கிள்ளுப் பூ

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

சிவஸ்ரீ


புந்து புந்துனு இருக்கிறப் புறாப் போல மொத்னு இருக்குது இந்த வாழப் பூவு. அதோட சிறக, ச்ச இல்ல மடலப் பிரிச்சவுடன அப்பப் பொறந்த பாப்பாவோட பிஞ்சு விரலாட்டம் சந்தன நிறத்துல கொப்பா இருந்த பூவ எடுத்து, வரீசையா இருந்த நரம்புகள்ல, நடுவ மொட்டாட்டம் தலையோட வெள்ளையா இருந்த குருத்த விலுக்னு கிள்ளி எடுக்குறப்ப, குபீர்னு வயித்தப் பிசைஞ்ச வலி நெஞ்ச அடச்சிக்கிட்டு வந்திருச்சு.

தகதகன்னு மின்னுன தீக்கங்க அள்ளி சாம்பிராணிக் கரண்டில போட்டு அம்மா விசிற விசிற, வயிறு கதகதனு பத்திக்கிட்டு எரியுது. சாம்பிராணியப் போட்டுக் கொண்டாந்து, பொறடி முடிய வகுந்து புகைய விட்டுக்கிட்டே அம்மா கேக்குறாங்க,

‘இன்னக்கி ஞானசம்பந்தருக்கு அம்மன் ஞானப்பால் குடுக்குற அலங்காரமாம். கிளம்புறியா, போவோம் ? ‘

‘வயித்த வலிக்குதுமா வேணா ‘ வெடிக்கப் பாத்த அழுகைய உதட்டக் கடிச்சு முழுங்கிக்கிட்டே சொன்னேன்.

‘ஏன்டா, தூரத்துக்கு நாள் வந்திருச்சா ? கடசியா எப்பக் குளிச்ச ? ‘

‘தெரியல, கணக்கு வச்சிக்கலம்மா ‘

‘போடி மக்கு, கல்யாணம் முடிஞ்ச கையோட பெத்திருந்தா, இந்நேரம் புள்ள எழுந்திரிச்சி நடந்திருக்கும், இன்னம் இப்டி அசடா இருக்கியே ‘

சாம்பிராணிக் கரண்டிய கீழ வச்சிட்டு, காதுக்கிட்ட குனிஞ்சாங்க அம்மா, ‘ஆமா, அதான் ரெண்டு வருஷமாச்சே, இன்னமா வேணான்னு தள்ளிப் போடுறீங்க ரெண்டு பேரும் ? மாப்பிள்ள என்ன சொல்றாரு ? ‘

‘அப்டிலாம் இல்லம்மா, புள்ள வேணும்னு தான் இருக்கோம். ‘

‘அப்ப டாக்டர்ட்ட காட்னிங்களா ? ‘

‘ம் ‘ குத்துக்காலிட்ட முழங்காலில் தலையைக் கவுந்துகிட்டேன்.

பின்னாடி இருந்து முன்னாடி வந்த அம்மா, ‘ நல்லாத்தான், இவ்ளோ நேரமா ஒரு பூவத் தான் ஆஞ்சியா ? இன்னக்கி சமைச்சாப்ல தான்! சீக்கிரம் எடுத்துத் தா ‘

‘ம்ஹும்! நா வேற எதாவது செய்றேம்மா, எனக்குக் குருத்த எடுக்க மனசு வரல. ‘ தலைக்குள்ள பம்பரம் விடுறாப்ல சுத்திக்கிட்டு, பெரட்டிப் பெரட்டி வாந்தி வருது.

கன்னத்தையும் நெத்தியையும் தொட்டுப் பாத்த அம்மா ‘சுடுதே, சூட்டு வலியோ, தூர வலியா இருக்கக் கூடாதுடி செல்லம். தங்குனிச்சின்னா தேவல. மொகமெல்லாம் மின்னுது, உண்டான பொண்ணு மாதிரி தான் இருக்க, பூசுனாப்ல, நம்ம சுந்தரியம்மா கிளினிக்ல காட்டிட்டு வருவோமா ? ‘

‘இல்ல்ல்லம்ம்மா! பாத்துட்டோம், இங்க வரதுக்கு ரெண்டு நாள் முன்ன தான் காட்டுனோம். ஒண்ணுமில்ல. ‘

‘எல்லாம் கூடி வந்திரும் சீக்கிரம். நம்ம கொழந்தப் புள்ளயாருக்கு நூத்தியெட்டுத் தேங்கா ஒடப்போம். இப்ப அம்மங்கோவிலுக்கு போயிட்டு வந்திருவோம், வா ‘

கொலு மண்டபத்தில் அரக்குப் பட்டுசேலையில அம்மன் தாய்மை கனிஞ்ச முகத்தோட, வெள்ளிச் சங்குல பாலை சம்பந்தருக்குக் குடுத்துக்கிட்டிருந்தாங்க.

‘…கண்ணம்மா! மார்பு துடிக்குதடா ‘ னு கத்தனும் போலருந்துச்சு. ‘சொல்லடி, அபிராமி ‘னு ஆரம்பிச்சார் நாதஸ்வரக்காரர். பச்சக் கல்பூரம், ஏலக்கா போட்ட ஞானப்பால் தீர்த்தம் குடுத்தாங்க. அத வாங்குறதுக்காகவே, கொழந்த இல்லாதவுங்க கூட்டம் ரொம்ப இருந்திச்சு கோவில்ல.

கைபொறுக்குற அளவு சூட்டுல நல்லெண்ணைய உள்ளங்கால்ல வச்சு அழுத்தித் தேச்சாங்க அம்மா. ‘காலு ரெண்டும் அதச்சாப்ல இருக்கே, யோசன பண்ணிப் பாரு, எப்பக் கடசியா குளிச்ச ? ‘

கவனிக்காத மாதிரி மெட்டி ஒலியில இருந்து கண்ண எடுக்கல நா.

‘சீக்கிரம், எனக்கொரு பேரனப் பெத்துக் குடுத்துருடி, நா பாத்துக்றேன் ‘

‘ஏம்மா, பேத்தினா பாக்க மாட்டிங்களா ? ‘

‘போடி, இன்னக்கி கோவில்ல பாத்தீல, அப்பா அவசர வேலையா வெளியூர்ல மாட்டிக்கிட்டதுனால, பரிவட்டம் கட்டிக்க வர முடியல. நீ அவரோட வாரிசு தானே, உனக்குக் கட்டுனாங்களா ? பையனா இருந்தாத் தான் எதுலயும் முதல் மரியாதை. அப்றம் சாமிக்கே கட்டிட்டாங்கள்ல ? ‘

‘இப்பலாம் செத்துப் போயிருவோம்ன்ற பயம் கூட இல்லாம ராக்கெட்லே போறாங்கம்மா பொண்ணுங்க. ஏன், அப்றம் பரிவட்டத்த சாமிக்குக் கட்டுனாங்களே, அம்மனும் பொண்ணு தானே ? ‘

‘என்ன தான் சொல்லு, எந்தப் பதவியோ பட்டமோ வாங்குனாலும், பொறந்த அன்னிக்குல இருந்து, போகுற வரைக்கும் பொண்ணு பொழப்பு கண்ணீரு பொங்குன பொழப்புத் தான்! ‘

‘எனக்குப் பொண்ணு தாம்மா வேணும். நீங்க எனக்கு குடுக்காத சுதந்திரமெல்லாம் அவளுக்குக் குடுப்பேன். பாட்டு, பரதம், கராத்தே, கார் ஓட்ட…னு எத்தன ஆச, பத்திக்காமப் போன புஸ்வாணம் மாதிரி புகைஞ்சு கிடக்குது எனக்குள்ள, எம் பொண்ணு என்னென்ன ஆசப்படுறாளோ, அத்தனையும் செஞ்சு குடுப்பேன் ‘

‘போ, உனக்கு ஒண்ணும் தெரியாது. உன்ன அப்டி வளத்ததுனால தான், ஒரு சொல்லு, ஒரு பல்லு படாம, வைர விக்கிரகமாட்டம் உம் புருஷன் கையில் தூக்கிக் குடுத்தோம். ‘

‘நானும் வைரமும் வைடூரியமுமா வளப்பேன் ‘

‘உனக்கு உன்னயே பாத்துக்கத் தெரியாது, இதுல புள்ளய எப்டி பாப்ப ? பேசாம, நானே வளப்பேன் உன்ன வளத்த மாதிரியே, குடுத்துருடி ‘

‘பொறந்தாத் தரேம்மா ‘ என் வாய் சொன்னது, என் காதுக்கே கேக்கல. அம்மாவுக்காக பூசி வச்சிருந்த சிரிப்பே உதட்ட நெரிச்சு உசுர எடுத்துரும் போல.

சட்னு கண்ணப் பொத்தினாப்ல கரண்ட் போச்சு. ‘ச்ச! நல்ல நாடகத்த முழுசா பாக்க விட மாட்டாங்களே, நாளக்கிப் புரியாமப் போகப் போகுது ‘ அம்மா தடவித் தடவித் தீப்பெட்டி தேடுனாங்க. ‘நல்ல நாடகம் தான்! கரண்ட்டு போய்க் காப்பாத்துச்சு ‘ நெனச்சுக்கிட்டேன்.

‘மாப்பிள்ளயும் நீயும் சேந்து நம்ம கோவிலுக்குப் போயிட்டு வந்தா எல்லாம் நல்லபடியா நடக்கும். இன்னொரு தடவ ஃபோன் போட்டுப் பாரேன், வந்து உன்னயக் கூட்டிட்டுப் போறாங்களான்னு ? ‘

‘இப்ப லீவு கிடைக்காதும்மா. நாளக்கி அம்பு விடுற திருவிழா முடிஞ்சதும், நாளன்னிக்கி, நீங்க ரயிலேத்தி விட்டுருங்க. அவுங்க அங்க வந்து என்னைக் கூட்டிப்பாங்க. ‘

மூணு குச்சிய சொருகி வச்சு, மரக்கட்டையவே கிரிக்கெட் மட்டையா புடிச்சுக்கிட்டு, ஊர்ப்பயனுங்க எப்பவும் ஃபோர், சிக்ஸ்னு கத்திக்கிட்டு கிடக்குற பொட்டல்ல, இன்னக்கி வெள்ளக் குதுரையில வில்லும் அம்புமா சாமி வந்து நின்னுச்சு. சாமிய குதுரை தூக்க, குதுரைய நாப்பதம்பது ஆம்பளங்க தூக்கிக்கிட்டு ஓடி வராங்க.

‘தனம் தரும், கல்வி தரும், ஒரு நாளும் தளர்வறியா… மனம் தரும்… ‘ டன் டன் டன் டண்டணக்கா… தீப்பந்தத்துல வாட்டுன தப்பக் கொட்ட ஆரம்பிச்சிட்டாங்க. இன்னமும் குடுமி வச்சிருக்க குருக்களய்யாவே சாமியா மாறி அம்பு விட்டாரு. அதக் கையில புடிக்கக் கூட்டம் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமுமா ஓடி ஒரே ரகளை. புடிச்சவங்க வீட்ல ஆம்பளப் புள்ள பொறக்குமாம்ல.

‘கார அப்பா எடுத்துட்டுப் போயிருக்காங்களே, டாக்ஸிக்குப் போன் போடு ‘ அம்மா தூக்குச் சட்டியில் பலகாரத்த எடுத்து வச்சிக்கிட்டிருக்காங்க.

‘வேணாம்மா, மெதுவா பேசிக்கிட்டே, கொழந்தப் புள்ளயார் கோவில் பக்கமா நடந்து போவோம். பையெல்லாம் மட்டும் சைக்கிள்ல குடுத்து விட்டுருங்க. ‘

‘நானும் வருவேன் ஸ்டேஷன் வரைக்கும் ‘ தங்கச்சி தாவணிய இழுத்து சொருவிக்கிட்டு தாவியோடி வருது மான்குட்டி மாதிரி.

அரசமரமும் வேப்பமரமும் பின்னிக்கிட்டு நிக்க, மரத்தடியில புள்ளயார் உக்காந்திருக்காரு ஊரணியப் பாத்தபடி. இப்டி ரெண்டு மரமும் சேந்திருந்தா அதுல மூணு சாமியும் வந்து குடியிருப்பாங்களாம்ல. வேருல பிரம்மா, மரத் தண்டுல பெருமாள், மேல கிளையில சிவன் இருக்காங்களாம். காயத்ரி மாமி சொல்லிக் குடுத்த ஸ்லோகத்த சொன்னேன்

‘மூலதோ பிரம்ம ரூபாயா

மத்யதோ விஷ்ணு ரூபினே

அக்ரதா … ‘ ம்ஹும் மேல வேணாம், தூரிலிருந்து தண்டுக்கு வந்த கண்ண மேல நிமிர்த்தவே இல்ல. சிவரூபாயா சொல்லல. அவரு அழிக்கிற சாமி. ஆக்குற சாமியும், காக்குற சாமியும் போதும். உடைச்சு சில்லு சில்லா சிதறுன தேங்காவப் பொறுக்கப் புள்ளங்க ஓடி வருதுங்க.

ஒத்தையடிப் பாதையில ரெண்டு பக்கமும் மஞ்ச மஞ்சளா கிள்ளுப் பூ பூத்துக் கிடக்கு. தங்கச்சி அதக் காம்பும் இலையுமா பறிச்சு, ‘தாத்தா தாத்தா, காசு குடு ‘, ‘தரமாட்டேன் ‘னு தானாவும், பூவாவும் பேசி, பதிலும் பேசிக்கிட்டு, ‘தரமாட்டியா, போச்சு உன் தலை ‘னு விரலால கிள்ளி சுண்டி விட்டுருச்சு பூவ. எகிறி புல்லுக்குள்ள விழுந்துருச்சு பூ. அடுத்த பூவ கிள்ளப் போக, ‘சும்மா வா ‘ன்னு அதட்டுனேன்.

ஓடிப் போயி ‘பாஸா ஃபெயிலா ‘ புல்லப் புடுங்கிட்டு வந்து, ‘ம், அந்தப் பக்கம் நீ புடி, இங்கிட்டு நா பிரிக்கிறேன், பாஸா ஃபெயிலா பாப்பமா ? ‘

பிரிச்சுக்கிட்டே வர, கை நடுங்குது, பட்னு விட்டுட்டேன் ‘வேணா போ ‘

‘போக்கா, நீ அத்தான் நினைப்புல, எங்கள மட்டுமில்ல, நம்ம விளையாட்டுலாம் கூட மறந்துட்ட ! ‘

ஸ்டேஷன்ல வேலிக்கு வச்ச கொட்டச்செடில மூக்குத்திப்பூ பூத்துக் குலுங்குது. கண்ண இருட்டிக்கிட்டு வாந்தி வருது. அம்மா என்னன்னு நெத்தியப் பிடிச்சாங்க. ‘ஆப்பத்துக்கு ஊத்திக் குடுத்த தேங்காப்பால் ஒத்துக்கல போல, தண்ணி தவிக்கிதுமா ‘

‘ எளநி தரவா ? ‘ ஆலமரத்தடிலருந்த மெச்சியக்கா கேட்டுச்சு.

‘ ஒண்ணு குடுத்தா ‘ அம்மா பர்ஸ எடுத்தாங்க.

‘ உண்டாகிருக்கா புள்ள ? ‘

‘ நல்லாருக்கே, உண்டாகி வந்திருந்தா, இப்டித்தான் அனுப்புவமா ? எட்டூரு சீரோட, சொந்த பந்தம் அத்தனையுமா தெரண்டு காருல கூட்டியாந்துட்டு, கொண்டே விடுவோம்ல, திருவிழாக்கு வந்துட்டு, திரும்பிப் போகுது. அடுத்த தடவ புள்ளத்தாச்சியாத் தான் வரும் ‘

‘அக்கா, மூக்குத்திப்பூ! ‘ தங்கச்சி கொண்டாந்து பாலோட பசையா ஏழு கல்லு மூக்குத்தி மாதிரி இருந்த அத மூக்குல ஒட்டுச்சு.

திரும்பிப் பாத்தேன். பூவப் பறிச்ச காம்புலருந்து சொட்டு சொட்டா பால் வடியுது வீணா. நெஞ்சு கனத்து விம்மி நிக்கிது.

ரயில் வந்திருச்சு. டடக் டடக்னு எப்பவும் வர்றது, இப்ப மட்டும் டன் டன் டன் டண்டணக்கானு வர்ற மாதிரி இருக்குது. ச்ச!

அம்மா காதுக்குள்ள வந்து சொல்றாங்க, ‘எதுக்கும் போனவுடன டாக்டர்ட்ட காட்டும்மா, உண்டாயிட்டனு தெரிஞ்சா முதல்ல எங்கிட்ட சொல்லிராத, உன் மாமியார்ட்ட சொல்லு, அவுங்க தான் சிங்கமாட்டம் நாலு ஆம்பளப் புள்ள பெத்துருக்காங்க. ‘

உங்கக்கிட்ட தாம்மா முதல்ல சொல்லிருக்கனும். ஆனா, புள்ள சரியில்ல, பொறந்தாலும் செத்துத் தான் பொறக்கும், அதுனால கீறி எடுத்தாகனும்னு டாக்டரம்மா சொன்னதுக்கப்றம், எப்டிம்மா சொல்லுவேன், உங்க பேரனோ, பேத்தியவோ, என் வயித்துல சுமந்துக்கிட்டிருக்கேன்னு! அடுத்த தடவ இல்ல, இப்பவே புள்ளத்தாச்சியாத் தான் வந்துட்டுப் போறேன்னு சொல்ல முடியலயேம்மா. பத்து மாசம் மட்டுமில்லாம, இன்னமும் என்னையச் சுமந்துக்கிட்டிருக்கிற உங்கக்கிட்ட, நா எம்புள்ளய பாதில இறக்கி வைக்கப் போறதச் சொல்லி, உங்க மேல சுமைய ஏத்தவா ? தாங்க மாட்டிங்கம்மா.

ரயில் கிளம்பிருச்சு. ஃபோன் பண்ணுன்னு கையக் காமிச்சுக்கிட்டே அம்மாவும் தங்கச்சியும் டாடா சொல்றாங்க. கண்ண விட்டு மறஞ்சதும், கண்ண விட்டு மறஞ்சிருந்த கண்ணீரப் பிரவிச்சிருச்சு கண்ணு, பனிக்குடம் உடஞ்ச மாதிரி.

இப்டிக் குத்துதே வயிறு, அங்க வட்ட வட்டமாத் தெரியுற சப்பாத்திக் கள்ளி முள்ளு வயித்துக்குள்ளயா சொருகி நிக்கிது ? இருக்கியா இல்லையா, எந்தங்கமே! என் வயித்துலேருந்து கிள்ளியெடுத்து சுண்டி எறிஞ்சுருவாங்களா உன்ன ? கிள்ளுப் பூ மாதிரி ? ?

&&&&

-சிவஸ்ரீ sreeeiii@poetic.com

sreeeiii@poetic.com

Series Navigation

சிவஸ்ரீ

சிவஸ்ரீ