கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

ஜெயமோகன்


இலக்கியப் படைப்புகளை அவற்றின் உருவாக்க முறையை ஒட்டி இருவகையாகப் பிரிக்கலாம். 1. வாழ்க்கையிலிருந்து அனுபவங்களை நேரடியாகப்பெற்று நேரடியாகவே பதிவுசெய்யும் ஆக்கங்கள். 2. கேட்டறிந்த அல்லது வாசித்த கதைகளில் இருந்து கற்பனையான வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டு அவற்றை பலவாறாக உருமாற்றியும் பின்னியும் மறுபுனைவு செய்யும் ஆக்கங்கள். பொதுவாக நாம் முதல்வகை ஆக்கங்களையே மேலானவை என்று நம்ப பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறோம். ‘வாழ்க்கையின் அப்பட்டமான பிரதிபலிப்பு ‘ ‘ வேர்மண் வாசனை கொண்ட படைப்பு ‘ ‘ ரத்தமும் சதையுமான வாழ்க்கை ‘ என்றெல்லாம் நம் திறனாய்வாளர்கள் விதந்தோதுவது முதல்வகை ஆக்கங்களையே. ஆனால் பின் நவீனத்துவம் உருவானபோது எல்லா இலக்கியங்களும் உண்மையில் வெகுகாலம் முன்பே சொல்லப்பட்டவற்றின் மறுபுனைவுகளே என்ற நோக்கு வலுப்பெற்றது. இலக்கியப்படைப்பின் சிறப்பென்பது ஓர் உண்மையான கதையை சொல்வதில் இல்லை என்றும் ஒரு புதியவகைக் கதைகூறலை உருவாக்குவதில்தான் உள்ளது என்றும் சொல்லப்பட்டது. இவ்விருவகைக் கதைகளும் எபோதும் நம் முன் உள்ளன. பூமணியின் ‘பிறகு ‘ முதல்வகை. சுந்தர ராமசாமியின் ‘ஜெ ஜெ சில குறிப்புகள் ‘ இரண்டாம் வகை. ஜோ டி க்ருஸின் ஆழிசூழ் உலகு முதல்வகை எம் யுவனின் பகடையாட்டம் இரண்டாம் வகை.

நுண்மையான இலக்கிய வாசகன் இலக்கியத்தில் இவ்விருவகை எழுத்துக்கும் எப்போதும் இடமும் சமமான முக்கியத்துவமும் உண்டு என்றே எண்ணுவான். ஒன்றை உயர்த்தி பிறிதை தாழ்த்தமாட்டான். ஏனெனில் இரண்டு நோக்குகளுமே வாழ்க்கையை விளக்குபவை, விரிவாக்கம் செய்பவை என அவன் அறிவான். நேரடியான இலக்கியப் படைப்பு அதன் அந்தரங்கத்தன்மையின் வலிமையைக் கொண்டிருக்கும். வாழ்ந்து பெற்ற நுண்ணிய வாழ்க்கைக்கூறுகள் அதில் பதிவாகியிருக்கும். அதேசமயம் அதுவாழ்க்கை அவ்வாசிரியனுக்கு அளித்த அனுபவப்பதிவின் விளைவான கருத்துநிலையால் எல்லைவகுக்கப் பட்டிருக்கும். ஆகவே அது அவனது தரப்பை மட்டுமெ உரத்து சொல்லிக் கொண்டிருக்கும்– எத்தகைய மெளனம் மிக்க படைப்பாக இருந்தாலும். பெரும்பாலும் அது நேரடியான யதார்த்தவாதப் படைப்பாக இருக்கும். செவ்வியல் யதார்த்தவாத நோக்கு இருப்பின் வாழ்வின் விரிவை அள்ளும் நாவலாக அது இருக்கும்– ஆழி சூழ் உலகு போல. நவீனத்துவ அழகியல் கொண்டதாக இருந்தால் ஒருமனிதனின் கதையாக சுங்கிவிடும் ‘பிறகு ‘ போல. இவ்வகைமையின் பலமும் பலவீனமும் இதுவே.

கதைகளில் இருந்து கதைபெற்று உருவாகும் ஆக்கங்கள் பலர் நம்புவதுபோல இரவல் அனுபவங்களால் ஆனவையல்ல. முதலில் வாசிப்பனுபவமும் உண்மையான அநுபவத்துக்கு நிகரான , ஏன் சிலசமயம் மேலும் உக்கிரமான அனுபவமே. இரண்டாவதாக கதைகளை பெறுவதற்கும் தொகுப்பதற்கும் அக்கதாசிரியன் பயன்படுத்துவது அவனது சுயஅனுபவங்களினாலான ஒரு நுண்ணுணர்வையே. அதன் மறைமுகமான வெளிப்பாடே அவன் மறுஆக்கம் செய்யும் கதையுலகம். அனுபவதளம் மறைமுகமாக உள்ளது, அவ்வளவுதான். இவ்வாறு மறைமுகமாக தன் சுயத்தை நிறுத்திக் கொள்வதன் வழியாக அவ்வெழுத்தாளன் தன் அனுபவங்களிலிருந்து உணர்வு ரீதியாக தன்னை விடுவித்துக் கொள்கிறான். அதன் வழியாக அவனுக்கு ஒரு செவ்வியல் சமநிலை உருவாகிறது. கதைகளை பின்னி முடைந்து பலவகையான வாழ்க்கைநோக்குகளை, கூறல்முறைகளை உருவாக்கவும் அதன்வழியாக வாழ்வின் பல்வேறு அபூர்வ வண்ணங்களை தன் ஆக்கங்களில் காட்டவும் அவனுக்கு வாய்க்கிறது.

**

அவ்வாறு வாழ்க்கையின் சித்திரங்களை காட்டும் விசித்திரமான வண்ணக் கண்ணாடித்தகடுபோன்ற அமைப்பு கொண்ட நாவல் தமிழினி வெளியீடாக இவ்வருடம் வெளிவந்துள்ள, எம் யுவன் எழுதிய, ‘பகடையாட்டம் ‘ . மர்ம ,திகில் கதைகளுக்கு உரிய வடிவத்தை இதற்கு யுவன் தெரிவுசெய்துள்ளார். உத்வேகமான வாசிப்பனுபவத்தை கடைசி வரை அளிக்கக் கூடியதாக உள்ளது இந்தவடிவம். இந்தியாவின் வட எல்லையில் இமையமலையடுக்குகளுக்குள் கதை நிகழ்கிறது. திபெத்தை நினைவுறுத்தும் சோமிட்ஸியா என்ற சிறிய நாடு. அதன் மதத் தலைவரும் அரசியல் அதிபருமான சோமிட்ஸு புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட சிறுவர். அவரது அமைச்சரும் காவலருமான ஈனோங் தன் மீது ஆதிக்கம் செலுத்தும் அமைச்சரிடமிருந்து தப்பி இந்தியாவரும் சொமிட்ஸு இமையமலைச்சாரலில் இந்திய ராணுவ முகாமில் இருக்கும் மேஜர் கிருஷ் முன் சரணடைகிறார் .அன்றிரவு மர்மமான முறையில் அவர் காணாமலாகிறார். மேஜர் கிருஷ் அதன் விளைவுகளால் பதவி இழந்து மனம் உடைந்து ஊர்திரும்புகிறார். எளிமையாகச் சொல்லப்போனால் இந்நாவலின் கதை இதுதான். சில வருடங்களுக்கு முன்பு சிறுவனான பஞ்சன்லாமா திபெத்தில் இருந்து தப்பி இந்தியா வந்த உண்மைச்சம்பவத்தை ஒட்டி உருவாக்கப்பட்ட கற்பனைக் கதை இது.

சொமிட்ஸு தப்பி ஓடியது ஒரு சிறிய ஆனால் முக்கியமான அரசியல் நிகழ்வு. ஏராளமான மனிதர்கள் அதனுடன் மிகப்பெரிய வலையொன்றால் பிணைக்கப்பட்டவர்கள் போல தொடர்புகொண்டுள்ளனர். அவ்வரசியல் நிகழ்வு அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமாக பாதிக்கிறது. … உட்பட எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையையே மாற்றிமறித்துவிடுகிறது. தமிழகத்தின் சிற்றூரில் வாழும் மனிதர்களில் கூட தன் நேரடிப்பாதிப்பு நிகழ்கிறது. இதையே இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். அந்த மைய அரசியல் நிகழ்வென்பதே அதனுடன் பிணைந்துள்ள ஏராளமான மனிதர்களின் அன்றாடவாழ்க்கையின் நிகழ்ச்சிகளின் ஒரு தொடர்விளைவாக உருவாகும் ஒரு முடிச்சுமட்டும்தான். உலக நிகழ்ச்சிகளுக்கு அப்படி மையம் ஏதும் இல்லை. ஒன்றில் இருந்து இன்னொன்றாக நிகழ்ச்சிகள் பிறந்து விரிந்து செல்கின்றன. ஒரு பகடையாட்டம் போல. பகடையில் பன்னிரண்டின் எண்ணமுடியாத சாத்தியங்களில் எதுவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதிலிருந்து எண்ணற்ற நிகழ்ச்சிகளின் தொடர்கள் நாலாபக்கமும் விரியலாம். ஒரு வண்னத்துளியை கலைடாஸ்கோப்பில் வீசி உருவாகும் விதவிதமான வடிவங்களின் சாத்தியங்களைக் காட்டி பிரபஞ்ச இயக்கத்தில் உள்ள பிரமிக்கச் செய்யும் இந்த அற்புத முடிவின்மையை நமக்குக் காட்டக்கூடும் ஓர் ஓவியன். இந்த நாவல் மூலம் யுவன் செய்வதும் அதையே.

இந்நாவலின் நோக்கம் அதன் வடிவில்தான் வெளிப்படுகிறது. உண்மையில் இந்நாவல் எதையும் முடித்துச் சொல்ல முயலவில்லை. ஒன்றோடொன்று சிக்கிச்சிக்கி விரியும் நிகழ்ச்சிகளின் இயக்கத்தை மட்டும் சித்தரித்துக் காட்டிவிட்டு இது நின்றுவிடுகிறது. இதன் அனுபவமும் செய்தியும் இவ்வடிவில்தான் உள்ளது. இது வாசகனுடன் பகடையாட விழையும் நாவல். நாவலுக்குள் நிகழ்ச்சிகளின் பின்னலுக்குள் உள்ள அதே பகடையாட்டத்தை நாவலாசிரியனும் வாசகனுடன் ஆடுகிறான். பல்வேறு கதைக்கோடுகள் இதில் உள்ளன. மேஜர்கிருஷ்ஷின் கதை ஒருகோடு. அதை மீட்டுச்சொல்லும் சந்திரசேகரின் நோக்கு ஒரு கோடு. ஜூலியஸ் லுமும்பா, வேய்ஸ் முல்லர் போன்ற பயணிகளின் கதைகள் தனிக்கோடுகள். நேரடியாகச் சொல்லப்படும் சோமிட்சியாவின் நிகழ்வுகள் ஒரு கோடு. இவற்றை தன் வசீகரமான மர்ம மொழியில் குறுக்காக ஊடுருவும் சொமிட்சிய மத- சோதிட மூலநூலின் தத்துவமும் தொன்மமும் கலந்த சொற்களினாலான ஒரு கோடு. தேர்ந்த விரல்கள் பின்னிபின்னி வண்ணப்பூக்களும் கொடிச்சுருள்களுமாக விரியும் காஷ்மீர் கம்பளம் போன்றது இதன் கதை. இக்கோடுகளின் பின்னலை நிகழ்த்த வேண்டிய பொறுப்பு வாசகனின் கற்பனைக்கு விடப்பட்டிருப்பதே இந்நாவலின் கலையனுபவமாகும்.

இத்தகைய கதை ஒன்றை உருவாக்க திறன் மிக்க புனைவுமொழியும் விதவிதமான சூழல்களை ஊடுருவும் கற்பனை வலிமையும் தேவை. தமிழில் இம்மாதிரி சோதனைவடிவங்களை முயன்றுபார்த்தவர்களில் சுந்தர ராமசாமி தவிர பிறர் அதைச்செய்யும் புனைவுத்தகுதி கொண்டவர்கள் அல்ல என்பதையே அவர்களின் நூல்கள் நிறுவின. யுவன் அவ்வகையில் சுந்தர ராமசாமியைவிட ஒருபடி மேல் என்றே கூறவேண்டும். ‘ஜெ ஜெ சில குறிப்புகள் ‘ பலவிதமான மொழிநடைகள் பயின்றுவருவதற்கான தேவை இருந்தாலும் இருவகை மொழிநடையுடன் அமைந்து விட்ட நாவல்: கதைசொல்லி நடை மற்றும் டைரி நடை. மாறாக யுவனின் இந்நாவலில் குறைந்தது ஐந்து வகையான வேறுபட்ட மொழிநடைகளின் அழகிய பின்னலைக் காணலாம். புராதன நூல் ஒன்றின் எளிமையும் மர்மமும் கொண்ட சோமிட்சிய மதநூலின் மொழி. நேரடியாக கதைசொல்லும் ஹெமிங்வேத்தனமான மொழி. கிராமத்து நிகழ்வுகளை எளிய மதுரை வட்டாரக்கொச்சை உரையாடலுடன் சொல்லும் மொழி. ஐரோப்பிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் பகுதிகள் , லுமும்பாவின் பழமொழிகள் மண்டிய ஆப்ரிக்க மொழி என. இந்நாவல் உருவாக்கும் அனுபவத்தை நம்பகமாக நிறுவுவதில் இம்மொழி முக்கியமான வெற்றியை அடைந்துள்ளது.

இந்நாவலின் முக்கியமான இன்னொரு கூறு மெல்லிய நகைச்சுவையுடன் கச்சிதமான மொழியில் ஆங்காங்கே மின்னிச்செல்லும் தத்துவார்த்தமான அவதானிப்புகள் எனலாம். அவை நாவலின் பகடையாட்டத்தை தத்துவதளத்துக்கு நகர்த்தி வாசகனை புதிய இடங்களுக்குக் கொண்டுசெல்ல உதவுகின்றன. அத்துடன் வாசிப்பை ஆர்வமூட்டும அநுபவமாக ஆக்கும் துளிகளாக நாவலெங்கும் பரந்துகிடக்கின்றன. வேடிக்கையான ஆனால் ஒருவகையான முழுமை கொண்ட தர்க்கத்துடன் முன்வைக்கப்படும் அந்த சோமிட்சிய பிரபஞ்ச தரிசனம் நாவல் முழுக்க விரிந்து அந்த தத்துவ சிந்தனைகளையும் வேடிக்கையாக மாற்றிக் காட்டுவது இந்நாவலின் பகடையாட்டத்தின் குறிப்பிடத்தக்க அனுபவங்களுள் ஒன்று

இந்நாவலை இத்தகைய ஓர் அறிமுகக்குறிப்பில் விரிவான அலசலுக்கு உள்ளாக்க விரும்பவில்லை. பரவலாக படிக்கபட்ட பின் அதை நிகழ்த்துவதே சிறந்தது என்று எண்ணுகிறேன். தமிழ்ச் சூழலில் இரு காரணங்களினால் இந்நாவல் மிகுந்த் முக்கியத்துவம் பெறுகிறது. வடிவச்சோதனை செய்யும் நாவல் வாசிப்பையும் சோதனைசெய்வதே இங்கு வழக்கம். ‘ஜெ ஜெ சிலகுறிப்புகள் ‘ அதற்கு முக்கியமான விதிவிலக்கு என்றால் ‘பகடையாட்டம் ‘ அதற்கு அடுத்ததாகச் சொல்லபப்டவேண்டியதாகும் . தன் முந்தைய நாவலான ‘குள்ளச்சித்தன் சரித்திர ‘த்திலிருந்து வெகுவாக முன்னகர்ந்திருக்கிறார் யுவன். அடுத்தபடியாக கதையை வாழ்க்கையாக நோக்கும் வாசிப்பே நமக்குப் பழக்கம். வாழ்க்கையை கதையாக கதைகளின் பகடையாட்டமாகக் காட்டும் இந்நாவல் நம் யதார்த்த இலக்கியங்களின் விரிந்த பின்புலத்தில் முக்கியமான ஒரு இலக்கிய நிகழ்வாகும்.

[தமிழினி . 130/2 அவ்வை சண்முகம் சாலை ராயப்பேட்டை சென்னை 86 . போன் 28110759 ]

jeyamohan.b@gmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்