கண்ணகி-மரணதண்டனைக்கு எதிரான இளங்கோவடிகளின் குரல்

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

சின்னக்கருப்பன்


சென்ற வாரம் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் அழகாக கண்ணகி சிலை பற்றி எழுதியிருந்தார்கள்.

இன்று பலரும் குறிக்கும் அதே சொல்லாடல்களைக் கொண்டும், பெண்ணிய பார்வையைக் கொண்டும் கண்ணகி பற்றிய தன் கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். அதில் பெரும்பாலானவற்றினை நான் மறுக்கவில்லை.

எனக்குத் தெரிந்து பாண்டியன் நெடுஞ்செழியன் ஆட்சிக் காலத்தில் மதுரை தீக்கிரையானதாகவோ, பாண்டியன் நெடுஞ்செழியன் அரசவையிலேயே உயிர்நீத்ததாகவோ தெரியவில்லை. ஆக கண்ணகி கதை உண்மையில்லையா?

சரி அப்படியே பாண்டியன் நெடுஞ்செழியன் ஆட்சிக்காலத்தில் மதுரை தீக்கிரையானதாகவே வரலாறு இருக்கட்டும். அது கண்ணகியின் மார்பினால்தான் அந்த தீ மதுரையை எரித்தது என்பதற்கு என்ன ஆதாரம்? அதனால்தான், கலைஞர் சிலப்பதிகார நாடகம் எழுதும்போது கண்ணகியின் கால் பட்டு குத்துவிளக்கு கீழே விழுந்து மதுரை எரிந்ததாக எழுதினாரோ என்னவோ.

சிலப்பதிகாரத்தில் வரலாற்று உண்மை இல்லையென்றால், அதனை ஏன் இளங்கோவடிகள் எழுத வேண்டும்? இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தை பொய்த்தகவல்கள் மூலம் ஏன் உருவாக்க வேண்டும்? சிலப்பதிகாரம் ஒரு காப்பியம் என்ற ஒரு காரணமே அது வெகுவாக வாசிக்கப்படுவதற்கும் பாராட்டப்படுவதற்கும் காரணமா? அல்லது கண்ணகி போல தன் கணவர்கள் என்ன தவறு செய்தாலும் பொறுத்துக்கொண்டு போக வேண்டும் என்று பெண்களுக்கு காட்டுவதற்காக இளங்கோவடிகள் எழுதினாரா?

நிச்சயம் அல்ல.

பெண்ணிய வாதிகள் வெறுக்கும் கண்ணகியின் குணநலன்களே இளங்கோவடிகளின் பிரச்சார காப்பியத்துக்கு முக்கியமாக இருந்தால் பாண்டியன் நெடுஞ்செழியனின் அரசவையில் அவள் நீதி கேட்டு நிற்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவளது கணவன் திரும்ப வரப்போவதில்லை. தனக்கு நேர்ந்த இன்னொரு துர்ப்பாக்கியமாக அவள் மூலையில் தன் கணவனை எண்ணி மிகுந்த வாழ்நாளை கடத்தினாள் என்று இளங்கோவடிகள் எழுதியிருந்தாலும் அந்த “ஆணாதிக்க” பிரச்சாரம் முழுமை பெற்றிருக்கும்.

சிலப்பதிகாரத்தை பரப்புபவர்கள், பாராட்டுபவர்களுக்கு கண்ணகியின் குணநலன்களே முக்கியமாக இருந்திருந்தால், தேரா மன்னா செப்புவதுடையேன் என்று அவள் எழுந்து நின்று தன் காற்சிலம்பை தூக்கிப்பிடித்த வகையில் அவளை சிலை வடிக்க வேண்டிய அவசியமென்ன? அவள் கோவலனி காலடியில் உட்கார்ந்திருப்பதுபோன்று சிலை வடித்திருக்கலாமே?

சிலப்பதிகாரம் என்ற உடனேயே நம் கண் முன் “தேரா மன்னா” தோன்றுகிறது?

ஏனெனில், கண்ணகி சிலை கண்ணகி பற்றியதல்ல. கண்ணகி என்ற பெண்ணின் குணாம்சங்கள் பற்றியதல்ல. கண்ணகியின் கதை நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் ஒரு புராணம். (Mytholology). புராணம் ஒரு உண்மையைச் சொல்கிறது. அது வரலாற்று உண்மையல்ல. அது சமூக உண்மை. புராணத்தின் அடிப்படை செயல்பாடும், புராணம் நம் மரபில் எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டுவந்தது என்பதை பின்புலத்தில் கொண்டுமே நாம் எந்த ஒரு புராணத்தையும் அணுகவேண்டும். கடந்த இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக நம்மின் அறிவு மரபில் ஆபிரகாமிய மதங்களின் தாக்கத்தின் விளைவில் நாம் நமது மரபை எப்படி பார்க்க வேண்டும் என்ற அறிவைக்கூட இழந்துவிட்டோம் என்று உணரும்போது வருத்தமே மிஞ்சுகிறது.

புராணம் ஒரு வரலாற்று உண்மையை சொல்வதில்லை என்பதை நம் மரபு திருப்பித்திருப்பி சொல்கிறது. அதனை நாம் கிஞ்சித்தேனும் உணராது, மீண்டும் மீண்டும் விதண்டாவாத திறமையையே காட்டுகிறோம்.

திண்ணை ஆசிரியர் கோ ராஜாராம் ஒரு முறை பேசும்போது, “நாம் வரலாற்றை புராணம் பண்ணுகிறோம், மேற்கத்தியர்கள் புராணத்தை வரலாறு பண்ணுகிறார்கள்” என்று சொன்னார்.

நாம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வது அதனை புராணமயப்படுத்தியே.

அதீத கதைகள், அந்த அதீதங்களாலேயே முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த அதீதங்கள் ஒரு உண்மையைச் சொல்கின்றன. ஒரு அதீதம் ஒரு இடத்தில் காட்டப்படும்போது, அதன் ஆசிரியர் நம்மை கதையின் நீரோட்டத்திலிருந்து தடுத்து ஒரு உண்மையை சொல்ல முயல்கிறார்.

சிலப்பதிகாரம் வரலாற்றுப்பின்னணியில் ஒரு புராணத்தைச் சொல்கிறது. அந்த கதை சேர நாடு சோழ நாடு பாண்டிய நாடு என்ற முப்பெரும் தமிழ் மாநிலங்களில் நடக்கிறது. அதில் அனைத்து வகை மாந்தர்களும் வருகின்றனர். அதன் மூலம் தன் கதையின் பொதுமைத்தன்மையை பரந்துபட்ட சமூகத்துக்கும் பொதுவான உண்மையை சொல்லப்போவதை அவர் குறிக்கிறார்.

விசேஷமாக ஏதும் இல்லாத, வழக்கமாக தன் கணவனை பரத்தையிடம் கொடுத்துவிட்டு தன் வாழ்நாளை வெறுமையில் கழித்துக்கொண்டிருக்கக்கூடிய, சமூக சட்ட திட்டங்களில் இருக்கும் சமச்சீரற்ற நிலையைக் கண்டு பொங்கும் வழக்கமில்லாத, அன்றைய சமூக நிலையை அதன் எல்லா குறைகளோடும் ஒப்புக்கொண்டுவிட்டு அதற்குள் தனக்கும் தன் கணவனுக்கும் தன் குடும்பத்துக்கும் வாழ வழி தேடும் எண்ணற்ற பெண்களின் பிரதிநிதி அவள். கண்ணகி எல்லாப் பெண்களையும் போலவே தன் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட கற்பினுக்கு அணிகலன் அவள். (அப்படிப்பட்ட பெண்ணுக்கு சிலை வைக்க வேண்டுமென்றால், தமிழகத்தின் கோடானுகோடி பெண்களுக்கும் சிலை வைக்கவேண்டும்)

அவள் வெகுண்டெழுவது தன் கணவன் அப்பாவியாக இருந்தும், அரசனின் தவறான முடிவால் கொலையுண்டான் என்று கேட்டபோது.

அவள் அரசவையில் தோன்றி தனக்கு நீதி கேட்கிறாள். தன் கணவன் நிரபராதி என நிரூபிக்கிறாள். நிரூபணத்தை பார்த்ததும் யானே கள்வன் என்று அரசன் பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறக்கிறான்.

ஒரு சாதாரணப் பெண்ணென்றாலும், ஆள்பவர் நீதி தவறி நின்றால் எதிர்த்துக் கேட்பாள் என்பதற்காகத்தான் சிலை நிறுவப்படுகிறது. இது இந்தியர்களின் தனிக்கலாச்சாரம். இங்கே அரசனுக்காக மக்கள் பயப்படுவதில்லை. மக்களுக்காக அரசன் பயப்படுகிறான். அப்படிப்பட்ட கலாச்சாரமே இங்கு பரப்பப்படுகிறது. இறைவனே ஆயினும் குற்றம் குற்றமே என்று நக்கீரன் நிற்கிறான். துணி வெளுப்பவனின் வார்த்தைகளுக்காக இராமன் தன் காதல் மனைவியை விலக்கி வைக்கிறான். தேரா மன்னா என்று கண்ணகி அரசவையில் நிற்கிறாள். இன்னும் எத்தனையோ உதாரணங்கள் இந்தியாவெங்கும்.

இந்த குணத்தை மக்கள் மனதில் ஊற வைக்கவே காப்பியங்கள் எழுதப்படுகின்றன. சிலைகள் வடிக்கப்படுகின்றன. கதா காலாட்சேபங்கள் நிகழ்த்தப்படுகின்றன. கண்ணகி சிலையில் அரசின் அநீதி காரணமாக பொங்கி எழுபவர்களின் அனைவரையும் காண வேண்டும். போலீஸினால் வன்முறைக்கு உள்ளான அப்பாவிகள், வீரப்பன் காரணமாக போலீஸினால் துயருற்ற கிராமத்தினர், அரசாங்கத்தின் ஊழலினால் பாதிக்கப்பட்ட குடிமக்கள், நிவாரணம் கொடுத்ததாக கணக்குக் காட்டப்பட்டு நிவாரணம் மறுக்கப்பட்டவர்கள் அனைவரின் உருவமாகவும் கண்ணகி அங்கு நிற்கிறாள். இதனை மிக அருமையாக புரிந்துகொண்டு, கண்ணகிக்கு சிலையை “தேரா மன்னா” என்ற முழக்கம் ஒலிக்கும் வண்ணம் உருவாக்கிய கலைஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அந்த காலத்து “பராசக்தி” சிலப்பதிகாரம் என்பதே சரியானது. “அரசாங்கமே கூடாது என்பதல்ல.. அரசாங்கம் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது” என்ற எதிரொலியை சிலப்பதிகாரத்தில் காணலாம்.

மார்பில் பொங்கும் கனலை மதுரையில் வீசி எறிகிறாள் கண்ணகி. யார் யாரெல்லாம் அந்த தீயிலிருந்து தப்பவேண்டும் என்று சொல்வது இன்னமும் பொருளுடைத்தது. யார் யாரெல்லாம் அந்த அரசின் அதிகாரத்தில் நேரடி பொறுப்பில்லாதவர்களோ, ஒரு அரசினை சட்டபூர்வமாக ஆக்காதவர்களோ அவர்களை தீயிலிருந்து விடுவிக்கிறாள். பெண்கள் குழந்தைகள் பார்ப்பனர்கள் ஆகிய அன்றைய அரசதிகாரத்தில் பங்கு பெறாதவர்களை விடுவிக்கிறாள்.

ஒரு அரசு கொடுக்கும் மரண தண்டனை என்பது அந்த அரசினை சட்டப்பூர்வமாக ஆக்கும் அனைவரும் கொடுக்கும் மரண தண்டனையே.

குற்றம் செய்யாத ஒருவனை கொல்வதற்கு தண்டனை மரண தண்டனை என்றால், குற்றம் செய்யாத ஒருவனுக்கு அரசாங்கம் மரண தண்டனை வழங்குவது, அந்த அரசாங்கத்தை சட்டப்பூர்வமாக ஆக்கும் அனைவரும் ஒரு அப்பாவியை கொல்வதற்குத்தான் சமம்.

ஆகவே அந்த அரசாங்கத்தை சட்டப்பூர்வமாக ஆக்கும் அனைவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே.

இது ஒரு வினோதமான வாதம் அல்ல. இது ஒரு அரசாங்கம் மரண தண்டனை தருவதில் உள்ள முரண்பாட்டை காட்டுகிறது.

யோசித்துப்பாருங்கள். நிரபராதியைக் கொல்வதற்கு தண்டனை மரணம் என்றால், நிரபராதியைக் கொன்ற அரசாங்கத்துக்கு தண்டனை என்ன? அந்த அரசாங்கத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் மரண தண்டனை தானே?

அதைத்தான் இளங்கோவடிகள் கூறுகிறார்.

அது உண்மையிலேயே நடந்ததா என்பது இங்கு தேவையில்லாதது. ஏனெனில் இளங்கோவடிகள் எழுதுவது ஒரு புராணம் Mythology. அதில் வரலாற்று உண்மையும் இல்லை, அதில் அந்த ஒரே ஒரு வாதத்தை தவிர வேறெந்த விளக்கமும் இல்லை. அப்போதுதான் 18 ஆம் வயதைத்தொட்ட ஒருவன் மதுரை தீயில் இறந்தால் அது எப்படி நியாயம் என்ற கேள்விகள் தேவையற்றவை. ஏனெனில், முன்னமே சொன்னது போல இது ஒரு சமூக உண்மை. வரலாற்று உண்மை அல்ல.

கண்ணகி சிலை கடற்கரையில் வைக்கப்பட வேண்டுமா என்பதற்கு விளக்கம் இதுதான்.

கண்ணகி சிலை கடற்கரையில் வைக்கப்படக்கூடாது. அது சட்டமன்றத்தின் முன்னே வைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் முன் மட்டுமல்ல. என்னைக்கேட்டால் ஒவ்வொரு சட்டமன்றத்தின் முன்னும் வைக்கப்பட வேண்டும்.

அரசாள்பவர்களின் தவறு அந்த அரசாங்கத்துக்கு அதிகாரம் அளிக்கும் ஒவ்வொருவரின் தவறுமாகும். அநீதியான அரசாங்கத்தை நடத்துபவர்கள் மட்டும் அழிவதில்லை. அந்த அரசாங்கத்தின் உள்ளே வாழும் அனைவருக்கும் அழிவு நேர்கிறது. பழந்தமிழ் இலக்கியத்திலிருந்து எழும் ஒரு பெண்ணின் குரல் மட்டுமல்ல அது. அது நிரந்தரமாக அரசாங்கத்தில் உள்ள அனைவரும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய குரல்.

**

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்