ஜோதிர்லதா கிரிஜா
“ஆசியாவைத் தாக்கும் விவாகரத்துக் கலாச்சாரப் புயல்” என்கிற தலைப்பில் நண்பர் திரு குருமூர்த்தி அவர்கள் 14.4.2004 துக்ளக் இதழில் எழுதி யுள்ள கட்டுரைக்கு இது நமது எதிரொலி. இடையே சில வாரங்கள் நிறுத்தி வைத்திருந்த விஷயத்துக்கு மறுபடியும் அவர் வந்துவிட்டதில் நமக்கு எந்த வியப்பும் இல்லை. அதனால்தான் இக்கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்புக் கொடுக்கப்பட்டது. (இதன் விளைவாக நாமும் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்ட வேண்டியுள்ளது.)
இவரது அடி மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் “பெண் என்பவள் பொறுமையின் உருவாக இருத்தலே நமது கலாச்சாரம்” என்னும் ஓரவஞ்சனைத் தனமான மனப் போக்கையே இந்தக் கட்டுரையும் பிரதிபலிக்கிறது.
இவர் நம் பெண்களைப் புகழ்வது அவர்களைச் சாதுக்களாகவே வைத்திருக்கப் பார்க்கும் முயற்சியே. இந்தத் தந்திரமும் இவரது எழுத்தின் அடி நாதமாக ஒலிக்கிறது.
விவாகரத்து நமக்குத் துளியும் சம்மதமில்லாத விஷயமாகும். அதிலும், குழந்தைகள் உள்ள தம்பதியர் விவாகரத்துச் செய்வது “விவேக ரத்து”க்கு ஒப்பானது என்னும் நிலைப்பாடே நம்முடையது. குழந்தைகள் இல்லாத தம்பதியர் கூட ஒருவரை யொருவர் சகித்துக்கொண்டு, மற்றவரிடம் இருக்கக்கூடிய நல்லவற்றுக்காக மட்டுமே அவரை நேசிப்பது எனக் கொள்ளுவதே எந்த உறவும் – முக்கியமாய்த் தாம்பத்தியம் – சிறக்கச் சரியான வழி என்பதே நமது கருத்தாகும்.
எனினும் சகிப்பதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா ? உலகம் முழுவதிலும் நிகழும் மணவிலக்குகளில் பெரும்பாலானவை ஆணாதிக்கக் கொடுமைகளின் விளைவானவையே. குடித்துவிட்டு அடிப்பது, பாலியல் ரீதியான கொடுமைகள், அல்லது ஆணின் ‘திருமணம் கடந்த தவறான உறவுகள்’ (extra-marital affairs) ஆகியவற்றின் விளைவானவை. தவறான உறவைப் பொறுத்த மட்டில் சட்டங்கள் (வழக்கம் போல்) ஆணுக்கு ஆதரவானவையே. இதற்கு எதிராய் இன்று (“தலைவிரித்தாடும்”) பெண்ணுரிமை இயக்கம் குரல் கொடுத்து வந்துள்ளது. இது இன்றும் அப்படியேதான் உள்ளதா, திருத்தப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. திருத்தப்பட்டிருப்பின் மன்னிக்கவும்.
“விவாகரத்துக் கலாச்சாரம் ஏதோ ஒரு மேற்கத்தியக் கலாச்சாரத்தின் விகாரம் என்று இதை நாம் ஒதுக்க முடியாது. பழமையான கலாச்சார வழக்கங்கள் நிறைந்த ஆசியாவிலும் கூட இந்தக் கலாச்சாரம் புயல் வேகத்தில் பரவி வருகிறது” என்று “டைம்” பத்திரிகை கூறுவதை எடுத்து எழுதிய குருமூர்த்தி அப்படி நிகழத் தொடங்கியுள்ளது எதனால் என்பதையும் ஆராய்ந்திருப்பின் – அவர் ஒரு நடுநிலையாளராகவும் இருந்தால் – மிகப் பெரிய அளவில் ஆண்களே அதற்குக் காரணம் எனும் உண்மையையும் எடுத்தெழுதியதோடு நில்லாமல், குற்றவாளிகளான ஆண்களுக்கு அறிவுரையும் கூறி யிருந்திருப்பார்.
“விவாகரத்துக் கலாச்சாரம் ஏதோ ஒரு மேற்கத்தியக் கலாச்சாரத்தின் விகாரம் என்று இதை நாம் ஒதுக்க முடியாது” என்று தொடங்கியதன் மூலம் டைம் பத்திரிகை ஆசியாவில் அது தானாகவே எந்த வேறு கலாச்சாரத்தின் தாக்கத்தாலும் அன்றி (அங்குள்ள நிலைமையின் விளைவாகவே) ஏற்படத் தொடங்கியுள்ளது என்று கூறுவதாகவே கொள்ளவேண்டும்.
உண்மையை உள்ளபடிக் கூறுதல் எனும் பத்திரிகை தர்மம், எதற்கும், யாருக்கும் அஞ்சாத, பாகுபாடற்ற, மிகப் பெரிய அளவிலான நடு நிலை ஆகியவற்றைப் பொறுத்த மட்டில் தமிழகத்தின் ஒரே துணிச்சலான ஆண்பிள்ளை என்று நான் போற்றி மதித்து நேசித்தும் வரும் சகோதரர் சோ அவர்களும், சேவை மனப் பான்மையும், தேச பக்தியும் நிறைந்த குருமூர்த்தி அவர்களும் பெண்ணுக்கு நீதி வழங்குதல் எனும்போது மட்டும் இரட்டை நாதசுரவித்துவான்களே.
(அதனால்தான் நான் இதுகாறும் எழுதி அனுப்பிய குருமூர்த்தி எதிர்ப்புக் கருத்துகள் துக்ளக்கில் இடம் பெறவில்லை. “நடுநிலை”யை மெய்ப்பிக்கும் வகையில் சில வாசகர் கடிதங்கள் துக்ளக்கில் வந்தனதான். ஆனால் நான் எழுப்பிய கேள்விகளும், வெளியிட்ட கருத்துகளும், குருமூர்த்தியின் கூற்றுகளுக்கான பதில்களும் இந்தக் கடிதங்களில் அடங்காதவை. மாறுபட்டவை. அவற்றை ஏற்கவேண்டிய அல்லது அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய தார்மிகப் பொறுப்பு குருமூர்த்திக்கு உண்டு. இவற்றுக்குரிய சரியான பதில்களைக் குருமூர்த்தி கூறினால் நாம் நம்மை மாற்றிக் கொள்ளுவோம்! ஆனால் அது நிகழவில்லை! எனவே, நம் கேள்விகளுக்குக் குருமூர்த்தியிடம் பதில்கள் இல்லை எனும் முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. நிற்க.)
“விவாகரத்துப் புயல்” என்று குருமூர்த்தி வர்ணிக்கும் விஷயம் பல பெண்களைப் பொறுத்த வரையில் விவாக ரத்துத் “தென்றலாக” இருக்கக் கூடுமல்லவா! அதுதானே உண்மையும் கூட ? அடி, உதை, மிதி, குடி, வரதட்சிணைக்கான இடைவிடாத கோரிக்கை போன்றவற்றிலிருந்து விடுதலை என்பது தென்றலே யல்லவா!
விவாகரத்துக்கு மனுச் செய்பவர்கள் பெரும்பாலும் பெண்களே. இவர்களின் சதவீதம் தற்சமயம் மிகக் குறைவாக இருந்தாலும், இது அதிகரிக்கும் அபாயம் உண்டு. ஆண்கள் திருந்தாத ஜென்மங்களாக இருப்பதாலும், இவர்கள் திருந்துவார்கள் எனும் சாத்தியக்கூறு இல்லாததாலும், இந்தச் சமுதாயக் கோளாறு மேலும் அதிகமே ஆகும்.
குருமூர்த்தியே போற்றிப் புகழும் கலாச்சாரம் வழுவாத நம் பெண்களில் பெரும்பாலோர் கணவன்மார்களின் கொடுமைகளைச் சகித்துக்கொண்டு, அவர்களோடு விதியே என்று அனுசரித்துத்தான் வருகிறார்கள். கொடுமைகள் அத்துமீறுப் போகும் போதுதான் விவாகரத்துக்கு மனுச் செய்கிறார்கள். அது கூட யாரார் ? சொந்தமாய்ப் பிழைத்துக்கொள்ளக் கூடிவர்களில் சிலர் மட்டுமே. கணவனின் கொடுமை தாங்காமல் பிறந்த வீட்டுக்கு வரும் பெண்ணை, “அடித்தாலும், உதைத்தாலும் கணவனே உன் தெய்வம். நீ இருக்க வேண்டிய இடம் புகுந்த வீடுதான்,” என்று சொல்லி அவளைப் புருஷன்காரனிடமே கொண்டுபோய் விட்டு விடும் – பின்னர் அவளது சாவு (தற்கொலை அல்லது கொலை)க்கே காரணமும் ஆகும் -பத்தாம் பசலிப் பெற்றோர் கும்பலில் உள்ளவரா குருமூர்த்தி! நம்ப முடியவில்லை!
கொஞ்ச நாள் முன்பு, “பெண்களால்தான் குடும்பங்கள் குலைகின்றன. அவர்கள்தான் விவாகரத்துக்கு மனுச் செய்கிறார்கள்” என்று ஒரு பெரியவர் ஒரு நாளிதழில் எழுதியிருந்தார். பின் ? கொடுமைக்கு ஆளாகிறவர்கள்தானே விடுபட எண்ணுவார்கள் ? மெத்தப் படித்த ஆண்களுக்கும் கூட மகளிர்க்கு நீதி வழங்குதல் என்று வரும் போது, பார்வை மங்கிப் போகிறதே! அடக் கண்(ண)ராவியே!
மறுபடியும் சொல்லுகிறோம் – விவாகரத்து நமக்கு உடன்பாடான விஷயமே அன்று. குறைகளைப் பொருட்படுத்தாது, நிறைகளுக்காக மட்டுமே ஒருவரை மற்றவர் மதித்து அன்பு செலுத்துவதே காதல் – அல்லது தாம்பத்தியம் – என்பதே நம் கருத்து. ஆனால், எதிராளியின் குறைகள் தாங்க முடியாத கொடுமைகளில் முடியும்போதும், அவை தொடரும் போதும் – பாதிக்கப்படுபவர் ஆணோ, பெண்ணோ – மணவிலக்குக் கேட்பதில் என்ன கலாச்சாரச் சீரழிவு இருக்க முடியும் ? “நான் கொடுமைப் படுத்திக்கொண்டே இருப்பேன், ஆனால் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருக்கவேண்டும்” என்பதும் ஒரு கலாச்சார மேன்மையா! போற்றத்தகுந்த ஒன்றா ?
அடுத்து, குழந்தைகள் உள்ள தம்பதியர் விவாகரத்துச் செய்வது குழந்தைகளுக்குச் செய்யப்படும் கொடுமையாகும்.. இதை நாம் ஆதரிக்கவே இல்லை. குழந்தைகளை உத்தேசித்தாவது, பெண் பொறுமை காக்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. ஆயினும், எதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா ? கொடுமைகள் சகிக்க முடியாமல் பெருகினாலோ – உறவு தொடர்வது குழந்தைகளுக்கே கூட நல்லதன்று எனும் நிலை உருவானாலோ – ஒரு தாய் விவாகரத்துக்கு மனுச் செய்து விடுபடுவது அவளுக்குப் புயலுக்குப் பதில் தென்றலாகவே இருக்கும். இத்தகைய இன்றியமையாத மணவிலக்குகளைக் குருமூர்த்தி தீங்கானவை என்று கூற முடியாது. கூறக் கூடாது. விவாகரத்துகள் பெருகுவது ஓர் ஆரோக்கியமான நிலையாகாதுதான். ஆனால், அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?
ஆண்கள் திருந்த வேண்டும்.
பரமசிவன் தம்மில் பாதியைப் பார்வதிக்குக் கொடுத்தார் என்றோ அர்த்தநாரீஸ்வரம் என்பது பெண்ணுக்குச் சமப் பங்கு, சம உரிமை, சம இடம் என்றோ, இத் தத்துவம் நம் புராணத்திலேயே உள்ளதுதான் என்றோ வாய்ப் பந்தல் போட்டு இனிப் பெண்களை ஏமாற்ற முடியாது. நடைமுறை எப்படி உள்ளது என்பதுதான் அவர்கள் கவலை. கல்வியறிவும், வேலை வாய்ப்பும் பெற அவர்கள் தொடங்கிவிட்டதால், எத்தனை குருமூர்த்திகள் என்ன பேசினாலும், என்ன எழுதினாலும் அது இனிப் பெண்களிடம் எடுபடாது. பாரம்பரிய மூளைச் சலவையின் மிச்ச சொச்சங்கள் இன்னமும் மண்டைக்குள் சுற்றிகொண்டிருக்கும் சில பெண்களிடம் வேண்டுமானால் அது எடுபடலாம்.
“எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்கிற கதையாய், டைம் இதழ் சதி எனும் உடன்கட்டை ஏ(ற்)றுகிற பழக்கம் பற்றிக் குறிப்பிட்டுள்ளதை எடுத்து எழுதித் தமது அடி மனத்துப் பத்தாம் பசலித் தனத்தைக் குருமூர்த்தி தம்மையும் அறியாது வெளிப்படுத்துகிறார். (உடன்கட்டை ஏ(ற்)றுவதில் தமக்கு உடன்பாடில்லை என்று தவறிப் போயும் இவர் ஓரிடத்திலும் சொல்லவில்லை. அதற்காக இவர் அதை முற்றும் ஆதரிக்கிறார் என்று நாம் நினைக்கவில்லை. சொல்ல விட்டுப் போய்ரிருந்திருக்கலாம். எலாவற்றையும் ஒரே கட்டுரைக்குள் திணைக்க முடியாதன்றோ!)
ஆனால், அதை எடுத்து எழுதியுள்ளது அப்படியும் இருக்குமோ எனும் ஓர் ஐயத்தை ஏற்படுத்துகிறது. பிரிக்க முடியாத திருமணப் பந்தத்துக்குப் பெண்ணை மட்டும் உடன்கட்டை ஏற்றுவதுதான் அடையாளமா என்று கேட்கத் தோன்றுகிறது. பெண்டாட்டி செத்ததும் கனவனை அதே நோக்கத்துக்காக ஏன் உடன்கட்டை ஏற்றுவதில்லை ? ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு (அ)நீதி என்கிற கலாச்சாரம் என்ன கலாச்சாரம் ? அது கலாச்சாரமா, அல்லது அநாசாரமா ? உடன்கட்டை ஏ(ற்)றும் பெண்ணைச் “சதிமாதா” என்று கொண்டாடுவோர் ஆணையும் அவ்வாறே ஏற்றிவிட்டு அவனைப் “பதி பிதா” என்று ஏன் கொண்டாடுவதில்லை ?
விவாகரத்துகள் ஆசியாவில் பெருகுவதற்கு மேற்கத்திய கலாச்சாரம்தான் காரணம் என்று குருமூர்த்தி கூறுவதில் மிகக்கொஞ்சம் உண்மை உண்டு. ஆனால் நம் நாட்டைப் பொறுத்த வரை பெண்களுக்காகக் குரல் கொடுத்த ஆண் மகாத்மா காந்தி என்பதை மறக்க வேண்டாம். அதே சமயத்தில் பெண்கல்விக்கு வித்திட்டவர் இங்கே வெள்ளைக்காரர்களே என்பதும் உண்மை. பெண்கள் கல்வி கற்றுச் சொந்தக்கால்களில் நிற்க முடிந்தது மேற்கத்திய கலாச்சாரத்தின் விளைவும் ஆகும். இதை மட்டுமே மேற்கத்தியக் கலாச்சாரத்தின் தாக்கம் என்று கூறலாம். கல்வியும், சுயமாய் நிற்க முடிவதும் மோசமான கலாச்சாரமா என்ன!
குருமூர்த்தியின் கட்டுரைகளில் ஆணுக்கு எந்த அறிவுரையும் இல்லை. ஏதோ அவர்களுக்கு இதில் பங்கே இல்லை என்பது போல் இவர் கட்டுரைகள் தொனிக்கின்றன. ஆண்கள் நியாயமாக நடந்து கொண்டால் பெண்கள் ஏன் விவாக ரத்துக் கேட்கப் போகிறார்களாம் ?
கிறிஸ்துவமதக் கத்தோலிக்கப் பிரிவினர்க்கு நாமறிந்த வரையில் விவாகரத்து உரிமை கிடையாது. திருமண உறவு மாற்றம் சட்டை மாற்றுவது போன்றதன்று என்று குருமூர்த்தி கூறுவதில் நமக்கும் உடன்பாடே. ஆனால், அதற்கு முதலில் திருந்தி மாற வேண்டியவர்கள் ஆண்களேயாவர்.
குருமூர்த்தியின் கட்டுரையைப் படித்தபோது ஒன்று புரிந்தது. கணவன்மார் என்ன கொடுமை செய்தாலும் பல்லைக் கடித்துக்கொண்டு பெண்கள் பொறுமை காப்பதும், உடல், மன, மூளை ரீதியாகப் பாதிக்கப்பட்டாலும் “சிவனே” என்று (தன் “சக்தி”யைக் காட்டாமல்) மவுனக் கண்ணீருடன் இருந்துவிடுவதுமே இந்தியக் கலாச்சாரம் என்பதே அது!
எதிர்த்தால், அது மேற்கத்தியக் கலாச்சாரம்! (அதாவது நம் கலாச்சாரச் சிதைவு!) மேற்கத்தியக் கலாச்சாரத்தின் தாக்கம் என்ன என்பதைக் குருமூர்த்தி தெளிவுபடுத்த வேண்டும். சரியாகப் புரியவில்லை. கல்வியும் அதன் விளைவான சுய வேலை வாய்ப்பும் தவறான கலாச்சாரம் என்கிறாரா ? அப்படித்தான் பொருள்கொள்ள வேண்டியுள்ளது. (ஏனெனில், இதன் விளைவாகத்தானே பெண்களால் ஆண்களின் கொடுமைகளிலிருந்து விடுதலை கேட்டுப்பெற முடிகிறது ?)
தென்கொரியாவை விட வட கொரியாவில் விவாகரத்துகள் கம்மி என்று கூறும் குருமூர்த்தி அதற்கான காரணம் வடகொரியப் பெண்கள் தென் கொரியப் பெண்களின் அளவுக்குச் சுயமாய் வாழ இயலாதவர்களாக இருப்பதா, அல்லது வடகொரிய ஆண்கள் தென்கொரிய ஆண்களைவிடவும் அதிக நல்லவர்களாக இருப்பதா என்பதை விசாரித்து அறியவேண்டும்.
நியாயம் கேட்கும் ஓர் இயக்கம் “தலை விரித்தாடும்” இயக்கமா, மிஸ்டர் குருமூர்த்தி ? இந்தச் சொற்பிரயோகம் நாகரிகமானதுதானா ? மேலான மனமும் அறிவும் படைத்த பெண்களை அடக்கி, ஒடுக்கி, மிதித்து, அவர்களுக்குக் கல்வி மறுத்துக் கொடுமைகளும் செய்து வரும் ஆணாதிக்கமன்றோ உண்மையில் காலங்காலமாய்த் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது ? இப்படி அநியாயத்துக்கு மாற்றிப் பேசலாமா ? குருமூர்த்தி போன்ற மெத்தப் படித்த அறிவாளிக்கு நசுக்கப்படுபவர் மீது துளியேனும் மனிதாபிமானம் இருக்க வேண்டாமா ?
குடும்பம் என்பது மகத்தான அமைப்பாகும். இதற்கு மாற்று அமைப்பே கிடையாது. இதில் குருமூர்த்தியின் கருத்தே நம் கருத்தும். குடும்பம் என்கிற மகத்தான அமைப்பின் மீது நமக்கு ஆழ்ந்த கரிசனமும், பிரமிப்பும், ஆர்வமும், அக்கறையும் உண்டு. ஆனால், அது சிதையாமல் இருப்பது பெண்களின் கலாச்சார மேன்மையால்தான் என்று வழக்கம் போல் குருமூர்த்தி பெண்களுக்கு “ஐஸ்” வைத்திருக்கிறார். மிக்க நன்றி. ஆனால், அது சிதையாமல் நீடூழி நிலைக்க வேண்டுமானால், ஆண்கள் திருந்த வேண்டும் என்பதை வசதியாய்ப் புறக்கணிக்காமல், விவாக ரத்துகள் பெருகிவருவதற்கு ஆண்களே மிகப் பெரிய அளவில் காரணர்களாக உள்ளார்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு நடு நின்று எழுதுங்கள், குருமூர்த்தி அவர்களே!
****
jothigirija@vsnl.net / jothigirija@hotmail.com
- கடிதம் டிசம்பர் 23,2004
- மறக்கப்பட்ட பெண்முகமும், இரும்புச் சிலுவையும்: இரு நூல்கள்
- கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘
- துறவியின் குற்றம் (அ) துறவின் குற்றம்
- ஓவியப்பக்கம் – பத்து – ப்ரான்சிஸ் பேகான் – சதை, பருண்மை, மனிதார்த்தம்
- உலகெங்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா!
- ஒரு கடலோரக் கிராமத்தின் கதை-சில அபிப்ராயங்கள்
- மனத்தோடு உறவாடும் கவிதைகள் – இளம்பிறையின் ‘முதல் மனுசி ‘ தொகுப்பை முன்வைத்து
- விதைகளை வைத்திருக்கும் செடி கொடி மரங்கள்
- ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம்
- விடுபட்டவைகள் -2 கல்யாணம் செஞ்சுக்கோங்கோ….
- உயர்பாவை- 2
- ஹரப்பா நாகரிகத்தின் ‘மொழி ‘
- அழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் தொடர்ச்சி பகுதி – 2
- புதிய மானுடம் – (மூலம் நளினிகாந்த குப்தா)
- மெய்மையின் மயக்கம்-31
- கடிதம் டிசம்பர் 23, 2004 – கயமை வேண்டாம்
- கடிதம் டிசம்பர் 23,2004
- நேச குமாருக்கு விளக்கம்: பர்தாவும் அன்னை ஜைனப்பின் திருமணமும்!
- கடிதம் டிசம்பர் 23,2004
- நம்மவர்களின் தாழ்வு மனப்பான்மை (திரு புதுவை ஞானம் அவர்கள் தமிழ் அளவைகள் பற்றி)
- கடிதம் டிசம்பர் 23,2004
- கடிதம் டிசம்பர் 23, 2004 – பழையன கழிதலும், புதியன புகுதலும்!
- கடிதம் 23,2004 – ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை!
- கடிதம் டிசம்பர் 23, 2004 – ஞாநிக்கு சில கேள்விகள்
- கடிதம் 23, 2004 – நேச குமாருக்கு விளக்கம் 3. கண்ணியம் காக்க!
- கடிதம் டிசம்பர் 23, 2004
- கடிதம் டிசம்பர் 23,2004
- ஜெயேந்திரர் கைது குறித்து ஜெயகாந்தன்
- தீவட்டி நிறுவனம் வழங்கும் புதுமைஜித்தன் நசிவிலக்கிய விருது – அறிஞர் ச.க.தி. பெறுகிறார்
- கவிக்கட்டு 41
- அறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை
- போராட்டம்
- போதி மரம்
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- நீண்ட உறக்கம்
- வயதுகளோடு….
- யாரிடமாவது….
- நிராகரிப்பின் வலி
- காமதகனம்
- தெருவிளக்குகள்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 8 – ஓர் இரவு
- பெரியபுராணம் – 23
- கீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- புத்தாண்டு-பொங்கல் வாழ்த்துக்கள்
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51
- காஷ்மீரிலிருந்து தபால் அட்டை (மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- புலம்பல்
- குழந்தைகளின் உயிரோடு விளையாடும் பாலிவினைல்
- பிரான்சில் பட்டாம்பூச்சி போல் உயர்ந்த உலகத்தின் பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் [World ‘s Highest Butterfly Bridge in France :
- வாரபலன் டிசம்பர் 23,2004 – தளர்வில்லா கண்ணப் பெருவண்ணான் , நீலக்குயிலுக்கு ஐம்பது, கிரீஷ் கார்னாடுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் குளறுபடி , ச
- குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி!
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 1
- உழவர்களை நாடு கடத்தும் அரசு
- அணுவாற்றல் அறிவுதான் விஞ்ஞான அறிவா ?
- இசை விழா 2004 – I
- விளக்கு பரிசு பெற்ற பேராசிரியர் சே ராமானுஜம் அவர்களுக்கு பரிசும் பாராட்டுவிழாவும்
- எண்(ணங்)கள்: பாலாஜி : விரிகுடா தமிழ் மன்ற நாடக விழா -ஒரு தப்புக்கணக்கு
- பேராசிரியர் இராமானுஜம் அவர்களின் நாடகப் பங்களிப்புகளும், விருதும்