கீதாஞ்சலி (7) – என் வாழ்வில் கட்டுப்பாடு (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


இது என் வாழ்வின்
வாழ்வைப் பற்றிய வரலாறு.
எனது உறுப்புகள் அனைத்தையும்
புத்துயிர் அளிக்கும்
உன்னுயிர்க் கரங்கள் தொடுவதை
என்னிதயம் உணர்வதால்
எப்போதும் என் உடம்பை
தூயதாய்
வைத்திருக்க
ஓயாமல் முயன்று வருகிறேன்.
ஆதி மூலக் காரணியான
நித்திய ஒளியை எனது
நெஞ்சில் தூண்டி விடும்
சத்திய நெறியே நீயென்று
முக்தி பெற்ற நான்
உண்மைக்குப் புறம்பட்ட அனைத்தையும்
எண்ணாமல் இருக்க
எந்நாளும் முயல்வேன்.

இதயக் கோயிலின்
உட்புறச் சன்னிதியில் நீ
திருப்பீடம் அமைத்து ஆசனத்தில்
இருப்பிடம் கொண்டுள்ளது
நினைவில் இருப்பதால்,
உள்ளத்தைக் களங்கப் படுத்தும்
தீவினை எல்லாம்
நெஞ்சத்தை நெருங்க விடாமல்
நீக்க முயல்வேன்,
பூக்கள் மேல் கொண்டுள்ள
என் மோகத்தைக்
குன்றாமல் வைத்துக் கொண்டு!
உனது பேராற்றல் இதுவரை
எனக்கு ஊட்டியுள்ள
மன உறுதியே
எப்போதும் எனை இயக்கும்
என்பது
தென்பட்டு வருவதால்,
நன்னெறி முறைகளைக் கடைப்பித்து
அரும்பாடுபட்டு முயல்வேன்,
நடத்தையின் மூலம் என்னை
உனக்கு
எடுத்துக் காட்ட!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 7, 2004)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா