சந்திரவதனா
தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது நம் நாட்டுப் பெண்களும், அவர்களது பொட்டும் தாலியும் உடைகளும்தான் அலசப்படுகின்றன.
ஏன் எமது நாட்டு ஆண்களுக்கென்று கலாச்சாரம் பண்பாடு எதுவுமே இல்லையா ?
கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது அங்கு எத்தனையோ விடயங்கள் அடங்குகின்றன. ஆனால் எமது பட்டிமன்றங்களும், ஒட்டுவெட்டுக்களும் பெண்களின் பொட்டும், தாலியும், உடையும்தான் விவாதத்துக்கான கரு என்று சொல்லிக் கதைத்துக் கொண்டு இருக்கின்றன.
அதையும் தாண்டிப் போவதானால் பெண்களின் மறுமணம் பற்றிப் பேசுகின்றன. ஆனால் ஆண்களின் மறுமணம் பற்றிப் பேசுவதில்லை. ஆண் மறுமணம் செய்து கொள்வது அதிசயமான விடயமே இல்லையாம். மனைவி இறந்த வீட்டுக்குள்ளேயே அவனுக்கு மறுமணம் பேசி, அவனது மனைவியின் தங்கையையோ அல்லது உறவுப் பெண்ணையோ நிச்சயித்து விடுவார்கள். ஏனென்றால் அவன் ஒரு ஆணாம். அவனுக்குத் துணை தேவையாம்.
ஆனால் பெண்ணுக்கு மட்டும் கணவன் இறந்தவுடன் பொட்டை அழித்து, தாலியைக் கழற்றி, வெள்ளைச் சேலை உடுத்த வைத்து, ‘இனி உனக்கு ஆசாபாசம் எதுவுமே வரக்கூடாது ‘ என்று சொல்லி, மூலையில் தள்ளி விடுகிறார்கள். ஏனென்றால் அவள் ஒரு பெண்ணாம். அவளுக்குத் துணையே தேவையில்லையாம். ஆசையே வரக் கூடாதாம். இனி அவள் இறக்கும் வரை தனிமைத் தீயில் வெந்து துடிக்க வேண்டுமாம்.
இது என்ன நியாயம் ?
ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று இப்படி வெவ்வேறு கலாச்சாரத்தையோ பண்பாட்டையோ உருவாக்கியது யார் ?
பெண் ஒன்று பிறந்து விட்டாலே பொன் வேண்டும், பொருள் வேண்டும், அவளை நல்லவன் கையில் கொடுத்து விடவேண்டும். என்று சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள் பெற்றோர்கள். தமது ஆசைகளைக் குறைத்து, தேவைகளைத் தவிர்த்து அந்தப் பெண்பிள்ளைக்காகச் சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். முக்கியமாக ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலும் இலங்கையிலும் பெண்ணைப் பெற்றவர்கள் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்களாகி விடுகிறார்கள்.
ஆசை ஆசையாகப் பெண்ணைப் பெற்று விட்டு அவளது ஒவ்வொரு வளர்ச்சியிலும் களிக்க வேண்டியவர்கள், நெருப்பை மடியில் கட்டிக் கொண்டு வாழ்வது போல தவிப்புடன் வாழ்கிறார்கள். வாழ வைக்கப்படுகிறார்கள். ஒரே ஒரு பெண் குழந்தையைப் பெற்றவர்களுக்கே இந்தக் கதி என்றால், நான்கைந்து பெண்களைப் பெற்றவர்களின் நிலையைச் சொல்லவே தேவையில்லை.
ஏதோ – ஒரு பெண் பிறந்ததே – இன்னொருவன் கையில் பத்திரமாக ஒப்படைக்கப் பட்டு, அவனிடம் அடங்கி, ஒடுங்கி, அவனுக்கு ஆக்கிப் போட்டு, அவன் அடித்தாலும், உதைத்தாலும் அக்கம் பக்கம் தெரிய விடாது அவன் மானத்தைக் காத்து, அவனைத் தாய்மையுடனும், தோழமையுடனும் கவனித்து, பிறந்த வீட்டின் பெருமையைக் காப்பதற்கே, என்பது போல் இருக்கும் அவர்கள் செயற்பாடு.
இந்த நியதியில் எந்த மாற்றமும் ஏற்படக் கூடாது. அப்படி மாற்றம் ஏற்படுவதே ஒரு தப்பான விடயம் என்பது போலவே காலங்காலமாக எல்லாம் நடைபெற்றுக் கொண்டும் வருகின்றன. யாராவது ஒரு பெண் இந்த நிலை மாற வேண்டும் என்று குரல் கொடுத்தாலே, ‘அவள் கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் காலுக்குள் மிதிக்கிறாள். ‘ என்று கூச்சலிடுகிறது எமது சமுதாயம்.
எமது பண்பாட்டின் படி ‘ஒருவனுக்கு ஒருத்தி ‘ என்ற வரையறையான கோட்பாடு, மிகவும் போற்றப் பட வேண்டிய ஒன்றுதான். ஒருவனுக்கு ஒருத்தியாக வாழும் போது மனதுக்கும் மகிழ்ச்சி. நிறைவு. முக்கியமாக எய்ட்ஸ் பிரச்சனை இல்லை. வேறு பாலியல் சம்பந்தமான நோய்களுக்கும் சந்தர்ப்பம் இல்லை.
ஆனால் ஆண்கள் மனைவி இருக்கையில் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டால், ‘ஆண்கள் சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவுவார்கள். பெண்கள் கண்டு கொள்ளக் கூடாது ‘ என்கிறார்களே. இதுவும் தமிழர் பண்பாடா ?
பெண்ணுக்கு மட்டும் ‘பொம்பிளை சிரிச்சாப் போச்சு. புகையிலை விரிச்சாப் போச்சு…. ‘ என்கிறார்களே.
எமது பண்பாட்டில் ஏனிந்தப் பாகுபாடு ? எமது கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா ? ஏனிந்தப் பாரபட்சம் ?
தாலி, பொட்டு
அத்தோடு தாலி என்று இன்று விவாதிக்கப் படுகிறதே. இந்தத் தாலிக்காய் ஆதிகாலத்தில் வெறும் மஞசள் காயாகவே இருந்தது. அதாவது நாம் சமையலுக்குப் பாவிக்கும் மஞ்சள். ஏன் தெரியுமா ? மஞ்சள் ஒரு இயற்கையான கிருமி நாசினி. இருவர் திருமண பந்தத்தில் இணையும் போது, ஒருவரில் இருக்கும் தொற்றுக் கிருமிகளோ, நோய்களோ மற்றவரை அணுகாமல் இருக்கவும், கிருமிகளைச் சாகடிக்கவுமே இந்த மஞ்சள் காய் பயன் படுத்தப் பட்டது.
இதே காரணுத்துக்காகத்தான் மணமக்களின் உடைகளிலும் மஞ்சள் பூசப்பட்டது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்துக்கு அனுப்பப் படும் திருமண அழைப்பிதழுடன் நோய்க் கிருமிகள் சென்று விடாதிருக்கவே, அழைப்பிதழ் மஞ்சள் பூசி அனுப்பப் பட்டது. இதுவே நாளடைவில் மஞசள் பத்திரிகை என்ற பெயரில் வரத் தொடங்கியது. மஞ்சள் காயை, மஞ்சள் தண்ணீரில் தோய்த்தெடுத்த நூலில் கட்டித் தாலியாக அணிந்த காரணமே வேறு. ஆனால் அதுவே நாளடைவில் தங்கத்துக்கு மாறிவிட்டது.
இப்போது இங்கே வெளி நாடுகளில் அவரவர் வசதிக்கேற்ப 30 பவுணிலும் 40, 50, 60, 70 பவுண்களில் கூடத் தாலிக் கொடி செய்து போட்டுத் திரிகிறார்கள். இதற்குப் போய் கலாச்சாரம் என்றும் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். எமது கலாச்சாரம் என்ன 70 பவுணில் கொடி போடச் சொல்கிறதா ?
இதே நேரத்தில் நவரத்தினங்கள், தங்கங்கள்… இவைகளுக்கு சில நோய்கள் எம்மை அணுகாமல் தடுக்கும் தன்மைகளும், சில நோய்களைத் தீர்க்கும் தன்மைகளும் உள்ளன. அத்தோடு காது குத்துதல், மூக்குக் குத்துதல் போன்றவை அக்கு பஞ்சர் ரீதியிலான நன்மைகளை எமக்குத் தருகின்றன.
இதே போலத்தான் பொட்டும். மூலிகைகள் கொண்டு செய்யப்படும் பொட்டை, நெற்றிப் பொட்டில் வைக்கும் போது அது மருத்துவ ரீதியாக உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் நன்மையையும் தருகிறது.
இப்படியான நல்ல காரணங்களுக்காகக் கொண்டு வரப்பட்ட பல விடயங்கள் இப்போ தடம் மாறி, அவரவர் வசதிக்கேற்ப பல அடாவடித் தனங்கள் புகுத்தப்பட்டு, கலாச்சாரம் பண்பாடு என்பதற்கு என்ன அர்த்தங்கள் என்று தெரியாமலே பெண்கள் மேல் திணிக்கப் பட்டுள்ளன. கலாச்சாரம, பண்பாடு என்ற பெயரில் எமது பெண்கள் அடக்கப் படுகின்றனர். அடிமைப் படுத்தப் படுகின்றனர்.
முதலில் எமது கலாச்சாரத்தில், பண்பாட்டில் புகுத்தப் பட்ட அடாவடித் தனங்கள் களையப் பட்டு, தேவையான நல்ல புதிய விடயங்கள் புகுத்தப் பட வேண்டும்.
கொட்டும் பனியில் சேலை அணிவதுதான் எமது பண்பாடு என்று சொல்லிச் சேலையுடன் செல்ல முடியுமா ? அல்லது ஆண்களால் வேட்டியுடன் செல்ல முடியுமா ?
சில விடயங்கள் காலத்துக்கேற்ப நேரத்துக்கேற்ப இடத்துக்கேற்ப மாறத்தான் வேண்டும். கலாச்சாரம் என்ற முறையில் கட்டிக் காக்க எம்மிடம் வேறு எத்தனையோ நல்ல விடயங்கள் உள்ளன. அவைகளைக் கட்டிக் காப்போம்.
சந்திரவதனா.
ஜேர்மனி
1999
ஒலிபரப்பு – ஐபிசி தமிழ்(உலகப்பெண்கள்தினம் சிறப்பு நிகழ்சி – 8.3.2000)
பிரசுரம் – ஈழமுரசு – பாரிஸ் (20-26சித்திரை-2000)
chandraselvakumaran@gmail.com
- கவிதைக் கோபுரத்தின் பொற்கலசங்கள்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)
- காற்றுப் பிரிந்த போது. .
- நட்போடு வாழ்தல்
- முயல்தலில் ஒளிர்தலானது….
- அபகரிப்பு
- The Day After Tomorrow கடல் நீரோட்டம் மெதுவாவதால், பிரிட்டானியா கடும் குளிரை எதிர்நோக்குகிறது
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) தொலைபேசி கண்டுபிடிப்பு -1
- அசையும் நிழல்கள்
- வேட்கை வேண்டும்
- அகவியின் நூல் வெளியீடும் விமர்சனமும் -அறிவிப்பு
- தமிழ் சினிமா எழுத்தாளர்களின் விபச்சாரச் சிந்தனை:
- ஒரு கடிதம்
- வாழும் தமிழ் – புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் யூன் 4, சனிக்கிழமை ஸ்காபரோ சிவிக் சென்டர்(ரொறன்டோ-கனடா)
- காலம் எழுதிய கவிதை – ஒன்று
- எங்கே என் அம்புலி ?
- தோழமையுடன்….
- கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா! ?
- இரயில் பயணங்களில்…
- அவனும் அவளும்
- திருவண்டம் – 2
- கூண்டுகள்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)
- சிந்திக்க ஒரு நொடி -தமிழ் சாதி
- அனைத்துலகத் தமிழிலக்கிய அடையாளமும் இப்போதைய விவாதங்களும்
- ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி
- கோபி கிருஷ்ணனின் ‘முடியாத சமன் ‘ சிறுகதையின் நாடகமாக்கம். சனிக்கிழமை, ஜூன் 04, 2005 தக்கர் பாபா வித்யாலயா
- இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலிலும் பிரதிபலிக்குமா ?
- பணம் தேடுவதில் உள்ள ஆர்வம் குடும்பப்பிணைப்பில் இல்லை!
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 1
- இந்திய நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு மாண்சாண்ட்டோ பன்னாட்டு விதை நிறுவனத்துக்கு மத்திய அரசு ஆதரவு தருகிறது
- பெரியபுராணம்- 42 திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் புராணம்
- ராணி
- கீதாஞ்சலி (25) நெஞ்சில் மலரும் நறுமணம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்