கீதாஞ்சலி (48) உனது கூட்டாளி ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


இப்படித்தான் பூரிப்பு
உப்பி உள்ளது என்மேல்
உனக்கு!
இப்படித்தான் கீழிறங்கி
ஒப்பி வந்தாய்
என்னை நோக்கி!
மேலுலகை எல்லாம் ஆளும்
தேவனே!
நானில்லா திருந்தால்
வேறு எவனை நீ
நாடி யிருப்பாய்
உன் அன்பை அளிக்க ?
இந்த சொத்துக்கள் அனைத்திற்கும்
உந்தன் கூட்டாளி யாக
என்னைப்
பந்தப் படுத்திக் கொண்டாய்!
எந்தன் இதயத்தில் என்றென்றும்
முடிவில்லா நிலையில்
நடமாடி வருகிறது
உந்தன் களிப்பு!

என் வாழ்க்கை மீதுள்ள
உன் உறுதிப் பற்று
வடிவம் பெற்று எழுகிறது,
எப்போதும்!
வேந்தர்களின் வேந்தனே!
எனது
நெஞ்சில் நடனமிட
மிஞ்சிய பொலிவுடன்
உன்னை
ஒப்பனை செய்து கொண்டு
என்னை மயக்கினாய்!
கவர்ச்சியில் வென்றிட
நின் காதலியின்
காதலில்
நின் காதலை இழந்தாய்!
ஆயினும் நீ
காணப் பட்டாய்,
காதலன், காதலியாய்ப்
பூரணப் பிணைப்புடன்
இரண்டு
பேராக இருந்ததை!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 6, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா