அதிபர் பொன் கனகசபாபதி, கனடா
(அதிபர் பொன் கனகசபாபதி – இலங்கையில் பாடசாலை ஆசிரியராகவும், ஸ்ரீ சோமஸ்கண்டா, ம ?ாஜனா ஆகிய இரு கல்லூரிகளிலும் அதிபராகவும் கடமையாற்றியவர். சிறந்த விஞ்ஞான ஆசிரியர் என்று பெயர் பெற்றவர். நைஜீரியாவில் கல்வித் துறையில் ஆலோசகராகவும், மேற்பார்வையாளராகவும் பணியாற்றியவர். கனடாவில் கல்விச்சபையில் சர்வதேச மொழிகளின் ஆலோசகராகவும் பன்மொழிக் கல்விச் சேவைத்துறையில் ஆலோசகராக கடமையாற்றியவர். இவர் சேவை செய்த காலத்தில், கல்விச்சபையில் ஏராளமான பாடசாலைகளில் தமிழ்மொழி வகுப்புக்கள் தொடங்க காரணமாக இருந்தவர். கவிஞர் வைரமுத்து அவர்களால், ‘இவர் ஒரு பல்கலைக்கழகம் ‘ என்று போற்றப்பட்டவர். பல்துறைகளிலும் நிறைந்த் அறிவாற்றல் கொண்டு சிறந்த விமரிசனங்கள் செய்யக் கூடியவர். நாளிதழ்கள், சஞ்சிகைகள், இணைய இதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகளில் பெரும்பங்கு வகித்து வருபவர்.) * நான் இனி எதைப் பேச. இத்தனை பேர்களும் புகாரியின் கவிதையை அலசி விட்டார்கள். திருவாளர் ரமணன் வரிக்கு வரி தான் துய்த்ததை உங்களுக்குத் தங்கு தடையில்லாமல் சிறப்பாகச் சொல்லியபின் நான் பேச என்ன உள்ளது! கடைசியாகப் பேசுபவன் பாபம் செய்தவன், கடைசி வரை இருப்பவர்கள் அதிக பாவம் செய்தவர்கள் என்பார்கள். கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஐ. ஏ. றிச்சார்ட்ஸ் தலைமையிலான சில பேராசிரியர்கள் அண்மையில் கவிதை விமர்சனத்தில் ஒரு புதிய பரிணாமத்தை அறிவித்துள்ளனர். இதனை ‘நெருக்கமாக வாசித்தல் ‘ (close reading) என்றனர். உயிரியல் ஆய்கூடம் ஒன்றிலே தவளை ஒன்றினையோ, எலி ஒன்றினையோ ஈன இரக்கம் இல்லாமல் எப்படி வெட்டிக் குதறுகிறோமோ அப்படிக் கவிதையையும் வார்த்தைக்கு வார்த்தை ‘அது பாவிகளா என்னை விட்டு விடுங்கள் என மன்றாடும் வரைக்கும் ‘ கீறிக் கிளிக்க வேண்டும் என்கிறார்கள். கவிதை தனது கருத்தினை எவ்விதம் தெரிய வைக்கிறது ? கவிதையில் உள்ள சொற்கள் எவ்விதம் செயற்படுகின்றன என்பதை இவ்விதம் கருணையற்ற வினாவுதல் முறையினாலேயே தெரிந்து கொள்ள முடியும் என்பது அவர்களின் கருத்து. கவிதையில் பொதிந்துள்ள சுவாரஸ்யமான வஞ்சப் புகழ்ச்சிகள் (piquant ironies) ஆழமாகப் புதைத்திருக்கும் பல்பொருள் தெரிவிக்கும் நிலைகள் (submerged ambiquities), ஒளிவு மறைவான உள்ளார்த்தங்கள் (half hidden allusions) தெரிந்து கொள்ள இத்தகைய நெருக்கமான வாசித்தல் முறை தேவையாகிறது என்பது அவர்கள் கணிப்பு. இதனையே தான் கனடிய பிரபல எழுத்தாளர் மார்கறட் ஆற்வூட் அவர்கள் ‘Poetry is a very concentrated form and therefore explosiveness of each word becomes much greater ‘ என்கிறார் ‘கவிதை என்பது மிக்க அடர்த்தி வாய்ந்த அமைப்பு எனவே ஒவ்வொரு வார்த்தையினதும் உணர்வெழுச்சி பாரிய பரிமாணம் பெறுகிறது ‘ எனது பூர்வாசிரமத்தை திரு முத்துலிங்கமும், கவிஞர் புகாரியும் தெரிந்துள்ளார்கள் என்பதால் எனக்கு இந்த வாய்ப்பு. திரு. முத்துலிங்கம் அழைத்து இதற்கு விமர்சனம் செய்யுங்கள் என்றார். ஆயிரம் தவளை அறுத்தவன் எனவே அரை விமர்சகன். திரு புகாரி நூல்களுடன் வந்தார். பட்டும் படாமலும் விமர்சனத்துக்கு வேறு ஆட்கள் உள்ளது போலக் கதைத்து வாழ்த்துங்கள் என்றார். விமர்சனம் என்றேன். தொட்டும் தொடாமலும் வாழ்த்துங்கள் என்றார். ஆகவே நூல்களை எட்ட நின்றே எட்டிப் பார்த்து வாழ்த்தவுள்ளேன். நான் வாழ்த்துதற்கு ஒன்றும் இல்லை. இதிகாசம் படைத்த வாழும் கவிஞர், காவியம் படைத்துக் கொண்டிருக்கும் கவிப்பேரரசினால் அவர் வாழ்த்தப் பட்டவர் என்றால் சரக்கில்லாமல் வாழ்த்தியிருப்பாரா ? என்ன சரக்கு உள்ளது எனப் பார்க்க ‘பச்சை மிளகாய் இளவரசியை ‘ எட்டிப் பார்த்தேன். பாரதியையும் மிஞ்சி விட்டதைக் கண்டேன். நண்பர்களே ஒரு சமயம் கவிஞர் வைரமுத்துவைப் பார்த்து சிவாஜி கணேசன் ‘நீ கவிஞர் கண்ணதாசனையும் மிஞ்சிவிட்டாய் ‘ எனக் கூறப் போகப் பெரும் பிரச்சனையாகி விட்டதை நீங்கள் அறிவீர்கள். நான் கவிஞர் புகாரியை பாரதியை மிஞ்சி விடார் எனக் கூறுவது திரு முத்துலிங்கம் அவர்களின் கூற்றினை வைத்தே. அவர் ‘கவிஞர் புகாரி அவர்கள் கவிதை எழுதாத போது கவிதையாகவே மூச்சு விடுகிறார் ‘ என எழுதியுள்ளார். பாரதி ‘எமக்குத் தொழில் கவிதை ‘ என்றான் ‘. எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் பொங்கி வரவேண்டும்; என் பாட்டுத் திறத்தாலே வையகம் பாலித்திட வேண்டும் ‘ என்றான். ஆனால் கவிஞர் புகாரியோ மேலே போய்விட்டார். கவிதை அவர் உயிராக நிற்கிறது. அது அவருக்கு உயிர் கொடுக்கிறது. இதனையே தான் ‘தன்னுள்ளே கவிதை எனும் தவத்தினை நிகழ்த்துகின்ற அன்பராம் புகாரி ‘ என இலந்தை இராமசாமி அவர்கள் கவிஞர் புகாரியின் ‘அன்புடன் இதயம் ‘ எனும் நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள். கவிதை அவருக்குத் தவம். பாரதிக்குக் கவிதை தொழில். திரு முத்துலிங்கம் அவர்கள் கவிஞர் புகாரியின் சுனாமி பற்றிய கவிதையைச் சிலாகித்து எழுதியுள்ளதைக் காண்கிறேன் . ‘படுத்துக் கிடக்கும் போதே பயமாய் இருக்கும் கடல், எழுந்து நின்றால் என்னாவது ? ‘ ‘கம்பனில் இருந்து கண்ணதாசன் வரை கடலைப் பாடாதவர் இல்லை. இவர்களில் எவராவது படுத்துக் கிடந்த கடல் எழுந்து நின்றது என வர்ணித்துளார்களா ‘ என வியக்கிறார். உண்மை. கவிஞர் புகாரியின் கற்பனை புதிது ? வளமானது! வித்தியாசமான நோக்குடையது. வாழும் கவிஞர்கள் பற்றிச் சொல்ல விரும்பாமலோ என்னவோ திரு முத்துலிங்கம் அவர்கள் கவிஞர் வைரமுத்துவை விட்டு விட்டார்கள். கவிஞர் அவர்கள் ‘தண்ணீர்த் தேசம் ‘ என கடலையும் நெய்தல் நில மக்களின் அல்லல்கள் அவலங்களையும் வைத்து ஒரு விஞ்ஞான காவியம் படைத்துள்ளார். புதமையான காவியம் அதில் பொதிந்துள்ள விஞ்ஞர்ன விளக்கங்கள் கண்டு நான் ஆச்சரியப் பட்டேன். அவர் கூட இத்தகைய புதுமையான வர்ணனையைத் தரவில்லை என்பது நிதர்சனமான உண்மை. ‘சரணமென்றேன் ‘ எனும் காதல் கவிதை நூலுக்கு மாலன் எழுதிய முன்னுரையில் உள்ளது போன்று புதிய சந்தர்ப்பங்கள் எழுகின்றன. அவற்றினை கவிஞர்கள் தக்க விதத்தில் உபயோகிப்பதால் அவர்களின் கவிதைகள் பாரிய பரிமாணங்களைப் பெறுகின்றன. கவிஞர் புகாரியின் இத்திறனை கவிப்பேரரசு மிகவும் சிலாகித்து ‘உற்றதை உணர்ச்சியின் உயிர் கெடாது வார்த்தெடுக்கும் வல்லமை சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அந்த உன்னதம் கவிஞர் புகாரிக்கு வாய்த்துள்ளது ‘ என்கிறார். இதோ கவிஞர் புகாரியின் வேறுபட்ட சிந்தனைக்கு இன்னோர் உதாரணம். தஞ்சாவூர் என்றதுமே நெக்குருகிப் போய்விடுகிறார் கவிஞர். ‘என் மண்ணில் விழுந்ததும், அழுதேன், அழுதேன் நான் அழுதேன. ஏன் அழுதேன் ? இதுவரை ஏன் அம்மா என்னை உன் வயிற்றிலேயே இது நாள்வரை பூட்டி வைத்தாய் என்ற கோபத்தின் காரணமாக இருக்கலாம். ‘ என்கிறார் எத்தனை வித்தியாசமான கற்பனை!! அதீதமான ஊர் அபிமானத்தை இதனிலும் பார்க்கச் சிறப்பாகக் சொல்லிக் காட்ட முடியாது என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம். ‘சரணமென்றேன் ‘ கவிதைத் தொகுதியிலும் வித்தியாசமான சிந்தனை காண முடிகிறது ‘காதல் தேல்வியைச் சாவு தீர்க்குமென்பது சுத்தப் பொய ‘ என்கிறார் கவிஞர் ஏன் ? ‘அழுத்தமான இன்னொரு காதலல்லவா அதை அடியோடு வெட்டிச் சாய்க்கும் ‘ என்கிறார். ‘ காதல் காதல் காதல் காதல் இனறேல் சாதல் சாதல் சாதல் என்றானே பாரதி. அங்கே தோல்வி வாழ்வின் முடிவைத் தேடச் சொல்கிறது. இங்கே தோல்வி, மீண்டும் எழு வாழ்ந்து காட்டு என்கிறது. எது தேவை ? தஞ்சாவூர் என்றதும் எமது கண்முன்னே வருபவை தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம், தஞ்சைப் பெரிய கோவில், தஞ்சாவூர் நூலகம், தலையாட்டிப் பொம்மை, திருவையாறு உற்சவம். இவை எல்லாவற்றையம் ஒரு கவிதையிலே புகாரி கொண்டு வந்துள்ளார். ‘தலையாட்டும் பொம்மைக்கும் அலை கூட்டும் பாட்டுக்கும் கலையூட்டும் கோவிலுக்கும் சிலைகாட்டும் சோழனுக்கும ‘ இதே போன்றே பாரதிதாசன் பற்றிய கவிதையிலே அவருடைய பல கவிதைகளை நினைவு கூருகின்ற படியால் இவரது கவிதை படிப்பவர்கள் அவரது கவிதைகளைக் கட்டாயமாகப் படிக்க வேண்டிய ஆர்வம் தூண்டப் பெறுகிறார்கள். ‘அந்த விதவை என்பவள் முடிந்தவள் அல்ல வேர்ப்பலாக்கனிக்கு நிகரெனக் கண்டால் – அவன் பாரதிதாசன் ‘ ஏன் அப்படிச் சொல்கிறார் என அறிவதாயின் பாரதிதாசனிடம் போயே ஆக வேண்டும். பாரதிதாசன் விதவைகள் பற்றி ‘கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே – அந்த வேரிற் பழுத்த பலா – மிகக் கொடிய தென்றிடப் பட்ட தண்ணே – குளிர் தரும் வட்ட நிலா ‘ என்பதையே கவிஞர் புகாரி இங்கே காட்டியுள்ளார். இப்படி அடுக்கடுக்காப் பல செய்திகள் பாரதிதாசன் பற்றியவை. இவரது கவிதைகளிலே பாரதிதாசனுடைய பாதிப்பு நிறையவே உள்ளது. ‘தேனூறிப் பூவசையும் ‘ என்கிறார் கவிஞர. அதனையே தான் பாவேந்தர் ‘கமழ்ந்திடும் பூவினிலே தேனருவி பெய்ததனால ‘ என்கிறார. ‘வானூறி மழை பொழியும் வயலூறி கதிர் வளையும் தேனூறி பூவசையும் தினம் பாடி வண்டாடும் ‘ எனபது கவிதை. அங்கே அச்சுப் பிழைகூட அர்த்தம் பொதிந்த ஜதார்த்தத்தைக் கொண்டு வந்திருப்பதைக் காண முடிகிறது. வயலூறிக் கதிர் விளையும் (அணிந்துரை) என்பது நூலிலே வயலூறிக் கதிர் வளையும் என அச்சிடப் பட்டுள்ளது. கதிர் விளைகின்ற போது பயிர் சிறிது சிறிதாக நாளாந்தம். சூலுற்ற மடந்தையர் போன்று வளைவதை காணமுடிகிறது. நெற்கதிர்களில் அரிசி, பால் போன்றே ஊறிப் படிப்படியாக கடினமாகி அரிசியாக மர்றம் போது அதன் பாரம் தாங்காமல் கதிர் வளைகின்ற அழகே அழகு. (வளையும் என்று கவிதையில் இருப்பதே சரி. விளையும் என்று அணிந்துரையில் இருப்பது அச்சுப்பிழை – ஏற்புரையில் கவிஞர் புகாரி) பச்சை மிளகாய் இளவரசி பற்றி எல்லோரும் பேசிவிட்டார்கள். நானும் என் பங்குக்குச் சொல்லலாம் என எண்ணுகிறேன். ‘நீளும் நாக்கின் நுனியோரம் பொன் ஊசி உறைப்புச் சிங்காரி கோபம் கோபம் கோபம்தான் அதன் ஆடை திறந்தால் பாசம்தான் ‘ சுவை உணரும் உறுப்பு நா. அதன் பரப்பிலே சுவை அரும்புகள் உள்ளன. ஆனால் சுவை அரும்புகள் வெவ்வேறு வகைப்பட்டவை. புளிப்பு, உறைப்பு, கசப்பு, இனிப்பு, உவர்ப்பு என வெவ்வேறு சுவை உணரும் தன்மை உடையவை. கவிஞர் சொல்கிறாரே ‘நீளும் நாக்கின் நுனியோரம் ‘. அங்கே தான் இனிப்பு சுவைக்கின்ற சுவை அரும்புகள் உள்ளன. எத்தனை அழகான கற்பனை. அந்தப் பாலகியின் பாச மேலீட்டால் விளைந்த கோபம் இவருக்கு இனிக்கிறது. எந்தத் தந்தைக்குத் தான் இனிக்காது. அற்புதமான சிந்தனை இவருடைய கவிதைகள் முழுமையான புதுக் கவிதையுமல்லாமல், மரபுக் கவிதையும் அல்லாமல் இரண்டுக்கும் இடைத்தரமானவையாகவே நான் கொள்வேன். அங்கே கவிப்பேரரசு சொல்வது போன்று பொருளடர்த்தியும் சொற் செட்டுக்களும் காணப் பட்டாலும் மரபுக் கவிதை போன்று இசை லயத்துடன் எழுதும் லாகவத்தைக் காண முடிகிறது. ‘கயிறிழுக்கும போட்டியுள்ளே நடக்குதடி – என் கர்வமெல்லாம் பெண்மையிடம் தோற்குதடி சுயநினைவில் உயிலொன்று எழுதுகிறேன் – உன் சொர்க்கவிழிச் சிறையொன்றே சரணமெனறேன். இது அவரது ‘சரணமென்றேன் ‘ நூலிலிருந்து எடுத்தது. எவ்வளவு அற்புதமாக இசை லயம் ஊடறுக்கிறது. உள்ளே ஏகுங்கள். நன்றாகச் சுவையுங்கள்.
கவிஞர் புகாரியின் கவிதைப் பணி தொடர வாழ்த்தி விடை பெறுகிறேன்.
நன்றி.
பொன். கனகசபாபதி
pkanex@hotmail.com
- மிமோஸா அஹ்மதி – ஒரு தேடல்…ஓர் அறிமுகம்…சில கவிதைகள்
- டாவின்சி கோட்
- நாகூர் ரூமியின் கருத்துகள் பற்றி (ஆங்கிலம்)
- குறுந்திரைப்படப் பயிற்சிப் பட்டறை
- கடிதம்
- சுராவுக்கு அஞ்சலி
- அழிவைப் போற்றும் கற்பு, காதல் தோல்வி
- கடிதம் – (ஆங்கிலம்)
- ஓரு இளைய தலைமுறை இலக்கியவாதியின்(!); சாட்சியம்
- கவிதை: மூலப்பிரதி வாசிப்பு: முன்னோர் மொழிபொருள்
- புத்தகவெளியீட்டில் கிடைக்கப்பெற்ற நிதியை ‘கனடா இலக்கியத் தோட்டத்திற்கு’ அன்பளிப்புச் செய்தார் கவிஞர் புகாரி
- கம்பராமாயணத்தில் புறத்திணைக் கூறுகள் (முதற்போர்புரி படலப்பகுதி மட்டும்)
- ‘காலம் ‘ இலக்கிய மாலை!
- கவிஞர் புகாரியின் கவிதை நூல்கள் வெளியீட்டுவிழா வாழ்த்துரை
- டான் பிரவுண் மேசையில் ஒரு கமண்டலம்
- சுந்தர ராமசாமியின் மறைவு
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-13 )
- தற்கால சீனத்தின் நவீன ஓவியபாணி
- இமாலய மலைச் சரிவுகளில் எழுந்த அசுரப் பூகம்பம்!
- பந்தம்
- பேரிடர்கள்
- பொறுப்பு !
- மிமோஸா அஹ்மதி – சில கவிதைகள்
- பெரியபுராணம் – 61 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி)
- சுவாசலயம்
- கீதாஞ்சலி (45) மங்கித் தேயும் மணம்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- அட்லஸ்
- வயது வரும்போது. .
- பங்குச் சந்தை வீழ்ச்சி
- திசைமாறும் போராட்டக்களங்கள்
- மனிதாபிமானம்