காத்திருந்தேன்

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

சத்ய சுகன்யா சிவகுமார்.


காத்திருந்தேன்
கர்ப்ப வாசல் திறக்க
கொஞம் பயத்துடன்
ஒரு கண்டம் தப்பியாச்சு
உயிருக்குள் உயிர் சமாதி இல்லை
ஏதோ சட்டமாமே!
ஏதோ தண்டனையாமே!
எது எப்படியோ
ஒரு கண்டம் தப்பியாச்சு

அழுவதற்கு வாய் திறந்தால்
வாயில் விழுவது
கள்ளிப்பாலோ! நெல்லோ!
என்ற நியாயமான அச்சத்துடன்
காத்திருந்தேன்

கள்ளிப்பாலின் சுவை தெரியும்
பொன முறை என்னைக்
கொலை செய்த
கள்ளிப்பாலின் சுவை தெரியும்
நெல்லின் செயல்முறை நினைவிலில்லை
சரி பார்க்கலாம் என
காத்திருந்தேன்

நான் பெண்ணாய் பிறந்த்திருக்கிறேன் பலமுறை
இல்லை இல்லை
நான் பெண்ணாய் ஜனித்திருக்கிறேன் பலமுறை
பிறந்திருக்கிறேன் சிலமுறை
ஆனால்
பெண்ணாய் வாழ்ந்ததில்லை இதுவரை!

“நான் கஷ்டப்படுவது போல
இவளும் கஷ்டப்பட வேண்டாம்”- என்பாள்
(கள்ளிப்) பாலூட்டும் தாய்
“இது கஷ்டமில்லையா அம்மா” என
கேட்க முடியாத நிலையில் நான்

என்றும் நடப்பவையே நிச்சயம்
பெண்ணாய் ஜனித்தது நிச்சயம்
பிறப்பேனா? வாழ்வேனா?
வினாவுக்கு விடையறிய
காத்திருந்தேன்

கர்ப்ப வாசல் திறந்தது
ஆகா! சாதனை
நான் சாதித்து விட்டேன்
உருக்குலையாமல் வெளிவந்து விட்டேன்
ஒரு வினாவுக்கு
விடை தெரிந்தது
நான் பெண்ணாய் பிறந்ந்து விட்டேன்

நினைத்தபடி
வாயில் எதோ விழுந்தது
அதுவும் இனிப்பாக!
உள்ளே தள்ளினேன் சப்புகொட்டியபடி!
அப்படியே உறங்கிப் போனேன்

இது நிரந்தர உறக்கமில்லை
விழித்தேன்
மகிழ்ந்தேன்
நிம்மதியாக சிரித்தேன்
மற்றொரு வினாவுக்கும் விடை தெரிந்தது
ஆம்!
நான் பெண்ணாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

கால ஒட்டத்தொடு நானும் ஓடினேன்
ஓர் சந்தேகத்துடன்
கள்ளிப் பாலூட்டிய தாயின்
வார்த்தையில் சந்தேகத்துடன்
அனுபவசாலிகளின் வார்த்தைகள் பொய்ப்பதில்லையே!
காத்திருந்த்தேன்!

கல்லூரியில் நுழைந்த்தேன்
சிறகடித்தபடி
சிறகொடியும் என அறியாமல்
மற்றுமோர் சரிகாஷா
என பரபரத்தது தமிழ்நாடு
பதற்றம் இருந்தது
ஆனால் பயனில்லை
வானம் இருந்தது
ஆனால்
விடியலில்லை
கள்ளிப்பாலில்லையே என
முதன்முதலில் வருந்தினேன்

திருமணத்திற்கு
வரன் கேட்டு வந்தனர்
இல்லை இல்லை
பெட்டி நிறைக்க
பணம் கேட்டு வந்தனர்
எதிர்க்க நானிருந்தும்
ஏற்க எவருமில்லை
தாய் தந்தையும் பகையானார்
அடுத்து அண்ணன் இருக்கிறானே விற்பனைக்கு
தாய் தந்தையும் பகையானார்!

திருமணச் சந்தையில்
விற்பனை முடிந்தது
நெறிமுறையில்லாத விற்பனை
பணத்தோடு பொருளும் செல்கிறதே!
வரதட்சணைப் பணத்தோடு
பெண் என்ற ஜடப்பொருளும் செல்கிறதே!
மீண்டும் நெல்லுக்கு ஏங்கியது என் மனம்

மருமகளாய் இல்லாமல்
மகளாய் இருந்தேன்
ஆனால்
தாயாக இல்லாமல்
மாமியாரகவே இருந்தாள்
என் மாமியார்
என் நாத்தியின்
புண்கண்டு பரிதவிப்பாள்
என்னில் அதை
பிரதிபலிப்பாள்

மண்ணெண்ணெய் இல்லாத மண வாழ்க்கையா?
என் புக்ககத்தில் மண்ணெண்ணெய் நிறைந்த்திருக்கும்
அடுப்பெரிக்க அல்ல
என்னை எரிக்க
ஒத்திகை உண்டு! அச்சுறுத்தலாய்
கூடவே மாமனாரும்இ என்னவரும்
சாட்சியாக
வழக்கிற்கு அல்ல!
இறப்புக்கு

கேட்ட பணம் கிடைத்ததால்
எழுதாத
மண்ணெண்ணெய் சட்டம்
அமலாகவில்லை
எனினும் ரத்தாகவில்லை
தள்ளிவைக்கப்பட்டது
அடுத்த பணப்பறிப்புக்கு துருப்புச்சீட்டாய்
தள்ளிவைக்கப்பட்டது
என் தாயை முதன்முதலில் நொந்தேன்
என்னைக் கொல்லாததற்காக!

வாழ்ந்தேன் எக்கத்தோடு
இறப்பைத் தழுவும் எதிர்ப்பார்ப்போடு
என்னில் உயிர் சுடர்விட்டது
மீண்டும் காத்திருந்தேன்
பத்து மாத காத்திருப்பு

பிறந்தாள் அழகு மகள்
பிஞ்சில் அழிக்க மனம் வராமல் காத்திருந்தேன்
அவளை காத்து இருந்தேன்!
எனக்குக் கிடைக்காத
கைத்தூக்கும் கல்லூரித் தோழன்
மருமகளை குலமகளாய் கருதும் மணவீட்டார்
மனைவியை சரிபாதியாய் கருதும் கணவன்மார்
மருமகளில் மகளைக் காணும் மாமியார்
பெண்ணைப் புண்ணாகக் கருதாமல்
பொன்னாகக் கருதும் சமுதாயம்
கிடைக்காதா
என்ற ஏக்கத்துடன்
காத்திருந்தேன்!!!

-சத்ய சுகன்யா சிவகுமார்.

Series Navigation

சத்ய சுகன்யா சிவகுமார்.

சத்ய சுகன்யா சிவகுமார்.