ப்ரவாஹன்
தென்னக நதிகளை இணைக்கக் கோரி 19-01-2007 அன்று தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருகின்ற பிப்ரவரி 5ம் நாள் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்க உள்ள சூழலில் தி.மு.க. இந்தக் கோரிக்கையை எழுப்பியிருப்பது நமக்கு சில ஐயங்களை ஏற்படுத்துகிறது. நதிகள் இணைப்பு என்பது நடைமுறையில் புவியியல் ரீதியான சிக்கல்களும், சுற்றுச்சூழல் பிரச்சனைகளும் மேலோங்குகிற நிலவரம் இருப்பதை வல்லுநர் பலரும் எடுத்துக்கூறி இருக்கின்றனர். மேலும் அதற்கான செலவினமும் அதிகம் என்பதுடன் தொடர்ந்த பராமரிப்புச் செலவுகளும் உண்டு. இதைச் செய்து முடிக்க பல ஆண்டுகள் ஆகும். இதனால்தான் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு இடையில் இருக்கின்ற நதிநீர் பிரச்சனைகளுக்கான உடனடித் தீர்வாக நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற பா.ம.க. நிறுவனர் உட்படப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தேசியமயம் என்பது எளிய, உடனடியாக சாத்தியப்படக்கூடிய ஒரு வழி. நடுவண் அரசு ஒரேயரு சட்டத்தைக் கொண்டு வந்து நதிகளை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அந்தந்த மாநிலங்களுக்கு உரிய நீரை வழங்கிடமுடியும்.
காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்க உள்ள இந்நிலையில், காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கினை வழங்க வேண்டும், இதுவரையிலும் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கர்நாடகமோ அல்லது நடுவண் அரசோ இழப்பீடு வழங்கவேண்டும் என பிரதமர் மற்றும் நடுவண் அரசில் உள்ள கூட்டணிக் கட்சிகளிடம் கோரிக்கை வைத்திருக்கவேண்டும். 205 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்குத் தரவேண்டும் என காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக மாநிலம் நடைமுறைப்படுத்தாமல் உள்ள நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் இதே கதி ஏற்படாமல் நடுவண் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையெனில் பிரிவினை கோரிக்கைகள் எழுகின்ற சூழல் ஏற்படும் என்று சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்க வேண்டும். மாறாக இந்நேரத்தில் தென்னக நதி நீர் இணைப்பு என்று தி.மு.க. பேசியிருப்பது கர்நாடகத்திற்கும் தி.மு.க அங்கம் வகிக்கின்ற நடுவண் அரசுக்கும் சாதகமாக அமைந்திடும். அத்துடன் காவிரி நதி நீர்ப் பிரச்சனை என்பது திசை திரும்பி நடைமுறைச் சாத்தியமற்ற, உடனடியாகவும் சாத்தியப்படாத தென்னக நதிகள் இணைப்பு குறித்த விவாதமாக மாற்றப்பட்டுவிடும். இதுகாறும் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி அநீதியாகவே நின்று விடும்.
நடுவண் அரசில் தி.மு.க. அங்கம் வகிக்கின்ற நிலையில் வருகின்ற பிப்ரவரி 5ம் நாளில் காவிரி நீர் நடுவர் மன்றத்தில் தமிழகத்திற்கு பாதகமான தீர்பு அளிக்கப்பட்டாலோ அல்லது இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்குச் சாதகமாக இருப்பின் அதை கர்நாடக அரசு ஏற்க மறுத்தாலோ, நடுவண் அரசில் இருந்துகொண்டு தமிழகத்தின் உரிமையை தி.மு.க. நிலைநாட்டவில்லை என்கிற குற்றச்சாட்டு எழும். அதை மழுப்புவதற்காக நடுவண் அரசில் உள்ள காங்கிரஸ் கட்சியை நிர்ப்பந்தப்படுத்தி தென்னக நதிகள் இணைப்பு என்கிற கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அல்லது அதுபோன்ற மிகவுந் தொடக்ககட்ட அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி தான் சாதித்துவிட்டதாகப் பீற்றிக்கொள்வதும்தான் முதலமைச்சர் திரு. கருணாநிதியின் திட்டம். இவ்வாறு நாம் கருதுவதற்குப் போதுமான முகாந்திரங்கள் உள்ளன.
ஏற்கெனவே 1974இல் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பழைய ஒப்பந்தத்தைப் புதுப்பித்திடாமல் தி.மு.க. வாளாவிருந்தது. அன்றியும் அப்போதைய அரசியல் சூழலில் இந்திரா காந்தி அம்மையாரின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து காவிரி விவசாயிகள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கை திரும்பப் பெறச் செய்ததும் தி.மு.க. 1994 இல் தேவகௌட பிரதமராக இருந்தபோது காவிரிப் பிரச்சனையில் கர்நாடகத்திற்குச் சாதகம் செய்வேண்டும் என காவிரி நடுவர் மன்ற தலைவரை அவர் நிர்ப்பந்தப்படுத்தினார். அதையடுத்து அப்போதைய நடுவர் மன்றத் தலைவர் அப்பதவியை விட்டு தானே விலகினார். அந்நேரத்தில் தேவகௌட அமைச்சரவையில் இருந்த முரசொலி மாறன் தேவகௌடவின் அநியாயச் செயலை எதிர்க்கவில்லை. இவையன்றி காவிரிப் பிரச்சனையில் அவ்வப்போது கருணாநிதி எப்படியெல்லாம் அக்கறையின்றி நடந்துகொண்டிருக்கிறார் என்பதற்கு காவிரிப் பிரச்சனையில் ஆழ்ந்த அக்கறையும் செயல்பாடுகளும் கொண்ட, கரூர் பூ.அரா. குப்புசாமி ஒரு சிறு நூலையே வெளியிட்டிருக்கிறார்.
தமிழகத்திற்கு தான் அதிகமும் செய்திருப்பதாக (நன்மையா தீமையா என்பது அவரவரின் முடிவுப்படிம்) அடிக்கடியும் பீற்றிக்கொள்வது திரு. கருணாநிதியின் இயல்பு. ஏற்கெனவே தான் செய்த இந்தத் தவறுகளை ஒப்புக்கொள்ளும் துணிவையும் நேர்மையையும் திராவிட இயக்கத் தலைவர்களிடம் நாம் எதிர்ப்பாக்க முடியாது. தனது கையாலாகாத் தனத்தையும் சதித்திட்டத்தையும் மறைக்க சொற்தந்திரங்களைப் பயன்படுத்துவது அல்லது அது பற்றிப் பேசாமல் மௌனம் சாதிப்பதும்தான் திரு. கருணாநிதியின் தந்திரம். இப்போது தனது குடும்பத்தின் வர்த்தக நலனை உத்தேசித்து, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்குப் பின்னர் தமிழகத்திற்கு நிகழப்போகின்ற அநீதியையும் தனது கையாலாகாத் தனத்தையும் மறைத்துக்கொள்ள ஒரு திரையைத் தயார் செய்வதற்குத்தான் தென்னக நதிகள் இணைப்பு என்று திரு. கருணாநிதி கோரிக்கை வைத்திருக்கிறது. உண்மையில் இவ்விசயத்தில் தி.மு.க.வுக்கு அக்கறை இருந்திருக்குமெனில் இம்முறை நடுவண் அரசுக்கு ஆதரவளிக்கும்போதே இதை ஒரு நிபந்தனையாக வைத்திருக்கமுடியும். நெய்வேலியில் சுமார் 10,000 தொழிலாளர்களின் குடும்பங்களை உத்தேசித்து தனியார் மயமாக்கத்தை எதிர்த்து, கூட்டணியிலிருந்து விலகுவோம் என காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கத் தெரிந்த தி.மு.கவுக்கு காவிரி நீர்ப் பிரச்சனை பல லட்சம் விவசாயக் குடும்பங்களின் வாழ்க்கை தொடர்பானது என்பது தெரியாதா என்ன? தனது பேரப்பிள்ளையை தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக்க தான் கொடுத்த நெருக்கடிக்கு பதிலாக காவிரிப் பிரச்சனையை உடனடியாகத் தீருங்கள் அல்லது நதிகளை தேசியமயமாக்கும்படி காங்கிரஸ் கட்சியை நிர்ப்பந்தப்படுத்தியிருக்காலம்.
நதிகள் தேசியமயமாக்கப்படும் என்றால் நமது அண்டை மாநிலங்கள் கோபித்துக் கொள்வார்கள். மாறாக தென்னக நதிகள் இணைப்பு என்று கோரிக்கை வைத்தால் நதிகளை மாநிலங்களின் பட்டியலிலேயே வைத்திருப்பது நீடிக்கும். இதனால் அண்டை மாநிலங்களைப் பகைத்துக் கொள்ளவேண்டியிராது. அவ்வாறு பகைத்துக் கொள்ளமால் இருந்தால்தான் முல்லைப் பெரியாறு பிரச்சனை உள்ள கேரளத்திலும், பாலாறு அணைப் பிரச்சனை உள்ள ஆந்திரத்திலும் காவிரி நீர்ப் பிரச்சனை உள்ள கர்நாடகத்திலும் தங்களின் குடும்ப வர்த்தக நலனைப் (சூர்யா, ஜெமினி மற்றும் உதயா தொலைக்காட்சி) பாதுகாத்துக் கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, பக்கத்து மாநிலங்களிலான தனது குடும்பத்தின் வர்த்தக நலனைப் பாதுகாத்துக்கொள்ளவும், தனது துரோகத்தை மறைத்துக்கொள்ளவும் தென்னக நதிகளை இணைக்க தி.மு.க. கோரி இருப்பதை இராஜதந்திரம் என்று திரு. கருணாநிதியின் ஆதரவாளர்கள் புகழக்கூடும். இது அல்ல இராஜதந்திரம். காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை எப்படியேனும் கருணாநிதி நிலை நாட்டியிருந்தால் அதை நாம் இராஜதந்திரம் எனலாம். ஆனால் தனது துரோகத்தை மறைத்துக் கொள்ள இப்படி கோரிக்கை வைத்து தமிழக உரிமையைக் குழிதோண்டிப் புதைக்க நினைப்பதும், அதே நேரத்தில் நதிகள் தேசியமயம் என்று சொல்லாமல் தென்னக நதிகள் இணைப்பு என்று பேசி தனது குடும்ப வர்த்தகத்தையும் பாதுகாத்துக் கொள்ளக் கேடயமாக பிரச்சனையை திசை திருப்பிட முயல்வது இராஜதந்திரமல்ல; நரித்தந்திரம்.
இந்திய அரசில் அங்கம் வகிக்கின்ற ஒரு கட்சி எடுக்கின்ற முடிவு இந்தியா முழுமைக்கும் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கவேண்டுமேயன்றி தென்னக மாநிலங்களை மட்டும் கணக்கில் கொள்வது மற்றோர் முரண்பாடு. மேலும் பல மாநிலங்களுக்கு இடையில் உள்ள நதிநீர்ப்பிரச்சனைகளுக்கும் தேசியமயம்தான் தீர்வாகுமேயழிய தென்னக நதிகள் இணைப்பு அல்ல. இந்திய அரசில் அங்கம் வகிக்கவேண்டும் ஆனால் இந்தியா முழுமைக்குமான நதி நீர்ச் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லமாட்டோம் என்பது இரட்டை நிலை.
காவிரி நீர் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகம் ஏற்க மறுத்து அம்மாநிலத்தில் பெரும் கலவரங்கள் நிகழ்த்தப்பட்டு மீண்டும் நமது உரிமை தடுக்கப்படும். “காவிரிப் பிரச்சனைக்காகக் குரல் கொடுக்கவில்லை என்றால் மக்கள் நம்மைத் தூக்கி எறிந்துவிடுவார்களோ என்று அரசியல்வாதிகள் பயந்துபோய் உள்ளார்கள். எனவே தீர்ப்பு எப்படி வந்தாலும் கர்நாடக அரசியல்வாதிகள் ஏற்கமாட்டார்கள், கலாட்டா செய்வார்கள்” என்று கர்நாடக ராஜ்ய விவசாயிகள் சங்கத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் கூறியுள்ளார். அவ்வாறாயின் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதனால்தான் நாங்கள் தென்னக நதிகள் இணைப்பு என்று கோரிக்கை வைத்தோம் என்று சொல்லி சமாளித்துக் கொள்ளவும்தான் தி.மு.க. நதிகள் இணைப்பு என்கிற கோரிக்கையை முன்னோட்டமாக இப்போது வைத்துள்ளது.
மேலும் தானே நடுவண் அரசின் அங்கமாக இருந்துகொண்டு நடுவண் அரசிடம் கோரிக்கை வைப்பது தெருவோரத்தில் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சையெடுப்பார்களே அதைப் போன்றது. இம்முறை கருணாநதியின் இந்த சதித்திட்டத்தைத் தமிழக மக்கள் விரைவிலேயே புரிந்துகொண்டுவிடுவார்கள்.
பின்குறிப்பு: இந்த விசயத்தை உடனடியாக உலகுக்குத் தெரிவிக்கவேண்டும் என்பதற்காக தி.மு.க. போராட்டம் நடத்திய சில நாட்களிலேயே, கருணாநிதியின் மகள் கனிமொழியும், நடுவண் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரமும் இன்னும் பலரும் சேர்ந்து மக்களின் கருத்துரிமையைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கியுள்ள கருத்து.காம் வலைதளத்தில் எனது கருத்தினைப் பதிவு செய்தேன். ஆனால், அதன் நிர்வாகி எனது கருத்தை அங்கே போடுவதற்கு அனுமதி அளிக்காமல் அது சம்மந்தா சம்மந்தமில்லாதது என்று மறுத்து, சுதந்திரம் என்பது பொறுப்புணர்வுடன் சம்மந்தப்பட்டது என்பதாக எனக்கு அறிவுரை சொல்லுகின்ற வகையில் சுதந்திரம் என்கிற தலைப்பில் ஒரு விவாதத்தைத் தொடங்கியுள்ளார். விவரம் வேண்டுவோர் தயவு செய்து பின்வரும் இணைப்பில் சென்று காண்க:
http://www.karuthu.com/forum/forum_posts.asp?TID=2751
pravaahan@yahoo.co.in
- இசைக்க மறந்த கலைஞன் : யுவன் சந்திரசேகர் நாவல் “கானல் நதி”
- உறவு
- அவசரமான அறிவித்தல்
- வகாபிய விஞ்ஞான நாக்கு
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் -6
- “படிப்பதும் எழுதுவதும் – ஒரு சுய விவரிப்பு”
- கம்பர் கூறிய மருத்து மலை (சஞ்ஜீவி பர்வதம்) எங்கே இருந்தது?
- கடித இலக்கியம் -43
- பண்பாட்டை அணுகும் புதிய பார்வை – தொ.பரமசிவன் எழுதிய “தெய்வம் என்பதோர்…..” (கட்டுரைத்தொகுதி அறிமுகம்)
- யூமா வாசுகி முதல் சு.சமுத்திரம் வரை – (கேட்டீர்கள், சொல்கிறேன்)
- பச்சை சிவப்பு தக்காளி சோளம் சூப்
- இலை போட்டாச்சு ! -13 – இனிப்பு உருண்டைகள்
- அணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962) அணு, அணுக்கரு & பரமாணுக்கள் (2)
- ஜோஸப் குமரப்பா, சுவாமி விவேகானந்தர், சாணி அடுப்பு
- நீ
- மடியில் நெருப்பு – 23
- போரில்லா உலகுக்காய்ப் போரிடும் கவிஞர்கள்
- பெரியபுராணம்-121 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- கவிதைகள்
- காதல் நாற்பது (7) தனித்த வாழ்வு வேண்டாம் !
- தொலைக்காட்சித் தொடர்கள் தொலைத்த பிரச்சினைகள்
- சமகால அரபு மார்க்சியர்கள் ஒரு எழுத்தியல் வரைபடம்
- காவிரி நதியும் கருணாநிதி சதியும்
- இணையம்: பலவீனமான வலை
- “ஜெனரலி” ஸ்பீக்கிங்!
- இஸ்ரேல்-லெபனான்-கே எஸ் சிவகுமரன்
- மார்க்க மயக்கத்தில் மார்க்ஸ்களும் மார்க்ஸியர்களும்- 2 (contd)
- நீர்வலை (9)
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:3)