கீதாஞ்சலி (75) நீ எமக்களித்த கொடைகள்!

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


எமது எல்லாத் தேவைகளையும்
நிறைவேற்றி வைக்கும்,
நீ எமக்களித்த
மனிதக் கொடைகள்!
எனினும் நாங்கள்
ஓடி வருவோம்
உன்னிடம் மீண்டும்,
கொடைகள் வற்றாத போதும்!
வயல்புறம், ஊர்ப்புறம்
வழியாகக் கடந்து வரும்
ஆறோட்டம்
தவறாமல் செய்யும்,
தன் அனுதினப் பணிகளை!
ஆயினும் தொடர்ந் தோடும் நீரோட்டம்
நெளிந்தோடி நின்
பாதங்களைக் கழுவப்
பாய்ந்து செல்லும்!
நறுமணம் பரப்பிக்
காற்றை யினிதாக்கி விடும்
பூக்களின் வாசம்!
எனினும் மலர்களுக்குப்
பணி முடிவு,
உனக்கு அர்ப்பண மாவது!
வணங்கி உன்னைத் துதிப்பதால்,
ஒருபோதும்
வறுமை ஆவதில்லை,
சிறு உலகம்!
கவிஞர் படைக்கும் பாக்களில்
அவருக்கு உவப்ப ளிக்கும்
திருவாய் மொழிகளைக்
கருவாய் எடுத்துக் கொள்!
ஆயினும்
அப்பாடல்கள் முடிவாகக் கூறும்
உட்பொருள்,
ஒப்பில்லா உன்னைத்தான்
சுட்டிக் காட்டும்!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 28, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா