கீதாஞ்சலி (37) என்னுள் விடப்பட்ட ஒன்று ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


என்னுள் விடப்பட்டுள்ள
சின்னஞ் சிறிய
ஏதோ ஒன்று,
உன் பெயரில் நிலைக்கட்டும்,
என் முழு உடமை நீ
என்பதில்!
எனது உறுதிப்பாட்டில்
என்னுள் விடப்பட்டுப் போன
சின்னஞ் சிறிய
ஏதோ ஒன்று
ஓதிக் காட்டட்டும்,
உன் இருக்கை
ஒவ்வொரு திக்கிலும் பரவிய தென்று
உணருமென் இதயத்தை!
உரைக்கட்டும்,
ஒவ்வொன் றுக்கும் தீர்வு காண
உன்னை நான் எப்போதும்
அண்டி வருவதை!
பலரும் அறியட்டும்,
ஒவ்வொரு கணமும் எந்தன்
பந்தப் பிணைப்பை
உனக்கு நான்
சமர்ப்பணம் செய்வதை!

என்னுள் விடப்பட்டுப் போன
சின்னஞ் சிறிய
ஏதோ ஒன்று
எடுத்துச் சொல்லட்டும்,
உன்னிட மிருந்து நானோடி
எப்போதும்
ஒளிந்து கொள்ள முடியா தென்று!
உரைக்கட்டும்,
கால் விலங்குக் கட்டுகளுடன்,
உன் உறுதிப் பிடியில்
என்னிதயம்
பின்னிக் கொண்டிருப்பதை!
எடுத்துச் சொல்லட்டும்,
என்னை நீ
படைத்து விட்டதின் பலனை
நான் வாழ்வில்
நடத்திக் காட்டி விட்டதை!
பலரும் அறியட்டும்,
உன் பரிவுப் பிணைப்பே
என் கால்களில்
விலங்காய்க் கட்டப் பட்டு
இருப்பதை!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 22, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா