பவளமணி பிரகாசம்
நூறு வயதாகிறது நாங்கள் வசிக்கும் எங்கள் மலைப் பிரதேசத்து மாளிகைக்கு. கல் போல் நிற்கும் கட்டிடம். காலத்திற்கேற்ப நவீன வசதிகளை சேர்த்துக் கொண்டே வந்ததால் செளகரியமான வீடுதான். மழலை பட்டாளம் அடிக்கும் லூட்டிக்குத்தான் அந்த வீட்டிற்கு கொடுத்து வைத்திருக்கவில்லை. கைகட்டி, வாய் பொத்தி நிற்கும் சேவகர் கூட்டத்தால் கலகலப்பு கூடுமா என்ன ?
எங்கள் ‘குடும்ப மரம் ‘ விழுது விட்ட ஆலமரம் போலில்லாமல் கிளை இல்லாத ஒற்றை பனை மரமாய் இருக்கிறது. எண்ணி ஒரே மகன் என குடும்ப சங்கிலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கொப்பும், கிளையுமாய் உறவு முறைகள் வளரவேயில்லை. பிள்ளைகள் பல பிறந்திருந்தால், கூட்டுக் குடும்பமாய் மருமகள்களும், சீராட வந்து போகும் நாத்திகளும், ஓடியாடும் குழந்தைகளுமாய் கல்யாண வீடு போலிருந்திருக்கும். அந்த பாக்கியம் இல்லாததால் எப்போதாவது கூடும் மாலை நேர தேநீர் விருந்தில் நண்பர்களின் கலகலப்பைத் தவிர வேறு சப்தமே அறியாத வீடாய் இருக்கிறது.
எங்கள் குடும்பத்தின் இன்னொரு முக்கிய அம்சம், சொல்லி வைத்தது போல யாரும் ஐம்பது வயதை தாண்டியதில்லை. முதுமையை காணாமல் அவசரமாய் கைலாய பதவியை அடைந்து விடுவார்கள்- வியாதியினாலோ, விபத்தினாலோ. இதனாலேயே காசு பணத்துக்கு குறைவில்லாத போதிலும் எங்கள் வீட்டில் பெண் கொடுப்பவர்கள் யோசிக்கத்தான் செய்வார்கள்.
இப்போது எங்கள் வீட்டில் நானும், என் மனைவியும் மட்டுந்தான். எங்களுக்கு திருமணமாகி ஐந்து வருடமாகிறது. ஏனோ இன்னும் மகப்பேறு கிட்டவில்லை. ஆரம்பத்தில் லேசாக உறுத்திய இந்த விஷயம் நாளாக நாளாக நிறையவே கவலை தருவதாக மாறி வருகிறது. விரதங்கள் ஒரு புறமும், வைத்தியங்கள் ஒரு புறமுமாய் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. இதற்கிடையே புதிதாய் ஒரு பிரச்சினை வந்து சேர்ந்திருக்கிறது.
படுத்தவுடன் தூங்கிவிடும் பழக்கமுள்ள எனக்கு சமீப காலமாக கனவொன்று வந்து கொண்டேயிருக்கிறது. அதே காட்சி அச்சு பிசகாமல் அடிக்கடி தோன்றுகிறது. பொருள் விளங்கவும் இல்லை, பகுத்தறிவுக்கு ஏற்புடையதாயுமில்லை. அருவிக்கரை ஓரத்தில், மலைப் பிரதேசத்தில் பள்ளிப் பிராய சிறுவனாய் நான் தனியே அமர்ந்திருக்கிறேன். என்னைச் சுற்றி ஒரு குரங்குக் கூட்டம் நின்று வேடிக்கை பார்க்கிறது. சிறியதும், பெரியதும், குட்டியை கவ்விக் கொண்டதுகளுமாய். வாழைப் பழத்தை உரித்து நீட்டுகிறேன் – குரங்கு தானாய் உரித்துத் தின்னாதோ ? என் முன்னே பரப்பியிருக்கும் பழங்கள், இனிப்பு வகைகளை அவற்றின் இயற்கையான சுபாவப்படி பாய்ந்து வந்து பறித்துச் செல்லாமல் அமரிக்கையாய் இருக்கும் குரங்குக் கூட்டத்தின் நடத்தை விசித்திரமாய் இருக்கிறது.
இதே காட்சி திரும்பத் திரும்ப தோன்றியதில் எங்கள் நிம்மதிக்கு பங்கமேற்பட்டுள்ளது. என்னை விட என் மனைவிதான் மிகவும் பயந்து போயிருக்கிறாள். ‘இதுக்கு முன்னால உங்க வாழ்கைல குரங்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏதாவது நடந்திருக்கா ? ‘ என்று கேட்டாள். மூளையை நன்றாகக் கசக்கிப் பார்த்து விட்டேன். ஊஹூம். அப்படி எந்த சம்பவமும் ஞாபகத்துக்கு வரவில்லை. ‘உங்களுக்கு குரங்கு பிடிக்குமா, பிடிக்காதா ? ‘ என்றாள். ‘பிடிக்குந்தான். கிராப் வெட்டியது போல தலையோட தன் கண்களை அது சிமிட்டும் போது பயங்கர புத்திசாலித்தனம் தெரியும். அதோட அழகான, வெல்வெட் மாதிரி தோலும், சாட்டை மாதிரி வாலும் கூட பிடிக்கும். ஆனா கூட்டமா அதுகளோட பிக்னிக் கொண்டாட்ற அளவுக்கு இல்ல ‘ என்றேன்.
நாங்கள் வசிக்கும் மலைப்பகுதியில் கூட்டமாய் குரங்குகள் சாதாரணமாய் திரிந்து கொண்டிருக்கும். வயிற்றைக் கவ்விக் கொண்ட குட்டியுடன் செல்லும் தாய்க் குரங்குகளை பார்க்கும் போது என்னையறியாமல் ஒரு நெகிழ்ச்சி ஏற்படும். தன்னிச்சையாக மனம் பச்சைக் குழந்தைகளை காப்பகங்களில் விட்டு விட்டு வேலைக்குச் செல்லும் இக்கால தாய்மார்களை எண்ணிப் பார்க்கும். குழந்தையை தோளில் சுமக்காமல் தள்ளு வண்டியில் அழைத்துச் செல்வது, காரில் தனி அமரச் செய்வது, தனி அறையில் படுக்கச் செய்வது போன்ற மேற்கத்திய கலாச்சார பழக்க வழக்கங்கள் நம் சமுதாயத்துக்குள்ளும் ஊடுருவுவதை எண்ணி மனம் குமையும். ஆனால் இதுவெல்லாம் இப்படியொரு கனவிற்கு முகாந்திரமாகுமென்று நம்ப முடியவில்லை.
ஏற்கெனவே தீவிர ஆஞ்சநேய பக்தையான என் மனைவி தினமும் அனுமனுக்கு விசேஷ பூஜை செய்வதோடு சனி தோறும் கோவிலுக்குச் சென்று வடை மாலையும் சாத்துகிறாள். இக்கனவின் அர்த்தத்தை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்று புரியாமல் தவிக்கிறோம். அச்சுறுத்தாத விஷயமென்றாலும் மாற்றமின்றி வந்து கொண்டேயிருக்கும் கனவை ஒதுக்கித் தள்ளவும் முடியவில்லை. மனோதத்துவ நிபுணரைச் சென்று பார்க்கவும் தயக்கமாய் இருக்கிறது.
இப்படியொரு சங்கடமான வேளையிலே சற்றும் எதிர்பாராத விதமாக வியாபாரத்தில் பெருத்த நஷ்டமேற்பட்டுவிட்டது. நிலச்சரிவு, பங்கு மார்க்கெட் சரிவு, பங்குதாரர்கள் மோசடி என பல காரணங்கள் சேரவே லட்சாதிபதியாய் இருந்த நாங்கள் திடாரென தெருவுக்கு வந்து விட்டோம். கனவிலும் நினைக்காத விதத்தில் எங்கள் ஆடம்பர வாழ்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.
எல்லாம் தொலைந்த பிறகும் தன்னம்பிக்கை மட்டும் தொலையாதிருந்ததால் நாங்கள் துவண்டு போய் விடவில்லை. எந்த விபரீத முடிவையும் நாடவுமில்லை. ஆண்டவன் கொடுத்த கைகால் நன்றாயிருக்கிறதே என்று இருவரும் ஒருவரையொருவர் தேற்றிக் கொண்டு இரக்கமுள்ள நல்ல நண்பர் ஒருவரின் பண உதவியோடு வேற்று–ர் சென்று சின்னதாக ஒரு சாப்பாடுக் கடை நடத்தத் துவங்கியுள்ளோம். பசியுடன் வருவோர்க்கு ருசியான உணவளித்து நியாயமான லாபத்தில் தொழிலை தொடர்கிறோம். சோதனைகளிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் மீண்டு மெல்ல தலை தூக்கலானோம். அப்போது பளிச்சென ஒரு விஷயம் உறைத்தது- பழைய குரங்குக் கனவு அறவே நின்று போயிருந்தது, மனோதத்துவ வைத்தியம் எதுவும் இல்லாமலேயே. ஆஞ்சநேய பக்தியின் மகிமைதானோ என எண்ணி வியந்தோம்.
துன்பங்கள் மட்டுந்தான் தனியாய் வருவதில்லை என்று புரிந்து போனது- இன்பங்களும் அடுக்காய் வரத் துவங்கியுள்ளன. என் மனைவிக்கு மசக்கை ஏற்பட்டுள்ளது. வாந்தி மயக்கத்திலிருந்த அவளை உடனடியாக தன் கை வைத்தியத்தால் தேற உதவினாள் எங்கள் அருகில் குடியிருக்கும் ஒரு மூதாட்டி. வாஞ்சையாக வெகு நேரம் பேசிக்கொண்டிருந்த அவளிடம் எங்கள் கடந்த கால கதையை கூறினோம். மிகவும் பிரமிப்புடன் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அந்த மூதாட்டி தன் சிறு வயதில் எங்கள் ஊரில் வளர்ந்ததையும், எங்கள் வீட்டைப் பற்றி அவள் பாட்டி சொன்ன கதையையும் கூறினாள். என் முப்பாட்டனார், எங்கள் கல் போன்ற வீட்டைக் கட்டிய அந்த மூதாதையர், வெள்ளைக்காரன் காலத்தில் காட்டில் குரங்குகளைப் பிடித்து, கூண்டுகளில் அடைத்து கப்பலேர்றி ஆராய்ச்சிக்கு அனுப்பி சம்பாதித்துத்தான் அந்த மாளிகையை கட்டி வசதியான வாழ்கைக்கும் அஸ்திவாரமும் போட்டிருக்கிறார். இந்த உண்மை ஊருக்குள் பல பேருக்குத் தெரியாது என்றாள் அந்த மூதாட்டி. செவி வழியாகவும் இந்தக் கதை குடும்ப சந்ததியினருக்கு சொல்லித்தரப்படவில்லை. என் விசித்திர கனவின் மர்மம் நொடியில் விடுபட்டது போலிருந்தது. வினையான விளைவுகளை விடுத்து நாங்கள் வெளியேறிய பிறகு எங்களுக்கு விமோசனமும் கிடைத்து விட்டது புரிகிறது. கிரகணம் விலகியது போல் உணர்கிறோம்.
***
pavalamani_pragasam@yahoo.com
- பரிசு
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது = 9 – தொடர்கவிதை
- செலவுகள்
- அட்டைகள்
- அண்டங்காக்கைகளும் எலும்பு கூடுகளும் (பாபா பாீதின் சிந்தனைகள் குறித்து)
- மறத்தலும் மன்னித்தலும் (எனக்குப் பிடித்த கதைகள் – 41- மாப்பஸானின் ‘மன்னிப்பு ‘)
- நகுலன் படைப்புலகம்
- ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு
- அறிவியல் துளிகள்
- முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ [Galileo] (1564-1642)
- அநேகமாக
- மாறிவிடு!
- அவள்
- அவதார புருசன்!!!
- சுற்றம்..
- நில் …. கவனி …. செல் ….
- வல்லூறு
- மானுடம் வெல்லும்!
- பாலன் பிறந்தார்
- விளக்கு – ஹெப்சிபா ஜேசுதாசன் பாராட்டு விழா அழைப்பிதழ்
- நன்றி
- ஒற்றுமை
- கிரகணம்