கிறிஸ்துமஸ் பரிசு

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

பாரி பூபாலன்


‘இதுதான் என் மொத்த வாழ்க்கையிலேயே நான் கண்ட மிக மோசமான கிறிஸ்துமஸ் ‘ கோபத்துடன் கூறினாள் அவள். எனக்கு சிரிப்புதான் வந்தது. வயது ஐந்து கூட ஆகவில்லை. விபரம் தெரிந்தபின் வந்த முதல் கிறிஸ்துமஸ் இதுவாகத்தான் இருக்கும். அதற்குள் இது மிகவும் மோசமான கிறிஸ்துமஸ் ஆகிவிட்டது என் மகளுக்கு. கொஞ்சம் பெருமையாகக் கூட இருந்தது அவளுக்கு இப்படிக் கூட பேசத் தெரிகிறதே என்று.

ஏன் இப்படி இந்த கிறிஸ்துமஸ் மோசமாகிவிட்டது ? அவளிடம் கேட்டால், அலங்கார விளக்குகள் அவள் எண்ணியபடி அமைக்கப் படவில்லை. கிறிஸ்துமஸ் மரம் வீட்டில் வைக்கப்படவில்லை. வேலும் அவளது பட்டியல் படி அப்பாவுக்கு கையுறை, அம்மாவுக்கு வளையல், பாட்டிக்கு குளிர் தாங்கும் கோட், தனக்கும் தங்கைக்கும் பொம்மைகள், கலர் பென்சில்கள் என அவள் போட்டிருந்த பட்டியல் படி எதுவும் இன்னும் வாங்கப்படவில்லை. கோபத்துடன் கூறினாள் அவள். ‘இதுதான் என் மொத்த வாழ்க்கையிலேயே நான் கண்ட மிக மோசமான கிறிஸ்துமஸ் ‘. பாவமாக இருந்தது. அடுத்த நாளே இவையெல்லாம் வாங்கிவிடலாம் என சமாதானம் செய்தேன்.

மேலும், கிறிஸ்துமஸ் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா எனக் கேட்டேன். ‘அலங்கார விளக்குகள் வைக்கவேண்டும், கிறிஸ்துமஸ் மரம் வைக்கவேண்டும். கிறிஸ்துமஸ் தாத்தா வந்து பரிசு தருவார். நாமும் எல்லோருக்கும் பரிசுகள் வாங்கிக் கொடுக்கவேண்டும். இதுதான் கிறிஸ்துமஸ். ‘ என்றபடி அவள். கிறிஸ்துவைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் கிறிஸ்துமஸ் பரிசுகள் பற்றி அவளிடம் இருந்து நிறையவே தெரிந்து கொண்டேன்.

அவள் போட்டிருந்த பரிசுப் பட்டியலைப் பார்த்தேன். பரவாயில்லை. நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறாள், வீட்டுக்குள் வந்து குவியும் விளம்பரங்கள் மூலம். அதுவும் முக்கியமாய் பரிசுகள் கொண்ட பட்டியலை எப்படி திட்டமிடுவது என்று. தபால் மூலமாகவும், வானொலி – தொலைக் காட்சிப் பெட்டி மூலமாகவும் வீட்டுக்குள் வந்து குவியும் விளம்பரங்களுக்கு அளவில்லை. எண்ணிலடங்கா தகவல்கள், எப்படியெல்லாம் பரிசுகள் பரிமாறிக்கொள்ளலாம் என்று. அன்றாடம் உபயோகித்துக்கொள்ளும் சோப், செண்ட் போன்றவற்றிலிருந்து உபயோகமே படுத்தாமல் மூலையில் வைக்கப்படும் அலங்காரப் பொம்மைகள் வரை ஏராளமான பரிசு யோசனைகள். சாப்பாட்டுக் கடை பரிசு பத்திரங்கள் முதல் சாப்பிட உபயோகிக்கும் கத்தி கரண்டி உள்பட பல்வேறு பரிசுகள். பழைய காரை துடைத்துக் கொடுக்கும் பணி முதல், பணம் பல்லாயிரம் கொண்டு வாங்கப்படும் புத்தம் புதிய கார் வரை பரிசுகள் பலவிதம்.

வர்த்தகச் செய்திகளைக் கேட்டால், என் மகள் போட்டிருந்த பட்டியல் எவ்வளவு முக்கியமானது எனப் புரிந்தது. இந்த நாட்டுப் பொருளாதாரமே இந்த மாதிரியான பட்டியல்கள்களைப் பொருத்துதான் இருக்கிறது என்பது போன்ற செய்திகளாய் இருந்தது. கடைகளில் வியாபாரம் எதிர்பார்த்த அளவில் நடக்காதலால் ஏகமாய் கழிவு விற்பனைகள். ஒருவேளை மற்றவர்கள் வீட்டிலெல்லாம் என் மகள் போன்ற ஒருவர் இல்லையோ என்னவோ ? எது எப்படியோ ? அவளது பட்டியல்படி, பரிசுப் பொருட்கள் வாங்கிவிடலாம். அப்படி நாம் வாங்குவதால் ஒருவேளை இந்த மந்த நிலை மாறினாலும் மாறலாம்.

சமீபத்தில் ஒரு அமெரிக்கப் பத்திரிக்கையில் ஒருவர் கோபத்துடன் கடிதம் எழுதியிருந்தார். அதில் கிரிஸ்துமஸில் கிருஸ்துவே இல்லை என்றும், கிரிஸ்துமஸ் தாத்தாவான செயிண்ட் நிக்கலஸ்தான் முக்கியமான பீடத்தில் உட்கார்ந்திருக்கிறார் என்றும், கிரிஸ்துமஸ் என்பது ஒரு தின்னும் விழாவாக, பரிசு கொடுக்கும் விழாவாக, பரிசு கேட்கும் விழாவாக, ஒரு நுகர்பொருளாக ஆகிவிட்டது என்றும், இதில் கிரிஸ்து பற்றிய ஆன்மீகத்துக்கோ, அவரது பிறப்புக்கோ அமெரிக்காவில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும் புலம்பியிருந்தார்.

அமெரிக்காவில் வசிக்கும் எனக்கு இது வினோதமாக இல்லை. தமிழ்நாட்டில் இருந்தபோதும், தீபாவளி என்ற திருவிழாவோ, அல்லது பொங்கல் என்ற திருவிழாவோ எந்த வித ஆன்மீகமோ, அதன் தாத்பரியமோ புரிந்துகொள்ளப்பட்டு பேசப்பட்டு கொண்டாடப்படுவதில்லை. அது ஒரு நுகர்பொருளாக மாறிவிட்ட ஒரு திருவிழாவாகத்தான் இருக்கிறது என்று பலர் பேசிக் கேட்டிருக்கிறேன்.

எல்லோரும் பொதுவாகக் கொண்டாடப்படும் ஒரு திருவிழா, எல்லோருக்கும் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ளப்படும் மகிழ்ச்சி, குழந்தைகளின் எதிர்பார்ப்பு இவைதான் திருவிழா கொண்டாட்டம். இதன் பின்னே இருக்கும் தாத்பரியமோ அதன் முக்கியத்துவமோ, இரண்டாம் பட்சம்தான். சொல்லப்போனால் தேவையில்லாததும் கூட. முதலாவதுதான் மக்களை இணைக்கிறது. இரண்டாவது மக்களை வாதிட வைக்கிறது.

ஆகவே என் மகளுக்கு மோசமான கிரிஸ்மஸ் உடனே தெரிந்துவிட்டதில் ஆச்சரியப்படவில்லை நான்.

***

pariboopalan@hotmail.com

Series Navigation

பாரி பூபாலன்

பாரி பூபாலன்