்தது. ஆனால் சிட்டுக்குருவியில்லை. கொஞ்சம் வித்யாசம். கழுத்தில் கருப்பாக வட்டம் போட்டுத் தெரிந்தது. தனியா மற்ற குருவிகளுக்காக அஞ்சி தயங்கித் தயங்கி அதுவும் வந்து நெல்மணிகளைக் கொத்தியது.
அதன் அழகை ரசித்தபடியே, வேடிக்கை பார்த்துக் குந்தியிருந்தேன். நெல்லுக்கு நான் காவல்.திடாரென்று சிட்டுக்குருவிகள் பெரிய குரலில் கீச்சிட்டன. தனியாகத் தெரிந்த குருவியின்மீது விழுந்து தாக்கின, பறந்து பறந்து கிரீச்சிட்டன. தனிக்குருவி தப்பிப் பறக்க முயன்றது. ஆனால் அவைகள் விடாமல் துரத்திச் சென்றன. பக்கத்து வீட்டுக் கூரையின் மேல் போராட்டம். அவை எங்கெங்கோ கொத்தி அதை சின்னாபின்னாமாக்கின. நாலைந்து பிஞ்சுச் சிறகுகள் காற்றிலே பறந்தன. தனிக்குருவி எங்கோ மறைந்துபோய்விட்டது.
எனக்கு அது நினைவுக்கு வந்தது. போன வருஷம் நடந்தது அது. சினேகிதன் ஒருவனின் கல்யாணம். ரொம்ப நெருங்கியவன். கூடப்படித்தவன். உள்ளூரிலேயே கல்யாணம்.
நல்லபடியாகவே நடந்துமுடிந்தது. மத்தியான விருந்து நடந்து கொண்டிருந்தது. நண்பர்களெல்லாம் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். யார் யார் கல்யாணத்துச் சாப்பாட்டைப் பற்றியெல்லாமோ பேச்சு வந்தது. சில பேர் சாப்பாடு பற்றி ருசியா அபிப்பிராயம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
பந்திக் கோடியில் ஏதோ தகராறு நடந்துவிட்டது. ஜரிகை அங்கவஸ்திரம் இடுப்பில் கட்டியிருந்த பெரியவர் ஒருவர், ‘யார்ரா நீ…..செருப்பாலடிக் கழுதைய…..சீக் எழுந்திரு ‘ என்கிறார்.
பிசைந்த சோற்றை வாயில் வைக்கப்போன நிலையில் வெட்கிப் போய் தலைகுனிந்தான், தாக்குதலுக்கு உள்ளானவன். அவமானத்தால் உடம்பே கூனிக் குன்றிப் போயிருந்தது. எனக்குத் தெரியும் அவனை. கூடப் படித்தவன். காலனியில் வீடு. நண்பர்கள் என்ற முறையில் அவனையும் அழைத்திருப்பார்கள். வந்திருப்பான்.
‘என்னடா சொல்றேன், என்னமோ கருங்கல்லாட்டம் குந்திக்னுகிறியே….. ‘
அவன் சோற்றை இலையில் போட்டு கையை உதறி, மேலே என்ன செய்வது என்று முடிவு செய்வதற்குள் அவர் சடாலென்று எட்டி அவன் மயிரைப் பிடித்துத் தூக்கினார்.
‘என்னா என்னா…… ‘ ‘
‘பறப்பையனுக்கு திமிரப் பாரேன் ‘
‘இவன்தான் கூப்டான்னா….அவன் தான் வரலாமா ? காலங்கெட்டுப் போச்சு. எல்லாம் ஒண்ணாயிடுத்து ‘
‘எலும்ப நொறுக்கணும் இவனல்லாம். என்ன தைர்யமிருக்கணம்…… ‘
‘இது என்னங்க இது ? நம்ப விசாலாட்சி கல்யாணத்துல….. ‘ யாரோ ஒரு முறுக்கான வாலிபன். முகத்தில் கடுமை தொனிக்க ஓடி வந்தான் ‘ ஜாடு மாரிப்பயலே ‘ ஆர்ரா உன்ன உள்ள விட்டவன்….நல்லா வயணமா துன்னுட்டுப் போலாம்னு வந்தியா ? ‘ மூலையில் கிடந்த செருப்பை எடுத்து ‘படால் படால் ‘ என்று வாங்கி அப்படியே குண்டு கட்டாய தூக்கிக் கிடாசி காலால் எட்டி உதைத்தான்.
‘வெளியே தள்ளி கதவச் சாத்துங்க ‘
‘அப்படியே வந்துடப்போறீங்க. போய் தலைய முழுவிட்டு துணிய மாத்திட்டு வந்திடுங்க ‘
உதட்டோரம் ரத்தம் கசிய, வழிந்த கண்ணீருடன் எழுந்த அவனை கழுத்திலே கையைக் கொடுத்து வெளியே தள்ளினார்கள்.
கதவு சாத்தப்பட்டது.
‘யார் பையன் ? ‘
‘சேரிப் பையனாம் ‘
‘பாவம் ‘ ‘
‘பாவமாவுது ‘ இன்னும் நாலு போட்டிருக்கணும் செமையா….அவங்க சம்பந்தி ஊட்டுக் கல்யாணம்னு நெனச்சிக்னானா… ‘
‘பந்தியில் என்னென்னமோ சலசலப்புகள்; முனகல்கள்; எரிச்சல்கள்; அநுதாபம்………
‘என்னருந்தாலும் பந்திலே இப்படி பண்ணியிருக்கக் கூடாது. நாலு பேர் எதிரே அசிங்கமா… கண்டுகாத மாதிரி உட்டுட்டு தனியா கூப்டு கண்டிச்சிருக்கலாமே……. ‘
‘என்னா பண்றது அவரு முன்கோபம் ‘
‘இப்ப எல்லாருக்குமில்ல இதுவாயிடுத்து… ‘
‘என்ன சார் ரசமா, சாம்பாரா…… ? ‘
நிமிர்ந்தேன். ‘எதியாவுது போடு ‘–எனக்குச் சாப்பாடு கொள்ளவில்லை. நெஞ்சில் வலுவாய்க் குந்தி அமர்ந்த வலி. அவன் வரமாட்டேன் என்றுதான், சொன்னானாம். நண்பர்கள்தான் ‘பரவால்ல ப்ரண்ஸ்உங்களுக்குள் இதல்லாம் என்னா கெடக்குது. சும்மா–வா ‘ ‘ என்று அழைத்து வந்துவிட்டார்களாம்.
என்ன வருத்தப்பட்டு என்ன செய்ய. அவனுடைய இழப்புக்கு ஈடு கட்ட முடியுமா ? நீண்ட நாள் அது என் நெஞ்சில் வேதனையாய் பதிந்தது. அதற்குப் பிறகு அவனைப் பார்க்கும் போதெல்லாம், அது விசுவரூப மெடுத்து வாட்டி வதைக்கும். நெல் காய்ந்துவிட்டிருக்கிறது. அக்கா மெத்தைக்கு வந்தாள். பரவலாகக் கிடந்த நெல்லைக் கூட்டி திம்மையாக ஆக்கிச் சின்னதாகத் துழவிக் காயவைத்துப் போய்விட்டாள்.
சிட்டுக் குருவிகளைக் காணோம். கருப்புக் கழுத்துக் குருவிகள் மட்டும் கொஞ்சம் இங்குமங்குமாக நெல்லைக் கொத்திக் கொண்டிருந்தன. ஒரே ஒரு சிட்டுக்குருவி சற்று தூர உட்கார்ந்தபடி, தயங்கித் தயங்கி வந்து நெல்லைக் கொறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
கருப்புக் கழுத்துக் குருவிகள் அதைப் பார்த்து விட்டன. அவ்வளவுதான்…. ‘எல்லாம் மொத்தமாக ஒரே பாய்ச்சல் ‘
கீச்சி கீச் சென்ற ஒலிகள். சின்ன சிறகுகள் படபடக்கும் சத்தம்.
‘வீர் ‘ரென்று கருப்புக் கழுத்துக் குருவிகள் மொத்தமாகப் பறந்தன. தட்டுத் தடுமாறி, பறக்க முயற்சித்து, கூரையில் புரண்டு எழ முனைந்து கொண்டிருந்தது, சிட்டுக் குருவி.
- பத்து செட்டி
- குருவி வர்க்கம்
- இனியும் விடியும்….
- புதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் ?
- இந்த வாரம் இப்படி – மே 20- 2001
- கணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை – 3 (இறுதிப்பகுதி)
- மாண்டூக்யோபநிஷதம்.
- கவலைபடாதே
- எங்கே போனது ஜனநாயகம் ?
- வாழ்க்கை என்னும் லாட்டரி
- மிளகு பூண்டுக் குழம்பு (அல்லது முட்டைகுழம்பு)
- புதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் ?
- விஷ்ணுபுரம் சில விளக்கங்கள்