காக்கையை வரைந்துகொண்டிருக்கும் சிறுமி

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

ஹெச்.ஜி.ரசூல்


இரண்டாயிரமாண்டு நீளமுள்ள கவிதையை ஈன்ற
மூதாயியை தேடியலைந்த களைப்பில் பறவை
ஒருகாலத்தில் தன் தாகம்தணித்த
மண்பானையைத்தேடி அல்லலுற்றது
பாடப்புத்தகத்தில் படம்பார்த்துச் சொன்ன
கதைக்குள்ளிருந்து நீரூற்று எதுவும் பீறிடவில்லை.
ஐவகை நிலங்களையும் அலகில் கொத்தி
அடைகாக்க இன்னொரு இடமற்றுப் போக
நீலவண்ண கடற்பரப்பில்
அந்தப் பறவை ஒரு முட்டை இட்டது.
அதன் குஞ்சு பொரிப்பில்
ஆயுதமும் புல்லாங்குழல் மறுகையுமாய்
அணங்கொருத்தி உதித்தெழுந்தாள்.
வயல்வெளியெங்கும் சலசலத்து திரிந்த
மருதயாழின் ஓசை வழிந்தோட
கால்கள் சுழன்றாடிய விறலி கூத்தின்முன்
பிரபஞ்சமே தன்னை புனைந்து கொண்டது.
பாணனின் கோப்பை
இப்போது காலியாயிருந்தது.
தன் உடலிலிருந்து கிள்ளிப் பறித்தப் பூவை
குழந்தைக்கு தந்து வலியில் மூழ்கிய
பச்சைத்தாவரத்தின் கண்களில்
ஒருதுளி ரத்தம் தேங்கியிருந்தது.
அனல்வாதத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்ட ஏடுகளும்
புனல்வாதப் பேரலையில் அழிக்கப்பட்ட சுவடுகளும் பற்றி
ஆதித்தாய் அவ்வை கவலையுற
அந்தப் பறவை தன் நாக்கு வெட்டப்பட்ட பிறகும்
எவ்வித பதட்டமுமின்றி சொற்களை உதிர்க்கிறது.
சங்கக் கவிதையின் எழுத்தொன்றைத்திறந்து
காக்கைப்பாடினி வெளியேவந்தாள்.
ஆறாம்நிலத்தில் துளிர்த்த அறிவியல்தமிழி நீயென
அருகே வந்தவள் முத்தம் தருகையில்
பறவைகள் தொலைந்துபோன பூமியில்
குளிரூட்டப்பட்ட அறைக்குள் உட்கார்ந்து
கணிப்பொறித்திரையில்
என் சின்னமகள்
ஒரு காக்கையை வரைந்து கொண்டிருந்தாள்.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்