அரவிந்தன் நீலகண்டன்
(ஜெயமோகனை குறித்து அரவிந்தன் நீலகண்டன் எழுதுவதை போல அவருக்கு சங்கடம் கொடுக்கப்போகிற விஷயம் வேறு கிடையாது. அவரது காக்கி நிக்கரை கண்டுபிடித்து மதச்சார்பின்மை பத்வாக்களை வழங்க முற்போக்கு மெளல்விகளுக்கு கிடைத்துவிடும் வாய்ப்பு அல்லவா. அட அவரது கருத்துக்களை தாக்கி எழுதினால் கூட அப்படித்தான். அவரை இந்த சங்கடத்திலிருந்து விடுவிக்க எளிதான ஒரு வழி இருக்கிறது. ‘ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட், இனத்துரோகி ‘ என்றெல்லாம் திட்டி ஒரு தொடர் எழுதினால் உரல்களை அடுக்கி மேதாவித்தனம் காட்டும் முற்போக்கு கூட அவரை ‘அட இந்தாள் உண்மையிலேயே நம்ம சாதிதான் ‘ என அரவணைக்க முன்வரலாம். என்ன செய்வது கருத்துகளுக்கு அப்பால் ஜெயமோகன் என்கிற ஆளைத் திட்ட இந்த பாசிஸ்டால் ஆகவில்லை. என்றாலும் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதில் எனக்கு உள்ளூர ஏதாவது மகிழ்ச்சி இருக்கிறதா தெரியவில்லை. எனவே பூர்வாங்க பீடிகைகளெல்லாம் முடிந்து இக்கட்டுரை. (அவர் கருத்துக்கு ஒத்து போகாதது இந்த கட்டுரை. உண்மையில் கட்டுரையில் அவரை தொட்டு போகிறோம் அவ்வளவுதான்) ‘ஓம் சக்தி ‘ தீபாவளி மலரில் அவரது சிறுகதையை படித்தேன். அப்படி ஆசியாநெட்டில் மணிசித்திரதாழ் திரைப்படமும் (பல்லாண்டுகளுக்கு பின் மீண்டும்) பார்த்தேன். ஏற்கனவே சந்திரமுகி பார்த்திருந்தேன். அப்போதிருந்தே மனதிற்குள் எழுந்த கட்டுரைதான் இது. தீர்க்கமாக எழுதத்தூண்டியது ஜெயமோகனின் தீபாவளி இதழ் சிறுகதைதான். )
யட்சி குறித்து ஒரு ஆசாரி சொல்லும் கதை. ஆசாரி கதை சொல்ல ஆரம்பிக்கும் போதே கதையின் போக்கு புரிபடுகிறது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்தகைய யட்சி கதைகளுக்கு, குறிப்பாக தக்கலைக்கு மேற்கில் பஞ்சமேயில்லை. தரவாட்டுக்கு ஒரு யட்சி கதையும் நாகதேவதை கதையும் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஜெயமோகனிடம் பேசினால் யட்சிகளின் பெளத்த-ஜைன வேர்களை குறித்து மணிகளாக பேசுவார். அவர் ஆச்சரியப்படும் விதமாக அவரது குரு நித்ய சைதன்ய யதி ‘வைதீக மதங்களைக் காட்டிலும் பெளத்த ஜைன மதங்களில்தான் தாய்/பெண் தெய்வங்கள் அதிகம் என்பது தெரியுமா ? ‘ என கூறி பார்வைக் கோணத்தையே மாற்றியதை கூறுவார். பொதுவாக ஏதோ மறைந்து அமிழ்ந்த தொல்பழங்காலத்தின் அதிசயிக்கத் தக்கதோர் பிரம்மாண்ட ஆலயத்தின் ஒரு சிறு விளிம்பு மண்ணுக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருப்பதை போல தோன்றும் யட்சிகள் போன்ற பெண் தெய்வங்களைக் குறித்து அவர் கூறுவது. கோசாம்பி கூறும் பழம் தாய் சமுதாய சின்னங்களுடன் இதை சேர்த்து விட்டால் யதேஷ்டம். மனிதர் அதை வெளிப்படையாக முற்போக்கு முழக்கங்கள் ஒலிக்க, புத்தரை கட்சி-டிக்கட் கிடைக்க வழியில்லாததால் கம்யூனிஸ்ட் ஆகாமல் பெளத்த தர்மத்தை தொடங்கியவராக காட்டி, தாய்வழி திராவிட பண்பாட்டை அழித்த ஆரிய பிராம்மணர்களின் சதியை பற்றி வெளிப்படுத்துவதாக செய்ய மாட்டார். கலை நுணுக்கத்துடன் அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் திருப்பதிசார தூணில் மாடாகவும் யானையாகவும் தெரியும் சிற்பத்தினை போல வெளிப்படுத்துவார். உதாரணமாக தாந்திரிக சடங்குகளூடே பெளத்த திக்நாகன் யட்சணி உபாசகம் செய்து ஆற்றல் பெற்றதாக அந்தணர்கள் ஆத்திரத்தில் கூறும் வாசகங்களில், செம்பியை ஏமாற்றிய செந்தலைப்பட்டனைக் குறித்து நீலிக்கு கதை சொல்லும் தாத்தாவின் கதையாடலில், பெளத்த-தாந்திரீக குறியீடுகளை வாங்கி கட்டமைக்கப்பட்டதாக திருமாலைக் கூறும் அந்தணர் உரையாடலில் அது வெளிப்படுத்தப்படுவதை காணலாம். (கோசாம்பியின் கருத்தியல் அடிப்படையில் எழுதப்பட்ட வைணவம் குறித்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்பது தெள்ளத்தெளிவான விஷயம்.) இச்சித்திரங்களிலெல்லாம் ஒன்று மட்டும் தெளிவாக நுண் தொனியில் உள்ளோடும்: அது பெண் தெய்வங்களின் தோற்றத்தின் கருத்தியல் கோசாம்பியிடமிருந்தும் யதியிடமிருந்தும் பெறப்பட்ட ‘தோற்கடிக்கப்பட்ட தாய் தெய்வங்கள் ‘ என்பது. ஜெயமோகனுக்கு மிகவும் பிடித்த -ஆகப் பிடித்த- பதமாக இருந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜெயமோகனின் பெண் பாத்திரங்கள் எல்லோருமே ஒரு விதத்தில் இக்கருத்தாக்கத்திலிருந்து எழுந்த பெண் தெய்வப் பிரதியெடுப்புக்கள் எனலாம். உதாரணமாக பெண் தெய்வ ஆவேசத்தை ஹிட்லரை பிளந்து கொல்ல சினமுறும் நாகம்மையில் காணலாம். அனைத்துமே வரலாற்றின் தொல் நினைவுகளின் வெளிப்பாடாகவே இருப்பவை. மற்றோர் தளத்திலும் அவரது பெண் பாத்திரங்களின் இயக்கம் இருக்கிறது. அவரது ஆண்பாத்திரங்களின் ஆழ்ந்த உள்ளிழப்பை ஈடு செய்து, அவர்களின் விமோசனத்தை சுமந்தபடி இருப்பவர்கள். தூக்கி எறியப்பட்ட மூத்த தொழிற்சங்க தலைவரின் பழைய கிறிஸ்தவ காதலியும், நாகம்மையிடம் அந்தரங்கமாக அருணாச்சலம் அடையும் தாந்திரீக தொனி கொண்ட முழுமை அனுபவத்தையும் குறிப்பிடலாம். ஆனால் இச்சிறுகதையில் அதைத் தாண்டிப் போயிருக்கிறார் ஜெயமோகன். எங்கெங்கோ சுற்றி சூடடித்தாயிற்றல்லவா இனி மீண்டும் யட்சி கதைக்கே வரலாம்.
கதை சொல்லும் இளைஞனுக்கு சாதிக்கட்டுப்பாடுகளை மீறி கொல்லத்தியை கலியாணம் செய்து கொண்ட வயதான ஆசாரி சொல்லும் யட்சி கதை அது. வாராஹிணியம்மனுக்கும் எருமைமாடனுக்கும் பிள்ளையான காளபைரவி யட்சி ஒரு இளைஞனை (பெயர் கேசவன்) தன்னை பெண்கேட்டு தன்னை பெண் கேட்டு ஏழுநிலை மாளிகைக்கு வரச்சொல்லி பிடிக்கிறாள். அவனை பனைவண்டாக மாற்றி நுங்குக்குள் வைத்து நிபந்தனையுடன் குடும்பம் நடத்தி -இருவரும் எரிக் போர்ன் தனமாக விளையாடி- (யாராவது மேதாவி -அப்படிபட்ட அதிமேதாவிகள் இணையவெளியில் வாழ்வதை அறிவேன்-எரிக்போர்ன் உளவியல் விளையாட்டுக்களை எடுத்துவைத்து ஜெயமோகன் கதையில் எங்கே இருக்கிறது என்று கேட்டால் நான் அம்பேல்.) இப்போதே சொல்லிக்கொள்கிறேன். ஏனென்றால் இறுதியில் அவன் நிபந்தனையில் தோற்க அவனை அவள் கொல்லுகிறாள். தன் இருதயக் குருதியை யட்சி குடிப்பதில் அவனுக்கு ஆனந்தம். ஏழுநிலைக் கலியாண பந்தலை சரியாக கட்ட உதவி செய்த ஆசாரிக்கு ஏழுநிலை கலியாண பந்தலை பார்த்ததும் நினைவுக்கு வந்த கதையிது. ஆண் தன் ஆழ்மனதில் தான் தேடிச்செல்லும் பெண்ணிடம் சிறைபடுகிறான். மணவாழ்க்கை ஆணுக்கு முடித்து தப்ப வேண்டிய சிறை. பெண்ணுக்கு ஆணை சிறைப்படுத்தி அவன் ரத்தத்தை உறிஞ்சும் அடக்க இயலா தாகம். உள்ளிளுக்கும் பெண்ணுக்கும் வெளியகலத் துடிக்கும் ஆணுக்கும் நடக்கும் ஆழ்மன ஜீவமரண போராட்டமாக இல்லறம். சுவாரசியமான ஒரு விஷயம் இங்குண்டு. உங் கூறும் வார்த்தைகள் ஏறத்தாழ இந்த யட்சி கதையை பிழிந்த்தெடுக்கின்றன: ‘Women are absolutely lovely and charming and chase the men till they reach the point of being married and then they transform into devils and harass the man from morning till night. ‘ திருமணத்தை நனவிலி சடங்குத்தன்மையுடன் தன் அக-இருப்பினை சுய-பலியிடும் கனவாக காண்பதைக் குறித்து உங்கினால் ‘எடிட் ‘ செய்யப்பட்ட ‘Man and his symbols ‘ களில் காணலாம். வெறும் கார்ட்டூன் கணவனின் புலம்பலல்ல இது. மாறாக, ஆணும் பெண்ணை உதறிவிட அல்லது அவளை அடக்கிவிட நினைக்கிறான். நனவுணர்வில் காதலின்-நெருக்கத்தின் அடர்த்தி அதிகரிப்பதற்கு நேர்விகிதத்தில் ஆழ்மன எதிரிகளாக ஆவதும் அதிகரிக்கிறது. நனவிலி உலகில் திருமண வாழ்க்கை பெண்ணை பொறுத்தவரையில் தப்பமுயலும் கணவனை உறிஞ்சியழிப்பதாக அமைகிறது. எனவேதான் ஒருவேளை மண்ணில் தொன்ம வேர்களுடன் கூடிய சடங்குகள் திருமணத்திற்கு தேவைப்படுகின்றன போலும். விரிவான திருமணச் சடங்குகள் ஆணுள்ளும் பெண்ணுள்ளும் அதிவீரியம் கொண்ட ஒருவரையொருவர் அழிக்கும் ஆழ்மன இருப்புகளை இசைவு படுத்துவதாக அமைகின்றன போலும். ஆக தீபாவளியன்று இதைப் படித்துவிட்டு டிவி பக்கமாக வந்தால் ஆசியாநெட்டில் ‘மணிசித்திரதாழ் ‘. கங்காவிடம் பக்கத்து வீட்டு மூதாட்டி யட்சியான தமிழச்சி நாகவல்லியை எப்படி தரவாட்டின் காரணவர் மந்திரங்களால் கட்டி உள்ளடக்கினார் என்பதை விவரித்துக் கொண்டிருக்கிறாள். தமிழில் சந்திரமுகியும் (இடையில் இன்னபிற தென்னாட்டு மொழிகளில் ஏதேதோ எனக்கு தெரியாது) மலையாள நாகவல்லியும் மிகவும் அதிசயிக்கதக்க வெற்றியை அடைந்துள்ளனர். ‘சூப்பர் ஸ்டார் ‘ மயக்கங்களுக்கு அப்பாலும் சந்திரமுகியிலும் சரி அதன் பூர்விக மணிசித்திர தாழிலும் சரி, பல நனவிலி கவர்ச்சிகள் இருப்பதாக தோன்றுகிறது. உதாரணமாக அந்த பெயர், அந்த காலம், அதில் -மற்றப்படி காட்டுக்கத்தலாக அனைத்து விஷயங்களும் காட்டப்படும் சந்திரமுகியில் கூட- மெலிதாக காணப்படும் குறியீட்டுத்தன்மைகள் இத்யாதிகள் நாகவல்லியின் பெயரிலேயே சர்ப்ப தொடர்பு இருக்கிறதென்றால், சந்திரமுகியில் ஒரு பாம்பு சிற்பம் கதவிலேயே காட்டப்படுகிறது. பாம்பு நிலத்தொடர்பு கொண்ட ஆன்மிகக் குறியீடு என்பதுடன் பெண் தெய்வ வழிபாடுகளுடன் தொடர்புடையது.-குறிப்பாக சந்திரமுகியின் மூலக்கதை தோன்றிய கேரளத்தில்-.இவ்விரு கதைகளிலும் கங்கா நவீன பெண்மணி. மணிசித்திரதாழில் அவள் நாக தேவதைகளை சிறுமியாக வழிபடுவதும் காட்டப்படுகிறது. சந்திரமுகி என்ற பெயரும் சுவாரசியமானதுதான். சந்திர கலைகளும் அதன் சுழலும் பெண்ணின் பாலியல் சுழலுடன் தொடர்புடையதெனக் கருதப்பட்டதால் சந்திரனுடன் பெண் தெய்வ வழிபாட்டிற்கு தொடர்புண்டு. சந்திரனை கையில் ஏந்திய பெண் தெய்வம், தலையில் தரித்த பெண் தெய்வம், சந்திர கலையில் நிற்கும் / ஆரோகணிக்கும் பெண் தெய்வம் ஆகியவற்றினை தொல் சமயக் குறியீடுகளிலும் தொல்-ஆன்மிக இலக்கியங்களிலும் காணலாம். உதாரணமாக பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியவியலாளர்களால் ஆண் தெய்வ வழிபாட்டினை முக்கியப்படுத்துவதாக கூறப்படும் ரிக் வேதத்தில்தான் சந்திர கலையின் மேல் ஆரோகணித்து வரும் பழம்பெரும் பெண்தெய்வத்தின் முதல் சொல் சித்திரம் வெளிப்படுகிறது. பின்னாளில் ரோம கத்தோலிக்க மதம் எடுத்துக் கொண்ட ‘பாகன் பெண் தெய்வம் ‘ விண்ணரசி என்னும் மாதாவாக (12 ராசிகளையும் தலையில் தரித்து) நிற்கும் பெண் தெய்வம் ஏசு சகாப்தம் (இன்று பொதுசகாப்தம் -common era) எனக் கருதப்படுதற்கு பலகாலம் முன்னரே புதிய கற்காலத்திலிருந்தே உருவாகி உலகெங்கும் பரவிய தெய்வமாகும்.
இந்தக் குறியீடுகளெல்லாம் தெரிந்தே இக்கதையில் சேர்க்கப்பட்டதா அல்லது ‘தற்செயலாக ‘ தொற்றிக் கொண்டதா தெரியவில்லை. நிச்சயமாக படம் பார்க்கும் பெரும்பாலான மக்கள் இதையெல்லாம் நனவுணர்வுடன் இரசிக்கவில்லையாக இருக்கலாம். ஆனால் அவர்களின் நனவிலி இக்கதையின் உள்ளூடும் மற்றோர் கதையோட்டத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறது….காலனிய காலத்தில் ஆங்கிலேய அரசுக்கு கட்டுப்பட்ட நிலவுடமையாளர்களே இரு கதைகளிலும் ‘வில்லன்கள் ‘ (காரணவர், வேட்டையன் ராசா). அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு அநியாயமாக தமது காதலர்களை இழந்தவர்கள் சந்திரமுகியும், நாகவல்லியும். நாகவல்லியை தாங்கிய கங்கா தனது கணவனை நனவிலி நிலையில் கொல்ல முயன்று ஒருகட்டத்தில் வெளிப்படையாகவே தன் கணவனை கொல்ல முன் வந்து மன-சிகிச்சையாளரால் தடுக்கப்படுகிறாள். ஜெயமோகனின் கணவனைக் கொல்லும் யட்சியுடன் இணைத்து பார்க்கலாம். பார்வையாளனுக்கு யார் ‘வில்லன் ‘ அல்லது ‘வில்லி ‘ ? சந்திரமுகியா ? இருக்கலாம். சந்திரமுகி/நாகவல்லி குறித்து ‘இப்படிப்பட்ட பெண்ணை எப்படி இன்னொருவனுக்கு கொடுக்க மனசுவரும். அவளைக் கொன்றது தப்பேயில்லை ‘ எனும் வசனம் வரும் போது அவ்வாறே எண்ணத் தோன்றுகிறது. சந்திரமுகிக்கு அன்று நடந்த அநியாயத்திற்கு இன்று ஏற்படுத்தப்படும் நியாயம். விக்டோரிய ஒழுக்கத்துவத்தால் நிரம்பி ‘காலுக்கிடையில் கற்பிருப்பதாக ‘ நம்பி குஷ்புவை திட்டும் மக்களின் நனவுணர்விற்காக தரப்படும் நியாயம். ஆனால் அவ்வாறே கதை நகர்ந்திருந்தால் அது தோற்றிருக்கும். ஆனால் சந்திரமுகி/நாகவல்லி வில்லியல்ல. ஏதோ ஒரு விதத்தில் அவள் நியாயம் மறுக்கப்பட்டவள் என்பதனை ஆழ்மனதில் பார்வையாளர்கள் உணர்ந்துள்ளார்கள். ஆனால் அன்னியப்பட்டுப் போன மனதிற்கு நாகவல்லி/சந்திரமுகி ஒரு நோய்.யட்சியல்ல. எக்ஸார்ஸிஸ்ட் போன்ற கிறிஸ்தவ பேயோட்டுகிற கதையாடல்களில் அது ஒரு அமானுட நேர்மறை சக்தி. அழித்து விரட்டப்பட வேண்டியது. ஆனால் மணிசித்திரதாழின் வெற்றி அவ்வாறில்லாமல் அதனை முழுமைப்படுத்தி அகற்றுவதாகும். ஸைக்கி எனப்படும் உள்-இருப்பொன்றின் முழுமைத்துவத்தை -அது எத்தனை நேர்மறையான தன்மையுடன் இருந்தாலும் கூட- ஏற்படுத்தி அதனை ஒருமைப்படுத்துவது. உங்கிய சட்டகத்தில் சொல்வதானால் individuation நிகழ்வு. எனவேதான் அந்த சாமியாரின் பாத்திரம் அங்கு தேவைப்படுகிறது. சுவாரசியமாக ஒரு பிரபல தமிழ் வார இதழ் சந்திரமுகி விமர்சனத்தில் குறையான அம்சமாக சாமியாரின் சடங்குகள் காட்டப்பட்டதை கூறியிருந்தது. ஆனால் அது இக்கதையின் மிக முக்கியமான அம்சமாகும். மற்றொரு வருத்தமான வேறுபாடு மணிசித்திரதாழுக்கும் சந்திரமுகிக்கும் இருக்கிறது. செந்தில் கங்காவிடம் சென்று துர்காஷ்டமி அன்று அவர்கள் சென்னை செல்வதாக கூற வைக்கப்படுகிறான். அவன் முன்னரே சந்திரமுகி அமானுடதன்மையுடன் கிளர்ந்தெழுந்து இரு ஆளுமைகளும் எல்லைகள் கலக்கும் நிலையில் மயங்குகிறாள். ஏன் இவ்வாறு செய்யப்படுகிறது ? செந்திலுக்கு சந்திரமுகியை காட்டி நிரூபிப்பதற்கா ? மணிசித்திரதாழில் இதற்கான காரணம் அவளது ஆழ்மனதிற்கு கணவனின் அன்பின் வலிமையைக் காட்டசெய்யப்படுவதாக கூறப்படுகிறது. பின்னர் சந்திரமுகி/நாகவல்லி அவளது பழியினை நிறைவேற்றிக் கொள்வதாக ஒரு நாடகம் நடத்தப்படுகிறது. மாந்திரீகமும் நவீன உளவியலும் கலந்து செய்யப்படும் ஒரு நாடகம். சுஜாதாவின் கொலையுதிர்கால சமன்படுத்தல் அல்ல அங்கு நிகழ்வது. அதைவிட ஆழமான ஓர் நாடகம் அங்கு அரங்கேறுகிறது. Psyche முழுமையடைகிறது. கங்கா மண்டலம்/யந்திரம் ஒன்றில் அமர வைக்கப்படுகிறாள். உங்கிய உளவியலில் இது சைக்கியின் பூரணத்துவப் பெறலையே காட்டுகிறது. ஒரு கவர்ச்சிகர இளமை துள்ளும் நடிகையாக அறியப்பட்ட (கங்கா பாத்திரத்தை ஒத்த) ஜோதிகாவின் சந்திரமுகி மாற்றம் தமிழ் ரசிகர்களின் கூட்டு நனவிலியில் மேலும் ஒரு இசைவினை ஏற்படுத்தியிருக்கலாம். நாகவல்லியும், காளை பைரவியும் ஒவ்வோர் குடும்பத்திலும் உள்ள கணவன்-மனைவி உறவிலும் இருக்கின்றனர். இந்த ஆழ்-மன போராட்டத்தை ஒருங்கிணைந்த நடனமாக மாற்றுவதே இல்லறத்தினை தனி மனித முழுமைத்துவம் அடைய சாதனை கருவியாக்குவதன் வெற்றி.
—-
- வனத்தின் அழைப்பு – அஸ்வகோஸ்: ‘மகனும்,ஈ கலைத்தலும் ‘ (சிறு குறிப்பு)
- காலத்தை எரித்த சுடர் தொலைவிலிருக்கும் கவிதைகள் – சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அறிமுகம்
- சுப்ரபாரதி மணியனின் ஆதாரக்கவலைகள்
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IV
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – III
- காளபைரவி, நாகவல்லி, சந்திரமுகி மற்றும் கொஞ்சம் உங்
- நியூ யார்க் திரைப்படவிழாவில் ‘ஒருத்தி ‘ திரைப்படம்
- வானகமே. . வையகமே. . .சுற்றுச் சூழலுக்கென்று முதன் முதலாக தமிழில் நடத்தப்படும் இலவச இரு மாத இதழ்
- புஷ்ஷாரே இணையகுசும்பனின் இலவசச் சேவை
- வெள்ளமும் நிவாரணமும்
- ராஜ் கவுதமன் எழுதிய ‘க. அயோத்திதாசர் ஆய்வுகள் ‘: ஒரு திறனாய்வு
- 108 வது கவிதை எங்கே ?
- ‘சொற்களிடமிருந்து மெளனங்களுக்குள் ‘
- மலேசிய இலக்கிய நிகழ்வுகள்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-2)
- சோபா சக்தி: ‘ம் ‘ – அதிகாரம் கோலாச்சும்போது ‘ம் ‘ மக்கள் மொழியாகும்! ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம்! ம்….இது ?
- சுந்தர ராமசாமியின் வாழ்க்கை -படிமங்கள் நிறைந்த அழகிய கவிதை!
- ஜெயமோகனின் காடு
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் -5 (Ancient Great Egyptian Paintings)
- கீதாஞ்சலி (47) – எழிலான வளைகாப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 63 -29. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்
- காட்சில்லா
- முரண்
- தீபாரயா
- நியூயார்க் நியூயார்க்
- அடித்து நொறுக்க வேண்டாமா ஆண்கள் படைத்த உலகை. ?
- மறுபக்கம்
- காலை