ம.காமுத்துரை
ஒரு கல்லெறியின் விளைவாக இடம் பெயர்ந்த அந்த நாய் சாவதானமாக நடந்து வந்தது. பகவதியம்மன் கோவிலின் வெளிப்படிச் சுவரோரமாய் அதன் நாசிக்கு எதோ உணர்த்தி இருக்கவே, சுவரின் கீழ்ப்பகுதியை முகர்ந்தபடி நடந்து சென்றது. சிற்சில இடங்களில் ஒரு வினாடி நின்றும், நிதானித்தும், நாசியை உயர்த்தி விடைத்து யோசிப்பதும் பிறகு நடையைத் தொடர்வதுமாய் கோயிலைச் சுற்றி வந்தது.
கோயிலின் பின்புறம் – போயமார் தெருவுக்கு போகிற பாதையில் – ஆளுயர கல் ஒன்று கோயில் சுவரை ஒட்டி கிடத்தியிருந்தது. கோயிலை எடுத்துக் கட்டும் போது மீந்து போன கல், பின்னாளில் எதாகிலும் ஒரு வேலைக்குத் தேவைப்படும் என ஒதுக்கிப் போட்டிருந்தனர். கோயில் கல் என்பதால் அதுபாட்டுக்கு வீதியில் பத்திரமாய்க் கிடக்கிறது.
அந்தக் கல்லில் வந்து தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தது அந்த நாய். கல்லின் மேல் அழுக்கு மூட்டையாய் சுருண்டு கிடந்த பழனியையும் காலிலிருந்து தலைவரை முகர்ந்து பார்த்தது. ஒரு சமயம் தலையை உதறி அண்ணாந்து வானம் பார்த்தது. அப்புறம் கல்லை ஒட்டி நின்று கால் தூக்கி ‘சர்க் சர்க்’கென நாலைந்து தரம் அந்த அழுக்கு பொதியின் மேல் ஒண்ணுக்கடித்தது.
அந்த சிறுநீரின் சூடு, பழனியை உசுப்பி விட, தலையைப் போர்த்தியிருந்து வேட்டியை லேசாய் விலக்கி பார்த்தான். நாய் அவனது முகத்துக்கு நேராய் நாக்கைத் தொங்கவிட்டு, சாவதானமாய் கண்ணை சிமிட்டியபடி நின்று கொண்டிருந்தது.
பீழை கட்டிய கண்கள் கூச இமைகள் மெல்லத் திறந்த பழனி சே… என நாயை விரட்டினான். “நெதமும் ஒன்னோட இதே லச்சயாய் போச்சு… ஒண்ணுக்கிருக்க வேற எடம் கெடக்கலியா… சனியய…” – என்றபடி எழுந்தான்.
வேட்டியில் சாப்பாட்டு தட்டு அளவு வட்டமாய் சிறுநீர்த் தடம் விழுந்திருந்தது.
நன்றாய் விடிந்து விட்டது போல் தெரிந்தது. தெருவில் ஆள் நடமாட்டம் கூடி இருந்தது. வேலைக்குப் போகும் மாட்டு வண்டிகளின் பட்டா சக்கரச் சத்தம் கீச்மூச் சென காதைக் கிழித்தது. அவன் எழுந்ததைக் கண்டதும் நாய் நகர்ந்து லொங்கோட்டம் ஓடி மறைந்தது.
அது ஓடிவிட்டதெனத் தெரிந்ததும் மறுபடி படுக்க ஆரம்பித்தான். ஒண்ணுக்கடித்த ஈரம் காற்றுப்பட்டு சிலுசிலுத்தது. கையையும் கால்களையும் முடக்கி முடக்கிப்படுத்தான். கண்களில் பீழை முள்ளாய் உறுத்தி கண்ணீரைக் கசியச் செய்தது. கண்களில் சுரந்த கண்ணிர் மிகுதியால் மூக்கிலும் சுரக்க… இனி உறங்க முடியாது எனப் பட்டதும் வாய் பீடி கேட்டது.
எழுந்து வேஷ்டியைப் போர்வையாக்கி உட்கார்ந்தான். ராத்திரி பொறுக்கி வைத்த பீடிக்குவியல் கல்லுக்கு கீழாய் – சுவரோரம், தலமாட்டில் கிடந்தது. குனிந்து, இருப்பதில் கொஞ்சம் பெரியதாய் எடுத்தான். பனிக்காற்று பட்டு விரைப்பிழந்து இருந்தது. மண் துடைத்துப் பார்த்தான். முக்கால் கட்டை, வாயில் வைத்து, தீக்குச்சி தேடினான். ஓட்டைச் சேப்பு வெறுமையாயிருந்தது. பற்றவைக்காமலேயே வெறும் பீடியை உறிஞ்சினான். பீடி இலையின் காரம் தொண்டக்குழியைத் தொட்டு கரகரப்பைக் கொடுத்தது. கூடவே மண் துகள்களும் நாக்கில் தட்டி புருபுருத்தன. மண்ணை துப்பிவிட்டு எழுந்து எதிரிலிருந்த பலசரக்கு கடைக்கு வந்தான். காலை ஏவாரம் மும்முரமாய் இருந்தது.
சுவரோரமாய் நிறுத்தியிருந்த உப்பு மூட்டையருகே ஒருவர் நின்று சிகரட் பிடித்துக் கொண்டிருந்தார். நேரே அவரிடம் வந்தான். அவர் கடையில் எதோ சில பொருள்கள் போடச் சொல்லி இருப்பார் போல. கட்டுவதற்குள் ஒரு ‘தம்’ அடித்து முடிக்க திட்டம். பழனி அவரது எதிரே வந்து நின்று ‘ண்ணே’ – என்றபடி வாயிலிருந்த பீடியை எடுத்து விட்டு ‘கொஞ்சம் தீ’ – எனக் கேட்டான்.
குரல் கேட்டு திரும்பியவர், அவனது முகத்தையும், போர்வையாய்ப் போர்த்தி இருந்த ஸ்டைலையும் பார்த்ததும் கோபம் வந்தது. யார்ட்ட வந்து தீ கேக்குறான்… சத்தம் போட முடியாது. சரிக்குச் சரியானவன் என்றால் சரி – இவனோடு மல்லுக்கட்டி… இல்லை எனச் சொல்லாமல் கடைப்பக்கம் திரும்பி,வேகமாய் சரக்குப் போடச் சொன்னார். அவர் பேசி முடிக்கும் வர பொறுமைகாத்த பழனி, மறுபடி… ‘ண்ணே…தீ’ – எனக் கேட்டான்.
வாங்காமல் விடமாட்டான் என்று நினைத்தவர். சிகரெட்டை வேகமாய் உறிஞ்சி புகையால் நெஞ்சு நிரப்பி விட்டு, அவனிடம் சிகரட்டை நீட்டினார். பாதிக்கட்டை… நிம்மதியாய் தம் அடிக்கக் கூடி முடியவில்லை.
அதை பழனி வாங்கிய நிமிசத்தில் கடைக்கு இரண்டு பொம்பளைகள் வேகமாய் ஓடிவந்து பரபரப்பை உண்டாக்கினார்கள். “கொஞ்சம் உப்பு குடுய்யா… சீக்கிரம்…” – முன்னால் நின்றிருந்த கூட்டத்தை துளைத்துக் கொண்டு இருகையும் ஏந்தி வந்து கேட்டாள் முதல் பெண்மணி.
“யே… என்னா இப்பிடி இடிச்சுக்கிட்டு வார… முன்னாடி நிக்கிறதெல்லா ஆளாத் தெரியலியா…” – இடிப்பட்ட பெண் ஒருத்தி முகம் சுளித்து திட்டினாள்.
அதற்கு ரெண்டாவதாய் வந்த பெண், “அவசரம்மா…” என்றவள் “ஏலே நாகராசூ…” – என்று கடைக்காரரை நீட்டி முழக்கிக் கூப்பிட்டாள், “கொஞ்சம் உப்பு குடுடா… அவசரம்னா நீட்டி நெளிச்சி கிட்டுருப்பான்…” – என்று கடைக்குள் கை நீட்டினார்.
“என்னா மதினி… அவசரம் அவசரம்னு பலசரக்கு கடைக்கா வருவாக… மந்தைக்கிப் போக வேண்டிதான…” – என்ற பலசரக்கு கடைக்காரன் ‘ஐம்பது சீரகம்… அப்புறம்’ என்று முன்னாலிருந்த வாடிக்கையாளரைக் கேட்டான்.
“யே.. நம்ப சரோசா மக மருந்தக் குடுச்சுப்பிட்டாடா… கொஞ்சம் உப்ப அள்ளிக்குடு…” – முதலில் வந்தவர் விசயத்தைச் சொல்ல, கடை பரபரத்தது…
“ஆரு… அந்த சிமிட்டியா…”
“சின்னப்பிள்ளதான…”
“ஒரு பிள்ளதான இருக்கு… சின்னது பெரிசான்னா…”
“நல்லாத்தானடி இருந்தா… நேத்து மக்கெ நாள்க் கூடப் பார்த்தேனே…!”
“எப்ப…?”
குரல்கள் பலவாய் கேள்வி எழுப்ப பதில் சொல்ல யாருக்கும் நேரமில்லை. கடைக்காரனும் உடனடியாய் பரபரத்தான்.
“அண்ணாச்சீ…!” – என்று சிகரட் தந்தவரை அழைத்தான். “அந்தச் சாக்குல நாழி இருக்குண்ணே கொஞ்சம் உப்ப அள்ளிக் குடுங்க…” – என அவரிடம் சொல்ல, பெண்கள் இருவரும் கூட்டத்தை விட்டு விலகி உப்பு மூட்டை பக்கமாய் வந்தனர்.
அரைப்படி நாழி நிறைய உப்பை அள்ளிய அவர், “எப்பிடிமா கொண்டு போவீங்க” – என்றார்.
இருவரும் இருகை இணைத்துக் காட்ட ஆளுக்கு ஒரு கை நிரப்பினார்.
“ஆரு கண்ணப்பெ மகளா…” – எனக் கேட்டார் அவர்.
“ஆமாய்யா…” – சொல்லிவிட்டு தமது வயதையும் மீறி இரண்டு பெண்களும் ஓடினார்கள். அவர்களைத் தொடர்ந்து கடையிலிருந்து ஒன்றிரண்டு பேரும் அவர்களைப் பின் தொடர சிகரட்டுக்காரர், கடைக்காரரிடம் “சரக்க போட்டு வையி நாகராசூ… வந்திர்ரேன்…” – என்றபடி அவரும் அந்தப் பெண்களைத் தொடர்ந்தார்.
பழனிக்கு இந்த பரபரப்பு சட்டென விளங்கவில்லை. பீடி சொதசொதப்பாய் இருந்ததால் கங்கு ஏற மாட்டேனென்றது உறிஞ்சி உறிஞ்சி வாய் வலித்தது. இந்த சமயம் உப்பு வாங்கி நகர்ந்த பெண்களோடு அவனது கால்களும் தன்னிச்சையாய் நகர, பீடியை வீசி விட்டு சிகரட்டைப் புகைக்க ஆரம்பித்தான். வாய் நிறைய புகை சேர்ந்தது. மூக்கு கண்ணெல்லாம் ஏறி இருமலைக் கொண்டு வர திணறிப் போனான். கை விரலில் சிகரட்டை கவ்வியதும், வேட்டியை இடுப்பில் கட்டிக் கெண்டான். சட்டையை கீழே இழுத்து விட்டு ஸ்டைலாய் நடக்கலானான்.
முன்னால் போனவர்கள் கொஞ்சம் விரைசலாய் நடப்பது தெரிய அவர்களுக்கீடாய் இவனும் நடந்தான்.
“யே பழனீ…” – மச்சால் நாயுடு சந்துக்குள் நுழைந்ததும் முதல் வீட்டுக்காரம்மாள் கூப்பிட்டார்.
சிகரட்டை மறைத்துக் கொண்டு வந்தான்.
“என்னாடா… ஓட்டம்..?”
கடையில் கேட்டதை ஒப்பித்தான். “மருந்து குடிச்சிருச்சாம்…”
“ஆரு…?”
“சின்னப்புள்ள…”
“சின்னப்புள்ளயா…”
“யாரோ சிமிட்டியாம்…”
“சிமிட்டியா… என்னாடா ஒளர்ர…”
அவனுக்கு அதற்குமேல் தெரியவில்லை. அந்தம்மாள் அவனைப்படுத்த, அவன் சொன்னதையே திருப்பிச் சொன்னான்.
“அந்தா பஞ்சாபீஸ்ல வேல பாக்குதுல்ல… சரோசா…” என்றபடி வந்தார் உயரமான ஒரு அக்கா. பழனி ஒதுங்கி நின்று கொண்டான்.
“ஆரு… ஒண்ண மாதிரி வளர்ந்த பொம்பள…”
“ஆமாமா…”
“ப்ச்… நடு வீட்டுக்காரியா… சரி சரி…”
“அது மகதே…”
“ஒத்தப் பிள்ளதான…”
“ம்..!”
“என்னாவாம்”
“ஆரு கண்டா… ராப்பூராம் சண்டன்னாக… அப்பெங்காரெ காலம்பரவே எந்திரிச்சுப் போய்ட்டானாம். இந்தச் சண்டாளி, வெள்ளென எந்திரிச்சதும் பூச்சி மருந்தக் கலக்கிக் குட்ச்சிருக்கா…”
“பெரச்சன என்னான்டு தெரிலயாக்கும்..?”
“இன்னிமே தெரியும்…!”
“என்னா பெரச்சன… மூணுபேரும் சம்பாதிக்கிறாக… வேற… கொமரி எதும்… கூடு பாஞ்சுட்டாளா…?”
“கூடுபாஞ்சாளா… கவடு நொளஞ்சாளான்னா… நா என்னா பக்கத்துலயா இருக்கேன்…?”
“காலக் கொடும…!”
சிகரட் புகைந்து சாம்பல் உதிராமல் நீளமாய் வேடு கட்டி நின்றது. அதனை உதிர்த்து விட பழனிக்கு மனசில்லை. சிகரட்டின் நீளம் குறையக் குறைய தம்மின் இழுவையைச் சுருக்கினான். அந்தப் பெண்களின் பேச்சு இவனுக்கு சம்பந்தமில்லா ஒன்றாய் மாறிய சமயம் அவன் நகர்ந்தான். சம்பந்தப்பட்ட வீட்டுக்குப் போவதற்கான விருப்பத்தை முன் வைத்தான். கால்கள் நடை போட, சிகரட்டின் சாம்பல் உதிரா வண்ணம் நடை கவனப்படுத்தப்பட்டது.
எதிர்ப்பக்கம் வந்த சைக்கிள்காரன் ஒதுங்க வழியில்லாமல் “யே வெண்ண… ஓரமா போடா…” – என்று திட்டிவிட்டு பழனியை சுற்றிக் கொண்டு போனான். பின்னால் வந்த ஆட்டோ ‘பாம் பாம்’ என ஆரன் அடித்து அவனை உரசிக் கொண்டு கடந்தது.
கிட்டத்தட்ட அந்த வீடு வருகிறவரை சாம்பல் உதிரவில்லை. தீக்கங்கு அணைந்து புகை தீர்ந்த சமயத்தில் சடக்கென மொத்தமாய் சாம்பல் ஒடிந்து கீழே விழுந்தது. மீதமிருந்து சிகரட்மேல் பஞ்சு மட்டுமே விரலில் மீந்திருந்தது. உருட்டி உருட்டி பார்த்தான். பிறகு அதையும் சட்டைப் பையில் போட்டு பத்திரப்படுத்திக் கொண்டான்.
அந்த வீட்டில் கூட்டம் மொய்த்திருந்தது. ஆண்களைக் காட்டிலும் பெண்களே கூடுதல். ஆண்கள் வாசலில் நின்றிருக்க வரக்கூடிய பெண்கள் அவர்களை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். பழனியும் உள்ளே நுழைந்தான். யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. யாரையும் இடிக்காமல் தொடாமல் வீட்டின் சுவரோரமாய் ஒதுங்கி ஒதுங்கி நின்றான். அது பாதுகாப்பாய் இருந்தது.
ஒரே ஒரு பொம்பளை மட்டும் தலையில் அடித்து அடித்து அழுது கொண்டிருந்தது. அந்தப் பெண்ணைச் சுற்றி ஒரு கூட்டம்.
“பாதகத்தி மக இப்பிடியா செய்வா…”
“எந்நேரம்…”
“ஒண்ணாத்தான ஒறங்குனா…”
“வேற எதும் சொன்னாளா…?”
“சரி… அழுவறத நிறுத்து… ஒண்ணுமில்ல…”
“உப்பக் குடிச்சு வாந்தியயடுத்துட்டா சரியாப் போகும்…”
“நல்லவேள… ஒடனே கண்டதால நல்லதாப் போச்சு…”
“இந்தளவா… அசால்ட்டா இருக்கறது…”
“என்னாதே செல்லம்னாலும்… பொட்டக்கழுதகள ஒரு வயசுக்குமேல வீட்ல வச்சிருக்கக்குடாது…”
“எந்தப்புத்துல எந்தப் பாம்பக் காண்றது…”
“வல்லண்டியா ஆம்பளப்பயக திரியறப்ப நீ அகமலைக்குள்ள ஒளிச்சு அஞ்சு பேரக் காவலுக்குப் போட்டாலும் நடக்குறது நடந்துதான் தீரும்…”
“சினிமாவும் டிவியும் வேணுங்கறதச் சொல்லித் தருதுல்ல…”
பக்கத்தில் இன்னொரு பெரிய கூட்டம், “ஊத்து, எடு… அமுக்கிப்பிடி… குடிடீ… ஒண்ணுஞ்செய்யாது… கொஞ்சம் கொஞ்சமா…விடுங்க…” என்ற முட்டி மோதிக் கொண்டிருந்தது. வருகிற பெண்களெல்லாம் அங்கேதான் தலைநுழைத்து பார்த்துப் பார்த்து நகர்ந்தார்கள். அதற்குள்ளேதான் மருந்து குடித்த பிள்ளை இருக்கும் போல என யூகித்தான் பழனி. பெண்களின் நகர்வில் கிடைத்த இடைவெளியில் கண்களை ஊடுருவிப் பார்க்க முயற்சித்தான் தெளிவாய்த் தெரியவில்லை… ஏதோ ஒரு பாவடையில் ஒரு சின்ன பொம்பள கிடத்திக் கிடப்பது மாதிரி தெரிந்தது.
திடீரென அந்த பெருங்கூட்டத்திலிருந்து ஒரு கனத்த பெண் தண்ணீர்ச் செம்போடு மீண்டு சின்னக் கூட்டத்தை வந்தடைந்தார்.
“சோப்பு இருக்கா…” – செம்பை தரையில் வைத்து விட்டு, தலையில் அடித்துக் கொண்டிருந்த பெண்ணைக் கேட்டார்.
சரியாய்க் காதில் விழாததால் மூன்றுமுறை அதே கேள்வியைக் கேட்க வேண்டி இருந்தது.
“சோப்பா…? என்னா சோப்பு…?” – அந்தப் பெண் கேள்வியை முடிக்கும் முன் சுற்றியிருந்தவர்களில் ஆயிரம் கேள்விகள் முளைத்தன.
“என்னாச்சு”
“உப்புக்கரச்சு ஊத்தியாச்சு… அவ்வளவா வாந்தி வரல… கையளவுதே எடுத்தா…” என்ற கனத்த பெண் மறுபடி, “எம்புட்டு குடிச்சாண்டு தெரியலியா…” என்று தலையில் அடித்துக் கொண்டிருந்தவளிடம் கேட்டார்.
“என்னா பேச்சு இது… என்னமோ இந்த மகராசியே கலக்கி ஊத்திவிட்ட மாதிரி கேக்குற… குடிச்சவகிட்ட கேளு…”
அதற்கும் தலையாட்டிய அந்தப் பெண், ‘தெரியல’ என முனங்கினார்.
“மூட்டப்பூச்சி மருந்தத்தான குடிச்சா… அதெம்புட்டு இருக்கப் போவுது…”
“ஆர் கண்டா அக்கா… இந்தக் காலத்து பொடுசுகள என்னாண்டு சொல்ல…”
“சரி சரி சோப்பு வச்சிருக்கியா…”
“தொவைக்கிற சோப்புதே… இப்பதே புதுசா ஒன்னு வாங்கி வந்தே… அடுப்படில வச்சனா வீட்டுக்குள்ள வச்சனான்டு தெரியலியே…” – மறுபடி புலம்பலானர்.
“சரி… சோப்பெல்லா கரைய நேரமாகும் இரு… எவ வீட்ல சோப்பு பவுடர் இருக்கு எடுத்தாரேன்…” – என்று உட்கார்ந்திருந்த ஒரு நீளமான சடைபோட்ட பெண் விருட்டென எழுந்து சென்றாள்.
“அங்கனயே ஒரு சட்டில தண்ணிவிட்டு கலக்கி கொண்ட்டு வா…” – என்று கனத்த பெண் ஆணையிட, பழனிக்கு அந்த இடமும் அலுத்துப் போனது. மெதுவாய் நகர்ந்து வீட்டினுள் நுழைந்தான்.
வெளியிலிருந்த பெருங்கூட்டத்தில் ஒரு துணுக்கு கூட உள் வீட்டுக்குள் இல்லை. ஒரு சின்னக்குழந்தை மட்டும் இருட்டில் பாய் விரித்துப் படுத்திருந்தது. அதற்கு எதிர்த்தாற் போல சின்னதாய் ஒரு ரூம். தண்ணீர்ப்பானை, குடம்… சருவம், சட்டி என்று நிறைய பாத்திரங்கள் இருந்தன. மேலே ஆலாங்கில் பலகை போட்டு அங்கேயும் பலதரப்பட்ட பாத்திரங்கள், பித்தளையில் மினுங்கிக் கொண்டிருந்தன. மேலே இருந்த சின்ன சருவச் செம்பை எடுத்தான். ரெம்ப கனமாய் இருந்தது. கீழே பார்வை போனது. அடுப்பில் இருந்த ஈயச் சட்டி கவனத்தை ஈர்க்க சருவச்செம்பை தலைமாத்தி வைத்து விட்டு கீழே உட்கார்ந்தான். ஈயச் சட்டி ஒரு குண்டானில் தலைகுப்புற சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதனை நேரே நிமித்தி விட்டான். சட்டி லேசான சூட்டில் இருந்தது. சட்டியின் மேல் மூடியிருந்த தட்டை எடுக்க, ஆவி வெளிவந்து அரிசிச் சோறு மணம் வீசியது.
பின்னால் திரும்பிப் பார்த்தான். ஒருத்தரும் தென்படவில்லை. சட்டிக்குள் கைவிட்டான். லேசாய் சுட்டது. இருந்தாலும் சோற்றை அள்ளி வாய் நிறைய மென்றான். வாய் கொள்ளாமல் கீழே சிந்தியது. எழுந்து வேட்டியை நன்கு இறுக்கிக் கட்டினான். சோத்தை அள்ளி அள்ளி வேட்டிக்குள் போட்டான். வேட்டி கீழே இழுத்தது. போதுமென்கிற போது நிறுத்தி வேட்டியின் மறுமுனையை மடித்து சட்டைக்கு மேல் இறுக்கிக் கட்டிக் கொண்டான். எழுந்த போது சன்னல் விளிம்பில் சோப்பும் ஊறுகாய் பாக்கெட்டும் புதுசாய் இருக்கக் கண்டான். இரண்டையும் ஒரு சேர எடுத்து சட்டைச் சேப்பில் அடக்கிக் கொண்டான்.
அந்த ரூமை விட்டு கடந்து கூட்டத்தில் வரும் போது காலை அகட்டி அகட்டி நடக்க வேண்டி இருந்தது. கூட்டத்தின் இன்னமும் கூச்சல் அடங்கவில்லை. முன்போலவே சுவரோரமாய் நகர்ந்து வந்தான்.
“லே பழனி…” – யாரோ ஒரு பெண் அவனை அடையாளம் கண்டு கூப்பிட்டார்.
அப்படியே கொஞ்சம் வேகமாய் நகர்ந்தான்.
“ஒனக்கும் வேடிக்கையாப் போச்சாக்கும்…!” – அதே பெண் மறுபடி கேட்க, பதில் பேசாமலேயே நகன்றபடி இருந்தான்.
“இவெ எங்கிட்டு வந்தயான்” – ஒரு கிழவி, கேட்ட பெண்ணிடம் கேட்டார்.
“நீ எப்பிடி வந்தியோ அப்பிடித்தே…”
“என்னத்தியாச்சும் களவாண்ட்டுப் போயிறப் போறான்…”
“ஆமா… இங்கியும்… தங்கமும் வெள்ளியும் நிரஞ்சு கெடக்கு அள்ளீட்டுப் போகப் போறான்… விடு ஆத்தா…”
“ஒரு ஏன பானத்தச் சொல்லு…”
“ஏன பானத்த எடுத்து அவெம் பொண்டாட்டிக்கு சீர் குடுக்கவா போறான்… பாவம்… கஞ்சிக்கிச் செத்தவன் எதாச்சும் சொல்லி போற காலத்துல பாவத்த சேத்துக்காத…”
எந்தக் கேள்விக்கும் பதில் கூறாது வீட்டை விட்டு வெளியேறிய பழனி, நேரே மந்தைத் தோட்டம் வந்து கிணற்றடியில் வேட்டியை விரித்தான்.
makamuthurai@gmail.com
- யமுனா தீரத்து நந்தக்குமாரன்….
- அங்காடித் தெருவும் தேநீர் இடை வேளை நாவலும்
- 2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்கப்படுகிறது
- கே. எஸ். பாலச்சந்திரனின் கரையைத்தேடும் கட்டுமரங்கள்.
- பெண்ணிய நோக்கில் அறநெறிச்சாரம் காட்டும் கற்பு
- புதுக்கவிதைகளில் தாய்மை
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -17
- நாற்பது நாட்களில் செவ்வாய்க் கோள் செல்லும் அதிவேகப் பிளாஸ்மா ராக்கெட் ! (கட்டுரை -1) (The Superfast Fusion Power Plasma Rocket
- மங்களூரு விபத்து மே 22, 2010
- ரிஷி கவிதைகள்
- கண்ணாடி வார்த்தைகள்
- தள்ளாட்டம்
- களம் ஒன்று கதை பத்து வரிசை – 3 – அவன்பாடு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி -போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் -கவிதை -29 பாகம் -2
- இது வெற்றுக் காகிதமல்ல…
- வேத வனம் விருட்சம் 88
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று – கவிதை -11 – பாகம் -2
- உயர்சாதிமயநீக்கம்
- முள்பாதை 32
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திநாலு
- ஒரு ஆசிரியை பரீட்சை வைக்கிறாள் தன் கணவனுக்கு…..
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -20
- என்ன தவம் செய்தனை