கவிஞர் அன்பாதவனின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

புதியமாதவி, மும்பை


‘அழிக்காமல் புதியவாக்கியங்களை எழுதுவதற்கு

இந்த நாட்டின் வரலாறு ஒன்றும்

அவ்வளவு சுத்தமானதல்ல.. ‘ தெலுங்கில் கவிஞர் பீடி தெரேஷ் பாபு..

‘ஊரின் எல்லையில் இருக்கும்

மலம் கழிக்கும் இடத்திலோ

அல்லது சுடுகாட்டிலோ

எப்படி தள்ளப்பட்டது என் வீடு ?

இப்போதெ எனக்குப் பதில் வேண்டும்… ‘ தெலுங்கில் கவிஞர் சிகாமணி..

மராத்தி, தெலுங்கு தலித் இலக்கியங்களின் எழுச்சியினை அன்பதாவனின் தலித் கவிதைகளில்

உணர்கின்றேன்.

தலித் கவிதைகள் ..நெருப்பில் காய்ச்சிய பறை..ஒளி அச்சுப் பிரதியிலேயே கலை இலக்கிய பெரு

மன்றத்தின் 2003 ஆண்டுக்கான சிறந்த கவிதை நூலாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டுள்ளது.

தலித் இலக்கியம் என்றாலே தன்னிரக்கம், கதறல், ஒப்பாரி, ஓலம், கொலை, கற்பழிப்பு என்றே இருப்பதினால் மட்டுமே தலித் இலக்கியன் எதையும் சாதித்துவிட முடியாது. எழுதப்படுகின்ற ஒவ்வொரு எழுத்தின் ஒவ்வொரு புள்ளியிலும் போராட்டம் வெடித்தே ஆகவேண்டும். விதைக்கப்படுகின்ற ஒவ்வொரு விதையும் மரமாகி தோப்புகள் உருவாக வேண்டியது அதை உருவாக்க வேண்டியதும் ஒவ்வொரு தலித் படைப்பாளியின் சமூக கடமை ஆகின்றது. அதை உணர்ந்தே ஒலிக்கின்றது அன்பாதவனின் பறை.

அதுவும் நெருப்பில் காய்ச்சிய பறையாக.

‘காய்ச்ச காய்ச்ச

இறுகுகிறது எம்பறை

நெருப்பின் தகிப்பில்

பொங்கியெழும் பெருமுழக்கம்

சிறுதீண்டலிலும்

காற்றின் அணுக்களில்

பேரலையாய் அதிர்வுகள்

இசையின் திசைகளில்

கலந்திருக்கிறது எம் உயிர்

திரண்ட பறைகளின்

குமுறல்களில் பொங்கும்

யுகங்களின் கோபம்

மறுக்கப்பட்டவர்களின் மனதாக

ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக…

(பக்.16)

தன் கவிதைகள் என்று அன்பாதவின் பறை அறிவிக்கின்றது.

மரபியலான அனைத்தையும் கேள்விக்குறியாக்கி தொலைந்து போன வாழ்க்கைக்கு பதில் எழுதுபவை

தலித் இலக்கியங்கள். அதனால்தான் மாட்டுக்கறியும் பன்றிநாயகமும் இவர் கவிதையின் பக்கங்கள் ஆகின்றன.

காக்கைகளை யாருக்குத்தான் பிடிக்காது ?

அசுத்தங்களை அகற்றும் ஆகாயத் தோட்டிகளான

காக்கைகளை யாருக்குத்தான் பிடிக்காது ?

(பக் 20)

என்று உருவகப்படுத்தும்போது அசுத்தங்களை அகற்றும் மனித தோட்டிகளைத்தான் மண்ணில் யாருக்கும்

பிடிக்காது ? ஏன் ? என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகின்றது.

எந்த இதிகாசம், புராணம் இந்து மத நம்பிக்கைகள் தலித்திய மக்களின் கருப்பையிலேயே ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிக் கொண்டிருக்கின்றதோ அந்தப் புராண இதிகாச கதைகளைப் புரட்டிப்போட்டு

அதில் எழுந்து நின்று கேள்விக்கேட்பது எல்லா தலித்திய படைப்பாளர்களுக்கும் உரிய தனிமுத்திரைதான்.

அந்த வரிசையில் பறையின் குரலில் சொல்லில்செல்வன் அனுமனின் குரலாக நியாயத்தின் குரலை ஒலிக்க வைத்திருப்பது சிந்தனைத் தளங்களை விரிவு படுத்துகின்றது. மனித இன வரலாற்றின்

நாகரிகத்தில், மூத்தவனான குரங்கு இனத்தலைவன் கணினி இன மனிதர்களுக்கு நியாயத்தின் குரலை

நினைவு படுத்துகின்றான்!. அதற்காகவே சொல்லின் செல்வன் என்ற அடைமொழியுடன் அனுமனை

விளிக்கின்றார். இது பறை வழங்கும் நியாயத்தின் குரலல்ல இது உங்கள் சொல்லின் செல்வனின் குரல்

என்று சொல்லும் போது ஒரு அங்கதம், நையாண்டியும் கலந்துவிடுகின்றது..

பாஞ்சாலி பீமனிடன் காலங்காலமாய் தான் பட்ட கஷ்டங்களுக்கு காரணம் துரியன் மட்டுமல்ல..

இவர்களும் தான் என்று விஜயனையும் கண்ணனையும் தர்மனையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகின்றாள்.

‘ சூதாட்டப் போதையில் தோற்பது எதுவெனப்

பிரக்ஞையில்ல இவனா தர்மன்!

இவனின் குருதி முதலில் வேண்டும்..

கன்னியும் கனியும் ஒன்றாஉனக்கு

பிருகன்னளை வேஷமிட்டாலும்

பெண்வேண்டும் உனக்கு

விஜயன் என்ற விஷக்கிருமியின்

வெங்குருதியும் வேண்டுமெனக்கு…

என்றெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் கண்ணனிடம் வரும்போது கண்ணன் சொன்ன கீதையின்

தத்துவத்தையே கேள்விக்குறியாக்குகின்றார் கவிஞர்.

‘துரியனுன் நீ விஜயனும் நீ கீதை சொன்னவனல்லவா..

மண்டபத்து கண்கள் மொய்க்க

மலமாய் உணர்ந்து மானம் மறைக்க

துகிலுரித்த துச்சனுன் நீதானா..

என் மார்பும் யோனியும் தெரியாதவென

எச்சில் விழுங்கிக் காத்திருந்த

ரெட்டைக்கால மரமனிதரும் நீதானா..

ஒருத்திக்கு ஆடை கொடுக்கக்

கோபியர் பலரை நிவாணமாக்கிய

திருவிளையாடல்களுக்கு இன்று முற்றுப்புள்ளி.. ‘

சொல்லின் செல்வன் சுருக்கமாய்ப் போதித்தான்

திரவுபதி கேட்பதில் தவறென்ன..

அன்னை சீதை அமைதி காத்ததால்தானே

நெருப்புக் குளித்ததும் நிலம் விழுங்கியதும்..

இங்கே நெருப்புக் காய்வதும் பறை ஒலிப்பதும் தலித்திய விடுதலைக்குரலாக மட்டுமல்ல. அடிமைப்பட்டிருக்கும் பெண்ணியத்தின் விடுதலைக் குரலாகவும் ஒலிக்கின்றது;

எங்கெல்லாம் மனித உரிமைகள் நசுக்கப்பட்டிருக்கின்றதோ அங்கெல்லாம் ஒலிக்கின்ற பைறையின் குரலாக தன் கவிதைப் பக்கங்களை விரித்திருப்பது பறையின் அதிர்வுகளை நியாயப்படுத்தி

ஒட்டுமொத்த மனித இனத்தின் விடுதலைக் குரலாகப் பதிவுச் செய்திருக்கின்றது.

காயங்கள் தனதாகும்போது சிந்தப்படுகின்ற கண்ணீருக்கும் வலிக்கும் தோட்டாக்களின் வலிமை

வந்துவிடும். அதனால்தான் தலித்திய விடுதலைக்கு நெருப்பில் காய்கின்ற பறைகள் திரவுபதிகளுக்காகவும்

‘கம்பீர கதையோடு எழுந்தான்

பீமன் ‘ என்று முடிவுரை எழுதுவது சாத்தியமாகின்றது.

நிறம் என்ற கவிதை கவிதைகளுக்கான நளினம், பண்பாடுகளை உடைத்துப்போடுவதும் அந்த உடைந்த துண்டுகளிலும் ஒட்டிக்கொண்டிருக்கும் நியாயம் வாசிப்பவனை மெளனத்தில் உறைய

வைத்து விடுக்கின்றது.

‘முகம் கை கால் முதுகென

புறப்பாகங்களைக் கொண்டு

எடைபோடாதே என் நிறத்தை..

நீண்டு விறைத்த என் குறியைப் பார்…

….

….

பொங்குமெனது ரவுத்திரம்

வெண்மையாய்… ‘ (பக் 81)

குளிர்காமம்,கலைடாஸ்கோப்,வண்ணங்கள்,கடனலை, ஒரு புயலிரவும் குட்டி வானொலிப்பெட்டியும்,

உன்னிடமிருந்து கடிதம் வராத போது.., தனிமை போன்ற கவிதைகள்

பறையின் குரலுக்கு பக்க வாத்தியமாகவும் தனி வாத்தியமாகவும் அகம் சார்ந்த கவிதையின் குரலாக ஒலிக்கின்றன.

பாறைவனம் என்ற கவிதையின் முடிவில் யாதார்த்தம் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றது.

‘திறமை தகுதி அழகென்பதெல்லாம்

உன்னுள் இருப்பது

தேவையற்றதை நீக்கிவிட்டால்

தெரிவதது.. ‘

என்ற சிந்தனைச் சிற்பிக்கு வெடிகளுடன் நடந்த குவாரிக்காரனால் வரும் ஆபத்தை அறியமுடியவில்லை

என்று முடித்திருப்பதில் சிற்பியின் மீது தேவையற்ற கழிவிரக்கம் கற்பிக்கப்பட்டிருக்கின்றது.

இவர் கவிதைகளில் பெரும்பாலும் நாடக உத்தியைக் கையாளுகின்றார்.

கவிதைகள் ஓரங்க நாடகமாகி மனக்கண்ணில் மேடை ஏறுகின்றது.

அதிலும் மூன்று சதவீத எச்சில் என்ற கவிதை ஒர் ஓரங்க நாடகம். நாடகத்தில் கேள்வி கேட்பது

‘அவாள்களின் பேஷ் பேஷ் ‘. பதில் சொல்லும் பறையின் குரலில் ஆங்கிலம்..

அவாள் : :என்னவா இருக்கேள்..

அட்டெண்டரா.. ? கிளார்க்கா.. ?

பறை: iam an Officer

working in our Foreign Exchange

Department, Bombay Main Office

அவாள்: ஓ அப்படியா..பேஷ் பேஷ்

ஒனக்கு ஒரு பிரதர் உண்டில்லையோ.. ?

பறை: -yes Sir,

He is an Engineer

in IISE Bangalore

Moreover, He is a

film creator..

அவாள் : பரவால்ல ராதா

பெருக்குற வேல பாத்துண்டே ஒம்

புள்ளங்களுக்கு இவ்ளோ பெரிய

வேல வாங்கி குடுத்துட்டெ

உங்களுக்கெல்லாம் தான்

ரிசர்வேஷன் இருக்குதே

எங்களவாதன் இப்போ

பாம்பே டெல்லி அமெரிக்கான்னு

போயிட்டு ரொம்ப கஷ்டப்படறா ?

(இதில் அவாள், பறை என்ற உரையாக்கம் என்னுடையது)

தமிழில் அவாள் கேள்வி கேட்க பறை ஆங்கிலத்தில் பதில் சொல்லும்போது காலம் காலமாய் கல்வி

மறுக்கப்பட்ட இனம் ஆண்ட இனமான வெள்ளையனின் ஆங்கில மொழியில் பதில் சொல்வது போல்

அமைத்திருப்பதில் நாடகமேடை அதிரலாம்.. அதிரும்.. ஆனால் கவிதையின் தளத்தில்..

நாடக உத்திகள் கவிதைக்கு அழகுதரும். அழுத்தம் தரும்.. ஆனால் எல்லா நாடகமேடையிலும் கவிதையின் பக்கங்களைக் காட்டிவிட முடியுமா ? எல்லா ஓரங்க நாடகத்தின் திரைகளும் கவிதையின்

பக்கங்கள் ஆகிவிடமுடியுமா.. ? நாளைய கவிதை உலகமும் விமர்சன உலகமும்தான் இந்தக்

கேள்விகளுக்கெல்லாம் பதில் எழுதமுடியும்.

இந்தக் கேள்விகளை எல்லாம் அமுக்கிக்கொண்டு அதிர்கின்றது அன்பாதவின் நெருப்பில் காய்ச்சிய பறை..

அதிரட்டும் பறை..

அன்புடன்,

புதியமாதவி,

மும்பை 400 042.

கவிதை நூல்: நெருப்பில் காய்ச்சிய பறை

வெளியீடு : காவ்யா

104 பக்கங்கள், விலை ரூபாய் 45/

கவிஞர் : அன்பாதவன், மின்னஞ்சல்: jpashivam@rediffmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை