புதியமாதவி
சுருக் சுருக் என்று யாரோ ஊசியால் குத்துகிறார்கள்.
மூச்சு முட்டுகிறது.
வயிற்றில் பாறாங்கல்லின் பாரம் மெதுவாகக் கீழிறங்கி அடிவயிற்றைப் பிளந்துக்கீறி
‘அம்மா ‘ வென்று கத்த நினைக்கிறேன்.
ம்கூம் நாக்குப் புரளகிறது. ஆனால் சத்தம்தான் எதுவும் வரவில்லை.
கைகளைப் போர்வைக்கு அடியிலிருந்து வெளியில் நீட்டி தூங்கிக்கொண்டிருக்கும்
சந்துருவை இந்தமுறை எப்படியும் எழுப்பிவிடவேண்டும்.
இந்த என் அவஸ்தை நிஜம். இது ஒன்றும் மனபயமோ கற்பனையோ இல்லை.
என்னுடைய இந்த ஷணத்தைக் காணாத வரை சந்துருவால் நான் சொல்லும் எதையும்
நம்பமுடியாது.
கைகளை அசைக்கப்பார்க்கிறேன். யாரோ கட்டிலுடன் சேர்த்து ஆணிவைத்து
அறைந்துவைத்திருக்கிறார்கள். ஆனால் வலிக்கவில்லை. மரத்துப்போய் என்
அசைவுகளுக்கும் அதிர்வுகளுக்கும் அப்பால் என் உடலுடன் சம்மந்தமே இல்லாத
வஸ்துவைப்போல கைகளும் கால்களும் ஒதுங்கிக்கிடந்தன.
மின்விசிறியின் வேகத்தில் திரைச்சீலைகளுக்கு நடுவில் அந்தக் கண்கள் என்னையே
பார்த்துக்கொண்டு என்னருகில் வரவர..
‘அய்யோ சந்துரு எந்திரியேன்.. ‘
>ஓம் நமசிவாயா.ஓம் நமசிவாயா..
>சரணம்சரணம் சண்முகா சரணம்.
‘சந்துரு..ப்ப்ளீஸ் சீக்கிரமா எந்திரியேன் ‘
>ஓ ஜீசஸ்..மேரி.. ஹோலி மதர்..
‘டேய் சந்துரு எந்திரியேண்டா…
என் மனக்குரல் சந்துருவைத் தொடாமல் காற்றில் கரைந்து இருட்டில்
எதிரொலித்தது.
அந்தக் கண்கள்..எனக்குள் என் உடலுக்குள் கதிர்வீச்சு போல நுழைகிறது.
என் போர்வையை விலக்காமல் என் உடலறைகளுக்குள் தேடுகிறது.
என் சுவாசக்குழாயில் ஒரத்தில் சிவப்பு ரத்தம் உறைந்து பளிச் பளிச் என்று
சிவப்பு விளக்காகி சுவாசத்தில் உள்ளெ போகும் காற்றையும் வெளியில்வரும்
காற்றையும் அப்படி அப்படியே அந்தந்த இடத்தில் அசைவின்றி..நிறுத்திவிடுகிறது.
இயக்கமே இல்லாத பிரபஞ்சத்தில் அசையாத இலைகளுக்கு நடுவில் என்னை
வெறிக்கும் கண்கள்.
இலைகளுக்கு நடுவில் பத்திரமாக அரும்பியிருக்கும் சின்ன அரும்பு.. எனக்கும்
அந்தக் கண்களுக்கும் நடுவில்.
‘அம்மா. சுருக் என்று வலி. .அடிவயிற்றில் பாரம் கீழிறங்கி தையலைக்
கிழித்துக்கொண்டு விழும் தானியம்போல சிதறிக்கிடக்கிறது.
இலைகளுக்கு நடுவில் அரும்பியிருந்த சின்ன அரும்பு..காம்புடன் கிழிந்து தொங்குகிறது.
இலைகள் அசைவற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
சந்..த்த்..ரூரூ..
என் மனமும் உடலும் வேறுவேறாகி ஒன்றுடன் ஒன்று சம்மந்தமில்லாமல் தனித்தனியாக
நாக்கு வறண்டு போனது. இரவு கூர்க்கா இரண்டாவது விசில் கொடுக்கும் சத்தம்
மட்டும் அப்படியே சன்னல் வழியாக இருளுக்குள் நுழைகிறது. ரிக்ஷாவின் சத்தம்.
யாரோ இரவில் வந்து இறங்கி இருக்கிறார்கள்.
புறசத்தங்களின் ஊடுருவலில் சட்டென விழித்துக் கொள்கிறது கைகளும் கால்களும்.
‘சந்துரு..ப்ளீஸ் ‘
தூங்குடா..என்று சொல்லிக்கொண்டே கைகளால் இழுத்து அணைக்கும் சந்துருவின்
பனியனை இறுகப்பிடித்துக் கொண்ட தருணத்தில் உடைந்து போகிறது
கண்ணீர்க் குளங்கள்.
‘என்னடா;; என்னாச்சு. ‘ சந்துரு அவசரம் அவசரமாக எழுந்து உட்கார்ந்து கட்டிலருகே
இருக்கும் பெட் ரூம் விளக்கை போடுகிறான்.
‘பயமா இருக்கு சந்துரு. இந்தத் தடவையும் நமக்கு கொடுத்து வைக்காம
போயிடுமோனு பயம்மா இருக்கு.. ‘
சந்துருவின் முகத்தில் இனம் புரியாதக் கலவரம். அச்சம் குழப்பம் எல்லாம் கலந்த
அதிர்வுகள்.
என்னை அழும்வரை அழட்டும் என்று அழவிட்டது அவன் தோள்கள். என் அழுகை நிஜம்.
அழ வைத்தக் கண்களையும் கண்கள் தேடிய உடலின் அறைகளையும் அவனுக்குப் புரிய
வைக்க முடியாத நிலையில் இனம்புரியாத பயம் எனக்குள்ளும் படர்ந்தது..
இந்த முறையும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்றுதான் நாள் பிந்தியவுடனேயே
எல்லா செக்கப்புகளும் செய்திருக்கிறான். கூடியவரை என் கூடவே இருக்கிறான்.
சோனொகிராபி ரிப்போர்ட்டில் எல்லாம் நார்மலாகவே இருப்பதாகத் தான் டாக்டர்
இந்திரா சொன்னார். இரண்டு நாளைக்கு முன்பு டாக்டர் எழுதிக்கொடுத்த
அயர்ண்டானிக் பாட்டில் இன்னும் ஸீல் உடைக்கவில்லை.
அதற்குள் எல்லாமே உடைந்து சிதறிப்போய்..
எதுவுமே நடக்காத ஊனத்தில் இரவும் பகலும் .
‘என்னடா நமக்கென்ன வயசாயிடுச்சா..ஆறுதலுடன் சந்துரு அணைக்கும்போதெல்லாம்
அந்த ஆறுதலும் அணைப்பும் அர்த்தமில்லாமல் வெறுமைப்பட்டுக் கழிந்தது பல இரவுகள்.
ஒவ்வொரு முறையும் சின்னதாக எட்டிப்பார்க்கும் அரும்புகளைக் கதறக் கதற காம்புடன்
கிழித்து கசக்கி எறியும் காற்றின் கண்களை அடையாளம் காணமுடியாமல் தவிக்கும் என்
இரவின் தவிப்புகள்.. அந்தத் தவிப்புகளுக்கு நடுவில் காதலாகி கசிந்துருக
முடியவில்லையே. சந்துருவின் ஈர உதடுகளில் அரும்பி என் வேர்கள் தேடி அணைக்கும்
நட்சத்திர இரவுகள் கூட என் பிரபஞ்சத்தின் இருட்டில் எரிந்து விழுந்து சாம்பலாய்.
மாமியார் நாத்தனார் எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் செய்திகள் கசிய
ஆரம்பித்தன.
‘எல்லாம் கன்னி குத்தம்டா. உன் கல்யாணத்துக்கு முந்தின நாள் வீட்டுக்குப் பொங்கி
வைக்கலாம்னேன். நீதான் இந்த் ஊர்லே அதெல்லாம் எதுக்குமானு அதட்டி வச்சிட்டே.
பொழைக்கப்போன இடத்திலே பொண்ணைப் பார்த்தே. ப்பிடிச்சிருக்குனே.
கல்யாணத்துக்கு வாம்மானே.. நான் சொன்னதைக் கேட்டா தானே. ‘
சந்துருவின் அம்மா சமயம் பார்த்து மனசிலிருப்பதைக் கொட்டித்தீர்த்தாள்.
‘சும்மாயிரும்மா.. கன்னியாவது கன்னி குத்தமாவது. அவகிட்டே சொன்னா
சிரிக்கப்போறா. அவளுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது ‘
‘இப்படியே எல்லாம் சொல்லிட்டிருப்பா.அவளுக்கு என்ன ? நான் கண்ணை
மூடறதுக்குள்ளே உன் பிள்ளை கையைப் ப்டிச்சி நம்ம வயலையும் வரப்பையும் காட்டிட்டு
போயிடனும் ‘
‘அம்மா..மெதுவா .. அவ வர்றா ‘
சந்துருவின் கண்கள் என்னை நேரடியாகப் பார்க்காமல் என்னவோ டி.வி.யில்
சுவராசியமாகப் பார்த்துக் கொண்டிருப்பது மாதிரி பாசாங்கு செய்வதைக் கண்டு சிரிப்பு
வந்தது.
‘உன் பாசாங்குத்தனம் எவ்வளவு அப்பட்டமாக உன் முகத்தில் தெரிகிறது பார் ‘ என்று
சொல்லாமல் சொல்லிக்கொண்டே ‘என்ன, அம்மா என்ன சொல்றாங்க ‘ என்று
வேண்டுமென்றே கேட்டுவைத்தேன்.
கேட்டது சந்துருவிடம்தான் என்றாலும் நான் பதில் எதிர்பார்த்தது அம்மாவிடம்தான்
என்பது சந்துருவுக்கும் அம்மாவுக்கும் தெரியும். சந்துருவின் அம்மாவை நானும் அம்மா
என்றே ஆரம்பத்திலேயே சொல்லிப் பழகிவிட்டேன். இதில் அம்மாவுக்கு மகிழ்ச்சிதான்.
ஏனோ நாத்தனாருக்கு மட்டும் அது பிடிக்காது.
கன்னிக்கு வைத்து கும்பிடுவது என்று முடிவாகிவிட்டது. வீடு சுத்தம் செய்து புதுத்துணி
வாங்கி, அதற்கு மேட்சிங்காக கண்ணாடி வளையல்கள் வாங்கி, நிறைய தலையில்
வைக்கிற பூவும் விடுபூக்களும். எல்லோர் முகத்திலும் அமைதி.தேங்காய் உடைத்து
வெற்றிலையில் விபூதி வைத்து அதில் கற்பூரத்தை வைத்து ஏற்றினார்கள். சாம்பிராணி
கரண்டியில் தேங்காய் சிரட்டையை எரித்த நெருப்புத்துண்டுகளை வைத்து சாம்பிராணி
பொடியைத் தூவினார்கள். நான் அமைதியாக எல்லாவற்றையும் ஆவலுடன் பார்த்துக்
கொண்டு ஓரமாக நின்றேன். பூசை நடத்தும்போது வாசலில் நிற்ககூடாதாம். கன்னி
வாசல் வழியாக வருவதற்குத் தடையாக இருக்குமாம்.
விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அருகில் ஒரு சொம்பில் தண்ணீர். ஒரு தூக்கில்
பால். வாழை இலையில் சாப்பாடு பரிமாறி வைத்திருந்தார்கள்.
எல்லோரும் என் அண்ணியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
என்ன நடக்கிறது என்பதை நான் புரிந்து கொள்வதற்குள் அந்தக் கண்கள் என்னை
நோக்கி நீண்டு.. ..பயத்தில் நான் சட்டென சந்துருவின் கைகளைப் பற்றிக்கொண்டேன்.
‘ஏன் அழறே..எல்லாம் தான் வச்சி வருஷா வருஷம் உன்னை நினைக்கோமே. உனக்கு
என்ன குறவச்சேன்.. ‘
‘ம்ம்ம்..ஹாம்ம்..ம்ம்ஹாம்ம்.. ‘ கண்கள் மிரள மிரள தலைவிரிக்கோலத்துடன் சம்மனமிட்டு
உட்கார்ந்த கோலத்திலேயே உடலைக் குலுக்கி குலுக்கி முன்னும் பின்னும் அசைந்து
அசைந்து கன்னி ஆடிக்கொண்டிருந்தது.. அது என்னவோ இப்படி ஆடும்போதுகூட
விலகிய மாராப்பு சேலையை இழுத்துச் சொருகிக் கொள்ளும் சொரனையை மட்டும்
இழக்கவில்லை ‘
கன்னி வந்து ஆடிய அண்ணி மடக் மடக் என்று சொம்பில் இருந்த தண்ணீரை எடுத்துக்
குடிக்கிறாள். அப்படியே திண்ணைக்கு வந்து முந்தாணியை விரித்து படுத்துக்
கொள்கிறாள். மாமியார் கற்பூரம் எரிந்த வெற்றிலையில் இருந்த விபூதியை எடுத்து
எல்லோருக்கும் பூசுகிறார்.
‘என்ன சந்துரு .. எனக்கு அண்ணியை இப்படிப் பார்த்த பயம்மா இருக்கு ‘
‘இது ஒரு வகையான ஆர்ட்டிபிஷியல் ஹிஸ்ட்டாரியா (artificial hysteria)ப்பா.
அடிமனதில் புதைந்து கிடக்கும் சொல்ல முடியாதத் துயரங்களும் வலிகளும் தான்
இப்படிப்பட்ட ஹிஸ்ட்டாரியாவுக்கு காரணம். ‘
‘ அப்போ நல்ல மனதத்துவ டாக்டரிடம் காட்டலாம்தானே. பார்த்திட்டு சும்மா
இருக்கீங்க ‘
‘நீ பேசாம இருக்கியா. வந்தோமோ அம்மா திருப்திக்கு ஏதோ கன்னிக்குப் பொங்கி
வச்சிக் கும்பிட்டோமா போனாமானு இருக்கனும் இதெல்லாம் இவுங்ககிட்ட சொல்லி
திருத்தமுடியாது ‘
‘யாரு இந்தக் கன்னி ‘.
‘எங்க சித்தப்பா பொண்ணு.அக்காவுக்கும் அவளுக்கும் ஒரே வயசுதான். எப்பவும்
ஒன்னவேதான் திரிவாங்க. ‘
‘அவுங்களுக்கு என்ன ஆச்சு ? ‘
‘அதெல்லாம் ஏன் இப்போ.. ? சந்துரு மொட்டை மாடியில் அதற்குமேல் எதுவும்
சொல்லாமல் இழுத்து அணைத்துக்கொண்டான்.
*
டாக்டர் நார்மலுக்கு வாய்ப்பில்லை. சிசரியன் தான் என்று சொல்லிவிட்டார்.
விட்டு விட்டு வலி. அம்மாவும் அண்ணியும் இப்போதெல்லாம் இந்த டாக்டர்கள் நார்மல்
டெலிவரி வரை பொறுத்திருப்பதில்லை. ஆபரேஷன் செய்தா தானே அதிகம் பில்
போடலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். பேபி தலைப்பக்கம் இறங்கவில்லை
என்பதும் சிசரியனாகத்தான் இருக்கும் என்பதும் ஆரம்பத்திலேயே டாக்டர்
சொல்லிவிட்டதை இவர்களிடம் நாங்கள் சொல்லவில்லை.
சந்துரு முகத்திலிருந்தக் கவலையைப் பார்த்து எனக்கும் பயம் வந்துவிட்டது.
‘என்னடா சந்துரு நம்ம பேபிக்கு ஒன்னும் ஆகாதில்லே ‘
சந்துரு என் கைகளைப் பிடித்து ஆறுதலாகத் தடவினான்.
தலைமுடி நெற்றியில் விழுந்ததை எடுத்து பின்பக்கமாக விட்டான். நெற்றியிலிருந்த
ஸ்டிக்கர் பொட்டை சரி செய்தான்.
‘தேவையில்லாம எதாச்சும் கற்பனை பண்ணிக்காதே. நம்ம பேபிக்கு நல்லதில்லே. ‘
அவன் குரலில் மெல்லிய நடுக்கமிருந்தது.
என் கைகளைத் தடவிக்கொண்டிருந்த அவன் கைகளைப் பிடித்துக் கொண்டேன்.
அந்த அறை முழுக்கவும் சாம்பிராணி மணம். கற்பூரவாசனை. பத்தியும் பிச்சி, மல்லிகை,
சாமந்தி, செவந்தி, பச்சிலை, கொழுந்து எல்லாம் கலந்து பன்னீர்த் தெளித்த மணம்.
அந்த மணத்தில் என்னிலிருந்து ஒரு குரல்.. எனக்கே அந்நியமாய் ஒலித்த என் குரல்..
‘எனக்கு சத்தியம் பண்ணுப்பா.. என்னை உலக்கையாலே அடிச்சு கொன்னுட மாட்டியே ‘
சந்துரு கண்களில் கண்ணீர். அப்படியே என் கைகளை எடுத்து கண்களில் வைத்து
ஒத்திக் கொண்டு அழும் சந்துருவை அன்றுதான் புதிதாகப் பார்ப்பது போல
என் கண்கள் பார்த்தன. என் கண்கள், என் கைகள் என்னிலிருந்து விடுபட்டு விலகி
எனக்கு அந்நியமாய்.. என்னையே அந்நியப்படுத்தி தவிக்கும் பெண்ணின்
வேதனைக்குரல்.
‘என் மேலே ஆசை வச்சிட்டானு அவனையும் வெட்டிக் கிணத்திலே போடுவியா.. ‘
சந்துரு குலுங்கி அழும் சத்தம். என்னால் அழ முடியவில்லை…
அழும் சந்துருவை நர்ஸ் வந்து திட்டுகிறாள்.
என்னை ஆபரேஷன் தியேட்டருக்குள் தள்ளிக்கொண்டு போகிறாள்.
கொஞ்சம் கொஞ்சமாக சந்துருவின் முகம் என் கண்களிலிருந்து மறைகிறது.
ஆபரேஷன் தியேட்டரின் அனதிசியா மயக்கத்தில் நானும் என் அந்நியமும்
மயங்கிக்கொண்டிருக்கிறோம்.
***
இப்போதெல்லாம் வருஷா வருஷம் கன்னிக்கு பொங்கிவைக்க நானும் சந்துருவும்
குழந்தையை எடுத்துக் கொண்டு போய்வருகிறோம். அது என்னவோ தெரியவில்லை
இப்போதெல்லாம் கன்னி வந்து என் அண்ணி ஆடுவதில்லை. என் குழந்தையை வைத்து
கொஞ்சிக்கொண்டு இருப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.
எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லைதான். மாமியாருக்கும் நாத்தனாருக்கு
இந்தக் கன்னி பூசையில் சந்தோஷமிருக்கிறது. எங்களுக்கும் ஒரு டிரிப் எல்.எஃப்.சி.
எடுத்து ஊருக்குப் போய்வந்த நிறைவு இருக்கிறது.
—-
puthiyamaadhavi@hotmail.com
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம்,உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-2
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -5 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- சித்திரையில்தான் புத்தாண்டு
- பெரியபுராணம் – 84 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- வாழும் என் கவிதைகளில் ( மூலம் : அந்தானாஸ் ஜோன்யாஸ் )
- மிஸ்டர் இந்தியா !
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-16) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- கீதாஞ்சலி (68) பன்னிற வடிவப் படைப்புகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… -1
- ஆத்மா, அந்தராத்மா, ம ?ாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2
- புதிய காற்று & இஸ்லாமிய இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இஸ்லாமியக் கருத்தியல்-கலந்துரையாடல் இருநாள் அமர்வு—2006 மே இறுதிவாரம்
- மலர்மன்னனின் உள்ளுணர்வும், உண்மைக்கு மாறானதும்
- கடிதம் – ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்
- அவுரங்கசீப்
- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே…நண்பரே.. நண்பரே….! – 1
- சிற்றிதழ்களின் சிறந்த படைப்புகள் – 2004
- ‘காலத்தின் சில தோற்ற நிலைகள் ‘ : ‘ரிஷி ‘ யின் நான்காவது கவிதைத்தொகுப்பு
- எது உள்ளுணர்வு ?
- ஐந்தாவது தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா ஆவணி 2006
- மீண்டும் வெளிச்சம்
- இரவுகள் யாருடையவை ?
- என் பார்வையில் : ஊடகங்களின் அரசியல் நடுநிலைமை – ஒரு கேள்விக்குறி – ?
- புதிய பெயர், புதிய தோற்றம், புதிய குடும்பம் ஏன் ?
- கற்று மறத்தலும், முன் நோக்கிச் செல்லுதலும் ( மூலம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் )
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 2
- புலம் பெயர் வாழ்வு (7) – தலைமுறை இடை….வெளி
- வேலையின்மை கிளர்ந்தெழும் பிரான்சு இளைஞர்கள்
- தனுஷ்கோடி ராமசாமி யின் ‘தீம் தரிகிட ‘- சிறுகதைத் தொகுப்பு சுட்டும் மனித உரிமை மீறல்களும், அதற்கான தீர்வுகளும்.
- ‘நல்லூர் இராஜதானி:நகர அமைப்பு ‘ – அத்தியாயம் எட்டு: பண்டைய நூல்களும் கட்டடக்கலையும்!
- கன்னி பூசை
- பறவை
- திரவியம்
- விஞ்ஞானியின் வினோத நாக்கு
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 16
- தவ்ஹீது பிராமணீயம்
- எடின்பரோ குறிப்புகள் -11
- இன்னும் ஒரு ரத்த சாட்சி – காத்தாடி மலையில் இருந்து
- எங்கே செல்லுகிறது இந்தியா ?
- கோட்டில் குந்தியிருந்த எண்ணற்ற புள்ளிகளின் மனப்பொழுதின் பகிர்வுகள்
- உயர் கல்விக்கூடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு.
- காந்தியும் சு.ரா.வும்
- சரத்குமார் விலகல் -திமுகவின் கெஞ்சல்
- ஆக்டே ரிபாத்தும் அடியேனும்
- கடித இலக்கியம்
- ராகு கேது ரங்கசாமி – 5 ( முடிவுப் பகுதி )
- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ! நண்பரே….நண்பரே ….நண்பரே…! – 2
- நானும், கஞ்சாவும்
- தேவதைகளின் சொந்தக் குழந்தை — விமர்சன கூட்டம்(பன்முக விமர்சனங்கள்)