கே.எஸ்.சுதாகர்
சற்குணம் கோயிலுக்கு முன்பாக நின்று தேங்காய் ஒன்றை வீசி எறின்றார். உடைந்த தேங்காயின் பாகங்கள் மூலைக்கொன்றாக சிதறி தமிழரின் வாழ்வு போலப் பறக்கின்றன. சற்குணம் கனடா போகவென்று கொழும்பு வந்து ஒரு வருஷமும் ஆறு மாதங்களும் உருண்டோடிவிட்டன. ஆனாலும் சற்குனம் கொழும்பைவிட பிற இடங்களில் இருந்த காலம்தான் அதிகம். பாகிஸ்தான் சிறைச்சாலையில் ஆறுமாதங்களும், ஜப்பான் ஹோட்டல்களில் மூன்றுமாதங்களுமாக காலத்தைக் கழித்துவிட்டு ‘பூமராங்’ போல புறப்பட்ட இடத்திற்கு வந்துவிட்டார்.
நிகழும் விஜ வருஷம் வைகாசித்திங்கள் 11ஆம் நாள், நல்லதொரு சுபவேளையில் அடுத்ததொரு படையெடுப்பை மேற்கொள்ள திட்டமிட்டார் சற்குணம். ‘இந்த முறையாவது அப்பா வெளிநாடு போய்விடவேண்டும்’ என்று கடவுளை வேண்டிக் கொண்டாள் மூத்த மகள் சாகித்தியா. சற்குணமும் மூத்த இரு பெண்களும் கொழும்பிலும், மனைவியும் கடைசி மகளும் யாழ்ப்பாணத்திலும் இருக்கின்றார்கள்.
கோயிலிலிருந்து திரும்பிய சற்று நேரத்தில் மகேஸ்வரிமாமியும் மகன் ரமணனும் சற்குணத்தின் வீட்டின் கதவைத் தட்டினார்கள்.
“என்ர மகன் ரமணனுக்கு உங்களோடைதான் ·பிளைட் எண்டு ஏஜன்சிக்காரன் சொன்னவன். அவன்தான் உங்கட விலாசத்தையும் தந்து விட்டவன்” இடம்பெயர்ந்தபின் நீண்டநாட்களாக சந்தித்துக் கொள்ளாத மகேஸ்வரிமாமி மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
“வயசும் போயிட்டுது. கனடா போகத்தான் வேணுமோ எண்டு யோசிக்கிறன். மூண்டு பெம்பிளப் பிள்ளையளையும் பெத்துப் போட்டன். மூத்தவளுக்கும் வயசு இருபதாகுது” பெருமூச்சு விட்டார் சற்குணம்.
“அவளவைக்கென்ன! நல்ல வடிவும் படிப்பும் இருக்கு. நீங்களும் கனடா போனால் பிறகென்ன?” எதற்கோ அடிகோலினாள் மகேஸ்வரி.
சாகித்தியா ரீ போட்டுக் கொண்டு வந்து எல்லாருக்கும் குடுத்தாள். அவளின் தங்கை கொம்பியூட்டர் படிப்பதற்காகப் போய்விட்டாள். ரமணனும் சாகித்தியாவும் சின்ன வயசில் பானை சட்டியளுக்கை சோறு கறி சமைத்து விளையாடியவர்கள். அவர்கள் இருவரும் சிரித்துச் சிரித்துக் கதைத்தார்கள். ரமணன் கனடா போய்விட்டால் வேறு யாரையாவது கொத்திக் கொண்டு போய்விடுவானோ என்ற பயம் மகேஸ்வரிக்கு உள்ளூர இருந்ததால், அவர்களின் உரையாடலிற்கு மருந்து குடுக்காமல் ரசித்துக் கொண்டாள்.
“ஒவ்வொருமுறையும் நான் வெளிநாடு எண்டு வெளிக்கிடேக்கை ஒரு கிழமைக்கு முதலே என்ர மனிசி வந்து பிள்ளையளோடை நிற்பா. இந்தமுறை பாதைப் பிரச்சினையாலை அதுவும் சரிப்பட்டு வராது.” – சற்குணம் கவலைப்பட்டார்.
“நானும் லொட்ஜிலைதானே சும்மா காசைக் குடுத்துக் கொண்டு நிக்கிறன். உங்களுக்குப் பிரச்சினை இல்லையெண்டால் நீங்கள் போனதுக்குப் பிறகு நான் இஞ்சை வந்து நிக்கிறன். ரமணன் கனடா போனதுக்குப் பிறகுதான் வீட்டை போவன்.” – மகேஸ்வரி.
கதைத்துக் கொண்டதன்படி வெளிநாடு புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பதாக, மகேஸ்வரியும் ரமணனும் சற்குணம் வீட்டில் முகாமிட்டனர். ரமணன் சாகித்தியாவைச் சுற்றிச் சுற்றி வர, அவள் மசிந்தி மசிந்தி ஒளித்துத் திரிந்தாள். பிறகு பிரிவு. பிரிவில் ஒரு கலக்கம். கண்ணீர்.
சிங்கப்பூரிற்கு சற்குணமும் ரமணனும் ஒன்றாகப் புறப்பட்டார்கள். சிங்கப்பூரிலும் ஒரே ஹோட்டலில்தான் தங்கி நின்றார்கள். அடுத்தகட்டம் நோக்கிப் புறப்படும்போது இருவரும் பிரிந்து கொண்டார்கள். நான்குமாதங்கள் தாய்லாந்தில் தவித்துவிட்டு ரமணன் கனடா போய் சேர்ந்தான். சற்குணம் நைரோபியில் திரும்பவும் தடக்கி நின்று கொண்டார். இந்தமுறையும் அவருக்கு பயணம் சரிப்பட்டு வரவில்லை.
ரமணன் கனடாவில் அகதிகள் வரிசையில் ஒன்றானான். சாகித்தியாவிற்கு ரெலிபோனில் தூது விட்டான். மகேஸ்வரி அவனுக்கொரு கடிதம் போட்டிருந்தாள். சாகித்தியா குடும்பத்தை பொறுப்பாகக் கவனிக்கக்கூடிய அருமையான பிள்ளை என்று அதில் வர்ணித்திருந்தாள். எதற்கும் சற்குணம் கனடா போய்ச் சேரட்டும் என்று முடித்திருந்தாள்.
சற்குணமும் அங்குமிங்குமாக இழுபறிப்பட்டு கடைசியில் கனடா போய்ச் சேர்ந்தார். ரமணன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்தபோது ரெலிபோன் அலறியது. சற்குணம் ‘கார்ட் அற்றாக்’கினால் இறந்து போனார் என்ற செய்தி மறுமுனையிலிருந்து அவலமாக வந்தது. ரமணனே முன்னின்று செத்தவீட்டையும் நடத்த வேண்டியதாயிற்று.
“தம்பி! நல்ல காலமடா. இனிமேல்பட்டு சாகித்தியாவுக்கு ரெலிபோன் எடுத்துப் போடாதையடா. அதுகள் ஒரு விசர்க்குடும்பம். தகப்பன் செத்து இரண்டாம்நாளே பூசி மினுக்கிக் கொண்டு வேலைக்குப் போகிறாள். நான் இப்ப அவையோடை இல்லை. திரும்பவும் லொட்ஜிற்கு வந்திட்டன்” மகேஸ்வரி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ரெலிபோன் எடுத்தாள்.
“அம்மா, நீங்கள்தானே சாகித்தியா நல்ல பிள்ளை எண்டு சொன்னியள். இப்ப இப்பிடிச் சொல்லுறியள்” ஏக்கத்துடன் ரமணன் கேட்டான்.
“நீயும் கொஞ்சம் யோசிச்சுப் பார். உனக்கும் சுய அறிவு இருக்கு. பணம் இல்லாட்டி இந்தக் காலத்திலை ஒண்டும் செய்யேலாது. உனக்கும் ஒரு வயதுக்கு வந்த தங்கைச்சி இருக்கு. அந்தாள் உழைச்சு சீதனம் சீதனமாத் தரும் எண்டிருந்தன். இப்ப அவனும் செத்துப் போனான். நான் உனக்கு நல்ல சீதனத்தோடை பாக்கிறன். அங்கை கட்டு” சூறாவளி அடித்தது போல பேசி முடித்தாள் மகேஸ்வரி. ரமணன் என்ன சொல்லியும் மகேஸ்வரி சமாதானம் கொள்ளவில்லை.
ரமணன் சாகித்தியாவிற்கு ரெலிபோன் செய்தான். அவள் ரெலிபோனை அடித்து மூடிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவ்வளவிற்கு அங்கே மகேஸ்வரி நாடகம் நடித்துவிட்டுப் போய் விட்டாள். வீடு காணி நகை எல்லாவற்றையும் விற்று வெளிநாடு போய் இறந்த தந்தையை நினைத்து அழுதாள். வாழ்க்கையை நினைத்து பணம் தேடி வேலைக்குப் போனால் பூசி மினுக்குகின்றாள் என்று சொலின்றார்களே என வேதனைப்பட்டாள்.
ரமணனின் தாயார் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு யாழ்ப்பாணம் போய்விட்டாள். அவர்களின் கனவுகள் பூச்சூடாமலே போய்விடுமா?
- கவிதைகள்
- பெண் விடுதலைச் சிந்தனையில் தமிழ் இதழ்கள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 4
- எழுத்துக்கலை பற்றி இவர்கள் – 17 வி.ஆர்.எம்.செட்டியார்.
- வார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…
- கவிதை ஒட்டகங்களுடன் நகர்ந்து செல்கின்றது – அரபு இலக்கியங்கள் ஓர் அறிமுகம்
- Last kilo Byte – 10
- சுஜாதா : பத்திரிக்கைப் பேராளுமை
- பாரதியாரது தத்துவ மரபு
- அண்மையில் மறைந்த ஆர்தர் சி.கிளார்க் அவர்களின் நினைவாக…..
- திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சுக்கிரன் வரட்சிக் கோளாய் எவ்விதம் மாறியது ?(கட்டுரை: 22)
- தோஹா ஆசிய திரைப்படவிழா – கிரீஷ் காசரவல்லி அவர்களின் “நாயின் நிழலிலே”
- காற்றினிலே வரும் கீதங்கள் – 12 உறங்காமல் விழித்துள்ளவள் !
- தாகூரின் கீதங்கள் – 23 உலகைப் பிரியும் நாளில் !
- ஊழிக் கூத்து
- சம்பந்தமில்லை என்றாலும்- சைவாலயங்களில் சமசுகிருத மந்திரங்களே வேண்டும் (ஆ. சக்கரமூர்த்திப்பிள்ளை)
- பக்தி நிலை வரும்போது__-
- தில்லைச் சிற்றம்பல மேடையில் ஏறியது தமிழ்! …மார்ச் 2 அன்று!
- அழியும் தருவாயில் உண்மையானப் பெண்ணிலக்கியங்கள்
- எழுதுகோல் தெய்வமா?
- எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு
- மக்கள் சக்தி இயக்கம் – மத்திய மாநில பட்ஜெட் பொது விவாதம்
- காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் – நூல் வெளிவந்துள்ளது
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 4
- கூவத்தமிழன் கூவுகிறேன்!
- கவிதைகள்
- முறிப்புக் கிராமம்
- கைவளைக்கும் இல்லை கனிவு!
- அநிச்சயக் கோடுகளில் உதிரும் புன்னகைகள்
- கனவு மெய்ப்பட வேண்டும்!
- அடகுக் கடை
- அன்புள்ள அப்பாவுக்கு !
- ரோபோக்களின் ஆசீர்வாதம்
- என்னைக் கொஞ்சம் தூங்கவைத்தால்
- நிலவுக்கும்…….