செய்தி அறிக்கை
தொடர்பு: மணி மு. மணிவண்ணன் தமிழ் இணையம் 2002 Tel: 1.510.796.2433 TI2002@infitt.org
கலிஃபோர்னியாவில் தமிழ் இணைய மாநாடு 2002
தமிழ் இணையம் 2002 கலிஃபோர்னியாவின் ஃபாஸ்டர் நகரில் செப்டம்பர் 27 – 29 தேதிகளில்;
மின்-நிர்வாகம், பல்லூடக உள்ளடக்கம், தகவல் தொழில்நுட்ப இடைவெளி, தொழில் முனைப்பு மற்றும் தொழில்நுட்பத் தரங்கள் பற்றிய ஆய்வு
சென்னை, இந்தியா: மே 1, 2002 – உலகின் தலைசிறந்த தமிழ் இணைய மாநாடாகக் கருதப்படும் “தமிழ் இணையம் 2002” கலிஃபோர்னியாவின் ஃபாஸ்டர் நகரில் இவ்வாண்டு செப்டம்பர் 27 முதல் 29 வரை நடைபெற உள்ளது. இம்முடிவை மாநாட்டை வழிநடத்தும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் தலைவர் பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன் இன்று அறிவித்தார்.
தமிழ் இணையம் 2002, இந்த மாநாட்டு வரிசையில் ஐந்தாவதாகும். இம்மாநாட்டுத் தொடர் 1997ல் சிங்கப்பூரில் துவங்கியது. இரண்டாவது மாநாடு 1999ல் சென்னையிலும் மூன்றாவது 2000ல் மீண்டும் சிங்கையிலும் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு நான்காவது மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்தேறியது.
“தகவல் தொழில்நுட்பப் பாலம்” எனும் கருப்பொருளை ஒட்டி நடைபெறும் இம்மாநாடு, தமிழ் இணையம் மற்றும் தமிழ்க் கணினி சார்ந்த தொழில்நுட்ப, வணிகச் சிக்கல்களில் கவனம் செலுத்தும். இம்மாநாடு தொழில் நுட்பக் கருத்தரங்கு, கண்காட்சி, மற்றும் அமெரிக்கத் தமிழ் மக்கள் நிகழ்ச்சிகள் என்ற மூன்று தடங்களில் அமைந்திருக்கும். கருத்தரங்கில் சிறப்புரைகளும், துறை வல்லுநர்களின் கட்டுரைகளும் இடம்பெற உள்ளன. விவாதிக்கப்படவிருக்கும் சில தலைப்புகள்: மின் அஞ்சல், இணையத் தளங்கள் வழி தகவல் பரிமாற்றம், பல்லூடக அடிப்படையில் இணைய வழிக் கல்வி, இணையவழி நூலகங்கள், மின்-வணிகம், மின்-அரசாட்சி. கருத்தரங்கில் 40க்கும் மேற்பட்ட அனைத்துலக வல்லுநர்கள் தங்களது கட்டுரைகளையும் ஆய்வு முடிவுகளையும் படைப்பார்கள் என்றும், கருத்து கேட்க 200க்கும் மேற்பட்ட பேராளர்கள் உலகெங்கிலும் இருந்து திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இணைய மாநாட்டை ஒட்டி நடைபெறும் கண்காட்சியில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இணையத் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள், மென்பொருட்கள் மற்றும் சேவைகள் இடம்பெறும். சான் பிரான்சிஸ்கோ குடாப் பகுதியில் உள்ள 150,000 அமெரிக்க இந்தியர்களை ஈர்க்கவும், இந்திய மொழிகள், குறிப்பாகத் தமிழ் மொழி சார்ந்த கணினி வளர்ச்சியை அவர்களுக்கு எடுத்துக்காட்டவும் இந்தக் கண்காட்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவை தவிர, தமிழ் இணையம் 2002, தமிழ் மொழியைப் பயன்படுத்தும் நான்கு குறிப்பிட்ட சாராரை – குழந்தைகள், பெற்றோர்கள், இளைஞர்கள், முதியவர்கள் ஆகியோரை — கவனத்தில் கொண்டு செயல்படத் திட்டமிட்டுள்ளது. இதில் தமிழ் மொழி கற்றல், கற்பித்தல் முறைகளில் குழந்தைகள், பெற்றோருக்குத் தேவையான இணையச் சேவைகளுக்கான வசதிகள் இருக்கும். தமிழ் இளைஞர்கள் தம் தொன்மைப் பண்பாட்டை மேலும் அறிந்து கொள்ளவும் தகவல் தொழில்நுட்பத்தைப் பாலமாகப் பயன்படுத்துவதில் பங்கேற்கவும் இந்த மாநாடு உதவும். இறுதியாக, முதியோர் கணினியைப் பயன்படுத்தவும் மற்றவரோடு கணினி வழி தமிழில் தொடர்பு கொள்ளவும் கற்றுக் கொள்வர்.
தமிழ் இணையம் 2002 ஏற்பாட்டு முயற்சிகளில் பர்க்கெலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்காசியக் கல்வி மையமும், தமிழ்த் துறைத் தலைவரும் இணைந்து செயல்படுகிறார்கள் என்பது உத்தமம் அமைப்பிற்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகும் என்று பேரா. ஆனந்தகிருஷ்ணன் கூறினார். தமிழ் இணைய மாநாட்டை ஏற்பாடு செய்யும் எண்ணம் கடந்த தொண்ணூறுகளில் முதன்முதலில் உதித்தபோது இது இவ்வளவு விரைவாக பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்று பேரா. ஆனந்தகிருஷ்ணன் சொன்னார். அவர் மேலும், “தமிழ்க் கணினியின் முன்னேற்றம் மற்றும் இத்தகைய தொழில்நுட்பத்தின்பால் உலகளாவிய தமிழரிடையே வளர்ந்து வரும் ஆர்வத்தின் பிரதிபலிப்பே இது” என்றார். கணினியின் பல்வேறு செயல்பாடுகளில் தமிழ் மொழியைப் பயன்படுத்தி நாம் கையாளுவதை பார்க்கும்போது தமிழ் கடந்த பத்து ஆண்டுகளில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதும், இந்திய மொழிகளில் தமிழ் ஒரு முன்னோடியாக விளங்குகின்றது என்பதும் தெரிகிறது என்றும் அவர் சொன்னார்.
பேரா. ஆனந்தகிருஷ்ணன் தமிழ் இணையம் 2002 மாநாட்டை நடத்த உலகெங்குமிருக்கும் தமிழ்க் கணினி முன்னோடிகளையும், கல்வியாளர்களையும் கொண்ட அனைத்துலக ஏற்பாட்டுக் குழுவை இன்று அறிவித்தார்.
தலைவர்:
திரு. மணி மு. மணிவண்ணன், அமெரிக்கா (செயற்குழு உறுப்பினர், உத்தமம்)
துணைத் தலைவர்:
முனைவர் ஸ்டாவன் பெளலொஸ், அமெரிக்கா (துணைத் தலைவர், தெற்காசியக் கல்வி மையம், கலிஃபோர்னியா பல்கலைக் கழகம், பர்க்கெலி)
உறுப்பினர்:
பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன், இந்தியா (தலைவர், உத்தமம்)
திரு. முத்து நெடுமாறன், மலேசியா (துணைத் தலைவர், உத்தமம்)
திரு. அருண் மகிழ்நன், சிங்கப்பூர் (நிர்வாக இயக்குநர், உத்தமம்)
முனைவர் கு. கல்யாணசுந்தரம், சுவிட்சர்லாந்து (செயற்குழு உறுப்பினன், உத்தமம்)
முனைவர் மு. பொன்னவைக்கோ, இந்தியா (இயக்குநர், தமிழ் இணையப் பல்கலைக் கழகம்)
உத்தமம் நிறுவன உறுப்பினரும் அனைத்துலக ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும், அமெரிக்கத் தமிழருமாகிய திரு. மணி மு. மணிவண்ணன் அமெரிக்காவில் இம்மாநாட்டை நடத்தக் கிடைத்த வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் மேலும் “கணினி யுகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு உத்தமம் குடும்பத்தினரை வரவழைக்க முடிந்ததில் எங்களுக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” என்றார். அது மட்டுமின்றி, வலையிலுள்ள இந்திய மொழிகளில் தமிழை முதன்மையிடத்துக்குக் கொண்டு வந்த கனேடியத் தமிழர்கள் இந்த மாநாட்டில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
அமெரிக்க மாநாடு, மற்ற நாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் சிலிக்கான் பள்ளத்தாக்கின் புத்தாக்கத்தையும் கணினி உலகில் அதன் போட்டித்தன்மையையும் கண்கூடாகக் காண உதவுவதோடு முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளிப்பதாகவும் அமையும் என்று பேரா. ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.
இணையத்தின் அடிப்படைத் தொழில்நுட்பங்களில் பர்க்கெலிப் பல்கலையின் முன்னணிப் பங்கு, கணினித் துறை வளர்ச்சியில் சிலிகன் பள்ளத்தாக்கின் முக்கிய இடம், கணினித் துறையில் பெருந்திரளான தமிழர்கள் மற்றும் தெற்காசியர்களின் சாதனைகள், மேலும் தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம் குறித்த பயிற்சி மற்றும் ஆய்வுகளை நடத்தும் வட அமெரிக்காவிலேயே முக்கியமான பர்க்கெலிப் பல்கலையின் தமிழ்த் துறை என்ற பல்வேறு சிறப்புகள் கொண்ட சான்ஃபிரான்சிஸ்கோ குடாப்பகுதியில் ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவது மிகப் பொருத்தமே என்றார் அனைத்துலக ஏற்பாட்டுக் குழுவின் துணைத்தலைவரும், பர்க்கெலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்காசியக் கல்வி மையத்தின் துணைத் தலைவருமான முனைவர் ஸ்டாவன் பூலொஸ். அவர் இணையத்தின் மேல் ஈடுபாடுள்ள எவரையும் – நிறுவனங்களையும் தனி மனிதர்களையும், தமிழர்களையும் மற்றவர்களையும், கல்வியாளர்களையும் மாணவர்களையும், இணையத் தமிழ் கற்க விரும்பும் ஏனைய அமெரிக்கத் தமிழர்களையும் – இந்த மாநாடு கவரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
உத்தமம் பற்றி:
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) பொருளீட்டும் நோக்கற்ற, அரசு சாராத ஓர் அமைப்பு. உலகெங்கும் வாழும் ஏழரைக்கோடித் தமிழர்கள் பேசும் தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளாய் இலக்கியத் தொடர்ச்சி பெற்றிருக்கும் தொன்மை மொழியாய் மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பங்களூடாகத் தொடர வேண்டும் என்ற எண்ணத்தால், சிதறியிருந்த தமிழ்த் தகவல் தொழில் நுட்ப முனைவுகளை ஒருங்கிணைத்துத் தமிழுக்கான தகவல் தொழில் நுட்பத் தரப்பாடுகளை மேம்படுத்தும் நோக்குடன் இந்த அமைப்பு ஜூலை 2000இல் நிறுவப்பட்டது. உலகெங்கும் வாழும் தமிழ் இணையம், கணினித் துறை முன்னோடிகளில் பலரும், கல்வி, அரசியல், வணிகத் தலைவர்கள் பலரும், நிறுவனங்களும், உத்தமம் அமைப்பில் உறுப்பினராயுள்ளனர். உத்தமம் ஆண்டு தோறும் தமிழ் இணைய மாநாடு நடத்தியும், தன் பல்வேறு பணிக்குழுக்கள் மூலமாகவும் இணையத்தில் தமிழ் தொழில் நுட்ப வளர்ச்சிக்கான ஆய்வுகளை மேம்படுத்துகிறது. மேற்கொண்டு உத்தமம் பற்றிய விவரங்களுக்கு http://www.infitt.org என்ற அதன் வலைத்தளத்தில் காணவும். உத்தமம் அமைப்புடன் தொடர்பு கொள்ள secretariat@infitt.org
தெற்காசியக் கல்வி மையம், கலிஃபோர்னியா பல்கலைக் கழகம், பர்க்கெலி.
அமெரிக்கத் தமிழர்களைப் பர்க்கெலியின் கலிஃபோர்னியா பல்கலையுடன் பிணைப்பதில் தெற்காசியக் கல்வி மையத்தின் பங்கு மிக முக்கியமானது. வட அமெரிக்காவின் தனிப்பெரும் பெருமை வாய்ந்த தமிழ்ப்பீடத்தைப் பர்க்கெலியில் அமைப்பதில் வட அமெரிக்கத் தமிழர்களும், தெற்காசியக் கல்வி மையமும் ஒருங்கிணைந்து செயல் பட்டனர். பர்க்கெலிப் பல்கலையின் தமிழ்த் துறையின் தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம் குறித்த பயிற்சி மற்றும் ஆய்வுகள் வட அமெரிக்காவிலேயே மிக முக்கியமானவை எனக் கருதப்படுகிறது. தெற்காசியக் கல்வி மையம், மற்றும் பர்க்கெலித் தமிழ்ப் பீடம் பற்றி மேலும் அறிய
© 2002 பதிப்புரிமை உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம். உத்தமம், தமிழ் இணையம் 2002, உத்தமம் இலச்சினை, தமிழ் இணையம் 2002 இலச்சினை ஆகியவை உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் வணிகச் சின்னங்கள். அனைத்து உரிமைகளும் எமது இருப்பில்.
# # # # # # # # #
- நானும் நீயும்.
- வீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டார்களா ?-1 கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி )
- கலிஃபோர்னியாவில் தமிழ் இணைய மாநாடு 2002
- தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
- மெக்ஸிகன் சாதம்
- முட்டை, முட்டைக்கோஸ் வறுத்த சாதம் (டேஸ்டி பிரைட் ரைஸ்)
- பின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை
- வெண்ணிலவில் முதற் தடம் பதித்த விண்வெளித் தீரர்கள்
- அறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது
- கண் கெட்ட பிறகே….
- வேண்டாம் பகை
- நான்கு ஹைக்கூக்கள்
- பிலிப்பு
- முற்றத்தில் முதல் சுவடு
- சலிப்பு – ஐந்து கவிதைகள்
- நாஞ்சில் நாடன் கவிதைகள்
- வீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டார்களா ?-1 கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி )
- அறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது
- பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession)
- தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
- லு பென் : ஒரு அய்ரோப்பிய பயங்கரவாதம்
- பின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை
- இழந்த யோகம்