களம் ஒன்று கதை பத்து – 2 -பாருக்குள்ளே நாலுபேர்

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

ம.காமுத்துரை


“எனக்கெல்லா இருவத்தஞ்சு முடிஞ்சிர்ச்சு, இருவத்தாறுலதே கல்யாணம். எந்தம்பிக்கு முப்பது…”
மனோகரன் ரெண்டாவது பாட்டிலின் மூடியைத் திருகியபடி சொன்னான். டேபிளில் மாங்கா ஊறுகாய், மிளகாய் பொடி தடவலில் ரத்தத்தில் முக்கி எடுத்தது போல இருந்தது. கூடவே ஒரு பிளாஸ்டிக் தட்டில் அவித்த பயறு வெங்காயம் தாளித்து கிடந்தது.
“அவளது” அப்பா தலையை ஆட்டிக்கொண்டு ஊறுகாயில் இருந்த காரக்குழம்பை ஆள்காட்டி விரலால் தொட்டு நக்கியபடி ஆமோதித்தார்.
“அதுலயும் ஏன் கடசீத் தம்பிக்கெல்லா… முப்பது வயசாயிடுச்சி. இப்ப என்னான்னா சொரப்பு ஊறுன மக்கெநாத்து சோடியத் தேட ஆரம்பிச்சிட்ராங்கெ… ஆது ஆணா இருந்தாலும்சரி… பொட்டக் கழுதயா இருந்தாலுஞ்சரி… என்னா நாஞ்சொல்றது…” – அவர்கள் அந்த ‘பார்’ன் கடைசி டேபிளில் உட்கார்ந்திருந்தனர்.
‘பார்’ – எப்பவும் போல நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இந்த மதிய வெயிலுக்கே இப்படிக்கூட்டம். இன்னமும் நேரம் கடக்க கடக்க ஆறுமணி ஏழு மணிக்கெல்லாம் உட்கார பெஞ்சு கிடைக்காது. நின்றபடி எதாவது ஒரு திட்டில் சாய்ந்தபடி ‘வேலையை’ முடித்துப் போக வேண்டியதுதான்.
தவசியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் – ஹைஸ்கூல் வாட்ச்மேன். அவனுக்காக ஒதுக்கி வச்சிருந்த பாட்டிலையும் கழுத்தைத் திருகியாயிற்று.
“ரெம்ப லேட் பண்றானே… ஒருவேளை பள்ளிக்கூடம் முடிஞ்சு எல்லாரையும் அனுப்பிச்சு விட்டு ‘கேட்ட’ பூட்டிட்டு வருவானோ… அஞ்சு அஞ்சரையாயிருமே…ப்பா…” – என்ற அவளது அப்பா ஒரு கணக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர் வந்து விட்டார்.
“என்னா… இப்பிடி கட்டக்கடசீல ஒக்காந்துருக்கீக… ஆளத்தேடவே அரமணிநேரம் ஆயிர்ச்சு…” – சொல்லியபடி மனோகரன் பக்கமாய் உட்காந்தார்.
“நாஞ் சொல்லல… வந்துருவான்னு…! நைட்டூட்டிதான…” மனோகரன் கவிழ்த்திருந்த இன்னொரு டம்ளரை திருப்பி வைத்து அதற்கும் பரிமாறினான்.
“ஆமா… ஏழுமணிக்கு போகணும்…” என்றவர் கிளாசை எடுத்து ‘சியர்’ முட்டி ஒருவாய் கஷ்டப்பட்டு முழுங்கினார். “எப்.சிய வாங்கீர்க்க வேண்டிதானப்பா… இந்தநாத்தம் நாறுதூ…”- அடுத்து ஒரே மூச்சில் மடமடவெனக் குடித்து கிளாசைப் போட்டுவிட்டு மலையைச் சாய்த்தது போல ஆயாசத்துடன் சேரில் சாய்ந்து கொண்டார்.
ஊறுகாயை எடுத்து நாக்கில் தடவிச் சப்பியவர், பயறை கைகூட்டி அள்ளி நறுமுறுவென மென்று இயல்பு நிலைக்கு வந்தார்.
“அப்புறம்… எப்படி பேசீர்க்கீக…”
“என்னத்த பேசுறது… முடிச்சிற வேண்டிதேன்னு ஒரே முடிவா இருக்காப்ல…”
“முடிக்கிறது பெரிசில்ல மனோகரா… பெத்த பாசம்… பின்னு பெறகு பேதலிச்சிரக்குடாது. அப்புறம் இவிங்க ரெண்டு பேர்னாலதே எம்புள்ளய கொன்னேன்னே மருகி பழிய மாத்திவிடக்குடாது… ஏன்னா எனக்கும்… அது மகதே…” – வாட்ச்மேன் நிதானமாகப் பேசினார்.
“நீ வேணா அந்தப் பிள்ளைக்கி சித்தப்பா – பெரியப்பனா இருக்கலாம்யா… நா சொந்தமில்லீங்கிறியா… தோள்ல போட்டு வளத்தவெ… அத சடங்கான அன்னிக்கி தாய்மாமெ சீர் கொண்டு வந்திருப்பே… அம்மனால அங்க சொந்தபந்தம் சிக்கலாகக் கூடாதுன்னுதே செய்யல… என்னா மாப்ள…”
அவளது அப்பா இறுகமூடிய மெளனத்தைக் கலைத்தார். “அது இதெல்லா பேசி… நேரத்த போக்க வேணா… எப்பிடி செய்யலாம்னுமட்டும் பேசுங்க…” என்றார்.
“ஆமா… பேச்சுல வார்த்த மாறுச்சுனா… பாசமாகி ரூட்டு மாறிடும்…” – மனோகரன் கடைசி மிடரை சடக்கென முழுங்கினான்.
“பாசம் மயிரு… அதெல்லா நேத்திக்கே முடிஞ்சிர்ச்சு… கண்டாரோலிமக எப்ப கழுத்துல தாலியக் காட்னாலோ அப்பவே பெத்தமகங்கற பாசம் பற்றெல்லாம் கரைஞ்சு போச்சு… தெனவெடுத்த தேவ்டியா முண்டயாத்தான்… அந்த சிறுக்கி மவள பாக்கும்போதெல்லா மனசு பதறுது…” – கண்களில் எரிச்சல் மிகப் பேசினார் அவளது அப்பா.
பாருக்குள் பக்கத்து டேபிளில் மப்ளர் போட்ட ஓராள் பக்கத்திலிருந்தவனைக் கட்டிப்பிடித்து “ங்ஙொக்காள…” – என்று அசிங்கமான அசைவுகளைச் செய்தான் கூடியிருந்தோர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அடுத்தடுத்த டேபிளுக்கான சரக்குகளை, சட்டை பாக்கட்டிலும் அக்குள்களிலும் கைகொள்ளாமல் அள்ளிக் கொண்டு கூட்டத்தில் மிதந்து வந்து கொண்டிருந்தான் டேபிள் சர்வர். அவனுக்கு பதினைந்து வயதுக்குள்தான் இருக்கும். மனோகரன் அவனை கண்ணசைத்து அழைத்தான்.
“ஒர் நிம்சம் சார்…” – இடுக்கிய சரக்குகளின் மேல் கவனம் மாறாமல் இவனுக்கும் பதில் சொன்னான்.
“என்னாண்ணே… இம்புட்டு வெறுத்துப் பேசுற…” சொல்லும் போதே அவளது அப்பா. அந்தப்பிள்ளைமேல் வைத்திருந்த பாசம் – பற்று ஞாபகத்துக்கு வந்தது. ஒரே ஒரு பெண்பிள்ளை. தன்குடும்பத்தில் – அண்ணன் தம்பி வகையறா பூராவும் ஆண்பிள்ளைகள்தான். தனக்காவது ஒரு பொம்பளப்பிள்ளை வேணும் என்று பாக்கிற மனிதர்களிடமெல்லாம் விபூதி வாங்குவதும், பெரியமனுசிகளிடம் வாக்கு பெறுவதுமாக அலைந்தது – அந்த அத்தாச்சியும் சேர்ந்துதான். ஒரு தரம் இதுக்காக வேண்டியே அய்யப்பன் கோயிலுக்குக் கூட மாலைப் போட்டு மலையேறியது. அதைக்கூட ஊர் கேலி பேசிச் சிரித்தது. “பொட்டப்பிள்ள வரங்கேட்டு மலயேறுன மொத மனுசெ நீதாண்டா சாமீ…”
ஆனால் அவர் வேண்டியபடி பெண்பிள்ளை பிறந்தது. பிறந்த தீட்டு நாள் கழிந்ததும் பொண்டாட்டி பிள்ளையோடு தேனியில் இருக்கும் அய்யப்பன் ஆஸ்ரமத்திற்குச் சென்று மணிகண்டன் சிலைக்கு பஞ்சாபிசேகம் செய்து கும்பிட்டார். அதெல்லாம் தேனி பெரிய பெரிய ஏவாரிகள்தான் செய்வார்கள். அந்த சிறப்பு பூஜைக்கு அண்ணன்தம்பி அத்தனைபேரும் குடும்பத்தோடு போய் தரிசித்து விட்டு வந்தனர்.
அந்தப் பிள்ளையை யாரும் ஒரு சொல் சொல்லிவிட முடியாது. கூலி வேலைக்குப் போனாலும் மகள் மேல் அத்தனை வாஞ்சை வைத்திருந்தார். பள்ளிக்கூடமும் அஞ்சாப்போடு நிறுத்தி விட்டார். ஆறாப்பு சேத்து விட மனசில்லை அவருக்கு…
“போதும்பா… ஆளாகுற வரைக்கும் அடுப்படி வேல பழகட்டும்… சமஞ்ச நாள்ல சட்டுனு ஒருத்தெங் கைல பிடிச்சுக் குடுத்துட்டம்னா நம்ம கடெங்கழிஞ்சிரும்… அய்ஸ்கூல்ல சேத்து… ஆம்பளப்பயககூட படிக்கவச்சு… படிப்புக்கு தக்கன நம்ம நடக்கணும்… கலிகாலம்… நாம யாரையும் கண்காணிக்க முடியாது… கூலி வேலப் பாக்கறதா… கூட ஒக்காந்து குடும்பம் நடத்தறதா… போதும்ப்பா… எம்புள்ள இந்தப்படிப்பிலயே ஒற வச்சு பொழச்சுக்கும்…”
அந்த நம்பிக்கையைத்தான் கண்ணாடிப்பாத்திரமாய் உடைத்துப் போட்டது முந்தாநாள் பகலில்.
யாருமே நம்பவில்லை. இந்தப்பிள்ளையா இப்பிடி செஞ்சுச்சு… வீட்டுக்குள்ளயே வளந்தகழுத… என்னிக்கி வெளிய எட்டிப்பாத்துச்சு… எப்பிடி அவன ஆளப்பிடிச்சிச்சு எந்தநேரம் பழகுனாங்கெ… ஆத்தா அப்பெ தொணையில்லாம தாலிகட்ட எப்பிடி துணிஞ்சாங்கெ… எல்லாமே அதிசயமாய் ஆச்சர்யமாய் இருந்தது.
அவளது அப்பாவுக்கு அவள் தாலிகட்டிக் கொண்டதோ… அவள் தன்வீட்டில் வந்து தஞ்சம் புகுந்ததோ பெரிசில்லை. இத்தனை வருசமாய் கருவாடாய் குடும்பம் நடத்திவந்த தனக்கு, ஒரு அசங்கல்கூட தெரியாமல் காளான் முளச்ச மாதிரி கண்ணுமுழிச்சு எந்திரிச்ச பொழுதில் தாலியோடு பெத்தமகள் வந்து வாசலில் நின்றால்…
முதலில் அவளை விட்டு விட்டு தானும் தன் குடும்பமும் தான் தூக்கில் தொங்க வேணுமென ஏற்பாடு செய்தார். அக்கம்பக்கமும் சொந்த பந்தமும் அவரைத் தேற்றியதில் தான் திட்டம் மாறியது.
தடம் மாறிப்போன தட்டுவாணி முண்டய தடயமில்லாமக் கொன்னுறணும்…
மறுபடி மறுபடி அவளது அப்பா அதையே திரும்பத் திரும்பச் சொன்னார். மனப்பாடப் பாட்டுப் போல மறந்த நேரமெல்லாம் வாய் விட்டுச் சொல்லிக் கொண்டார். மறந்து விடுவோமோ அல்லது பெத்த – வளத்த பாசம் வந்து மறிச்சுடுமோ என்ற பதட்டம் அவரை உலுக்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை சொல்லும் பொழுதும் மனசு கெட்டிப்பட்டு இறுகியது. மனசு இறுக இறுக அந்தச் செயல் குறித்த தீவிரம் முன்னிலும் அதிகமாய் வீர்யம் பெற்றது. கண்களில் வெறியும் கைகளில் துருதுருப்பும் காமம் பரவிய உடம்பாய்த் துடித்துக் கொண்டிருந்தது.
அந்தச் செயலுக்கு கற்பூரம் காட்டி ஆரத்தி எடுப்பவர்கள் தேவைப்பட்ட பொழுது மனோகரனும், பள்ளிக்கூட வாட்ச்மேன் நடேசனும் குருவை மிஞ்சிய சிஷ்யனாய்த் தெரிந்தார்கள்.
‘பொம்பளப் பிள்ளையே பூமிய கெடுக்க வந்த செம்மங்க’என்ற மேலான கருத்தை அடிக்கடி சொல்பவன் மனோகரன். ஒருகாலத்தில் ‘அவளை’ – மகளை பொக்கிசமாய் வளர்த்து வந்த காலத்தில் மனோகரனைப் பார்க்க வெறுப்பாய் இருக்கும். “பிள்ளைகளைப் பத்தி தப்பா பேசாதடா… அதுக… தாய்டா… உத்துப்பாரு.. நம்ம பெத்த ஆத்தாவாத் தெரியும்டா… ரத்தம் செத்த காலத்துல அதுதாண்டா… ஆத்தாளா நின்னு ஆதரவு குடுக்கும்…” என்கிற போதெல்லாம்… துச்சமாய்ப் பேசுவான் அசிங்கமாய் இகழ்வான்.
வாட்ச்மேன் நடேசனுக்கு பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் செய்யக்கூடிய ஆகப்பெரும் வேலை கூடிக்கொஞ்சுவதுதான். என்னைக்கு பேசினாலும் “இன்னிக்கி கக்கூசுல ஒம்பதாப்பு பிள்ளையும் பத்தாப்பு படிக்கிற பையனையும் பாத்தே…” என்பான். “பள்ளியயாடத்து குப்பத்தொட்டில பாத்தா லவ் லெட்டரும்… லூப்பு பெட்டியும் கெடந்துச்சு…” – என்றபடியான செய்திகளைச் சொல்பவனும், அறிவிப்பாளனுமாக இருந்தான். “முடிவாக பொம்பளப் பிள்ளைகள ஒரு வயசுக்குமேல பள்ளியயாடத்துல விட்டாளே பயக கெட்டுப்போயிர்றாங்கெ…” என்பது அவரது தீர்ப்பு. அதனாலேயே தன்னுடைய மகனை தேனியில் ஆண்பிள்ளைகள் படிக்கிற பள்ளிக்கூடமாகப் பார்த்து படிக்கப் போட்டிருந்தார்.
ரெண்டு பேருமே பங்காளிமார்கள். அவளைப்பற்றி அவர் கேள்விப்பட்டதைக் காட்டிலும், அவர்கள் கொண்டுவந்த செய்திகள்தான் அதிகம்.
“நீ ரெம்ப செல்லங்குடுத்துட்ட…”
“எதுக்கும் ஒரு லிமிட் வச்சிருக்கணும்”
“ஒம் மகளே நெறைய லெட்டர் எழுதீர்க்காம்ல…”
“ஆம்பளப்பய சுத்தி வார சேவல்தா… பம்மிப் படுக்கற கோழி எடங்குடுக்காம காரியம் நடக்குமா…”
“நூலு தனியாத்தா நிக்கும்… ஊசிதான தொளயக் காட்டுது”.
“அதானப்பா கருவுலேயே கள்ளிப்பால ஊத்திவிட்றாக… நாமதே தர்மத்துக்கு அஞ்சி பெத்தெடுத்து வளக்குறம்…”
“சேதி தெரிஞ்ச நாள்லயே அமுக்கிப்பிடிச்சு மருந்த ஊத்தி கொன்னுருக்க வேணாமா… இந்த வயசுலயே நம்மள ஒதறுன கழுத… நாளக்கி வந்து நம்மளக் காப்பாத்தி கஞ்சி ஊத்துமாக்கும்… நிய்யும் நாக்கத் தொங்கப் போட்டுகிட்டு போ”
“சீ… அப்பிடி மானங்கெட்ட பொழப்புக்கு – இன்னிக்கு வாராவ போறவனுக்கு தாரவார்த்துக் குடுக்கலாம்ல…” என்ற நடேசன் “மருந்தெல்லா குடுத்தா ரெம்ப புண்ணிய செஞ்ச கட்டயாயிரும். நல்லா புளியங்கட்டய எடுத்து பொடனீல போட்டு ரத்தம் கக்கவச்சுக் கொன்னாத்தே நாளப்பின்ன வேற எந்தக் கழுதய்க்கும் இப்பிடி ஒரு நௌப்பே வராது…”
அப்படியயல்லாம் ரணகளப்படுத்த தன்னால் இயலாது என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார். இதுவரைக்கும் அந்தப் பிள்ளையை சுண்டுவிரல் நீட்டி அடித்தது கிடையாது.
“அதனாலதே இப்பிடீ…”
“வேண்டாம்… நாலாம்பேருக்குத் தெரியாம காரியம் நடக்கணும்”
“போலீஸ் கேசாயிரும்ங்கறீயா…”
“ப்ச் வேண்டாத களைய வெட்டிப் போட்டுர்ரம்… இதுக்கு எது ஈசியான வழியோ அதத் தேடணும்…” – மனோகரன், அவருக்கு ஆதரவாய் பேச, அது சரியயனப்பட்டது.
பையன் அடுத்தொரு க்வாட்டரைக் கொண்டு வந்தான். கலப்பதற்கு அரை பீர் கொண்டு வரச் சொன்னான் மனோகரன்.
“அப்ப கயத்துல கட்டித் தூக்கீருவமா…”
“அதுகழுத… ஆயுசு முடியுற வரைக்கும் வீட்டச் சுத்திச் சுத்தி வந்து இம்ச குடுக்கும்ப்பா…”
“எப்பிடிச் செத்தாலும் அல்பாய்சுல போறது சுத்தத்தான செய்யும்… அதபெறகு பாத்துக்கலாம். அதே கோடாங்கி இருக்கான்ல… சுருக்கப்போட்டு கழுத்துல மாட்டி… டக்குனு விட்டத்துல இழுத்து முடிச்சப் போட்டு விட்டம்னா கணநேரத்துல காரியம் முடிஞ்சிடும்”
“ச்ச.. அதுக்கெல்லா நாலஞ்சாள் வேணும். திமிரும்… ஓடும்… விட்டத்துல கட்டங்குள்ள கூச்சல் போடும்… ஒரே சச்சரவா ஆயிடும்… பேசாம நாய்க்கு ஊசிபோட்டுக் கொல்லுறாங்கள்ல அவனக் கூப்பிட்டு வந்தா…!” – நடேசனுக்கு திடீரென நேற்று தனது தெருவில் நாய் பிடித்த கும்பல் ஞாபகத்துக்கு வந்தது.
“ஏன்… எங்க வீட்டுக்கு எதித்தாப்ல இருக்க, இன்ஸ்பெட்டர்கிட்ட துப்பாக்கிய வாங்கிட்டு வந்து சுட்டுச் சாக வச்சா இன்னம் நல்லாருக்குமே…”
“பேசாம… தூங்குறப்ப தலகாணியப் போட்டு மூச்சப் புடிச்சுட்டா” – முதன்முதலாக அவளது அப்பா வாய் திறந்தார்.
மற்ற இருவரும் அமைதியாய் இருந்தார்கள். யோசிக்கிறார்கள். சிகரட் பாக்கட் காலியானது. இவர்களது டேபிளை நாடி அடுத்து ஒரு கும்பல் இடம் காலியாகுமா என நோட்டம் விட்டபடி சுற்றியது. புதிதாய் வந்த க்வாட்டரின் அளவு பார்த்து ஒதுங்கிப் போனது. பாட்டிலை கவிழ்த்து மூன்று தம்ளரிலும் ஊற்றினான். அவளது அப்பா தனக்கு வேண்டாமென கையமர்த்தினார். சீக்கிரம் ஒரு தீர்வு வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மிச்சமிருந்தது.
“என்னா…” – என்று மறுபடி கேட்டார். தனது திட்டத்தை அவர்கள் அங்கீகரிக்கிறார்களா என்பது தெரியவில்லை. “ஆள்த் தேவயில்ல… நாமளே ஓராள் காலப்பிடிக்க, ரெண்டுபேர் மூச்ச நிறுத்திடலாம்…” யோசனையை பலமாக்கினார்.
“சரித்தான்… ஆனாலும்… இதுமாதிரி கேசுக இம்சப்பட்டுச் சாகணும்ப்பா… தான் செஞ்சது மகாப் பெரிய தப்புண்ணு துடிச்சுச் சாகணும்…” – நடேசன் சித்ரவதைக்கான சிந்தனையில் தீவிரம் காட்டினான்.
“அதுக்காக… அடிச்செல்லாங் கொல்ல முடியாதப்பா… அதென்னா நாயா… பாம்பா…” – மனோகரன் உடனடியாய் மறுத்தான். உடனே, “அப்ப ரெண்டு பேர் கையக் காலப் புடிச்சுகிட்டு மருந்த ஊத்தி விட்ருவம்… கதறும்ல…” என்றான்.
“அதுஞ்சரித்தான்… ஒவ்வொரு கழுதெக அதச் செமிச்சிட்டா…”
அவளது அப்பாவுக்கு தலைகிறுகிறுத்தது. எதனால் என தெரியவில்லை. அளவுக்கு மீறிய போதையா… எக்குத்தப்பான சிந்தனையா… ஒண்ணுக்கு முட்டியது – எழுந்தார்.
“ஒண்ணுக்கு போய்ட்டு வாரே… நல்ல முடிவா பேசி வைங்க… – தள்ளாடியபடி கழிவறைக்குப் போனார்…”
திரும்பி வருகையில் அவருக்கு கயிறுதான் சரியாய் இருக்கும் எனப்பட்டது. துடிக்கத் துடிக்கச் சாவாள். ஒவ்வொரு துடிப்பிலும் கதறுவாள்.
அவர்களோடு சேரில் வந்து உட்கார்ந்த போது பாட்டில் காலியாயிருந்தது. மீதமிருந்த பீரை எடுத்துக் குடித்தார்.
“அதாண்ணே… விட்டத்துல தொங்கவிட்ருவம்ணே…”- மனோகரன் சொல்ல… அவளது அப்பாவின் முகம் பிரகாசமானது…
“இதக் கொண்டாடனும்ல… ஆளுக்கொரு கட்டிங் சொல்லுவமா…”
“வேண்டாம்னே… ஒரு ஆப்ப வாங்கி வச்சுக்க… வீட்ல போயி தேவப்படும்ல…”
பில் வந்தபொழுது அவளது அப்பாவோடு வேலை செய்யும் காளிப்பன் ஓடிவந்தான்…
“எங்கெங்க ஒங்களத் தேடுறது…” – மூச்சிரைத்தது அவனுக்கு.
“ஏன்… கட்டிங் போடுறியா…” – அவளது அப்பா நிதானமாய்க் கேட்டார். தலைகிறுகிறுப்பு முடிந்திருந்தது. தள்ளாட்டம் மட்டும் அதிகரித்திருந்தது.
“அங்க ஒம்மக மருந்தக் குடிச்சிருச்சு… ஊரே வீட்ல கூடி இருக்கு… சீக்கரமா வா…” – சொன்னவனின் கண்கள் அவளது அப்பாவின் கையிலிருந்த பிராந்தி பாட்டிலின் மேல் நிலைத்திருக்க, அப்பாவின் கைப்பிடி தளர்ந்து பாட்டில் கீழே விழுந்து உடைந்து சிதறியது. நொடிப்பொழுதில் பிராந்தியின் வீச்சம் பரவியது.

(வெளிவரவிருக்கிற ம.காமுத்துரையின் ‘பூமணி‘ கதைத் தொகுதியிலிருந்து)

Series Navigation

ம.காமுத்துரை

ம.காமுத்துரை