கீதாஞ்சலி (47) – எழிலான வளைகாப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


வனப்பு மிக்கது உன்கை
வளைகாப்பு!
கண்சிமிட்டும், விண்மீன்கள்
எண்ணற்ற
வண்ண மய வேலைப் பாடுடன்,
பன்னிறப் பளிங்குக் கற்கள்
பதித்து!
அனைத்தையும் மிஞ்சி
எனக்கு
எழிலாய்த் தெரிவது,
அந்தி மயங்கிச்
செந்நிறம் பூசிய வேளையில்,
பூரணச் சமநிலை எய்திக்
கோரமாய்ச்
சுழன்று சுழன்று பளிச்சென
வளைந்த டிக்கும்
வாள்வீச்சு மின்னலே!
மகா விஷ்ணுவின் தெய்வப்
பறவை
இறக்கைகள் போலப்
படபடக்கும்!

மரணத்தின் இறுதித் துடிப்பில்
துன்பமயக்
களிவெறி ஆட்டத்தில்
உயிர்ப் பிடிப்பின்
கடைசித்
துண்டிப்பு போல
நடுக்கம்
உண்டாக்கும், உந்தன் மின்னல்!
வெள்ளி வீச்சு போன்ற
வெட்டில்,
தூய தீக்கனல்
பாய்ந்து
ஒளிவீசிச் செல்லும்,
பூமியின் ஆசா பாசங்களைப்
பொசுக்கி!

வனப்பு மிக்கது உன்கை
வளைகாப்பு!
கண்சிமிட்டும், விண்மீன்கள்
பன்னிறக்
கற்கள் பதித்து!
ஆயினும்
பாயும் இடி வேந்தே!
சுந்தர வடிவான
உந்தன் வாள்வீச்சு மின்னல்
உன்னத
நுட்ப எழில் வேலைப் பாடுடன்
உருவாக்கப் படுகிறது,
ஒருவரும்
எண்ண முடியாத வாறு,
கண்ணால் பார்க்க
அச்ச மூட்டித்
திகைப் பூட்டுமாறு!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 30, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா