அரவிந்தன் நீலகண்டன்
நவம்பர் 20 1945, நியூரம்பர்க்கில் ஒரு விசாரணை ஆரம்பித்தது. 24 மனிதர்கள் மானுடத்திற்கு எதிராக அவர்கள் இழைத்த கொடுங்குற்றங்களுக்காக விசாரிக்கப்படலாயினர். ருடால்ப் ஹெஸ், வில்ஹெம் ஹோரிங் போன்ற நாசித்தலைவர்கள் அந்த 24 பேர்களில் அடக்கம். ஆறு மில்லியன் யூதர்களின் படுகொலை, கொலை முகாம்களை நடத்தியது என பல கொடுங்கோன்மைகளை செய்ததில் முக்கிய பக்கு வகித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்த தலைவர்கள் மீண்டும் மீண்டும் தங்கள் தரப்பில் கூறிய வாதம் தாங்கள் தங்கள் மேலதிகாரம் தமக்கு கொடுத்த கட்டளைகளுக்கு கட்டுபட்டோம் எனவே நடந்த கொடும் செயல்களில் தங்களுக்கு எவ்வித தார்மீக பொறுப்பும் கிடையாது என்பதே. 1946 அக்டோபர் இல் இந்த விசாரணையின் தீர்ப்பு வெளியான போது நாசி தலைவர்களின் மேற்கண்ட வாதம் குறித்து, ‘மானுட இயற்கையின் உண்மையான சோதனை ஒரு கட்டளைக்கு அடிபணிவது அல்ல மாறாக ஒரு கட்டளை கீழ்படிய தகுந்ததா அல்லவா என்று சீர்தூக்கி பார்த்து செயல்படுவதுதான்”. என நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். 1965 இல் வியட்நாமில் 200,000 அமெரிக்க படைகள் புகுந்தன. 1968 இல் லெப்டினண்ட் வில்லியம் காலே தலைமையில் அமெரிக்கப்படைப் பிரிவு ஒன்று ஆயுதமேந்தாத வியட்நாமிய குடிமக்களை மை லாய் எனும் இடத்தில் கொன்று குவித்தது. நாசி கொடுமைகளுக்கு சற்றும் குறையாத இந்த கொடுமைகள் அனைவரையும் உறைய வைத்தது. 1971 இல் இப்படுகொலைக்கான விசாரணை முடிவடைந்து வில்லியம் காலே குற்றவாளி எனத் தீர்ப்பிடப்பட்டார். மீண்டும் அந்த படுகொலையில் ஈடுபட்ட பல அமெரிக்க ‘வீரர்கள் ‘ தாங்கள் அக்கொலைகளை செய்ததற்கு காரணம் மேலிட உத்தரவுகளுக்கு கீழ்படிந்தமைதான் என கூறினர். சோவியத் நாட்டில் ஸ்டாலினின் ஆட்சியின் போது பலர் கொலைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பபட்டவர்களை காட்டிக்கொடுத்தவர்களும் சரி, அவர்களுக்கு தண்டனை விதித்தவர்களும் சரி அவர்களுடன் பல்லாண்டுகள் பணிபுரிந்தவர்கள். இதனால் ‘உழைப்பு முகாம்களுக்கு ‘ அனுப்பப்படுபவர்கள் நிச்சயமாக சாகத்தான் போகிறார்கள் எனத்தெரிந்தே அவர்கள் இதனை செய்தனர். ஏன் ? மீண்டும் பதில் கீழ்படிதல்தான்.இரண்டாம் உலகப்போருக்கு பின் 2004 வரை உலகெங்குமுள்ள பல ராணுவ நடவடிக்கைகளில் பல இலட்சம் அப்பாவிகள் பெண்கள் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். தேச, மத, சித்தாந்த பேதங்களின்றி அமைதியின் பெயராலும், ஜனநாயகத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும், சமத்துவம் மற்றும் துயரமில்லா பொன்னுலகங்களின் பெயராலும், சீருடை அணிந்த ஆயுதபாணிகளால் இம்மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏன் ? கீழ்படிதல் என்னும் பதில் பொதுவாக இந்த அமைப்புகளின் இறுதிக்கண்ணியில் துப்பாக்கியின் விசையை இயக்குபவர்களால் கொடுக்கப்படுகிறது. மானுடத்தினியல்பாக நாம் போற்றும் அடிப்படை இரக்க உணர்வையும் துடைத்தெறியும் தன்மை கீழ்படிதலுக்கு உண்டா ? எனில் நம் இயற்கைதான் என்ன ? கீழ்படிதலின் பெயரில் ஒரு பச்சைக்குழந்தையின் உடலில் துப்பாக்கிக் குண்டுகளை செலுத்த தயங்காத ஒன்று நம் அனைவருள்ளும் உறங்கியபடி உள்ளதா ?
“இந்த பரிசோதனை சாலைக்குள் வாருங்கள். வேறொன்றுமில்லை, ‘தண்டனை மூலம் படிப்பை மேம்படுத்தலாமா ? ‘ என்கிற ஒரு பரிசோதனையில் நீங்கள் ஒரு பங்காற்றப்போகிறீர்கள். அதோ இருக்கிறாரே அவர்தான் இந்த பரிசோதனையில் படிக்கும் மாணவராக செயலாற்றுகிறார். நீங்கள் ஆசிரியர். சரியா ? அவர் அவரது அறைக்கு போய்விட்டார். இங்கிருந்து பார்க்க தெரிகிறது அல்லவா ?இதோ மின் அதிர்ச்சி தரும் எலக்ட்ரோடுகள் அவர் கையில் பிணைக்கப்படுகின்றன. இந்த மின் அதிர்ச்சிகள் அவர் கையில் எந்த வெளிக்காயத்தையும் ஏற்படுத்தாத தைலமும் பூசப்பட்டுவிட்டது. இதுதான் உங்கள் அறை. இந்த இயந்திரத்தை பாருங்கள்.15 முதல் 450 வோல்ட்கள் வரையான மின் அதிர்ச்சியை உங்கள் மாணவருக்கு நீங்கள் ஏற்படுத்தலாம். இந்த அதிர்ச்சி அளவுகளின் தன்மைகள் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளன. சிறிய அதிர்ச்சி, மிதமான அதிர்ச்சி, கடுமையான அதிர்ச்சி, மிகக்கடுமையான அதிர்ச்சி, தீவிரமான அதிர்ச்சி, அதீத தீவிரமான அதிர்ச்சி, அபாய அதிர்ச்சி. அதற்கு மேல் XXX எனக்கூறியிருப்பதன் பொருளை நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள். வேண்டுமானால் அந்த 45 வால்ட்கள் அளவில் உங்களுக்கு நீங்களே ஒரு அதிர்ச்சி கொடுத்து பார்த்துக்கொள்ளுங்கள். ஓ வலித்ததா ? பிரச்சனை இல்லை. இந்த அதிர்ச்சிகள் கடுமையான வலியைத்தான் கொடுக்கும் ஆனால் நிரந்தர திசுபாதிப்பு எதுவும் ஏற்படாது. சரி உங்களுக்கு உங்கள் மாணவரை நன்றாக பார்க்கவும் கேட்கவும் முடிகிறதல்லவா ? இப்போதுமிந்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வார். சரியான பதில்கள் உங்களிடம் உள்ளன. அவர் தவறாக பதில் சொல்லும்பட்சத்தில் நீங்கள் மின்அதிர்ச்சியைனவருக்கு அளிக்க வேண்டும். தவறான பதில்களுக்கு மேலே கொடுத்த அளவீட்டில் மின் அதிர்ச்சியை அதிகரித்தபடியே மின் அதிர்ச்சியை அளிக்கவேண்டும். என்ன தயாரா ? நீங்கள் சரியாக செயல்படுவது இந்த பரிசோதனைக்கு அவசியம். உங்கள் ‘மாணவர் ‘ தவறான பல பதில்களை அளிக்கிறார். நீங்கள் அதிக அதிக மின் அதிர்ச்சிகளை அளிக்கிறீர்கள். ஒரு 100 வோல்ட் அளவில் உங்கள் மாணவர் சிறிதே முணுமுணுக்கிறார். உங்களுக்கு கேட்கிறது. 120 வோல்ட்கள்: உங்கள் மாணவர் – ‘ஆ வலிக்கிறதே ‘ என்கிறார். 150 வோல்ட்கள்: உங்கள் மாணவர் – ‘ ஐயோ போதும் தயவு செய்து இதை நிறுத்துங்கள் ‘ உங்களால் தாங்க முடியவில்லை. பரிசோதனையாவது ஒன்றாவது இப்படி ஒரு மனிதனை சித்திரவதை செய்வது நம்மால் ஆகாது என எழுந்துவிடுகிறீர்கள். ஆனால் பரிசோதனையாளர் உங்களை அமர்ந்து பரிசோதனையை தொடர சொல்கிறார்.பரிசோதனை தொடர்கிறது. உங்கள் மாணவர் ‘ என்னால் முடியாது ‘ என்ம கெஞ்சுகிறார். 300 வோல்ட்கள் உங்கள் மாணவர் அறை கதவுகளுக்கே ஓடுகிறார். ‘தயவு செய்து தயவு செய்து நிறுத்துங்கள் ‘ என கெஞ்சுகிறார். கதறுகிறார். நீங்கள் எழுந்துவிட்டார்கள். வேண்டாம் இது. ஆனால் பரிசோதனையாளர் உங்களை பரிசோதனையை தொடர சொல்லுகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள் ?”
அமெரிக்க உளவியலாளரான ஸ்டான்லி மில்கிராம் (1933-1984) தான் வடிவமைத்திருந்த பரிசோதனையை இவ்வாறுதான் அங்கு குழுமியிருந்த அறிஞர்கள், சமூக சேவகர்கள், முதன்மை மனவியலாளர்கள்,
மனசிகிச்சையாளர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டத்திற்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர்களின் பதில்களை அவர் பதிவு செய்தார். தன் ஆய்வின் உண்மை முடிவுகளை தெரிவிக்காமல் இந்த கேள்வியை பலவித மக்களிடம் முன்வைத்தார்.அமெரிக்காவின் ஒரு முக்கிய மருத்துவ ஆய்வகத்தின் மனவியலாளர்களிடன் இது கேட்கப்பட்டபோது அவர்கள் பின்வரும் புள்ளியியல் ஊகத்தை முன்வைத்தனர். ஆசிரியர்களாக இந்த பரிசோதனையில் பங்காற்றும் 100 பேர்களில் 4 பேர்தான் (அவர்கள் சொன்னது 3.73%) 300 வோல்ட் அதிர்ச்சி கொடுக்கும் அளவுக்கு போவார்கள் என்றும் ஆயிரத்தில் ஒருவர்தான் 450 வோல்ட் அளவிற்கு போகமுடியும் எனவும் அவர்கள் கருதினார்கள். பொதுவாக ஒரு மனநிலை பிறழ்ந்த வக்கிர மனநோயாளிதான் இப்படி தொடர்ந்து மின் அதிர்ச்சியை அளிக்கமுடியும் எனவும் அவர்கள் கருதினார்கள். மனசிகிட்சையாளர் ஒருவர் தமது முடிவுக்காக அளித்த பதில்களில் ஒன்று ‘அமெரிக்கர்கள் இத்தகைய கொடுமைகளில் ஈடுபட மாட்டார்கள். ‘
ஆனால் ஆய்வுமுடிவுகள் தெரிவிப்பது என்ன ?
மில்கிராம் இப்பரிசோதனையை நிகழ்த்திய போது, 62 சதவிகிதத்தினர் 450 வோல்ட் மின்அதிர்ச்சி அளவு வரை தாராளமாகச் சென்றனர். மனவியலாளர்கள் கணித்த அளவைக்காட்டிலும் 500 தடவைக்கு மேலான ‘ஆசிரியர்கள் ‘ அதீத மின் அதிர்ச்சியை தங்கள் மாணவர்களுக்கு அளித்தனர். இந்த பரிசோதனை உண்மையில் ‘மாணவரு ‘க்காக நடத்தப்படவில்லை. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் (அவர்கள் அறியாமலே) ‘ஆசிரியர்கள் ‘தான். உண்மையில் ‘மாணவர்கள் ‘ மில்கிராமுடன் ஏற்கனவே பேசிக்கொண்ட அவரது பரிசோதனை அணியைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு எந்த மின் அதிர்ச்சியும் உண்மையில் அளிக்கப்படவில்லை. அவர்கள் நடிக்கத்தான் செய்தார்கள். இந்த பரிசோதனையில் ஆசிரியர்களாக செயல்பட்டவர்கள் சமூக சேவகர் முதல் குடும்பத்தலைவி வரை என பலத்தரப்பினர். இவர்கள் எல்லோரும் 450 வோல்ட்கள் வரை மின்அதிர்ச்சி அளிக்க தயங்கவில்லை. பலர் நரம்புத்தளர்ச்சித்தனமான சிரிப்புடன் இந்த மின் அதிர்ச்சிகளை அளித்தனர். பாதிக்கப்பட்டவனான ‘மாணவனின் ‘ கதறல், மேலதிகாரியான பரிசோதனையாளரின் ஆணை ஆகிய இரு விசைகளுக்கு இடையே அவர்கள் மனமானது இழுக்கப்பட்டதன் விளைவாக எழுந்த மனத்தளர்ச்சி அது. இந்த பரிசோதனையில் பரிசோதனையாளரது அதிகாரத்தை மேம்படுத்திக்காட்ட சில விஷயங்கள் செய்யப்பட்டிருந்தன. ஒருஇலச்சினையுடனான பரிசோதனையக ஆடை போன்ற சில அதிகாரத்தைக் காட்டும் சின்னங்கள் அவரிடம் இருந்தன. நான்கு விதங்களில் ‘மாணவர் ‘ ஆசிரியருக்கு நெருக்கமாக அழைத்து வரப்பட்டார். ஆசிரியரால் மாணவனின் கூக்குரல் கேட்காது பார்க்கமட்டுமே முடியும் (Remote situation), மாணவனின் கூக்குரல் மட்டுமே கேட்கும் நிலை (voice feedback), மாணவனை பார்க்கவும் கேட்கவும்முடியும் நிலை (Proximity), 150 வோல்ட்களுக்கு மேலான மின்அதிர்ச்சியை மாணவனின் கரத்தை ஆசிரியரே பிடித்து மின் அதிர்ச்சி அளிக்கும் நிலை (touch proximity)வரையிலாக நான்கு நிலைகளில் இந்த பரிசோதனை முழுமையாக மீண்டும் மீண்டும் நடத்தப்பட்டது. பரிசோதனையில் கீழ்படிதல் காட்டிய ‘ஆசிரியர்கள் ‘:
ஃ ஒலியில்லாமல் காணும் நிலையில் (Remote situation) 66 சதவிகிதத்தினர்
ஃ ஒலிவிளைவுகளை மட்டுமே கேட்கும் நிலையில் (voice feedback situation) 62 சதவிகிதத்தினர்
ஃ மாணவனை பார்க்கவும் கேட்கவும் இயலும் அணுக்க நிலையில் (proximity) 40 சதவிகிதத்தினர்
ஃ தொட்டு மின்அதிர்ச்சி அளிக்கும் அணுக்கநிலையில் (Touch proximity) 30 சதவிகிதத்தினர்
ஒரு ஆணை எந்த அளவு பிறரை பாதிக்கும் மற்றும் வேதனைகளை ஏற்படுத்தும் என்பதை அந்த ஆணையை நிறைவேற்றுபவர் அறிந்திருக்கலாம். ஆனால் ஒரு பாதிக்கும் ஆணையை நிறைவேற்றுபவருக்கும் அந்த ஆணையால் பாதிக்கப்பட்டவருக்குமான அணுக்கம் அதிகரிக்க அதிகரிக்க பாதிக்கும் ஆணைகளுக்கு கீழ்படியும் தன்மை நிறைவேற்றுபவருக்கு குறைகிறது. அணுக்கத்தன்மை குறையும் போது பாதிக்கும் ஆணையை நிறைவேற்றும் கீழ்படிதல் கூடுகிறது. மில்கிராம் கூறுகிறார், ‘எனவே முகத்திற்கு முகம் ஒரு கொலையை கத்தியால் செய்ய இயலாத அதே நபர், எளிதாக 20,000 அடி உயரத்திலிருந்து முகமறியா ஆயிரக்கணக்கான மக்கள் மீது அணுகுண்டை வீசிவிடமுடியும். ‘
இப்பரிசோதனை முடிவுகள் காட்டுவதென்ன ? மில்கிராமின் வார்த்தைகளில்: ‘எங்கள் பரிசோதனையின் மிக முக்கியமான முடிவு இதுதான். சாதாரண மக்கள், தங்கள் வேலைகளை மட்டுமே கவனித்தபடி இருப்பவர்கள், மற்றவர்களிடம் எவ்வித வெறுப்பும் கொள்ள முகாந்திரமில்லாதவர்கள், – அவர்களே மிகக்கொடுமையான அழிவின் உபகரணங்களாக விளங்கமுடியும். தாங்கள் செய்யப் பணிக்கப்பட்டிருக்கும் – (செய்யும்)- அழிவுச்செயல்களின் கொடூரம் தங்கள் அன்றாட ஒழுக்க மதிப்பீடுகளிலிருந்து மிகத்தெளிவாக வேறுபடுவதை அவர்கள் அறியும் போது கூட, மிகச்சிலரே அந்த கட்டளைகளை எதிர்க்கும் தன்மை கொண்டவர்களாக உள்ளனர்.”
1960 இல் இஸ்ரேலில் நாசி தலைவனான அடால்ப் எய்க்மானின் விசாரணை முடிந்தது. 1961 இல் யேல் பல்கலைக்கழகத்தில் ஸ்டான்லி மில்கிராம் இந்த பரிசோதனைகளை வடிவமைத்து, அந்த ஆண்டு ஜூலையில் தொடங்கினார். பல்கலைக்கழக வளாகத்தில் 1961 முதல் 1963 வரை நடத்தப்பட்ட இந்த பரிசோதனை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பரிசோதனை ‘ஆசிரியர்களுக்கு ‘ ஏற்படுத்திய மன-அழுத்தம் மற்றும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க கூடிய பாதிப்புகள் ஆகியவை குறித்தவையே இந்த சர்ச்சைகள். இப்பரிசோதனை பின் ரோம், (வெள்ளையராண்ட) தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் செய்யப்பட்டது. அங்கும் ஏறக்குறைய (சில இடங்களில் சற்றே அதிகமாக) யேல் பல்கலைக்கழக பரிசோதனை முடிவுகளே பிரதிபலித்தன. இந்த பரிசோதனையில் ‘ஆசிரியர்களாக ‘ பங்கு பெற்றவர்களின் மனநிலைகள் பெரும்பாலும் இரு விசைகளிடையே பலமாக இழுக்கப்பட்டவையாக இருந்தன. உதாரணமாக மில்கிராம் ‘திருமதி. ரோஸன்பிளம் ‘ என அழைக்கும் குடும்பத்தலைவி பின்வருமாறு கூறுகிறார், ‘ ஒவ்வொருமுறை அந்த அதிர்ச்சி அளிக்கும் பொத்தானை நான் அழுத்திய போதும் நான் இறந்து போனேன் நீங்கள் கவனித்தீர்களா ? நான் நடுங்கியதை நீங்கள் கவனித்தீர்களா ? ஒவ்வொரு முறையும் அந்த பாவப்பட்ட மனிதனுக்கு நான் மின் அதிர்ச்சி அளித்த போதும் நான் இறந்துதான் போனேன். ‘ என்ற போதிலும் ரோஸ்ன்பிளம் அம்மணி 450 வோல்ட்கள் வரை மின்அதிர்ச்சி அளிக்க கீழ்படியத்தான் செய்தார்.
மில்கிராமின் பரிசோதனை ஒரு பரிசோதனைசாலை சார்ந்ததாக இருந்தது. ஆனால் 1966 இல் ஹாப்லிங் எனும் உளவியலாளர் உருவாக்கிய பரிசோதனையோ சமுதாய சூழலிலேயே அரங்கேற்றப்பட்டது – மருத்துவமனையில். ஒரு மருத்துவர் எனக்கூறியபடி மருத்துவமனை நர்சுகளுக்கு ஒரு குறிப்பிட்ட மருந்தை சில ‘நோயாளிகளுக்கு ‘ உரிய அனுமதி பெறாமல் அதீத அளவில் ஏற்றுமாறு ஆணையிடப்பட்டபோது 22 நர்சுகளில் 21 பேர் ஆணைக்கு கீழ்படிந்தனர். உண்மையில் அந்த மருந்து க்ளுகோஸ்தான். மீண்டும் ஸிம்பார்டோ எனும் உளவியலாளர் உண்மை சூழல்களில் மில்கிராமின் பரிசோதனைகளை நடத்தி நம் ஒழுக்கத்திற்கு அப்பாலான கீழ்படிதலின் வலிமையை கண்டறிந்தார். அதேநேரத்தில் சூழல் கீழ்படிதலின் கடுமையை குறைக்க அல்லது கூட்ட முடியும் என்பதும் தெளிவானது.
கம்யூனிஸ்ட்கள் சீனாவை கபளீகரம் செய்த போது திபெத்திய துறவிகள் கொல்லப்பட்டதை கண்டோம். ஈராக்கின் பாலைமணல்களின் உள்ளிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களின் கல்லறைகள் எழும்பியதை கண்டோம். அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கிய கைதிகளை நடத்திய விதத்தை காண்கிறோம். அந்த அமெரிக்க பெண் அதிகாரி ஒரு மின்அஞ்சல் பேட்டியில், ‘நாங்கள் எங்களுக்கு இடப்பட்ட கட்டளையைத்தான் நிறைவேற்றினோம் ‘ என்று கூறியது வெளியான போது ஸ்டான்லி மில்கிராம் 1960களில் கூறிய வார்த்தைகள் மீண்டும் நம் நினைவுக்கு வருகின்றன, ‘(இப்பரிசோதனைகளில்) அதிகாரம் ஒருவரின் வலுவான ஒழுக்க தார்மீக உணர்வுகளுக்கு எதிராக நிறுத்தப்படும் போது, பாதிக்கப்பட்டவரின் கூக்குரல்கள் ஆணையை நிறைவேற்றுபவரின் காதுகளை துளைத்தபோது அதிகாரமே மிகப்பெரும்பாலும் வெற்றி பெற்றது. வயது முதிர்ந்த பொறுப்பான மக்கள் அதிகாரத்தின் ஆணையை நிறைவேற்ற எந்த அளவிற்கும் செல்வதற்கான காரணத்தை நாம் உடனடியாக அறிவது மிகவும் அவசியமானது. ‘
பயன்படும் சில நூல்களும் இணைய முகவரிகளும்:
1. மில்கிராம் ஸ்டான்லி, ‘Obedience to Authority ‘ London, Harper & Row (1974)
2. ஹான்ஸ் மற்றும் மைக்கேல் எய்ஸென்க், Mindwatching, London, Multimedia publications பக்கங்கள்-35-44, 1981.
3. www.stanleymilgram.com
4. http://designweb.otago.ac.nz/grant/psyc/OBEDIANCE.HTML
5. http://www.new-life.net/milgram.htm
- நைஜீரியா -2: கிரிஸ்துவ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம்கள்
- கீழ்படிதல் குறித்த ஒரு உளவியல் பரிசோதனை
- ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து
- அமெரிக்கக் கூட்டு மாநிலங்களின் விடுதலைப் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய சுதந்திரச் சிலை [American War of Independence Centennial S
- சமீபத்தில் படித்தவை -3 : உமா மகேஸ்வரி , சுஜாதா, மனுஷ்ய புத்திரன் , யசுநாரி கவபத்தா, வெ சாமிநாதன் , நாஞ்சில் நாடன்
- தண்ணீர் தேடும் தமிழகம்
- மூங்கில் இலைப் படகுகள்
- பட தலைப்புகள்
- ‘ஒரு பொன்விழா கொண்டாட்டம் ‘ தொடர்ச்சி
- கடிதங்கள்- மே 20,2004
- தமிழ் இலக்கியக் கூட்டமும் புத்தகக் கண்காட்சியும்
- நைஜீரியா 1 : நைஜீரிய இனக்கலவரங்களில் முஸ்லீம்கள் மீது கிருஸ்துவர்கள் தாக்குதலைத் தொடர்ந்து யெல்வாவில் 50 கிருஸ்துவர்கள் கொலை
- ஓவிய ரசனை
- நைஜீரியா 3 : ஆப்ரிக்கா கிருஸ்துவர்-முஸ்லிம் கலவரம் : நைஜீரியா கானோ நகரத்தில் 500-600 கிரிஸ்தவர்கள் கொலை
- நைஜீரியா 4:நைஜீரியாவின் வன்முறைக்குப் பின்னே மதமல்ல , பொருளாதாரம் – ஒரு ஆராய்ச்சி
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் — 6
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 3)
- புலம் பெயர்ந்த வாழ்வில் இனக் கலப்பு
- மாண்புமிகு தமிழக முதல்வருக்கு
- ஊழ்வினை
- ஆர்வம்
- நீர் வளர்ப்பீர்
- பிரிவினை
- தேர்தல்களும் முடிவுகளும் எண்ணங்களும்
- மஸ்னவி கதை – 08-கீரை வியாபாரியும் கிளியும்
- பழையன கழிதலும் புதியன புகுதலும்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-20
- உறவுக்காக ஏங்கும் இதயங்கள்….
- பிறந்த மண்ணுக்கு – 3
- என் அண்ணனின் புகைப்படம்
- வாரபலன் மே 20,2004 : தொண்டு கிழம் வயசாளி எம்பியாகித் தொண்டு செய்ய.. , அட்டப்பாடி அடாவடி, எருதந்துறையில் கவிதைத் துறை,
- அரசியல் கட்சிகள் வெற்றி, மக்கள் தோல்வி
- தேர்தல் 2004 (தொடர்ச்சி) – முதல் 3 தோல்விகள்
- ‘இண்டியாவின் ‘ இறக்குமதி பிரதமரின் திறமை
- வாழ்க மதச்சார்பின்மை
- கா ற் று த் த ட ம்
- பணம் – ஒரு பால பாடம்
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 2
- தமிழவன் கவிதைகள்-ஆறு
- நட்பாகுமா ?
- வாழ்க்கை
- தனிமை
- தலைகளே….
- கவிக்கட்டு – 7 -தெருப்பிச்சைக்காரன்
- அதி மேதாவிகள்
- அன்புடன் இதயம் – 18. நாணமே நீயிடும் அரிதாரம்