க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை
மாலைப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் அந்தப் பெயர் தெரியாத, முன்பின் பார்த்திராத பெண்ணின் இடுப்பு மடிப்பு விசுவத்தை காந்தமாய் ஈர்த்தது. கண்ணாடி போட்டுக் கொண்டால் மடிப்பு இன்னும் துலக்கமாய்த் தெரியும். பையிலிருந்த கண்ணாடியை எடுத்து வெகு இயல்பாக மாட்டிக் கொண்டான். உடனே பார்த்தால் அவளுக்குப் புரிந்துவிடும். ஜன்னலுக்கு வெளியே, பிளாட்பாரப்பக்கம் சும்மா ஒருதரம் பார்த்துவிட்டு ஒரு வினாடி கழித்துத் திரும்பி இடுப்பைப் பார்த்தான்.
அமைதியாய்ப் படுத்துக் கிடந்த கடலில் எழுந்த சின்ன அலை மெதுவாய் விழுந்து மடிவதைப் போன்ற மெல்லிய சதைமடிப்பு. அயல்அட்டையில் கண்டிராத பெண், அதுவும் பக்கத்து சீற்றில், வாசம் படுகிற அளவு கிட்டத்தில். பின்னேர இருட்டு ரயிலில் தனியாக முட்டு முட்டென்று கொழும்பிற்கு எப்படிப் போவதென்று குழம்பிப் போயிருந்தவனுக்கு செகன்ட கிளாஸ் ஸ்லீப்பறெற்ஸ் சுவீப்பில்; விழுந்த சுந்தரி.
வாய்த்து விட்ட அதிஷ்டத்தை நெஞ்சிற்குள் வாழ்த்தி நிமிர, அவள் பயணங்களில் நன்றாக அடிபட்டவள் போல் சீற்றின் கீழ்க்கம்பியை சுளுவாக அழுத்தி உடலைச் சாய்த்துக் கொண்டாள்.
ஸ்டேசன் பிளாட்பாரம் துப்புரவாய் கழுவித் துடைத்து விட்டாற் போல் தோன்றியது. ஜன்னலோரம் நின்று கண்டதும் பேசிச் சிரித்து ரயில் நகரும் போது கண் துடைத்து கை காட்டி வழியனுப்பும் மித்திர ஜனங்களை இன்று காணவில்லை. அதுவும் ஒருவகையில் நன்மைக்குத்தான்.
வானம் மப்பிக் கிடந்தது. தை முற்கூறு வரை தலைகாட்டாத மழை பையப் பைய தைப்பொங்கலோடு வந்து வட்டிகுட்டியெல்லாம் சேர்த்து இறைத்து விட்டிருந்தது. தெருவெல்லாம் வெள்ளக்காடு. கால் வைத்த இடமெல்லாம் ஈரச்சேறு. கவ்விப் பிடித்த குளிர். இன்று காலையில்தான் கொஞ்சம் ஈவுசோவு விட்டிருக்கிறது.
அந்தப் பெட்டியில் எட்டிப் பார்த்தால் மட்டுமே தெரியும் தூரத்தில், ஒரு குடும்பம் இருப்பது ஓடித் திரிந்த பிள்ளைகளின் சப்தத்தில் புரிந்தது.
ஸ்டேசன் மாஸ்ரரின் விசிலோடு பெட்டிகள் அரங்;கி அடிபட்டு நகர, விசுவம் அவள் பக்கமாகத் திரும்பினான். திடுமுட்டாகத் திரும்பியவனின் முகத்தைத் தவிர்க்க முடியாமல், சிறிய புன்முறுவல் பூத்து விட்டு அவள் முகட்டைப் பார்த்துக் கண் மூடினாள்.
கண்மூடியிருக்கிறாள் என்ற நம்பிக்கையில் அவளை இப்போது சுதந்திரமாய் முழுதுமாகப் பார்த்தான். முப்பத்தைந்து இருக்கலாம். முகதலைக் கரையும் உடலோடு இறுக்கிப் பிடித்த பிளவுசும் அழகாய் ஒத்துழைக்கும் நேர்த்தியைப் பார்த்தால் உத்தியோகம் பார்க்கிறவள் என்று மட்டுக்கட்டலாம். கறுப்புமில்லை, வெள்ளையுமில்லாமல் நடுநிறம். உருண்டை போலவும் கூர் போலவும் கோணங்களில் மாறி மாறித் தோன்றி மீண்டும் பார்க்க வைக்கிற மூக்கு. கழுத்தில் மெல்லிய சங்கிலி. மிகையற்ற சாத்துப்படியின் முழுமை.
சாய்ந்து துமித்த மழைத்தடிகள் கையை நனைத்தன. மங்கையிடம் வாய் வைக்க அடி எடுத்துத் தந்த மழையே நீ வாழ்க!
“ஜன்னலைப் பூட்டி விடவா ? ”
“வேனுமென்டா பூட்டுங்கோ”
கூதலைத் தாங்கக்கூடிய கட்டான உடம்பு. எதற்கும் துணிந்த கட்டைதான். இல்லாது போனால் இருட்டு ரயிலில் தனித்து வருவாளா ?
இரண்டு பக்கமும் ஈர மரக்காடு ஓடி வந்து மறைந்து கொண்டிருந்தது. சுற்றிலும் தடிதடியாகச் சோளம் விளைந்து மறைத்திருந்த வளவிலிருந்து மேற்சட்டை போடாத சிறுமியொருத்தி ரயிலின் சத்தத்தில் பாய்ந்து வந்தாள். தினமும் வருகிற ரயில்தான். ஆனாலும் ஆச்சரியம் ததும்பிய முகம். அவனுக்கிருந்த கிளுகிளுப்பில் கையசைத்தான். அவள் வெட்கமிரட்சியில் நிற்க ரயில் கடந்து விட்டது.
ரயிலின் ஓட்டத்தில் ஜன்னலால் குளிர் நுழைந்து தழுவிற்று. குளிர் ஒத்துவராத உடம்பு அவனுக்கு. கை மடிப்பை அவிழ்த்து நீட்டிவிட்டுக் கொண்டான். ஜன்னலை இறக்கிவிட்டு சீற்றுக்குள் அசைந்து தேய்ந்து குளிருக்கு இதம் தேடிக் கொண்டான்.
ரயில் பிரயாணம் அவனுக்கு பிடிப்பதில்லை. அங்கு நின்று இங்கு நின்று போய்ச் சேர்வதற்குள் நாடியில் ஒருநாள் தாடி தலைகாட்டிவிடும். அதுவும் பாதி நரைத்த தாடி. ரயில்வே வாறண்ட் வீணாகி விடும் என்பதால் வந்திருக்கிறான். ஆனாலும் இன்று பிரயாணம் களை கட்டி விட்டதாகவே அவன் நினைத்தான். அதற்குக் காரணமானவளை கடைக்கண்ணால் பார்த்தான்.
அவள் இப்போது காலுக்கு மேல் கால் போட்டிருந்தாள். ஒன்றன் மேல் ஒன்றாக போட்ட கால்களின் நெரிவை சேலையை விலக்கிப் பார்த்தது மனம்.
குப்பென்று மேலெல்லாம் ஏதோ பரவிற்று. அந்தக் கூதலில் தன் உடல் முறுக்கேறி மயிர்கால்கள் குத்திட்டு நிற்பதைப் பார்க்க அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது.
நன்;றாக இருட்டி விட்டது. அடுத்த ஸ்டேசனில் தேட் கிளாசில் யாரோ ஏறினார்கள். தயிர்ப்பானைகள் ஏற்றினார்கள். ஸ்டேசன் மாஸ்றரின் அறைக்கு வெளியே சுவரில் சாற்றி வைத்திருந்த குடைக் கம்பிகளிலிருந்து குமிழ் குமிழாய் மழை ஓழுகிக் கொண்டிருப்பதை அவன் ரசனையுடன் பார்த்தான்.
திடாரென இழுபட்டு ரயில் புறப்பட்டது. வெளியே, மொத்த இருட்டில் சின்னச்சின்ன விளக்கு வெளிச்சங்கள் மின்மினிப் பூச்சிகளாய் மின்னி மறைந்தன. ஜன்னல் கண்ணாடியில் மோதி வரிகளாய் வழிந்த மழைஸஸஸமனதிற்குள் மாருதம் பரவிற்று.
அந்த ஜன்னலுக்கும் இந்த ஜன்னலுக்கும் பாய்ந்து கொண்டிருந்த பிள்ளைகள் குளிருக்கு அடங்கிப் போய் தாய் மடியில் ஒடுங்கியிருக்க வேண்டும். சத்தத்தைக் காணவில்லை. இடைஞ்சலில்லாத இதமான சந்தர்ப்பம்.
விசுவம் உசாரானான். கைகால் துருதுருத்தன. மரபு திரிந்த எண்ணங்கள் மடை திறந்த வெள்ளமாய் உடைத்துப் பாய்ந்தன. ஒருவேளை செருப்பைக் கழட்டி விட்டால்! வெள்ளி நார் இழைத்து தங்க முலாம் பூசிய வடிவான செருப்பு அவள் அணிந்திருந்தாள்.
ரயில் பிரயாண நித்திரையில் கால் படுவதும் கை படுவதும் தலை முட்டுவதும் தவறாகத் தெரியாது. இரண்டு சீற்றுக்குமுள்ள இடைவெளியை கண்ணால் கணக்கிட்டான். தூக்கத்தில் கைகால் படக்கூடிய தூரந்தான். நியாயப்படுத்தலாம் – பயமில்லை.
விசுவம் இது நியாயமில்லை. பச்சைத் துரோகம்.
பச்சையாவது சிவப்பாவது. உன்னை குடும்பம் நடத்தவா சொல்றாங்க. குளிருக்கு சும்மா கை போட்டுப் பாரன்
ஒரு நல்ல மனுசன் என்று உன்னை நம்பியிருக்கலாம். தமிழ்மக்கள் தனிப்பயணம் செய்யத் தயங்குகிற காலத்தில் நல்ல வேளையாகக் கிடைத்த வழித்துணையென்று எண்ணியிருக்கலாம்.
அப்படியென்று சொன்னாளா ?
அவளைப் பார்த்தான். அவள் தலை அவன் பக்கமாகச் சாய்ந்தது. ரயிலின் ஆட்டத்தில் ஆடி ஆடி வழுகி வழுகி அவன் தோளில் பட்டும் படாமலும் தட்டியது. இதுதான் சான்ஸ்ஸஸ..விட்டிராதை.
அவன் சற்று எட்டமாய் விலகி அவளது முகத்தை குறிப்பறியும் நோக்கில் பூரணமாகப் பார்த்தான்.
அம்மா அப்பா பக்கத்திலிருக்க நிர்ப்பயமாய் அசந்து தூங்கும் குழந்தை போலிருந்தாள் அவள். வாய் திறந்திருக்கும் உணர்வு கூட இல்லாமல் நித்திரைக்கு வசமான பிள்ளை. தலயணையிருந்தால் தாங்க வைக்கலாம் என்ற எண்ணந்தான் வந்தது.
அவன் இருக்கையிலிருந்து நிமிர்ந்து உயர்ந்து தன் இடது தோளை அவள் தலைக்கு முட்டுக் கொடுத்தான். நித்திரை கலைந்து விடாமல் அதே நிலையில் தம் பிடித்து இருந்தான். முகட்டைப் பார்த்தான். வீட்டு ஞுாபகங்கள் வரிசையிட்டன. அவனுக்கே தெரியாமல் அயர்ந்தும் போனான்.
யாரோ தட்டினார்கள். விசுவம் விழித்து வெளியே பார்த்தான்.
“அதுக்குள்ள றாகம வந்திற்றுதா!”
“நான்தான் அண்ணன் எழுப்பினனான். மருதானையில இறங்குவீங்களோ என்று நினைச்சன்”
“தாங்ஸ் அம்மா. நான் கோட்டையில இறங்கிறன்”
அவள் பெரிய சீப்பெடுத்து தலைவாரிக் கொண்டாள். முகத்தைத் துடைத்து பவுடர் போட்டு எழுந்து நின்று சேலையைச் சரிசெய்து கொண்டாள். கோட்டை ஸ்டேசனில் ரயில் மெதுவாகியதும் ஜன்னலால் எட்டிப் பார்த்தாள். ஒரு ஏழு வயதுப் பிள்ளை ஓடி வந்தது. மம்மியென்று கட்டிப் பிடித்தது. “டடா எங்க குஞ்சு”
“டடா அந்தா வாறார்.”
“மாமாவுக்கு குட் மோர்னிங் சொல்லு பிரதீப்”
“குட் மோர்னிங் அங்கிள்”ஸஸசூட்கேசை கணவன் தூக்க, அவள் ‘போயிற்று வாறம் அண்ணன்’ சொல்லிக் கொண்டு நடந்தாள். அன்னையின் இடுப்பை இறுக்கிப் பிடித்தபடி குதூகலத்துடன் பக்கமாய் நடந்தது பிள்ளை.
போன உடன மறக்காம டெலிபோன் எடுங்க என்று மனைவி மங்கையர்க்கரசி நேற்று இரவு புறப்படும்போது சொல்லி விட்டதுதான் இப்போது அவனது மனதில் இருந்தது.
***
karulsubramaniam@hotmail.com
- இராம.கி. -இன் இரண்டு கவிதைகள் (உப்புத் தாலாட்டு , அரபு நுழைவு)
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது (தொடர்கவிதை -2)
- சுகம்
- நான்காவது கொலை முயற்சி!!!
- தீபாவளி வெடி பற்றி… சொன்னாலும் சொல்வாங்க
- தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா ?
- கலாச்சாரமும் கலங்கரை விளக்கங்களும் (எனக்குப் பிடித்த கதைகள் -34 – கர்த்தார்சிங் துக்கலின் ‘விந்தைச் செயல் ‘)
- பேரழிவுப் போராயுதம் ஆக்கிய எட்வர்டு டெல்லர் (1908-****)
- அறிவியல் மேதைகள் -ஹோமி ஜஹாங்கீர் பாபா (Dr Homi Jehangir Bhabha)
- அம்மா சொன்னது
- ஆசை
- ஆணின் வெற்றிக்குப் பின்னால்……
- அப்பாவின் படம்
- பா சத்தியமோகனின் மூன்று கவிதைகள்
- நகர் வலம்
- காதல் பூக்கும் காலம்
- விடுமுறை
- வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்
- தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா ?
- காமம்
- நான்காவது கொலை!!! (அத்யாயம் 14)
- வாய் சொல்லில் வீரரடி
- நிழல் (ஒரு நாடகம்)