வே.சபாநாயகம்
அத்தியாயம் – 8
பள்ளிக்கூடத்திலேயே அப்போது ரெங்கம்மா தான் வயதில் மூத்தவள். அவள் ஒருத்திதான் பெண்களில் தாவணி போட்டுக் கொண்டிருந்தவள். கொஞ்சம் கவனத்தை ஈர்க்கிறமாதியான தோற்றம். ஒடிசலாக, மாநிறத்துக்கு கொஞ்சம் கூடுதலாக – மற்றப் பெண்களுக்கு சற்று அழகுதான். அவள் மட்டும் எப்படி அழகாகத் தெரிகிறாள் என்று சிதம்பரம் நினைப்ப துண்டு. அப்போதெல்லாம் எதிர் வீட்டுத் தொந்தி மாமா சொல்லும் பழமொழி ஞாபகத்துக்கு வரும். இயல்பான ஒன்றை யாராவது வியந்து சொன்னால் அவர் சொல்வார்; “ஆமாம்! ‘தேவிடியா ஊட்டுப் பொண்ணு அழகா இருக்கா’ன்னு சொல்ற மாதிரிதான்!”
அவளது கவர்ச்சி காரணமாகவும், அவள் தாசி வீட்டுப் பெண் என்பதாலும் மூத்த பையன்கள் பலருக்கு அவள் மீது ஒரு கண். ஆனால் அவள் யாரையும் சட்டை செய்ய மாட்டாள். அவளுக்கும் ஒருவர் மீது அந்த வயதிலேயே ஈடுபாடு இருந்தது வெகு தாமதமாகத்தான் மற்றவர்களுக்குத் தெரிந்தது.
ரெங்கம்மாவின் அம்மா, பாட்டி எல்லோருமே உள்ளூர் சிவன் கோயிலுக்குப் பொட்டுக் கட்டிக் கொண்டவர்கள்தாம். சிறுவயதிலேயே பொட்டுக் கட்டிக் கொள்வ தும் பின்னர் வயதுக்கு வந்ததும், யாராவது உள்ளூர் அல்லது வெளியூர் மைனர் அவளுக்கு சாந்தி முகூர்த்தம் செய்து, வைத்துக் கொள்வதும் வழக்கமாக இருந்தது. அந்த சாந்தி முகூர்த்தம் ஊரைக் கூட்டி மேளதாளத்தோடு ஒரு திருமணம் போலவே – அதனால்தான் அதையும் ‘முகூர்த்தம்’ என்றார்களோ என்னவோ – நடப்பதும் ரெங்கம்மாவுக்கு அப்படி நடந்த போது பார்த்ததில் சிதம்பரத்துக்குத் தெரிந்திருந்தது. ஆனால் பெண்ணின் உற்றார் உறவினர்தான் அதற்குக் கூடுவார்கள். மற்றவர்கள்
போவதில்லை.
அழகும் இளமையும் இருக்கும்வரை தனி ஒருவனின் அனுபோக பாத்தியதையாய் – கொத்தடிமையாய் இருப்பதும் பிறகு அவன் கைவிட்டால் சுயமாகத் தொழில் செய்வதும் நடைமுறைதான்.
இந்த ரெங்கம்மாவின் பெரியம்மாக்களில் ஒருத்தியான ‘பவுனு’ என்கிற பவுனம்பாளை சிதம்பரத்தின் பெரியப்பா பராமரித்து வந்தது சிதம்பரத்துக்கு நினைவிருக்கிறது. அப்போது அவர் சின்னப் பையன். பின்னாளில் தொந்தி மாமா அது பற்றிக் கதைகதையாய்ச் சொல்லியிருக்கிறார். பவுனுக்கு மூத்தவளான சுந்தரத்தை பெரியப்பாதான் முதலில் சாந்தி முகூர்த்தம் செய்து பராமரித்து வந்ததாகவும் பிறகு பவுனு வயதுக்கு வந்ததும் அக்காவை விட்டுவிட்டுத் தங்கையையும் சாந்தி முகூர்த்தம் செய்து கொண்டதையும் தொந்தி மாமா சொல்லிக் கேட்டிருக்கிறார். அந்தக் குடும்பம் முழுதையும் பெரியப்பாதான் பராமரித்து வந்திருக்கிறார்.
பெரியப்பாவின் ஆளுமையை சிதம்பரம் நேரில் அறிந்துகொண்டது கொஞ்சம்தான். அவரது ஊர் ஆளுமை பற்றியும் தாசி ஆளுமை பற்றியும் தொந்தி மாமா நிறையச் சொல்லி இருக்கிறார்.
பெரியப்பா பெரிய முன்கோபி. முரட்டுத்தனமும் முகம் கொடுத்து பிறர் சொல் வதைக் கேட்காத முரட்டுக் குணமும் காரணமாய், அவரை நெருங்கி யாரும் பேச அச்சப்படுவார்கள். யார் வீட்டுக்கும் போவதைக் கௌரவக் குறைவாகக் கருதுபவர். யார் வீட்டுத் திண்ணையிலும் அவர் உட்கார்ந்ததில்லை. நெஞ்சு வரை உயர்த்திக் கட்டிக் கீழே கணுக்காலுக்குச் சற்று மேலேறி நிற்கும் நாலுமுழ வேட்டியும், எலும்புகள் தெரியும் மார்புக்கூட்டின் நடுவிலான குழிவில் சந்தனப்பொட்டும், நெற்றியில் திருநீரும், தோளில் தொங்கும் சாதா ஈரிழைத் துண்டுமாய் அவர் தெருவோடு நடந்து போனால், திண்ணைகள் மீதும், தெரு நடைகளிலும் உட்கார்ந்திருக்கிற ஆணும் பெண்ணும் அச்சத்துடன் கூடிய மரியாதையுடன் எழுந்து நிற்பார்கள். பெரியப்பா யாரையும்
நிமிர்ந்தோ திரும்பியோ பார்ப்பதில்லை. ஒரு சிங்கத்தின் பிடரி போல பின் கழுத்தில் படர்ந்து தொங்கும் குட்டை முடியை உதறி, இடது கைவிரல்களால் சிக்கெடுத்தபடி வலதுகையில் சுருட்டு புகைய நிமிர்ந்த தலையுடன் நடந்து போவார்.
ஊர்ப் பெரிய தனக்காரர் என்பதால் ‘உஷார்க் கமிட்டி’ என்கிற அரசாங்கம் அந்தக் காலத்தில் ஊர்க் காரியங்களைக் கவனிக்க உருவாக்கிய அமைப்பின் தலைவர் அவர்தான். ஊரில் நடக்கும் திருட்டு புரட்டு, அடிதடி, வம்பு வழக்கு எல்லாவற்றிற்கும் அவர்தான் நீதிபதி. அவரது பேச்சுக்கு எதிர்ப் பேச்சுக் கிடையாது. கண்டிப்பும் கறாருமான மனிதர்.
வீட்டிலும் அதே அதிகாரம் தான். பெரியம்மா எதிரே நின்றுபேசி வீட்டில், யாரும் பார்த்ததில்லை. பிள்ளைகள் எதிரே வரவே முடியாது. அப்பாவுக்கும் அவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை. ஆனால் தம்பி பிள்ளைகளிடம் சமயங்களில் பேசுவதுண்டு, அதிலும் சிதம்பரத்தை அதிகமும் அழைப்பதுண்டு. அதுவும் பெரியம்மாவிடம் கேட்டு சுருட்டும் நெருப்புப் பெட்டியும் வாங்கி வரச் சொன்னதே அதிகம். பெரியம்மாவிடம் முகம் கொடுத்துப் பேசாத இவருக்கு எப்படி ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள் என்று அந்த நாளில் சிதம்பரம் நினைத்ததுண்டு.
பகலில் யாரையும் மதித்து, யார் வீட்டுப் படியையும் மிதிக்காதவர் – ஊர் அடங்கிய பிறகு, இரண்டுதெரு தாண்டி வடக்குத் தெருவுக்கு தாசி பவுனு வீட்டுக்குப் போவதைத் தெருவில் அனேகரும் பார்த்திருப்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும்? ஆனால் அதெல்லாம் அப்போது பெரிய மனிதர்களுக்கு வாடிக்கைதான் என்பதால் பெரியப்பா ஒருநாளும் அதற்காக வெட்கப்பட்டிருக்க மாட்டார் என்றே சிதம்பரத்துக்குத் தோன்றும்.
பெரியப்பா தாசி வீட்டுக்குப் போவது பற்றி தொந்திமாமா சொல்வார்:
“உங்கப் பெரியப்பா பகல்லே அந்தத் தெருவுக்குப் போனவரில்லே. மோளக்காரத் தெருன்னு கவுரவம் பாப்பாரு. ஆனா தேவிடியா ஊட்டுக்கு போறப்ப மட்டும் கவுரவம் பாக்குறதில்ல. ராத்திரி சாப்புட்டுட்டு ஊரு அரவம் அடங்குனப்பறம் போவாரு.
அப்பன்காரன் அப்பாவு முதலி வாசத் திண்ணையிலே காத்துக் கிட்டுருப்பான். இவரு படியேறினதும் மரியாதையா எழிந்திருச்சி, உள்ளே தலையை நீட்டி, ‘பாப்பா! பெரிய புள்ள வந்திருக்காங்க’ என்று சன்னக் குரல்லே சொல்லிட்டுக் கதவைத் தொறந்து
விடுவான். இவுரு மெதப்பா நடந்து உள்ளே போவாரு. பவுனு கதவச் சாத்திக்குவா. அவரு ஊடு திரும்புற வரைக்கும் அப்பன்காரன் தெருத் திண்ணையிலே காவக்காரன் மாதிரி படுத்திருப்பான். அண்ட அயல்லே இருக்குறவங்க பாத்துச் சொன்னதுதான்.
நாம எங்கே பின்னாலியே போய்ப் பாக்க முடியுமா?”
அந்த பவுனம்மாவுக்கு பெரியப்பா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அது வளர்ந்து பெரிய பையனான பின்னும், பெரியப்பா வீட்டுக்கு வந்ததில்லை. சிதம்பரம் பள்ளிச் சிறுவனாக இருக்கும் போது அந்தப் பையன் வாலிபனாகி தோற்றத்தில் பெரியப்பா போலவே இருந்தார். பெரியப்பா தாலி கட்டிய மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளைவிட அவர்தான் அச்சு அசலாக, பார்த்ததுமே இன்னார் பிள்ளை என்று சொல்லிவிடும்படி இருந்தார். பெரியப்பா போலவே சற்றுக் கூனலாய், நெஞ்சு எலும்புக் கூட்டுக்கு மத்தியில் குழியும் அதில் சந்தனப் பொட்டும், கழுத்துக் கண்டத்தின் துறுத்தல், பின் கழுத்தில் பிடரியில் தொங்கும் தலைமுடி, நெற்றியில் விபூதி – என்று அவர் நடந்து வந்தால் பெரியப்பாதானோ என்று சந்தேகம் வந்து விடும். ஆனால்
பெரியப்பா காலமாகும் வரை அவர் இந்த வீட்டுக்கு வந்ததில்லை. பிறகுதான் வந்து போய் அண்ணன், தம்பி, தங்கை என்று பெரியப்பா பிள்ளைகளிடம் உறவு கொண்டாடி பெரியம்மாவும் பிள்ளைபோல அங்கீகரித்து நெருக்கமானார். ஆனாலும் அவர் தன் அம்மாவுடன்தான் இருந்தார்.
”அந்த சுந்தரத்துக்கும் பவுனுக்கும் அடுத்து தங்கம்மான்னு ஒருத்தி இருந்தா. அவளோட மவதான் ரங்கம்மா. இவ பொறந்ததுமே அம்மாக்காரி செத்துப்போக பெரியம்மாக்காரிவ தான் வளத்து ஆளாக்கி தங்கள மாதிரியே சிவங்கோயிலுக்கு
பொட்டுக் கட்டி வச்சாளுவ” என்று மாமா ரங்கம்மா பற்றி சொல்லியிருக்கிறார்.
வயதுக்கு வராததால், அதுவரை பள்ளிக்குப் பெரியம்மாக்கள் அவளை அனுப்பி படிக்க வைத்தார்கள். வயதுக்கு வந்ததும் படிப்பை நிறுத்தி விட்டு சாந்திமுகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
(தொடரும்)
- கால நதிக்கரையில்……..அத்தியாயம் – 8
- நாடக நெறியாளர், நடிகர் அ.சி. தாசீசியஸ_க்கு கனடாவில் இயல்விருதும் பாராட்டுவிழாவும்.
- தி.ஜானகிராமன் / அழியா நினைவுகள்!
- காதல் நாற்பது (23) சொர்க்கத்தைப் புறக்கணிப்பேன் !
- குமுதம் சுஜாதாவும் முஸ்லிம் முரசு மீரானும்
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – ஒலிக்கவிதைப் பிரிவு
- எறும்பாய் ஊர்ந்த உலகம்
- ஒரு மனைவி,ஒரு குழந்தை,..சில வீடுகள் அவசியம்.
- வெண்ணிலவை நோக்கித் திட்டமிடும் இந்தியாவின் முதற்படி விண்வெளிப் பயணம்
- இலை போட்டாச்சு ! (31) திடீர் அடை – ஐந்தாம் வகை
- ஏழாவது ஆண்டின் நிறைவு கவிமாலை
- மீண்டும் காண்பேனா?
- அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான ஜெயபாரதன் அவர்களின் கருத்துரை
- ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான கவிஞர் கதுமு. இக்பால் அவர்களின் நடுவர் உரை
- பிறைநதிபுரத்தானுக்கு பதில்
- சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம்
- நரேந்திரன் அவர்களுக்கு,
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பன்னிரண்டு: மீண்டும் தொடங்கும் மிடுக்கு!
- வாழ்வின் பயணம்
- மெழுகுவர்த்தி
- பெரியபுராணம்-133 (நிறைவுப் பகுதி)
- என்னைப் பார்த்து என்ன கேட்கிறாய்?
- “கலைஞர் தொலைக்காட்சி” மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்
- தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்
- அணுகுமுறை
- நிலமகளின் குருதி! (இறுதிப் பகுதி)
- காட்சிகள் மாறும் கழக அரசியலும் கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம்.
- ஸஹாரா
- மாத்தா-ஹரி அத்தியாயம் 12
- உன் பாதை…
- பூங்கொத்து கொடுத்த பெண்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 3 பாகம்: 1-2)