கரை புரண்ட காவிரியே எம் கண்கள் கலங்கியது….

This entry is part [part not set] of 23 in the series 20050805_Issue

கோவிந்த் – கோச்சா


—-

ஆடியிலே பெருக்கெடுத்து
ஆடி வரும் காவேரி…
என்று பாடல்
எங்கிருந்தோ
மிதந்து வந்தாலும்….
நெஞ்சினில் தொட்டது-
அம்மா மண்டபத்தையும்
கரையோர படித்துறையையும்-
தொட்டு தொட்டு
விளையாடும்
சின்னஞ் சிறு அலைகள்….
—-
திருச்சியில்
காவிரி குறுக்காய்
நீண்டிருக்கும்
ரயில் பாலத்தில்
நடந்து வந்தால்-
திட்டு கிடைக்கும்
பாலம் காக்கும்
ரயில்வே காவலாளியிடமிருந்து –
ஆனால்
அந்த நாவினால்
சுட்ட வடு
உடன் மறைந்தது-
வியப்பல்ல…
அது காவிரின் அழகு
கண்ட மகிமை…

—-
மதுரை மல்லிகை
இரு முழம்
வாங்கிப் போய்
பாண்டியன் எக்ஸ்பிரஸ்லில்
விழித்திருந்து-
டணங் டணங்
எனும் சத்தமுடன்
ரயில்
காவிரி கடக்கையில்-
ஜன்னல் வழியே
சூடிக்கொள் காவிரியே
என
மல்லிகையைத்
தூக்கியெறிந்தது….
மகிழ்ந்த நாள்….
—-
கணுக்கால் அளவு
காவிரியிலும்
மணல் கலந்த
நீரில்
புரண்டு புரண்டு
குளித்தது…
—-
பாதகர்கள்
அணைபல கட்டி
காவிரி வெறும்
நெல் விளைவிக்கும்
எந்திரம் போல்…
கட்டிப் போட்ட போது
செய்வதறியாது
சுட்ட மணல் காவிரியில்
கால் கொப்பளிக்க
நடந்து நொந்தது….
—-
காவிரியில்
ஆதி முதல் அந்தம் வரை
தி.ஜ. பயணித்து எழுதிய
புத்தகம் படித்து
விம்மி அழுதது….
—-
மனதை கவர்ந்தவள்
காவிரி மடி பிறந்தவள்
என்ற போது
ஏனோ
பெருமையாய்
நெஞ்சு விம்மியது…
—-
யாரரிவார்
எங்கள் உணர்வுகளை..
கரை புரளாவிட்டால்
என்ன…
அவளைக் கூறுபோட்டால்
பிளாட் போடலாம்..
அவளைத் துளைத்தால்
பெட்ரோல் கிடைக்கலாம்..
-என நினைப்போரே…
அவள் எங்கள் பலருக்கு

பெற்றோருக்கு ஒப்பாவாள்…

காதலிக்கு கவிதையாவாள்…

குதூகலிக்கும் குழந்தையுமாவாள்…

—-
இதோ
அவளை எங்கள் மண்ணில்
தவழ்ந்து விளையாட
சிறை உடைத்து
அவளை மீட்க
தங்கள் வாழ்வையும் தொலைக்க
தயாராய் இருந்த
பலரை காக்க–
இதோ
இன்று
கொள்ளிடம் தொடுமளவு
கரைபுரண்டு…
எங்கள்
மக்கள்
ஆடிப் பெருக்கில்
ஆடிக் கொண்டு….

காவிரியே
எங்கள் செல்லமே….
இதோ…
உனைக்காண
உன்னில் குதித்து மகிழ-
திருச்சி நோக்கி
வந்து கொண்டு….

====
gocha2004@yahoo.com

Series Navigation

கோவிந்த் - கோச்சா

கோவிந்த் - கோச்சா