கலிங்கத்துப்பரணி- சில குறிப்புகள்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

வளவ. துரையன்


தமிழில் இதிகாசங்களான கம்பராமாயணம், வில்லி பாரதம் போலவோ, புராணங்களான பெரிய புராணம், கந்த புராணம் போலவோ, காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போலவோ, பக்தி இலக்கியங்களான தேவாரம், பிரபந்தம் போலவோ சிற்றிலக்கியங்களில் எதுவும் பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சிற்றிலக்கியங்கள் வாழ்வியலுக்குத் தேவையான விழுமிய நோக்கம் எதையும் உள்ளீடாகக் காட்டாமல் பெரும்பாலும் இறைவனையும் அரசரையும் போற்றுவதே இதற்குக் காரணம் என்றும் கூறலாம். அதிலும் மகளிர்தம் அங்க வருணனைகள் மிகைபடக் கூறப்பட்டிருப்பதும் ஒரு காரணமாகும்.

ஆனால் மிகக் குறைவாகவே கிடைத்துள்ள பழைய சிற்றிலக்கியங்களில் அரியதான பல செய்திகள் மறைந்து கிடக்கின்றன. சான்றாகக் கலிங்கத்துப் பரணி, குலோத்துங்க சோழன் பூணூல் அணிந்திருக்கிறான் என்று காட்டுகிறது. பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தாம் தங்கள் மகனுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் பூணூல் அணிவிப்பர். அதை இரண்டாவது பிறப்பு என்று கருதுவர். இவ்வழியில் மூவேந்தரில் ஒருவன் இருந்ததை

‘மங்கலநாண் என்ன முந்நூல்

பெருமார்பில் வந்தொளிரப் பிறப்பிரண்டா

வதுபிறந்து சிறந்து பின்னர் (242)

என்று இப்பரணி நூல் காட்டுகிறது. மேலும் குலோத்துங்கன் ‘வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டு கற்றவன் ‘ என்றும், அவன் மழை பெய்வதற்காக வேள்விகள் செய்ததை ‘தாங்காரப் புயத்தபயன் தண்ணளியால் புயல்வளர்க்கும் ஓங்கார மந்திரமும் ஒப்பில நூறாயிரமே ‘ என்றும் கலிங்கத்துப் பரணி கூறுகிறது.

இந்நூலை இயற்றிய சயங்கொண்டார் ‘பரணிக்கோர் சயங்கொண்டான் ‘ எனப் போற்றப்படுகிறார். அவர் ஒரு தமிழ் வேந்தனை இங்ங்கனமாகக் காட்டியது எனெனப் பல ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

‘தஞ்சைச் சோழர்கள் தங்களை வடநாட்டுச் சத்திரியர் வழியில் வந்தவராகக் கருதிக் கொண்டிருந்தனர். எனவே அம்மன்னர்கள் வட நாட்டுச் சத்திரியர் ஒழுக்கத்தைக் கடைப் பிடித்தனர் ‘ என்று வித்துவான் திரு பெ. பழனிவேல் பிள்ளை கூறுவது ஆய்வுக்குக்குரிய ஒன்றாகும்.

இந்நூலில் சயங்கொண்டார் சோழரின் பண்டைய மரபைக் கூறும்பொழுது வடநாட்டுச் சத்திரியர்களான இட்சுவாகு, மந்தாதா, முழுகுந்தன், சிபி போன்றோரைப் பாடி அவர்தம் வழியில் சோழர் தோன்றினர் என்கிறார்.

சோழர் அரசவையில் அவைக்களப் புலவராய் இருந்த ஒட்டக் கூத்தரும் தான் பாடிய மூவர் உலாவில் இவ்வாறே சோழர் மரபு கூறுகிறார்.

முதற்குலோத்துங்கன் 1078 முதல் 1118 முடிய அரசாண்டவன். இந்நூல் சயங்கொண்டாரால் பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்டது என திரு கா. சு. பிள்ளை குறிப்பிடுகிறார்.

‘பரணி ‘ எனும் நட்சட்திரம் வெற்றிக்குரியதாகக் கருதப்படுகிறது. ‘பரணி பிறந்தவன் தரணியாள்வான் ‘ என்று பழமொழி வழங்கி வருகிறது. எனவேதான் சோழன் கலிங்க நாட்டின் மீது படை கொண்டு சென்று பெற்ற வெற்றியைக் கொண்டாட பரணி எனும் பெயரை இந்நூலுக்குச் சூட்டி உள்ளார்கள்.

ஆயிரம் யானையைப் போரில் வென்ற மானவீரனுக்கு எடுப்பது பரணி என்று கூறுவதிலிருந்து இதன் பாட்டுடைத்தலைவன் போரில் ஆயிரம் யானைகளை வென்றிருக்க வேண்டும் என்பது புலனாகிறது. மேலும் ‘காடு கிழவோன் பூத மடுப்பே, தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப் பாகுபட்டது பரணி நாட்பெயரே ‘ என்று திவாகரம் கூறுகிறது. பரணி நட்சத்திரத்திற்குத் தெய்வமாகக் காளியும் யமனும் கூறப்படுவதால் இந்நூலில் அவர்களும் போற்றப்படுகின்றனர்.

தமிழ் இலக்கியங்களில் நூலின் கதையைக் கூறும் முறையில் கலிங்கத்துப் பரணி மாறுபட்டு நிற்கிறது. போருக்குச் சென்ற வீரர்கள் காலம் தாழ்த்துவதால் அவர்தம் மனைவியர் ஊடிக் கதவடைக்கின்றனர். சயங்கொண்டார் கலிங்கப் போர்ச் சிறப்பைக் கேட்கக் கதவு திறக்குமாறு வேண்டிக் கடைத் திறப்பு பாடுகிறார்.

இப்பகுதியில் மங்கையரின் அங்க லட்சணங்கள் சற்று மிகையாகவே புனைந்துரைக்கப்பட்டிருக்கின்றன. எனவேதான் கண்ணதாசன் இப்பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து உரை எழுதியுள்ளார். மொத்தம் பதின்மூன்று பிரிவுகளாக உள்ள இந்நூலில் எட்டாம் பிரிவான இராசபாரம்பரியத்திலும் பத்தாம் பிரிவான அவதாரத்திலும்தான் குலோத்துங்கன் புகழ் விரிவாகப் பாடப் படுகிறது.

மற்றவற்றில் காடும், காளீ கோயிலும், காளியும், பேய்களும், போரும் காணப் படுகின்றன. மன்னன் புகழைக் கூற வந்தவர் நயமும் சுவையும் தருவதற்காக இப்படி எழுதி இருக்கலாம்.

இந்நூலில் பேய்கள் பேசும் அளவிற்க்கு வேறு எந்த இலக்கியத்திலும் அவை காணப்படுவதில்லை. அவை கதையைக் கூறி நகர்த்திச் செல்கின்றன. குலோத்துங்கனைப் பாடுகின்றன. காளிக்குப் பூசை செய்கின்றன.

பிணக்குவியலின் மீது, யானையின் உடலாகிய பானையில் வீரர்களின் மூளைத்தயிர் கொண்டு, பல் என்னும் வெங்காயமும், நகம் எனும் உப்பும் இட்டு, கலிங்கர் பற்களை அரிசியாக்கிக் கூழ் சமைக்கின்றன.

பேய்ப்பரணி எனும் அளவிற்குப் பேய்களின் உடல் அமைப்பு வர்ணிக்கப் படுகிறது. கால் மூடப் பேய், கை மூடப் பேய், குருட்டுப் பேய், ஊமைப் பேய், செவிட்டுப் பேய், கூன் பேய் என்று பல வகைப் பேய்களைக் காட்டும் சயங்கொண்டார் அவற்றைச் சமய வாரியாகவும் பிரிக்கிறார்.

‘பவதி பிட்சாந்தேகி ‘ எனும் பார்ப்பனப் பேய், உயிரைக் கொல்லாச் சமணப் பேய், முழுத்தோல் போர்க்கும் புத்தப் பேய் என்று காட்டுபவர் சைவ, வைணவப் பேய்களைக் காட்டவில்லை. இவை தமிழ் நாட்டுச் சமயங்கள் என்ரு கூறாமல் விட்டார் போலும்.

முற்காலத்தில் பொன், வெள்ளி, மண் ஆகியவற்றால் செய்யப் பட்டபாத்திரஙளே உணவு உள் கலங்களாக இருந்தன. இலையில் உணவு உண்ணும் பழக்கம் பிற்காலத்தது என்று திரு. பெ. பழனிவேல்பிள்ளை கூறுகிறார். கீழே ஆடை விரித்து அதன்மேல் உண்கலம் வைக்கும் வழக்கம் இருந்துள்ளது. அவ்வாடையைப் பாவாடை என்று பரணி காட்டும்

‘பதம் பெற்றார்க்குப் பகல் விளக்கும்

பாவாடையுமாக் கொள்வீரே ‘

வென்காயத்தைக் கறித்துக் கொண்டுண்ணும் பழக்கம் ‘உள்ளி கறித்துக் கொண்டுண்ணீரே ‘ என்று பேய் கூறுவதால் அறியப்படுகிறது.

பேருந்தில் செல்கையில் சிலருக்கு குமட்டல் வரும். அது மறையத் தலை மயிரை முகர்ந்து பார்ப்பது ஒரு மருத்துவ முறையாகும். பேய்கள் நிறைய உண்டு விட்டதால் குமட்டல் வருகிறதாம். அது தீரப் பூதத்தின் மயிரை மோந்து பார்க்கச் சொல்வதாக

‘செருக்கும் பேய்காள் பூதத்தின்

சிரத்தின் மயிரை மோவீரே ‘

என்ற அடிகள் காட்டுகின்றன.

குலோத்துங்கன் புரிந்த வடநாட்டுப் போர், துங்கபத்திரைப் போர், அளத்திப் போர், மைசூர்ப் போர், பாண்டியர் ஐவரை வென்றது, விழிஞம், காந்தளூர்ச் சாலை ஆகிய துறைமுகங்களில் சேரரை வென்றது போன்ற வரலாற்றுக் குறிப்புகளையும் கலிங்கத்துப் பரணி காட்டுகிறது.

இலக்கிய நயமும், ஆங்காங்கே நூலில் பல இடங்களில் மிளிர்கின்றது. கணவன் உடலைத் தரை மகள் தாங்காமல் தலைவி தாங்குகிறாள். அவன் உயிர் விட்டு வானுலகம் சென்றால் அங்குள்ள மகளிர் அவனை விரும்புவார்கள். அதைத் தடுக்க அவனுக்கு முன் அவள் உயிர் விட்டு வானுலகம் சென்று காத்திருக்க உயிர் விடுகிறாள்.

ஏழைகளும் விருந்தினரும் வந்து உண்ணும் போது இல்லத்தாள் மகிழ்வது போல் பருந்தும் கழுகும் தன் உடலை தின்ன வீரர்கள் முகம் மலர்ந்து கிடக்கிறார்களாம்.

யார் திறை கொடுக்கவில்லை எனப் படையெடுக்கப் பட்டதோ, அக்கலிங்க நாட்டு மன்னன் பெயர் நூலில் இல்லாதாதும், அவன் என்ன ஆனான் என்பது கூறப் படாததும் பெரிய குறை.

நூலைப் படித்து முடித்ததும் சோழன் புகழோ, வரலாற்றுக் குறிப்புகளோ, இலக்கிய நயங்களோ மனதில் நிற்காமல் பேய்களே முழுக்க முழுக்க வியாபித்துக் கொண்டுள்ளன.

இதுவே இந்நூலின் பலமும் பலவீனமுமாகும்.

—-

அனுப்பித் தந்தவர் : jayashriraguram@yahoo.co.in

Series Navigation

வளவ.துரையன்

வளவ.துரையன்