காற்றினிலே வந்த கீதங்கள்

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

வெங்கட் சாமிநாதன்


சுந்தர ராமசாமி அவர்கள் தன் தரப்பைப் பற்றி சொல்ல வந்துள்ளது எனக்கு சந்தோஷமளிக்கிறது. இது காறும் அவர் பற்றி எழுதப்பட்டது எதற்கும் அவர் மெளனமே சாதித்து வந்துள்ளார். என்னில் அவர் கண்ட ‘கழிவிரக்கம் ‘ வகையறாக்களை அவர் பொருட்படுத்தியது ஆச்சரியமாக இருக்கிறது. ஆயினும் அவர் எழுத்தில் காணும் ஆவேசமும், படபடப்பும் அவர் குணத்திற்கு அன்னியமானவை.

விருது பற்றிய செய்தி வந்த கணத்திலிருந்து விஸா கிடைத்த கணம் வரைய நீண்ட தொடக்கம், நான் எழுதியதில் பாதியை நிரப்பியுள்ளது. அதவ்வளவும் பயணம் பற்றிய நிச்சயமற்ற நிலையையும், விருது பற்றிய செய்தி என்னை அப்படி ஒன்றும் புல்லரித்து வானத்தில் மிதக்கச் செய்து விடவில்லை என்பதையும் சொல்லத்தான். அதற்கும் காலச்சுவடின் ஆசிரியர் குழுவின் இலங்கைப் பிரதிநிதியின் கரிப்புக்கும் சம்பந்தமில்லை.அந்த கரிப்பினால் நான் கழிவிரக்கம் கொள்ளவுமில்லை. டோரண்டோவில் விருது கொடுத்தபோது நான் பேசியதும் அதே மன நிலையில் தான் என்பது அந்த பேச்சிலிருந்து விளங்கும். விருது தர அவர்கள் என்னிடம் கண்ட தகுதிகளை நான் ஏற்கவில்லை என்பது அதில் தெளிவாகும். இலங்கைக் காரர், என் சிந்தையில் காலச்சுவடு அவரை மேடைக்கு இழுத்து வரும் வரை இருந்ததில்லை. என் பயணத்தின் நிச்சயமற்ற நிலையில் இன்னுமொரு சிக்கலும் சேர்ந்து கொண்டது. என் ஹிருதய நோயும் முட்டி தேய்ந்து பலஹீனமான கால்களும் விமான பயணத்துக்கும் கனடாவில் இருக்கும் நாட்களுக்கும் சேர்த்த இன்ஷ்யூரன்ஸ் முழுதுமாக கிடைக்கத் தடங்களாக இருந்தன.. ஆக எனக்கு ஏதும் நேரிட்டால் எனக்கான வைத்தியச் செலவு மிகவாக விருது அளிப்போரைப் பாதிக்கும். இதை நான் அவர்களுக்கு தெரிவித்தபோது, கனடா பயணம் ரத்தாகும் என்றே நான் நினைத்தேன். ஆனால் ஆச்சரியம், அதற்கும் அவர்கள் தயாராக இருந்தது தான். ஆகவே சுந்தர ராமசாமி அவர்கள் ஆசையோடு என் எழுத்தில் படிக்கும் யூகங்கள் யாவும் அவர் விருப்பம் சார்ந்தனவே அல்லாது, உண்மை சார்ந்தன அல்ல. எல்லாம் சு.ரா என்னும் புனைகதைக்கார ஆளுமையின் நீட்சி. இப்படி அவர் சந்தோஷப்பட்டுக்கொண்டால் நான் அதைத் தடுக்கமுடியாது. அவர் வாசிப்பு எப்போதிருந்து இவ்வளவு கோணலாயிற்று ?

இலங்கைக்காரர் எனக்கு ஒரு பொருட்டல்ல. 1961 லிருந்து எத்தனையோ பேர் இப்படி என் பாதையில் வழி மறித்திருக்கிறார்கள். இன்னமும் வருவார்கள். சு.ரா. நிச்சயமாக என்னளவு எதிர்ப்பைச் சந்தித்திருக்கமாட்டார். இன்னமும் மேற்சென்று சொல்வதென்றால் நான் பெற்றுள்ள அலட்சியத்தையும், உதாசீனத்தையும், வசைகளையும் சு.ரா. சந்தித்திருந்தால்…. சொல்லமுடியாது,அவர் என்ன செய்திருப்பாரோ.

இலங்கைக்காரரை வெளியிட்டது கருத்து சுதந்திரம் என்கிறார். அவர் எழுத்தில் காணப்படுவது கருத்து என்றும் அவர் எழுதியது சுதந்திரம் எனப்பெயர் பெறும் என்றும் சு.ரா. சொல்வதை என்னென்பது!. ஏவப்படுவதும், ஏவப்பட்டதைச் செய்வதும் , கருத்து, சுதந்திரம் எனப் படமாட்டாது. காலச்சுவடில் என்னை வசை பாட வைத்து தன் கரிப்பைத் தீர்த்துக் கொள்வது கருத்து சுதந்திரம் அல்ல. அமுதசுரபியிலும் திண்ணையிலும் நான் எழுதியதை காலச்சுவட்டில் எழுத இடம் கொடுத்திருந்தால், அது என் சுதந்திரம், என் கருத்து என அங்கீகரிக்கலாம். தேவி பாரதியும், அரவிந்தனும், சிபிச்செல்வனும், ஆ.இரா.வெங்கிடாசலபதியும் இளவேனிலும் காலச்சுவடில் சு.ரா.வின் புகழ் பாட பிரசுரித்துக்கொள்வது கருத்து சுதந்திரம் அல்ல.

ஏவலுக்குக் காத்திருப்பவரை ஏவி, தம் கரிப்பைத் தீர்த்துக்கொண்டு, இது ஜன நாயகம், கருத்து சுதந்திரம் என்று ஒளிவது தார்மீக மற்ற சாமர்த்தியம், கோழைத்தனம் என்கிறேன். இயல் விருது பற்றிய செய்தி, விருது வழங்கப்பட்ட செய்தி, பின் ஏவிப் பெற்றுதைப் பிரசுரித்தது எல்லாம் ஒரே மாதிரியான முறையில் பெட்டிச் செய்தியாக தரப்பட்டுள்ளன. இதைக் கண்டிக்கும் தஞ்சை நா.விஸ்வநாதனின் கடிதமோ, கடிதங்களின் கூட்டத்தில் போடப்பட்டுள்ளது. அது சுதந்திரமாக வந்ததல்லவா ? ஏவப்பட்டு பெற்றதல்லவே. காலச்சுவடு ஆசிரியர் அரவிந்தன் எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதுகிறார்: என்னிடம் மதிப்பு வைத்துள்ளதாலேதான் விருது பற்றிய செய்தியைப் பிரசுரித்தாகவும், நுஹ்மானைப் பிரசுரித்தது, கருத்து சுதந்திரமும் ஜனநாயகமும் ஆகும் என்று. தனிப்பட்ட கடிதத்தில் எனக்கு சமாதானம் சொல்லியாகிறது. பொது மேடையிலோ நுஹ்மானுக்கு தனிக்கவனம். இது தான் சாமர்த்தியம். ஆனால் சு.ரா.வோ, நுஹ்மானிடம் கண்ணியமும் கருத்துக்களும் காண்கிறார்: அவர் முன்னர் {1972-73) எழுதியதின் நீட்சி என்கிறார். முன்னர் எழுதியதில் நுஹ்மான், ‘சாமி நாதனின் பாட்டன், முப்பாட்டன் ‘ எல்லாம் இழுக்கப்பட்டிருந்தனர். நல்ல கண்ணியமான எழுத்துத் தான். கருத்துக்கள் தான்.1விருது பற்றிய செய்தி சொல்லப்பட்டபோது, ‘இது நல்ல தேர்வு. 40 வருடங்களாக எந்த அங்கீகாரமும் கிடைக்காதவருக்கு கொடுப்பது நல்ல காரியம் ‘ என்று என்னைப் பற்றி சொன்னது, என்னை தானும் மனைவியுமாக வாழ்த்தியது ஏப்ரல் மாதம். அதை முற்றாக நிராகரிக்கும் நுஹ்மானிடம் கண்ணியமும் கருத்து சுதந்திரமும் கண்டு புளகாங்கிப்பது அக்டோபர் மாதம். இப்போது டெலிபோனில் சொன்னதெல்லாம் நினைவு கொள்வது சரியல்ல. காரணம், நுஹ்மானின் கருத்துக்களின் ஒளி வீசும் தகதகப்பு. உலக சரித்திரமே ஒரே நாளில் மாறும் போது, நேற்றைய குல்லுகபட்டர், இன்று மூதறிஞர் ஆகும், நேற்றைய புரட்சி நடிகரும்,இதய தெய்வமும் இன்று மலயாளியாகவும் நடிகராகவும் ஆகும் கலாச்சாரம் பேணும் தமிழ் நாட்டில் ஆறு மாத இடைவெளியில் மனமாற்றம், ஞானோதயம் நிகழக்கூடாதா என்ன ?

கருத்து சுதந்திரம் என்கிறார். எனக்கு அவர் சொல்லித்தர வேண்டிய நிலை வந்து விட்டதா, நாகர் கோயிலில் வீற்றிருக்கும் பெருமானே ?

1. என் முதல் கட்டுரைத்தொகுப்பு ‘பாலையும் வாழையும் ‘ 1970 களில் வெளிவந்தபோது, அதற்கு முன்னுரை எழுதியவர், சி.சு.செல்லப்பா. சண்டையில்லாது,இரைச்சல் இல்லாது சூடான வாக்கு வாதம் இல்லாது நாங்கள் சந்திதுக் கொண்ட நாள் கிடையாது. இருப்பினும் அவர் எழுதுவதற்கு நான் மறுப்பு சொன்னதில்லை. அவர் எழுதியதை புத்தகம் பிரசுரமான பிறகு தான் பார்த்தேன். நான் தில்லியில். அவர் சென்னையில். இதற்குப் பெயர் கருத்து சுதந்திரம்.

2. திரும்பவும் 70 களில் ‘எதிர்ப்புக் குரல் ‘ என்னும் தொகுப்பை மணிபதிப்பகம் வெளியிட்டபோது, அதற்கு முன்னுரை சுந்தர ராமசாமி அவர்களிடம் பெற விரும்புவதாக மணி சொன்னார். அப்போது சு.ரா.வுக்கும் எனக்கும் இடையே தீவிர மனஸ்தாபம். உறவு முறிந்து விட்டது என்றே நான் நினைத்திருந்த காலம். இருந்தும் நான் மறுக்கவில்லை. அவர் எழுதியது என்ன என்று புத்தகம் வெளிவந்தபிறகு தான் எனக்குத் தெரியும். இதற்கு பெயர் கருத்து சுதந்திரம்.

3. சு.ரா.இருக்கும் நாகர்கோயிலிலிருந்து அவர் நண்பர் ராஜமார்த்தாண்டனின் ‘கொல்லிப்பாவை ‘-யில் நான் எழுதிய கட்டுரைக்கு ஒரு நீண்ட மறுப்பு எழுதினார், சு.ரா. அதை ஏன் பிரசுரித்தீர் என்று நான் ராஜமார்த்தாண்டனிடம் கேட்டதாக செய்தி இருந்தால் சு.ரா. சொல்லட்டும். அவருக்கும் நான் பதில் எழுதினேன். இதற்குப் பெயர் கருத்து சுதந்திரம்.

4. ‘யாத்ரா ‘ பத்திரிகை என் பொறுப்பில் வந்தபோது, என்னிடம் பகை உணர்வு கொண்டிருந்த அசோகமித்திரன், நகுலன் போன்றோரை, அவர்களை எழுதச் சொல்லி கேட்க வைத்தேன். நகுலன் மறுத்து விட்டார். அசோகமித்திரன் தன்க்கு அப்போது சுரம் என்றார். சுரம் விட்டபிறகு எழுதலாம் என்று சொல்லப்பட்டது. பின்னும் அவர்கள் எழுதவில்லை. அவர்கள் கடிதங்கள் யாத்ரா வில் வெளியிடப்பட்டுள்ளன. பிரமீளும் இன்னும் மற்றோரும் எனக்கு எதிராக செய்த பிரசாரம் யாத்ரா இதழ்களில் தான் தொடங்குகின்றன. யாத்ரா இதழ்கள் இதற்கு சாட்சி. இதற்குப் பேர் கருத்து சுதந்திரம்.

5. ‘அக்ரகாரத்தில் கழுதை ‘ என்னும் திரைக்கதை புத்தகமாக வந்தபோது அதுபற்றி வந்த முதல் நிராகரிப்பு, சு.ரா. வினுடையது, அது ஒரு நீண்ட கடிதமாக. அதை ‘வைகை ‘ பத்திரிகையில் வெளியிடச் செய்தது நான். அதன் இரண்டாம் பதிப்பு வந்தபோது அவருடைய நிராகரிப்பையும் தாங்கியே அது வந்தது. முதல் பதிப்பிலும், இரண்டாம் பதிப்பிலும், என்னுடன் பகை கொண்டு இருந்த பிரமீளின் முன்னுரையும் அடக்கம். பிரமீள் ‘ நான் அதற்கு முன்னுரை எழுதுவேன் ‘ என்று மணி பதிப்பகத்திடம் வற்புறுத்தி எழுதியது. நான் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. அவர் எழுதியதை புத்தகம் வெளிவந்தபிறகு தான் நான் தெரிந்து கொண்டேன். இதற்குப் பேர், சு.ரா.அவர்களே, கருத்து சுதந்திரம்.

6. எனது நாடகம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு, ‘அன்றைய வரட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை ‘ புத்தகத்திற்கு எனக்கு எதிர் அணியிலிருந்த மார்க்சிஸ்ட்டான் எஸ்.வி.ராஜதுரைதான் நீண்ட பின்னுரை எழுதியிருக்கிறார். இது நான் அவரை வலியக் கேட்டுப் பெற்றது. அவரது விமர்சனங்களை, புத்தகம் வெளிவந்தபிறகு தான் பார்த்தேன். இதைத் தான் கருத்து சுதந்திரம் என்று சொல்லவேண்டும்.

7. ‘பாவைக்கூத்து ‘ என்ற என் புத்தகத்திற்கு, எனக்கு அறிமுகமில்லாத, என்னை அறிந்திராத, ஆனால் அத்துறை வல்லுனரான எல்.எஸ். ராஜகோபாலன் தான் முன்னுரை எழுதினார். இதற்குப் பேர் தான் கருத்து சுதந்திரம்.

8. ‘பான்ஸாய் மனிதன் ‘என்ற தலைப்பில் ‘பாலையும் வாழையும் ‘ இரண்டாம் பதிப்பு வந்தபோது அதில் கி.அ.சச்சிதானந்தமும், வெ.இறையன்பும் அவர்கள் கருத்தைத் தாங்கிய கட்டுரைகளும் அப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. வெ.இறையன்பு, சில குறைகளை,தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். சச்சிதானந்தமோ, என்னைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அது நேரே அச்சுக்குப் போனது. புத்தகம் வெளிவந்தபின் தான் அதை நான் படித்தேன். இறையன்பு தனதை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். இதற்கும் பெயர் கருத்து சுதந்திரம்.

9. நான் தில்லி சாகித்ய அகாடமிக்காக தொகுத்த, இன்றைய தமிழ்க் கவிதை, தமிழ் புனைகதை, தமிழின் இன்றைய தலித் இலக்கியம், பின் Encyclopaedea of Indian Literature-ன் தமிழ்ப் பகுதியின் பொறுப்பும் Oxford Companion on Indian Theatre க்கு கட்டுரைகள் எழுத நேர்ந்த போதும், என்னிடம் விரோதம் கொண்டவர்கள் என யாரையும் நான் ஒதுக்கியது கிடையாது. நான் வற்புறுத்தி, சண்டையிட்டு பெயர்கள் சேர்த்து, கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். அப்படி சேர்த்த விரோத பாவம் கொண்டவர்கள் இதன் பின்னும் தங்கள் விரோத பாவத்தைத் தொடர்கிறார்கள் தான்.இதற்குப் பேர்தான், சு.ரா.அவர்களே கருத்து சுதந்திரம். இவை எல்லாவற்றின் முழு விவரங்களையும், காலச்சுவடு எனக்கு இடம் அளிக்குமானால் தர நான் தயார். கருத்து சுதந்திரம் பேசும் நீங்கள் என்ன செய்வீர்களோ.

நான் இங்கு சொன்னது போல் நீங்களோ காலச்சுவடுவோ கருத்து சுதந்திரம் பேணியதை(அதாவது உங்களை விமர்சித்ததை}ச் சொல்லமுடியுமா ? உங்களுக்கு வேண்டாதவர்களை அடிக்க எடுத்துக்கொண்ட சுதந்திரத்தையல்ல.

நான் யாரிடம் கருத்து சுதந்திரம் பற்றி பாடம் கேட்கவேண்டும் ? இதை நான் ஏதும் ரூஸோவிடமோ, வால்டேரிடமோ, ப்ரெஞ்சுப் புரட்சி படித்தோ, இந்திய அரசியல் சட்டத்தின் preamble படித்தோ கற்றவனில்லை. எனக்கு எது சரி, எது நியாயம் என்று தோன்றிற்றோ அதைச் செய்தேன். செய்கிறேன். என் இப்போதைய சந்தேகங்களும் குற்றச்சாட்டுககளும் அதே நியாயத்திலிருந்து எழுபவைதான்.

இவற்றில் அனேகம் நடந்து,பின் 1980க்களில் எப்போதோ சு.ரா. ‘காலச்சுவடு ‘ தொடங்கியபோது, எனக்கு எழுதுகிறார்: காலசுசுவடுக்கு எழுதுங்கள். பரிசீலித்து பிரசுரத்துக்கு ஏற்றதெனில் பிரசுரிக்கலாம் ‘ என்று. இப்படி அவர் எழுதுவது என் எழுத்துக்களுடன்,பார்வையுடனான 20 வருங்களுக்கும் மேலான பரிச்சயத்திற்குப் பிறகு. இதை அவர் எழுதும்போது, அவர் என் குரலில் காந்தியையும், என் ஈடுபாட்டில் பாரதியையும் காண்பதாக சொல்லி அவை பதிவான பிறகு. இவர் கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார். விமர்சன ஜ்வாலை பற்றி பேசுகிறார். அதை முதலில் காலச்சுவடில் நடைமுறைப் படுத்தி விட்டு பின்னல்லவா பேசவேண்டும். ? என்னை விமர் சிப்பது பற்றி அல்ல எனது மறுப்பு. ஏன் இரட்டை நாக்குப்பேச்சு ? என்னை அடிக்க ஆளைத்தேடிக் கொண்டு இலங்கை போவானேன் ? பின் நானல்ல என்ற கோழைத்தனம் ஏன் ?

தஞ்சை மாவட்டத்தில் பாரம்பரியமாக நூற்றாண்டுகள் பல பழமையான கலாச்சாரம், தன் வீட்டின் தெருபார்த்த முகப்பில் ஒரு பகுதியை பொது உபயோகத்திறகாக திண்ணை என்று ஒரு மேடை ஒட்டுக்கூரையோடு அமைத்து வைப்பது. அது என் வீட்டைச் சேர்ந்ததே ஆனாலும் என் செலவிலே கட்டப்பட்டதானாலும் அது தெருவில் செல்லும் யாரும் வெயிலில்,மழையில் ஒதுங்க, இரவில் படுத்துறங்க. திண்ணை இணையமும் அப்படி ஒரு பொது இடமாக எனக்கும், காலச்சுவடில் இடம் மறுக்கப்பட்டவர்களுக்கும், இடம் மறுக்கும் சு.ரா.வுக்கும் பயன்படுகிறது. காலச்சுவடு ஒரு திண்ணையல்ல. ஓரு மடத்தின் பாதுகாப்பான உள் பகுதி. அல்லது சமஸ்தானாதிபதியின் தர்பார் அரங்கம். சாமரம் வீசுவார்,பாமாலை பாடுவார், விதூஷகர், போன்றோருக்கும் மந்திராலோசனைக்குமான இடம். மடத்தைச் சாராதவர்களைத் திட்ட, மடாதிபதியைப் புகழ கருத்து சுதந்திரம், முன்னுரிமை பெற்று உள்ளே புகுந்துள்ளவர்களுக்கு தரப்படும். மடத்தின் சம்பிரதாயங்கள் இருக்கும் தானே.

ஆனால், சு.ரா. நீங்கள் எப்படி அமுதசுரபி, திண்ணை இன்னும் மற்ற இடங்களில் கருத்து சுதந்திரம் என்று கோஷித்து இடம் கோருகிறீர்களோ அப்படி மற்றவர்களுக்கு காலச்சுவடில் இடம் கொடுப்பது தான் கருத்து சுதந்திரமாகும். எப்படி உங்களைப் புகழ இடம் கொடுக்கிறீக்களோ அப்படி உங்களை விமர்சனம் செய்யவும் இடம் கொடுக்கவேண்டும். கொடுப்பது என்ன,கொடுப்பது ? சுதந்திரமாக வந்தமரும் திண்ணையாக அது இருக்கவேண்டும். அப்படி இல்லாதவரை, உங்களுக்கு வேண்டாதவர்கள் என்று நீங்கள் பொறுக்கி எடுத்துள்ளவர்களை தாக்க,மனுஷ்யபுத்திரனை,ஜயமோகனை, சுஜாதாவை,வைரமுத்துவை,திகசியை, இப்போது என்னையும் பட்டியலில் சேர்த்துள்ளார்கள் போலிருக்கிறது. இனி எனக்கு எதிரான ஒரு witch hunting நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இதில் இடையில் அப்துல் ரகுமான், சிற்பி போன்றோர் ஏன் விட்டுப்பே ‘ ‘னார்கள் ? புற நானூறுவை வைத்து சுஜாதாவைத்தாக்குகிறீர்கள். தொல்காப்பியமும் செய்தியில் அடிபட்டதே, அதை ஏன் விட்டு விட்டார்கள் ?. நான் கேள்வி கேட்பது ,கவனமாக பொறுக்கும்,விட்டு வைக்கும் உங்கள் சல்லடை குணத்தைத் தான். ஜெய மோகனைத்தாக்க வேல்சாமி பயன்படுவார் என்று தெரிந்த பிறகு தானே காலச்சுவடு அவர் வீட்டுக் கதவைத் தட்டியது ? இல்லை அவரா வந்து ‘என்னை நேர் காணுங்கள் ‘ என்று காலச்சுவடு அலுவலகத்திற்கு வந்து கேட்டாரா ? சரி, இலங்கைகாரர் இருக்கவே இருக்கிறார், என்னைக் கவனித்துக்கொள்ள. அடுத்து மனுஷ்யபுத்திரன் விஷயத்தில் யாரை நேர் காணப்போகிறீர்கள், ? யாருக்கு கருத்து சுதந்திரம் அளிக்கபோகிறீர்கள் ?புஷ்-ஷிடம் டெமாக்ரஸி படும் பாடு உங்களிடம் கருத்து சுதந்திரம் படுகிறது, சு.ரா.

20 வருட காலத்திற்கும் மேலாக என்னை அறிந்திருந்தும், ‘எழுதுங்கள் பரிசீலிக்கிறோம் ‘ என்று சொன்ன உங்களிடம் நான் விரோதம் கொள்ளவில்லை. நான் காலச்சுவடுக்கு எழுதவில்லை. இது என் சுதந்திரம். உங்கள் பையன், கண்ணன் என்னை என் எழுத்தை மதிப்பதில்லை என்பது தெரிந்தும், தில்லி வந்து, தமிழினி 2000 விஷயமாக உதவ வேண்டும் என்று கேட்ட போது என்னால் ஆனதை மனதார, தயக்கமின்றி செய்தேன். அது ஒரு சுக்குக்கும் பயனில்லாமல் போனது வேறு விஷயம். நான் உதவினேன். விரோதம் பாராட்டவில்லை. என் எழுத்தை மதிக்காதது உங்கள் இருவரின் சுதந்திரம்.

ஆனால், இப்போது இருவரும் மனதில் வன்மம் கொண்டு என்னை மதிப்பதாக ( நீங்கள் ) சொல்லிக்கொண்டே, சொன்னதைச் செய்யத்தயாராக இருக்கும் ஒரு மனிதனைப் பிடித்து இழுத்து வந்து எழுத வைத்தது தர்மமில்லை. கருத்து சுதந்திரம் இல்லை. ஆண்மை இல்லை. இந்த காரியத்தின் பின்னிருக்கும் வன்மம் தான் என்னை வெகுவாக காயப்படுத்தியுள்ளது. கூலிப்படையின் எழுத்து அல்ல. இதைத் தொழிலாகக் கொண்ட மனிதன் கேவலப்பட்ட மனிதன். அது இழி தொழில். இந்த வசை எனக்கு ஒரு சுண்டைக்காய். 40 வருடங்களாய் கேட்டுப் பழகியது. ஆனால் நெடுங்கால நண்பரின் மகன் என்று நான் வாத்சல்யத்துடன் பழகிய கண்ணனும், நட்பு காட்டிய சு.ரா.வும் மறைத்து வைத்திருந்த வன்மம் ..,, என்ன சொல்லட்டும். இது தர்ம யுத்தமில்லை.

கருத்து, பார்வை வேறு பாடுகள் ஒருபொருட்டல்ல. அசோகமித்திரனும், சா.கந்த சாமியும் எனக்கு எதிராக் சதி செய்த காலத்தில், அவர்களது எழுத்துக்களில் சாதகமாக நான் கண்டவற்றை நான் அங்கீகரிக்க தவறவில்லை. மறைக்கவில்லை. இருட்டடிப்பு செய்யவில்லை. இதை அவர்கள் எண்ணிப்பார்க்கவில்லை என்பதும் வேறு விஷயம். அது அவர்கள் கீழ்மையைப் பற்றிய விஷயம்.

இப்படித்தான் உலகமே இருக்கிறது. புத்தக வெளியீட்டில், எழுத்தைச் சீராக்குவதில், நாம் அன்று எண்ணிப்பார்க்காத தரத்திற்கு,உயரத்தி இவ்விஷயங்களில் முன்னோடியாக இருக்கும் க்ரியா ராமகிருஷ்ணன். இதெல்லாம் அவருடைய கொடை. – a gift of his vision and dedication. இன்று காலச்சுவடையும் சேர்த்து நாம் பார்க்கும் அத்தனைக்கும் முன்னோடி, வழிகாட்டி அவர். அவருக்கும் எனக்கும் இருந்த நட்பின் நெருக்கம் உஙகளுக்குத் தெரியாது. அது டெல்லியில் தொடங்கியது. இருப்பினும் அவரது க்ரியாவினால் அதிகம் பயனடைந்தது. சு.ரா. ஒரு பயனும், அடையாதது நான், இன்று வரை. ஆனால், இன்றும் நானும் ராமகிருஷ்ணனும் நண்பர்கள் தான். அதிகப்பயனடைந்த சு.ரா. விரோதித்துக் கொண்டு போய் வருடங்கள் பத்துக்கும் மேலாயிற்று. முகம் பார்த்துக்கொள்ள விரும்பாத நிலை.

சு.ரா.வுக்கு நினைவு இருக்கிறதோ என்னவோ, தில்லியில் இருந்த எனக்கு இது தெரிய வந்ததும், இவ்வளவு பழைய, நெருங்கிய நட்பை இப்படி உதறுவது வயது முதிர்ந்த காலத்தில் நல்லதல்ல என்று இருவருக்கும் எழுதி சமாதானம் செய்து வைக்க முயன்றேன். பட்ட காயத்தின் வலியை ராமகிருஷ்ணனால் மறக்க இயலவில்லை. சு.ரா.வுக்கு, கண்ணன் காட்டிய எதிர்கால மகோன்னத சுபிட்சம் கண்களை மறைத்தது என்று நினைக்கிறேன். என் புத்தகம் ஒன்று கூட க்ரியாவில் வெளிவராவிட்டாலும் நானும் ராமகிருஷ்ணனும், இடைப்பட்ட உரசல்களையும் மீறி நண்பர்கள் தான். இன்று காலச்சுவடு ஒரு சாம்ராஜ்யம் தான். அது வெளியிட்டுள்ள சு.ரா.வின் புத்தகங்களில் ஒன்றில் சு.ரா. ராமகிருஷ்ணனை நினைவு கூறுகிறார்: எப்படி ? ‘ படைப்பின் உருவாக்கத்திற்கும், அச்சேற்றத்திற்கும் இடைப்பட்ட நுட்பங்களையும் பொறுப்புக்களையும் எனக்கு உணர்த்திய எஸ்.ராமகிருஷ்ணன், என்.சிவராமன், கி. நாராயணன் ஆகியோருக்கும், ப. சங்கரலிஙகம் நினைவுக்கும் ‘. இதைத்தான் left handed compliment என்பார்களோ!. கண்ணியம் மிக்க சு.ரா.வுக்கு அது தெரிந்திருக்கிறது. நன்றி சொன்ன மாதிரியும் இருக்கும். எதிராளி மனதைப் புண்படுத்தும் காரியமும் நடக்கும். 1996 தமிழக தேர்தலில், தி.மு.க.வின் பிரசாரத்திற்கு ரஜனிகாந்தின் ‘இந்த முறை அ.தி.மு.கவிற்கு நீங்கள் வோட்டளித்தால், தமிழ் நாட்டை கடவுள் கூட காப்பாற்ற முடியாது ‘ என்ற கோஷம், தொலைபேசியில் பதிவானதை தமிழ் நாடெங்கும், தெருவுக்குத் தெரு, சந்துக்குத் சந்து கருணா நிதியே, சூப்பர் ஸ்டார் சொல்கிறார் என்று சொல்லி எதிரொலித்து நன்கு பயன்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்ற பிற்கு ஒரு நீண்ட மெளனம். கேள்விகளும், கண்டனங்களும் நிறைய எழுந்தனவோ என்னவோ, பின் ‘ ஆமாம், பெரிய சாமி, கருப்ப சாமி, ராமலிங்கம், க்ருஷ்ண குமார், வேலுப்பிள்ளை, ரஜனிகாந்த், ரகுராமன், வெள்ளையப்பன், பழனி, போன்ற எத்தனையோ பேர் உழைப்புக்கும் தி.மு.கவின் வெற்றியில் பங்குண்டு ‘ என்று இப்படி ஏதோ சொன்னார் கருணா நிதி. சு.ரா.வும் கருணா நிதியும் ஒரேமாதிரித்தான் செயல்படுகிறார்கள். இதில் மாத்திரமா ? இன்னும் பல ஒற்றுமைகளைப்பட்டியலிட முடியும்

காலச்சுவடு-வில் வருவதெல்லாம் எனக்கு தெரிந்தா வருகிறது. ? ஆனால் என் பொறுப்பில் இருந்தால் இதையேதான் செய்திருப்பேன் என்கிறார், சு.ரா. சாமர்த்தியம் தான். எம்.ஜி.ஆர், கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரா, ஸ்டாலின் துணைச்செயலாளர் ஆனாரா, தே.ஜ.கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகுகிறதா, தயா நிதி மாறன் தேர்தலில் நிறுத்தப்படுகிறாரா, மத்திய காபினெட்டில் பதவி அவருக்கு வேண்டும் என்று கேட்கப்படுகிறதா, எல்லாம் தி.மு.க.வின் செயற்குழுதான் தீர்மானிக்கிறது என்றுதான் ஒவ்வொருமுறையும் கருணா நிதி சொல்கிறார். தி.மு.க. ஆவணங்களும், செயற்குழு கோப்புகளும் அதைதான் நிரூபணம் செய்கின்றன, எழுதப்படும் தி.மு.க வரலாறும் அப்படித்தான் சொல்லும். அன்பு மணிக்கு ராஜ்ய சபாவில் இடம் தரவேண்டும் என்றும், அவரை மந்திரி ஆக்கவேண்டும் என்றும் கட்சியில் பலத்த வேண்டுகோள் எழுந்ததாகத் தான் டாக்டர் ஐயா, ராமதாசும் சொல்கிறார். காற்றினில் வரும் கீதங்களை ஒதுக்கிவிட்டு நிரூபணங்களைத் தேடிச் சென்றால் ராமதாஸ் சொலவது தான் நிரூபணம் ஆகும் என்று தோன்றுகிறது. சோவியத் ரஷ்யாவில் முடிவுகள் எல்லாம் எடுப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுதான், ஸ்டாலின் அம்முடிவுகளை செயல்படுத்ததான் செயலாளராக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆவணங்களும் அதைதான் சொல்லும்.

இதைத் தானே சு.ரா.வும் கேட்கிறார். வெ.சா. சொல்வதற்கு என்ன ஆதாரம் ? நிரூபணம் என்ன ? எல்லாம் ஆதாரமற்ற காற்றினிலே வந்த கீதங்கள் என்று. நான் எங்கே போவேன் நிருபணத்திற்கும், ஆவணங்களுக்கும். ? நாகர்கோயிலுக்கும் கலிபோர்னியாவுக்கும் இடையே நடந்த இ-மெயில், தொலைபேசி பரிமாறல்களின் பதிவுகள் எனக்கு எங்கே கிடைக்கும் ?. பட்ட பகலில் சாலை நடுவே நடக்கும் கொலைகளுக்கே சாட்சிகள் கிடைப்பதில்லை. கேஸ் ரத்தாகிறது. தாவூத் இப்ராஹீமை கைது செய்தாலும், நிரூபணம் எங்கே என்று அவன் கேட்டால் போலீஸ் என்ன செய்யும் ? எல்லாம் காற்றினிலே வந்த கீதங்கள் தானே.

எனக்கு விருது தருவதாக நிச்சயிக்கப் பட்டதும், அதை டோரண்டோவிலிருந்து செல்வ கனகனாயகம் எனக்குச் சொன்னதும். இது பற்றி சு.ரா.வுக்குச் சொல்லப்பட்டதும், அவர் இதைப் பாராட்டி, நல்லகாரியம், 40 வருஷமாக வெ.சா.செய்ததற்கு அவருக்குக் கிடைத்தது ஒன்றுமில்லை என்றுதும். நாகர்கோயிலிலிருந்து அவரும் அவர் மனைவியும் என்னை வாழ்த்தி, கட்டாயம் போய் வாருங்கள் என்று சொன்னதில் சந்தோஷத்தை நான் உணர்ந்ததும், இப்படி ஒராயிரம் விஷயங்கள் காற்றினிலே வந்த கீதங்களாகத்தான் இருந்துவிட்டன. எதற்கும் நிரூபணம் இல்லைதான். சு.ரா. தொலைபேசியில் வாழ்த்தும் போது, பின்னர் இது பற்றி அவர் மெளனம் சாதிப்பார், ‘ நான் எந்த சந்தர்ப்பத்தில் என்ன மன நிலையில் இருந்தேன், கேலியாக பேசினேனா ? என்றெல்லாம் அவர் பின்னர் கேட்கக்கூடும் என்று நான் யூகித்து,, ஆகையால், ‘இது காற்றில் வரும் கீதம். பத்திரத்தில் எழுதிக்கொடுங்கள் ‘ என்று நான் எப்படிக் கேட்டிருக்கமுடியும் ? அது சரி ஆவணங்களாகக் கிடைப்பவை எவ்வளவு உண்மை. ? செயற்குழு தீர்மானங்கள் எனப் பதிவு செய்யப்படுபவை, உண்மைகளா ? ஆவணப்பதிவுகள் எனப்படுபவை எப்படி உண்மையை மறைத்து, எது வெளியே சொல்லப்படவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டவை மாத்திரமே ஆவணமாகின்றனவோ அப்படியே, காற்றினிலே வந்த கீதம் என்று அசெளகரியமானவற்றை அங்கீகரிக்க மறுப்பதும், நீரூபனம் எங்கே ? கேலியா பேசினேனா, நிஜமாவா ? என்று கேட்பதும்.

சொல்லப்போனால், நம் கலாச்சாரத்தின் பண்பாட்டின், நாகரீகத்தின் வித்துக்களே காற்றினிலே வந்த கீதங்கள் தான். முகம்மது நபிக்கு குர் ஆன் கிடைத்ததும், கிறிஸ்து உபதேசித்ததும், ராமகிருஷ்ண பரம ஹம்சரின் கதாம்ருதம் முழுதும், அர்ஜுனனுக்கு கண்ணன் கீதோபதேசம் செய்ததும், நமது இதிகாசங்களும், எல்லாம் காற்றினிலே வந்த கீதங்கள் தான். வேதங்களும் காற்றினிலே ஆயிரம் ஆயிரம் வருஷங்களாக பயணம் செய்துதான் நம்மை வந்தடைந்துள்ளன. அவற்றின் விசேஷ பாராயண முறைகள் ஒரு அக்ஷரம் பிசகாது நம்மை வந்தடையும் வழிசெய்துள்ளதாக அறிஞர்கள் சொல்கிறார்கள். பீஹார் மா நிலத்தைச் சேர்ந்த ஒரு கல்விமான், 50 வருடங்களுக்கு முந்திய செய்தி இது, சொல்வாராம், அவர் பெயர் ஏதோ ஜா, ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எல்லாம் தொலைந்து போனாலும் உலகம் அவற்றை இழந்து விட ‘து. எல்லாம்{தன் தலையைச் சுட்டி} இங்கே சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ‘ என்பாராம். என் கிராமத்தில் எங்களோடு இரண்டு தலைமுறை உறவு கொண்டிருந்த ஒருவர், எங்களுக்கு எதிராக கோர்ட்டில் ராமாயணத்தின் மேல் கைவைத்து பொய் சத்தியம் செய்த பாவத்திற்காக ஏதோ பெரிய சமாராதானை செய்தாராம். வாக்கு மீறி பொய் சத்தியம் செய்தது குத்தகையை கொடுக்காமல் ஏமாற்ற. சமாராதனை அந்த பொய் சத்தியம் செய்த பாபத்திலிருந்து மீள. ஏமாற்றுபவர்கள் கூட காற்றினிலே பரிமாறிக்கொண்ட கீதத்தைப் புனிதமாக கருதினார்கள். அதை மறுப்பது பாபம் என்று நினைத்தார்கள், என்பது சு.ரா, இதனால் பெறப்படும் நீதி.

ஆவணமோ, காற்றினிலே வரும் கீதங்களோ, அவற்றின் உண்மை சூழல்களால் அனுபவத்தால், பரிமாறிக்கொள்ளும் மனிதர்களின் குணங்களால் உணரப்படும். பொய்யும் ஆவணங்களால் நிருபணம் ஆகும். ஆகின்றன.

கடைசியாக ஒன்று. சு.ரா.வோடு இன்றும் நட்பு பாவத்தோடு இருப்பவர்கள் மனம் நொந்து என்னிடம் பேச்சு வாக்கில் சொன்னதைச் சொன்னேன். சு.ரா. அவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் சினேக பாவத்தோடு தான் இருப்பார்கள். ஆனால் அவர்களை இப்போதைய வாத செளகரியத்திற்காக ‘பெருந்தகைகள் ‘ என்று கேலி பேசி மனம் நோகச் செய்துள்ளார். சு.ரா. இதை உதாசீனம் செய்யக்கூடும். சு.ரா.வை ராமசாமி என்று நெருக்கமும் சகஜமுமான பாவனையில் இனி நான்அழைக்கமுடியும் என்று தோன்றவில்லை.வருத்தமாகத்தான் இருக்கிறது.

இத்தோடு இதுவிஷயம் பற்றி நான் எழுதுவதற்கு முற்றுப்புள்ளி. தொடர்வதற்கு எனக்கு இஷ்டம் இல்லை.

வெங்கட் சாமிநாதன்

13,10.04

swaminathan_venkat@rediffmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்