கீதாஞ்சலி (34) – என்னைப் பின்தொடரும் நிழல்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 23 in the series 20050805_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


தன்னந் தனியான என் பாதையில்
வந்து நிற்கிறேன்,
எந்தன் காதலியைச்
சந்தித்த பின்பு!
யாரிவன், மெளனக்
காரிருள் மேவிய நேரத்தில்
என் பின்னே
என்னைத் தொடர்ந்து வருவது ?
ஒதுங்கி
இருக்கையைத் தவிர்க்கப்
பதுங்கிக் கொண்டாலும்
எந்தப் பலனு மில்லை!
என்னதான்
முயன்றாலும் என்னால்
தப்பிப் புறக்கணிக்க
இயல வில்லை அவன்
இருக்கை விட்டு!

பெருமித நடை நடந்து
புழுதி கிளப்பித் தூசியை
புவித் தளத்தி லிருந்து
வானை நோக்கி
அனுப்புகிறாய்!
வாய் உதிர்க்கும் எனது
ஒவ்வொரு வார்த்தை யோடும்
இரண்டறக் கலக்கிறது,
அவன் போடும்
ஆரவாரக் கூக்குரல்!
என் சிற்றுருவச் சுய உணர்வின்
முழுத் தோற்றத்தில்
காண முடிவது
அவன் திருவடிவம்!
நாணமற்றுப் போனவன்
ஆயினும்,
மாயநிழல் பின்தொடர நான்
முன்வந்து
உன் சன்னிதி வாயிலில்
நின்றிட
வெட்க மடைகிறேன்,
என் அதிபனே!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 1, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா