காந்தம் போல் எல்லோரையும் கவர்ந்தவர் கோல்வல்கர்

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

புதுவை சரவணன்


ஜி.டி.நாயுடுவுடன் ஸ்ரீ குருஜி கோல்வல்கர்

ஸ்ரீ குருஜி கோல்வல்கர் பற்றி எழதியது போதும் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் கற்பக விநாயகம் போன்றவர்கள் கோல்வல்கரை பற்றி மீண்டும் என்னை எழுத வைத்துவிட்டார்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கோல்வல்கரை ஆதரித்தார் என்று கற்பக விநாயகம் திண்ணையில் எழுதியதை படித்த பலர் கோல்வல்கரை அறியும் ஆவலோடு எனக்கு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

கோல்வல்கரை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆதரித்தார் என்பது உண்மைதான். ஏனெனில் கோல்வல்கரை போலவே தேவர் பெருமகனாரும் தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக போற்றியவர். 1956 ம் ஆண்டு கோல்வல்கரின் 50 வது பிறந்நாள் விழா நாடு முழுக்க சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் கோல்வல்கரின் 50 பிறந்தநாளையொட்டி பெரிய அளவில் பொதுக்கூட்டங்கள் நடந்தன. பல இடங்களிலும் அந்த பொதுக்கூட்டங்களில் கோல்வல்கரே கலந்து கொண்டார். அப்படி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தலைமை தாங்கினார். மேடையில் அமர்ந்திருந்த தேவர் பெருமகனார் கோல்வல்கர் மேடைக்கு வந்ததும் அவரை வரவேற்று காலில் விழுந்து ஆசிபெற்றார்.

என்னுடைய கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்துக்களோடு இசைந்தே இருக்கிறது. ஸ்ரீகுருஜி கோல்வல்கர் போன்ற மாபெரும் தலைவரும், தன்னலம் கருதாத ஊழியர்களும் இருக்கும்வரை இந்து சமூகம் அழியாது நிலைத்து நிற்கும். வெற்றி பெறும் என்று அந்த கூட்டத்தில் பேசும்போது தேவர் பெருமகனார் குறிப்பிட்டார். இந்த வரலாற்று சம்பவங்களை அன்றைய தியாக பூமி வார இதழ் பதிவு செய்திருக்கிறது.

கோல்வல்கர், தேவர் பெருமகனாரை மட்டுமல்ல தமிழகத்தின் தனிப்பெறும் தலைவர் காமராஜரையும் கவர்ந்தவர் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. மகாத்மா காந்தி 1948ம் ஆண்டு ஜனவரி 30ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த சமயத்தில் கோல்வல்கர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். 1948 ஜனவரி 28ந் தேதி சென்னை மயிலாப்பூர் பி.எஸ் உயர்நிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் முகாம் நடைபெற்றது. சுமார் 5000 சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் காமராஜரும் ஆர். எஸ். எஸ் சீருடை அனிந்து கலந்து கொண்டு கோல்வல்கரின் உரையை கேட்க வந்திருந்தார். காமராஜர் அப்போது அவ்வளவாக பிரபலமாகாத காங்கிரஸ் தவைவர்.( இந்த தகவலை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு. ரெங்கநாதன் உறுதி செய்கிறார்) மகாத்மாவின் படுகொலை நடக்காமலிருந்தாலோ அல்லது நேரு மகாத்மாவின் படுகொலை பழியை ஆர்.எஸ்.எஸ் மீது சுமத்தி கெட்ட ஏற்படுத்தாமல் இருந்திருந்தாலோ காமராஜர் ஆர்.எஸ்.எஸ்ஸிஸ் இணைந்து பணியாற்றி இருக்கலாம்.

காமராஜர் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது சென்னை விவேகானந்தா கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பனிக்கால முகாம் ஏற்பாடாகியிருந்தது. இதனை பொருக்காத விஷமிகள் அரசு உதவி பெறும் கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ் முகாம் நடத்த அனுமதிக்க கூடாது என்று அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்த சமயத்தில் சென்னை மாநகர ஆர்.எஸ்.எஸ் செயலாளராக இருந்த திரு. எத்திராஜ் முதல்வர் காமராஜரை நேரில் சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறினார். விவேகானந்தா கல்லூரியில் அனுமதி கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று எத்திராஜிடம் காமராஜர் கேட்க, நீங்கள் அனுமதி கொடுப்பீர்கள். அப்படி கொடுக்காவிட்டால் நடுரோட்டில் முகாம் நடக்கும் என்று எத்திராஜ் கூறினார். எத்திராஜின் உறுதியை கண்டு வியந்த கர்மவீரர் காமராஜர் ஆர்.எஸ்.எஸ் முகாம் நடத்த அனுமதி கொடுத்தார். அந்த முகாமில் இரு நாட்களும் கோல்வல்கர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காமராஜர் கடும் எதிர்ப்பையும் மீறி ஆர்.எஸ்.எஸ் முகாமிற்கு கொடுத்தார். இகற்கு1948ல் பி.எஸ் உயர் நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் காமராஜர் கோல்வல்ரின் பேச்சை கேட்டது கூட காரணமாக இருக்கலாம்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பெருந்தலைவர் காமராஜர் மட்டுமல்ல மூதறிஞர் ராஜாஜி, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சுவாமி சித்பவானந்தர், கவியோகி சுத்தானந்த பாரதியார், வாகீச கலாநிதி கி.வாஜெகந்நாதன், தீபம் நா.பார்த்தசாரதி, சரித்திர நாவலாசிரியர் சாண்டில்யன், பிரபல சமய சொற்பொழிவாளர் புலவர் கீரன், கல்கண்டு ஆசிரியராக இருந்த தமிழ்வாணன், கருணாநிதிக்கு குடும்ப மருத்துவராக இருந்த பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி, முன்னாள் நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, பொள்ளாச்சி மகாலிங்கம், நேரு அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார், ஜி.டி.நாயுடு போன்ற பல தமிழக தலைவர்கள் கோல்வல்கரின் பெருமைகளை உணர்ந்து அவரை போற்றியிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கோல்வல்கரோடு தமிழகத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவரை உறுதியாக ஆதரித்துள்ளனர்.

ஸ்ரீகுருஜி கோல்வல்கரின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள எத்தனையோ பாடங்கள் உண்டு. ஸ்ரீ குருஜி கோல்வல்கர் இந்து சாம்ராஜ்ஜியத்தின் பிரதமர் என்று தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த தீபம் நா.பார்த்தசாரதி குறிப்பிடுகிறார். பிரபல எழுத்தாளர் தமிழ்வாணன் கோல்வல்கரை இரண்டாவது காந்தி என்று புகழ்ந்துள்ளார். கவியோகி சுத்தானந்த பாரதியார் கோல்வல்கர் மறைந்தபோது காபி ராகத்தில் ஒரு இரங்கற்பாவையே வடித்தார்.

கோல்வல்கரின் மறைவு தேசத்துக்குப் பெரிய நஷ்டம். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தலைவராக இருந்து அவர் ஆற்றிய பணி இணையற்றது. தெய்வ பக்தி, தேச பக்தி, தியாக உணர்வு, கட்டுப்பாடு ஆகிய நல்ல குணங்களை இளந்தலைமுறையினரிடையே வளர்த்து, ஏழைகளின் துயரை துடைத்து சமுதாயக் காவலர்களாகப் பணியாற்றச் செய்ததில் அவர் கண்ட வெற்றி ஈடுஜோடில்லாதது. மகாத்மா காந்திக்கு அடுத்தபடி இளைஞர்களை ஈர்ப்பதில் அவர் செல்வாக்குப் பெற்றிருந்தார். அவர் கேட்ட மாத்திரத்தில் தொண்டர் குழாம் திரண்டெழுந்து எல்லா தியாகங்களையும் புரிய முன்வந்தது. அவர்களது நல்லுணர்வுக்கு உருக்கொடுத்து தேசமெங்கும் பரவலாக நற்பணிகள் நிகழச்செய்த பெருமை கோல்வல்கரைச் சாரும் என்று கோல்வல்கர் மறைந்தபோது(761973) தினமணி தலையங்கம் தீட்டியது. அப்போது பத்திரிகை உலகின் பிதாமகர் ஏ.என்.சிவராமன் தினமணியின் ஆசிரியராக இருந்தார்.

இப்படி தமிழகமும், தமிழக தலைவர்களும் கோல்வல்கரை என்றும் ஆதரித்தே வந்திருக்கிறார்கள். இன்னமும் ஆதரித்து வருகிறார்கள். கோல்வல்கர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஆர்.எஸ்.எஸ் மாநில அளவில் ஏற்படுத்தியுள்ள குழுவில் இசைஞானி இளையராஜா, கவிஞர் வாலி, முன்னாள் அமைச்சர் கக்கனின் சகோதரர் விஸ்வநாத கக்கன், தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் ஆர். அன்பழகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் காந்தி, முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் என்.விட்டல், சினிமா தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, ராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி, பிரபல வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமன், குன்னக்குடி வைத்தியநாதன், முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீபால், முன்னாள் டி.ஜி.பி ராஜகோபால்,தொழிலதிபர் நஞ்சப்ப செட்டியார், நீதியரசர் எஸ்.நடராஜன், நாவலாசிரியர் கெளதம நீலாம்பரன், ஓவியர்கள் சங்க தலைவர் ஜே.பி.கிருஷ்ணா, அன்னை தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். லட்சுமி, தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் இ.ஆர்.குமாரசாமி, ஈரோடு செங்குந்தர் பொறியற் கல்லூரி தாளாளர் ஜெ.சுத்தானந்தன், அவினாசிலிங்கம் நிகர்நிலைப்பல்கலைக்கழக வேந்தர் கே. குழந்தைவேலு, கோவை சிறுதுளி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வனிதா மோகன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, பிரபல எழுத்தாளர் பிரேமா நந்தகுமார், சுனாமியால் மோசமாக பாதிக்கப்பட்ட நாகை கீச்சாங்குப்பம் மீனவக்கிராமத்தின் பஞ்சாயத்தார் என்.நமச்சிவாயம் என்று தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கனக்கான சாதனையாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆர். எஸ். எஸ்ஸையும் கோல்வல்கரையும் நன்கு அறிந்து கொண்டவர்கள். அதனால்தான் கோல்வல்கர் நூற்றாண்டு விழாக் குழுவில் மகிழ்ச்சியோடு இடம்பெற்றுள்ளார்கள்.

இதற்கு காரணம் கோல்வல்கர் தமிழகத்தை 72 முறை வலம் வந்திருக்கிறார். தமிழகத்தில் அவர் செல்லாத மாவட்டங்களே கிடையாது. தமிழகத்தின் பல குக்கிராமங்களில் அவர் தங்கியிருக்கிறார்.தமிழகத்திலிருக்கும் போது தமிழக உணவு வகைகளையே அவர் விரும்பி சாப்பிடுவார் என்று அவரோடு சுற்றுப்பயணம் செய்த பலர் குறிப்பிடுகின்றனர். உண்மை இப்படி இருக்கும்போது கோல்வல்கரை தமிழகத்தில் பசும்பொன் மு“ததுராமலிங்க தேவர் மட்டுமே ஆதரித்தார் என்று கூறி கோல்வல்கரை தமிழகத்திற்கு தொடர்பில்லாத தலைவர் என்ற தேற்றத்தை ஏற்படுத்த கற்பக விநாயகம் முயற்சித்துள்ளார். உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தவே இவ்வளவையும் எழுதினேன். ஆர்.எஸ்.எஸ்ஸை பற்றி செய்யப்படும் பிரச்சாரம் தப்புப் பிரச்சாரமே அல்ல. அது ஒரு மோசடித் தந்திரம் என்று தீபம் நா.பார்த்தசாரதி கோல்வல்கர் மறைந்தபோது சென்னையில் நடந்த இரங்கற் கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார். கற்பக விநாயகம் போன்றவர்களுக்கு நானும் இதையே குறிப்பிட விரும்புகிறேன்.

—-

musaravanan@gmail.com

Series Navigation

புதுவை சரவணன்

புதுவை சரவணன்