ராம்ப்ரசாத்
‘மசக்களி..மசக்களி..உட.. மடக்களி..மடக்களி… மசக்களி..மசக்களி..’…
மொபைலில் அலறத்துவங்கியிருந்த மொஹித் செளஹானை ஓடி வந்து அணைத்து காதோடு அழுத்திக்கொண்டான் ரகு.
‘ஹலோ’
‘ஹாய் ரகு’.
‘ஹாய் ஷாலு, எப்படியிருக்க?’.
‘ம்ம்.. நீ எப்படியிருக்க?’.
‘ம்ம்.. நல்லாருக்கேன்’.
‘ஆஃபிஸ் எப்படி போயிட்டிருக்கு?’.
‘ம்ம் போயிட்டிருக்கு’.
‘என்ன, வேலையா இருக்கியா என்ன?’.
‘ஆமா கொஞ்சம் பிஸிதான். ஆபிஸ்ல. கொஞ்சம் வேலையா இருக்கேன்… அப்புறமா நானே உனக்கு கால்பண்றேனே’.
‘ம்ம்.. சரி ஓகே. பை’.
‘ம்ம் ஓகே பை’.
மறுமுனையில் ஷாலு. நிசப்தமான அந்த அறையில், ஷாலு – ரகு உரையாடல் நேரில் பேசக் கேட்பதுபோல் கேட்டது. ரகு ஃபோனை வைத்ததும் ஷாலு என்ன நினைத்திருப்பாளென்று ஊகிக்க முடியவில்லை. ஆனால், ரகு ஆபீஸில் இருப்பதாய் பொய் சொல்கிறான். ஃபோனை வைத்த ரகுவை, தீர்க்கமாய் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜிவ். அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த, ரகு வீட்டின் ஹாலிற்கு வெளியே சன்னலூடாக அடர்த்தியாய் பனி பொழிந்துகொண்டிருந்தது.
‘ஷாலுவா?’ ரகுவை இமைக்காமல் பார்த்தபடி கேட்டான் ராஜிவ்.
‘ம்ம்’ இது ரகு.
‘ம்ம்… இதுக்கு பேர் என்ன? அஃபேய்ரா?’
‘ச்சீ என்ன புதுசா கேக்குற, ஷாலு இஸ் மை லவ்’.
‘நான் அத கேக்கல. வினிதாவ பத்தி கேக்குறேன்’.
‘டேய் என்னடா இப்படிக் கேக்குற?’.
‘பின்னே வேற எப்படி கேக்கசொல்ற. வினிதாகிட்ட ஷாலுவ பத்தி நீ சொல்லல. ஆனா உங்க கெட்டுகெதர் ஃப்ளிர்டிங்க தாண்டி போயிட்ருக்கு. லாஸ்டா ஷாலுகிட்ட நீ எப்ப பேசினனு எனக்கு நியாபகமில்ல. உன் கூடவே இருக்குற நான் பாத்ததேயில்ல. அந்தளவுக்கு யு ஆர் ஆல்வேய்ஸ் ப்ரீஆக்குபைட். அப்ப இது அஃபேய்ர் தானே?’.
‘ஹேய், என்னை என்ன பண்ண சொல்ற? இப்போ அவளுக்கு இந்தியால நைட் டைம்டா. மிட் நைட். அவளே ப்ராஜெக்ட் ஒர்க்குன்னு ராத்திரி லேட்டாதான் தூங்குறா. இப்ப போய் அவள்ட்ட எப்படி பேசமுடியும்’.
‘அதுக்காக, வினிதா தான் கிடைச்சாளா?.. அவளும் ஒண்ணும் சரி இல்ல.. நேத்து க்ளப்புக்கு போயிருந்தீங்களாமே? அவதான் மேரீட் ஆச்சே. ஒரு கொழந்தை வேற. எதுக்காக உன்கூட சுத்தறாளாம்? உனக்கு இதெல்லாம் தேவையா. ஷாலுவுக்கு தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவான்னு கொஞ்சமாவது யோசிச்சுப்பாத்தியா?’.
‘இப்ப என்ன பெருசா நடந்துடிச்சுன்னு நீ இவ்ளோ கேள்வி கேக்குற. நேத்து செம போர். அவளும் ஃப்ரீயா தான் இருந்தா. அதான் போனோம்.’
‘நீ ஃப்ரீனா என்னதானே கூப்பிடுவ? இப்ப என்ன புதுசா அவளோட? சரியில்ல மச்சான்’.
‘அப்டில்லாம் ஒண்ணும் இல்ல. ஒனக்கு பொறாமை. அவ என்கூட வராளேன்னு. அதான்’.
‘அந்த எழவெல்லாம் எனக்கெதுக்கு. நீயே பண்ணித்தொலை. ஏதோ சொல்லனும்னு தோணிச்சு. அவ்ளோதான். சரி நான் கிளம்பறேன். நேரமாச்சு. ஆஸ்டா போகணும்’ என்றபடியே எழுந்துகொண்டான் ராஜிவ்.
‘ம் ஓகே டா பை. நாளைக்கு ஆஃபிஸ்ல பாப்போம்’ அதற்கு மேல் அதைப் பற்றி பேச விரும்பாத தோரணையில் எழுந்து வந்து வழியனுப்பினான் ரகு.
‘ம்ம் பை’.
ராஜிவ் ரகுவின் வீட்டை விட்டு வெளியில் வந்தபோது கொட்டிக்கொண்டிருந்த பனியின் தின்மை சற்று குறைந்திருந்தது. ஸ்காட்லாந்தில் எடின்பர்கிற்கு பதினேழு மைல் தொலைவில் லிவிங்ஸ்டனில் தான் அலுவலகம். இங்குதான் இங்கிலாந்திலேயே மிகவும் பெரியதான ஷாப்பிங் மால் உள்ளது. அருகிலேயே தான் ஆஸ்டா எனப்படும் பெரிய கடை. இங்கு எதுவும் கிடைக்கும். மளிகை சாமான் முதல், மின் சாதனங்கள் வரை எல்லாம் வாங்கலாம். ராஜிவ் பக்கத்திலிருந்த ஆஸ்டாவை நோக்கி நடையை கட்டினான். முந்தினம் புதிதாக வாங்கிய தடிமனான ரீபொக் ஷூ ஆங்காங்கே வழுக்கியதில் அவன் சற்றே மெதுவாகவே அடிமேல் அடி எடுத்துவைத்து நடந்துகொண்டிருந்தான். பனி பெய்துவிட்டால் இது ஒரு தொல்லை. பெய்யும் பனி லேசில் உருகிவிடாது. இருகி வழுக்கும். இருகியிருக்கும் பனி ஆபத்தானது. வழுக்கி விழுந்தால் சாதாரண தரையில் விழுவதைவிட இரு மடங்கு சேதம் விளைவிக்கும். போகிற வழியெங்கும் வினிதாவைப்பற்றிய யோசனையாகவே இருந்தது.
வினிதா அழகுதான். எப்படித்தான் ஒரு குழந்தை பெற்றபின்னும் கல்லூரி மாணவி போலவே இருக்கிறாளோ தெரியவில்லை. ரகுவிடம் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லையே தவிர உண்மையில் ரகுவின் மீது சற்று பொறாமைதான் ராஜிவிற்கு. இப்படி இதற்குமுன் தோன்றியதேயில்லை. ஏனோ இப்போது தோன்றுகிறது. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமேதும் இதுவரை வாய்க்காததே தனக்கு இதற்குமுன் இப்படித்தோன்றியதே இல்லை என்பதற்கு காரணம் போல என்று நினைத்துக்கொண்டான். சந்தர்பங்கள் வாய்க்காத வரையில்தான் ராமன்கள் சாத்தியம் என்பது சரிதானோ என்று கூட தோன்றியது. ரகுவிற்காவது ஷாலு இருக்கிறாள் சென்னையில். தனக்குத்தான் காதல் வாய்க்கவில்லை. அட்லீஸ்ட் ஒரு ஃப்ளிர்ட்டிங்காகவேனும் ஒருத்தி இருந்திருக்கலாமென்று நினைத்திருந்த காலத்தில் தான் வினிதா அவர்களின் ப்ராஜெக்டிற்காக ஷார்ட் டெர்மில் வந்திருந்தாள்.
வந்தவள் இப்போது ரகுவின் உடும்புப்பிடியில். வெறுப்பாக இருந்தது. ஆனாலும் ஒரு விதத்தில் அவனுக்கு சற்று சந்தோஷமாக இருந்தது. அவர்கள் அலுவலகத்தில் பல்வேறு குழுக்களாகியிருந்த வட நாட்டினரின் பக்கம் செல்லாமல் ரகு - ராஜிவ் குழுவில் அவள் இணைந்தது. அதை இணைப்பு என்று சொல்லமுடியாதுதான். ரகுவும் ராஜிவும் முந்திகொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். எது எப்படியோ. ரகு பணி முடிந்து இந்தியா செல்ல நேர்ந்தால் பின்னர் வினிதாவை நெருங்குவது சுலபமாகிவிடும் என்று பட்டது ராஜிவிற்கு.
அதுவரையில் ரகு - வினிதாவை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ராஜிவ் நடந்து செல்கையில் அவனின் கால்தடங்கள் வெள்ளை வெளேர் பனியில் பதியப்பதிய பனி அவற்றை சிரமப்பட்டு மூடிக்கொண்டிருந்தது.
*****************************
பிறிதொரு நாள் ராஜிவ் ஆஸ்டாவில் பாஸ்மதி அரிசி வாங்கிக்கொண்டிருக்கையில் தற்செயலாக கவனித்ததில் மூன்று மாதம் முன்பு வாங்கிய ரீபொக் ஷூ அடிக்கடி கிரிக்கெட் விளையாடியதால் வெகுவாக அடி வாங்கியிருந்ததை கவனித்தான்.
ஸ்போர்ட்ஸ்டைரக்டில் இப்போது ஆஃபர் எதுவும் போட்டிருக்கவில்லை என்பது நினைவுக்கு வந்து ஏமாற்றமளித்தது. ஆஃபர் இருந்திருந்தால் ஷூவை குறைந்த விலையில் வாங்கலாம். ஐம்பது பவுண்ட் விலையுள்ள ஷூ ஐந்து பவுண்டில் கூட சாத்தியம். ஆனால் மீண்டும் ஆஃபர் போட சில வாரங்கள் பிடிக்கலாம். நண்பர்கள் யாரிடமாவது கூடுதலாக ஒரு செட் ஷூ இருந்தால் இப்போதைக்கு வாங்கிக்கொண்டு, ஆஃபர் போடும்போது வாங்கியவரிடம் ஒன்றை குறைந்த விலையில் வாங்கிக் கொடுத்துவிடலாம். இதுதான் பொதுவாக நடக்கும். சென்ற முறை ஆஃபரில் வாங்கச்சென்றபோது ரகுவும் ஒரு செட் ஷூ கூடுதலாக வாங்கினான். அவனிடம் இப்போது வாங்கிக்கொள்ளலாமென்று தோன்றியது.
ராஜிவ், காய்ந்திருந்த ரோட்டில், இரவு எட்டு மணிக்கும் பகலாகவே இருந்த ஸ்காட்லாந்து தெருவில் வேகமாக ரகு வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான். நல்லவேளை பனிக்காலம் முடிந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. அதனால் இரவு பத்து மணிவரை கூட மதிய வேளை போல பகலாக வெளிச்சமாக இருக்கும்.
ராஜிவ் ரகு வீட்டை நெருங்கி, அப்பார்ட்மெண்ட் வாசலைத்தாண்டி, படியேறி, ரகுவின் ஹாலில் நுழையவும், ரகு மெளனமாக ராஜிவை சைகையால் உள்ளே வரச்சொல்லிவிட்டு யாரையோ மொபைலில் அழைத்து காத்திருக்கவும் சரியாக இருந்தது. அறைக்குள் குழுமியிருந்த அடர்த்தியான மெளனத்தில் ரகுவின் ஃபோன் ஊடாக மறுமுனையில் கேட்கும் ரிங்டோன் கூடத் தெளிவாகக் கேட்டது.
‘மசக்களி..மசக்களி..உட.. மடக்களி..மடக்களி… மசக்களி..மசக்களி..’…
ஷாலுவாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் ஷாலுவின் மொபைலிலும் இதே பாடல்தான் ரிங் டோன் – காலர் ட்யூன் எல்லாம்.
மொபைலில் அலறத்துவங்கியிருந்த மொஹித் செளஹான் மறுமுனையில் நிறுத்தப்பட்டார்.
‘ஹலோ’
‘ஹாய் ஷாலு’.
‘ஹாய் ரகு, எப்படியிருக்க?’.
‘ம்ம்.. நீ எப்படியிருக்க?’.
‘ம்ம்.. நல்லாருக்கேன்’.
‘ஆஃபிஸ் எப்படி போயிட்டிருக்கு?’.
‘ம்ம் போயிட்டிருக்கு’.
‘என்ன, வேலையா இருக்கியா என்ன?’.
‘ஆமா கொஞ்சம் பிஸிதான். ஆபிஸ்ல. கொஞ்சம் வேலையா இருக்கேன்… அப்புறமா நானே உனக்கு கால்பண்றேனே’.
‘ம்ம்.. சரி ஓகே. பை’.
‘ம்ம் ஓகே பை’.
ரகு ஃபோனை வெறுமையாய் மேஜையில் வைத்துவிட்டு தளர்வாய் உட்கார்ந்திருந்த சோபாவில் சாய்ந்து கொண்டான்.
‘ஷீ சவுண்ட்ஸ் எ பிட் ப்ரி ஆக்குபைட்’ என்றவாறே எங்கோ வெறித்தான் ரகு.
இப்போது ராஜிவால் ஊகிக்க முடிந்தது, இந்தக் கதையின் தொடக்கத்தில் ரகு ஃபோனை வைத்ததும் ஷாலு என்ன நினைத்திருப்பாளென்று அப்போது ஊகிக்க முடியாததை. ரகுவின் ரூமில் அமர்ந்தபடி ஷாலுவின் அஃபேய்ர் யாராக இருக்குமென்று யோசிக்கத் தொடங்கியிருந்தான் ராஜிவ்.
– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
- செவ்வாய்க் கோளைச் சுற்றித் துணைக்கோள் போபாஸில் தளவுளவி இறங்கி மாதிரி எடுத்து பூமிக்கு மீளப் போகும் ரஷ்ய விண்ணுளவி (நவம்பர் 2011
- நியூஜெர்ஸி எடிசன், பிராங்க்ளின் பார்க், சாமர்செட் பகுதிகளில் சிறுவ சிறுமிகளுக்கு தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வேதிக் கணிதம், குஜரா
- நியூஜெர்ஸி எடிசன், பிராங்க்ளின் பார்க், சாமர்செட் பகுதிகளில் சிறுவ சிறுமிகளுக்கு தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வேதிக் கணிதம், குஜரா
- மறவன்புலவு செல்வமுத்து மாரி அம்பாள் பாலஸ்தாபனம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 12
- உவமையும் பொருளும்…..2
- இவர்களது எழுத்துமுறை – 7 -வண்ணதாசன்
- யுவனின் பகடையாட்டம்
- ஊடக உலகின் உட்புகுந்து நுண்ணோக்கும் எக்ஸ் கதிர்கள்:
- பாரியின் மகள் ஒருத்தியே
- நூல் மதிப்புரை – சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்
- ஓம் ஸாந்தி
- வள்ளலாரின் 188-ம் ஆண்டு பிறந்த நாள் in Myanmar(பர்மா)
- இருந்தும் அந்த பதில்.
- !?!?! மொழி:
- மன்னிப்பு (மலையாளக் கவிதை )
- நீர்க்கோல வாழ்வில்
- உறைவாளொரு புலியோ?
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -13
- இறுதி மணித்தியாலம்
- சுதந்திரமான தேர்வு என்பது…
- நிறங்கள்
- நிராதரவின் ஆசைகள்..!
- நான் கல்யாணத்துக்கு நிற்கிறேன்!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -5
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -19 திறப்பாய் உனது புனை நினைவை
- பார்சலோனா -4
- நினைவுகளின் சுவட்டில் – (53)
- பரிமளவல்லி – 12. அதீனா பார்த்தனாஸ்
- முள்பாதை 47
- கடவுள் கூறினார், கடவுளே என்னை காப்பாற்று
- கார்ப்பொரேட் காதல்
- கருணை