கீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்!

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


உன்னை எனக்குத் தெரியும் என்று
மாந்தரிடையே
பீத்திக் கொண்டேன் நான்!
என் படைப்புகள் அனைத்திலும் உள்ள
உன் படத்தை
உற்று நோக்குவர் மற்றவர்.
என்னருகில் உடனே வந்து
“யார் அவன் படத்தில்?”
என்றெனைக் கேட்கிறார்!
பதில் தர முடியாது அவர் முன்
பரிதவிப் படைவேன்!
உண்மையாய்
என்னால் கூற இயலாதென
எடுத்துரைப்பேன்!
துடுக்காய்த் திட்டி வெளியேறுவர்
வெறுப்போடு!
நீயோ
வீற்றிருப்பாய் அங்கே
முறுவலோடு!
நின்னரிய கதைகளை
என்னினிய கீதாஞ்சலியாய் எழுதி
நீடிக்க வைப்பேன்!
உன்னுடைய மர்மங்கள்
என்னிதயத்தைக் கீறிக் கொண்டு
பொங்கி எழும்!
அருகில் வந்து மற்றவர்
“அவை கூறும் அர்த்தம் என்ன”
என்றெனைக் கேட்கிறார்!
பதில் தர முடியாது அவர் முன்
பரிதவிப் படைவேன்!
“அந்தோ எவருக்குத் தெரியும்
அவை கூறும் அர்த்தங்கள்?” என்று
தவிர்த்து நிற்பேன்!
வெளியேறுவர் கேலி செய்து,
வெறுப்போடு!
நீயோ
வீற்றிருப்பாய் அங்கே
முறுவலோடு!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 4, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா