கவிஞர் புகாரியின் இருநூல்களின் இனிய வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

பல்கலைச் செல்வர் ஆர். எஸ். மணி


(கனடாவில் 35 ஆண்டுகளாக வாழும் பல்கலைச் செல்வர் திரு ஆர்.எஸ்.மணி அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு) சிறுவயதிலிருந்தே ஓவியம், இசை, கவிதை முதலியவற்றில் நாட்டம். பள்ளியில் படிக்கும்போது, தமிழ் நாட்டு மாணவர்களுக்காக ‘மாணவர் மன்றம் ‘ நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வெள்ளிக் கோப்பை. பல பாடல்கள் எழுதி இசையும் அமைத்திருக்கிறார். டொரோன்டோ டிவியில் 1974 முதல் 1982 வரை பலமுறை தமிழிலும் ?ிந்தியிலும் பாடியிருக்கிறார். தமிழ், ?ிந்தி, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் கவிதைகள் புனைந்திருக்கிறார். 1993-ல் பணியிலிருந்து முன்னதாகவே ஓய்வு எடுத்துக் கொண்டு ஓவியக் கலையில் முழுநேரத்தையும் கழித்து, கேம்ப்ரிஜ் நகராட்சியால் சிறந்த ஓவியனென 1998-ல் தேர்ந்தெடுக்கப் பட்டார். தற்பொழுது கணினியைக் கருவியாய்க் கொண்டு ஓவியம், இசை முதலியவற்றில் ஈடுபட்டிருக்கிறார். அவர் வரைந்த சில ஓவியங்களையும், எடுத்த சில புகைப்படங்களையும் பின்காணும் வலைத் தளத்தில் பார்க்கலாம்: www.rsmani.com (இனி பல்கலைச் செல்வரின் வாழ்த்துரை)

வணக்கம். கவிஞர் புகாரியை எனக்கு சுமார் ஒரு வருடமாகத் தெரியும். எங்களை இணைத்து வைத்தது இணையம். அவருடைய பஞ்சபூதக் கவிதைகளில் ஒன்றைப் படித்து விட்டு அதில் மனதைப் பறி கொடுத்து அவருடன் தொடர்பு கொண்டேன். என் வாழ்க்கையிலேயே கவிதையைப் படிக்க விட்டு, நானாகவே தொடர்பு கொண்ட ஒரே கவிஞர் புகாரி ஒருவர்தான். கவிதை என்றால் என்ன ? கவிஞன் என்பவன் யார் ? இந்தக் கேள்விகளுக்கு எவ்வளவோ பேர்கள் எவ்வளவோ விதத்தில் பதில் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு தோன்றுவதைக் கூறுகிறேன். கவிஞன் ஒரு காந்தம். கவித்துவம் காந்த சக்தி. காந்த சக்தி இல்லாவிட்டால் காந்தம் எப்படி இல்லையோ, அப்படித்தான் கவித்துவம் இல்லாதவன் கவிஞன் இல்லை. இந்தக் கவித்துவம் எங்கிருந்து வருகிறது ? கடையில் கிடைக்காதது. கல்லூரியில் கொடுக்கப் படாதது. பிறவியிலேயே உடன் பிறக்கலாம். அல்லது திடார் என்று கொடுக்கப் படலாம். எப்படி கொடுக்கப் பட்டாலும் ஒரு கணத்தில் நம்மிடமிருந்து பிரிக்கப் படலாம். அந்த சக்தியைப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் இறைவனின் செல்லப் பிள்ளைகள். உண்மையான கவிதையை எதற்கு ஒப்பிடலாம் என்று யோசித்தேன். ஒருவர் வீட்டுக்குப் போகிறோம். அங்கே மேசைமீது அழகான மலர் இருக்கிறது. அருகில் சென்று உற்று நோக்கி, தொட்டுப் பார்த்து முகன்றால்தான் அது ஒரு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட செயற்கைப் பூவா, இல்லை ஒரு தோட்டதில் வளர்க்கப்பட்ட இயற்கைப் பூவா என்று புரியும். அதேபோல ஏதோ வியாபார நோக்குடன், இலக்கண விதிகளுடன் வரி வரிகளாய் எழுதப் பட்டுள்ளவைகளெல்லாம் கவிதைகள் போலத் தோன்றினாலும், தன்னுடைய மனத் தோட்டதில் விதை ஊன்றி, உணர்ச்சிகளையே உணவாகக் கொடுத்து மலர்ந்த எண்ண மலர்தான் உண்மைக் கவிதை. இவ்வாறான மலர்களைக் கொண்டு இதுவரை இரண்டு செண்டுகளை கவிஞர் புகாரிகளை நமக்கு புகாரி தந்திருக்கிறார். மேலும் இரண்டு செண்டுகளை இன்று நம்முன் வைக்கிறார். இவைகளில் முதல் தொகுப்பு ‘சரணமென்றேன் ‘. காதல் கவிதைகளைக் கொண்டே முடையப் பட்டது. இரண்டாவது ‘பச்சைமிளகாய் இளவரசி ‘. புகாரி காதலை மட்டும் பாடும் கவிஞர் அல்ல, சமூகத்தில் நடக்கும் விஷயங்களையெல்லாம் கூர்ந்து நோக்கி, போற்ற வேண்டியதைப் போற்றி, தூற்ற வேண்டியதை தூற்றும் தைரியமான சீர்திருத்தவாதி, ஆழமாக சிந்தித்து தத்துவ முத்துக்களை எடுத்து வந்து நம்முன் வைக்கும் தத்துவஞானி என்பதைக் காட்டுகிறார். இவர்மேல் எனக்கிருக்கும் அன்பையும் மரியாதையையும் எப்படிக் காட்டுவதென்று யோசித்தேன். ‘சரணமென்றேன் ‘ புத்தகத்தில் வரும் முதல் இரண்டு கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுத்தேன். அது போதாதென்று தோன்றவே ‘சரணமென்றேன் ‘, ‘பச்சைமிளகாய் இளவரசி ‘ என்ற இரண்டு புத்தகங்களுக்கும் முகப்புப் படங்களை வரைந்து கொடுத்தேன். நான் மெட்டில் அமைத்த இரண்டு பாடல்களையும் உங்கள் முன் பாடி, என்னுடைய மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன். வாத்திய இசைகளுடன் இவைகளைப் பதிவு செய்திருக்கிறேன். வசதி இல்லாததால், வெறும் குரலிலேயே பாடுகிறேன். முதலில் ‘சரணமென்றேன் ‘ என்னும் பாட்டு. http://www.anbudanbuhari.com/pkrsmani.html இப்போது ‘மழைபொழிய ‘ என்னும் சின்னப் பாடல்: http://www.anbudanbuhari.com/pkrsmani.html புகாரி இன்னும் பல்லாண்டுகள் வாழ வேண்டும், நமக்கு இன்னும் பல கவிதை நூல்களை வழங்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டு, ‘வாழ்க வாழ்க ‘ என்று புகாரியை வாழ்த்தியவாறே என் உரையை முடித்துக் கொள்ளுகிறேன்.

வணக்கம்!

ஆர். எஸ். மணி

rsmani@rogers.com

Series Navigation

பல்கலைச் செல்வர் ஆர். எஸ். மணி

பல்கலைச் செல்வர் ஆர். எஸ். மணி