கீதாஞ்சலி (27) கதவு திறந்திருக்கிறது! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

This entry is part [part not set] of 30 in the series 20050616_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


கோடை மழை கொட்டிப் பெய்யும்
ஆடி மாதக் காலம்,
கருமை நீளும் நிழல்களில்
இரவைப் போல மெளனத்தில்
இரகசியமாய்
தடம் வைத்து வருகிறாய்,
எவரும் காணாமல்!
இன்றையக்
காலைப் பொழுதும் தனது
கண்களை மூடிக்
காரிருள் சூழ்ந்து விட்டது!
கிழக்கு நோக்கி,
அழுத்தமாக
பேரிரைச்ச லோடு அழைக்கும்
பெருங் காற்றைத்
தெருவில்
காண்பார் யாரு மில்லை!
என்றென்றும்
நீல வண்ணத்தில் காட்சி தரும்
விண்ணின் மீது
காரிருள் போர்த்தியது,
திண்ணிய முகில்
திரையை!

காட்டு மரங்கள்
கூட்ட மாகக் கானம் பாடி
ஓய்ந்து போயின!
ஒவ்வொரு வீட்டின் கதவுகளும்
இறுக்கச்
சாற்றப் பட்டு விட்டன!
தடமிட்டுத் தன்னந்
தனியாக
மனித சந்தடி யற்ற
தெருக்களில் வருபவன் நீ
ஒருவனே!
என்னரும் ஒரே ஒரு நண்பனே!
என்னுயிர் உன்னத அன்பனே!
தாழிடப் படாமல்
எனது இல்லத்தின்
வாயிற் கதவுகள் உனது
வரவுக்குத் திறந்தி ருக்கின்றன!
வீட்டில்
தடமிடாமல்
கடந்து போய் விடாதே,
கனவைப் போல!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 13, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா