கீதாஞ்சலி (79) மனவலியைத் தாங்குவேன்!

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


இந்தப் பிறப்பில் நேராக நின்னைச்
சந்திக்கும் கட்டம்
எனக்கில்லை என்றாகி விட்டால்,
உனைத் தெரிசிக்கும் வாய்ப்பிழந்தேன்
என்பதை
உணர வேண்டும் நான்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!
வணிக உலகிலே
மணிக் கணக்காய் ஊழியத்தில் உழன்று,
தினமும் செல்வம் சேர்த்து
எனது பை நிரம்பி வழிந்தாலும்,
எதுவும் முடிவில்
சம்பாதிக்க வில்லை எனும் உணர்ச்சி
வெம்பி மேவுகிறது என்னை!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!

பெரு மூச்சுடன் களைத்துப் போய்,
தெரு ஓரத்து மண்தூசியில்
தணிந்த கட்டில் மீது
குந்தும் வேளை, எனது
நீள்பயண மின்னும் கண்முன் உள்ளதென
நானுணர வேண்டும்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!
என்னறையில் தோரணங்கள் கட்டிப்
புல்லாங்குழல் இசை பொழிந்து,
சிரிப்பு வெடிகளில்
ஆரவாரம் செய்யும் போது,
வரவேற்று உன்னை நான் வீட்டுக்குள்
அழைக்க வில்லை யென
உணர வேண்டும்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 25, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா