நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில் தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக் குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்க்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்துவிட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக் குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.
***************
நீச்சல் தெரியாது இருவருக்கும்
என்ற உணர்வு
படகுப் பயணத்தின் மகிழ்ச்சியில்
பொத்தலிட்டுக் கொண்டிருந்தது.
துடுப்புகளின் ஓய்வற்ற துளாவலில்
தண்ணீரின் உறைந்த தகடுகள்
உடைந்து விழுந்தன.
வட்டமடிக்கிற ஏரியின்
குளிர்விளிம்பில்
அமிழ்ந்து நீர் அள்ளிய
விரல் மரத்துப் போனாலும்
அல்லிப்பூ
பறித்தெடுத்த பரவசத்தில்
பனியுடன் அப்பால்
நகர்ந்து விட்டிருந்தது
பயம்.
அனைவரும் பார்க்க
முத்தமிட்டுக் கொள்ளவும்
முடியலாம் இனிமேல்.
**************
இத்தனை காலம்
சவரக் கத்தியைத்
தீட்டி மழித்தவன்.
பசிக்குப் பயந்து
மல்லிகைப்பூ விற்கையில்,
எனக்கு மட்டும் தெரிகிறது
கத்தித் துரு
ஒவ்வொரு பூவிலும்.
***********
முற்றிலும்
விரைத்துக் கிடந்தது பிணம்.
நெட்டுக் குத்திய
இறந்த பார்வையின் மேல்
மழை தெறித்துக் கொண்டிருக்கிறது.
வாகனச் சக்கரங்கள்
சேறு தெளித்து இரங்கல் செய்ய
ஈரச் சிதையில்
நீண்டு கொண்டிருந்தது கால்கள்.
நடைபாதையில்
நேற்றுப் போலவே பழம்
விற்றுக் கொண்டிருந்தார்கள்.
பேரம் பேசி நிற்கும்
சாதுரியக் கைகளில்
உருளும் ஆப்பிளில்
பக்கத்துச் சாவின்
அடையாளம் எதுவும் இல்லை.
ஏற்கனவே தொலத்திருந்தது
வாழ்வின் நிழல்கள்.
******
(கல்யாண்ஜி கவிதைகள் : புதுமைப் பித்தன் பதிப்பகம், 7 முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நகர், அசோக் நகர், சென்னை 600083- விலை- ரூ 100)
- இருப்பதினால் ஆய பயன்
- நாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர.
- பருப்பு கபாப்
- சோயா கட்லெட்
- நகலாக்கம்
- மாறி வரும் செவ்வாய் கிரகம்
- மின் காகிதம் உருவாக்கத்தில் மிகப்பெரிய முன்னேற்றம்.
- மரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க இந்திய அரசாங்கம் அனுமதி
- பயமறியாப் பாசம்
- குரல்வளம்
- ஒளவை – பகுதிகள் (7,8)
- கல்யாண்ஜி கவிதைகள் 4
- வையகத் தமிழ் வாழ்த்து
- காஷ்மீர் பிரிவினை இயக்கத்தின் சமூகப்பின்னணி. – முஸ்லீம் பணக்காரர்களின் பங்கு
- வேடிக்கை மனிதர்கள் செய்யும் அமெரிக்காவை திட்டும் விளையாட்டு
- தீர்ப்புகள் இங்கே – தீர்வுகள் எங்கே ?
- இந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (கள், விலைவாசி, புதிய அரசு, வரலாறு)
- ஊமைப்பட்டாசு
- கசப்பாக ஒரு வாசனை