K.ரவி ஸ்ரீநிவாஸ்
1
இந்த யுகம் தகவல் யுகம், இணைய யுகம் மற்றும் உயிரியல்-தகவல் தொழில்நுட்ப யுகம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆனால் இது கண்காணிப்பு யுகமாகவும், உலகளாவிய கண்காணிப்பு சமூகம் உருவாகும் காலகட்டமாகவும் இருக்கிறது. கண்காணிப்பு சமூகம் என்றதும் நாம் பெரும்பாலும் ஆர்வல் எழுதிய 1984, மற்றும் ரகசிய கண்காணிப்பு படை, ஒற்றர்கள், நிழல் போல் பின் தொடரும் காவலர் என்ற ரீதியில் யோசிப்போம். ஆனால் இன்று கண்காணிப்பு என்பது தொழில் நுட்பத்தால் முன்னெப்போதயும் விட பரவலாகவும், எளிதாக மேற்கொள்ளப்படுவதும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இதை நாம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்ந்தாலும் அதை அதிகம் பொருட்படுத்துவதில்லை அல்லது அதை சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். உதாரணமாக இன்று பெரிய அங்காடிகளில், விமான நிலையங்களில், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பரபரப்பான சாலைகளில் Closed Circuit Television மூலம் தொடர்ந்து கண்காணிப்பது பரவலாக உள்ளது. இது அதிகரித்தும் வருகிறது. ஐரோப்பாவில் சில நாடுகளில் கண்ணுக்குத் தெரியாத விடியோ காமிரா மூலம் சில சாலைகளில் செல்லும் வாகனங்களைக் கண்காணிப்பது நடைமுறையில் இருக்கிறது. இந்த இடத்தில் இந்த நேரத்தில் இந்தத் தேதியில் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறினீர்கள், அதற்கான அபராதம் இவ்வளவு என்று ஒரு அறிவிப்பு தபாலில் வரும் போதுதான் அங்கு வீடியோ காமிரா இருந்தது என்பதே தெரியவரும்.
இப்போது இந்தியா உட்பட பல நாடுகளில் பெரும் வணிக நிறுவனங்கள் அக்கறைக் காட்டும் ஒரு தொழில்நுட்பம் ரேடியோ அலைவரிசை அடையாளம் காட்டும் தொழில் நுட்பம் , RFID, Radio Frequency Identification Devices. இதன் மூலம் ஒரு சிறிய சில்லை ஒரு பொருளில் வைத்துவிட்டால் அந்த சில்லிருந்து வெளிப்படும் அலைவரிசை மூலம் அது எங்கு உள்ளது என்பதை கண்காணிக்க முடியும். இது பொருட்களின் நடமாட்டத்தினை, அவை உற்பத்தியாகும் இடத்திலிருந்து நுகர்வோரைச் சென்றடையும் வரை
எங்கெங்கு கையாளப்படுகின்றன என்பதை, அதற்கான காலத்தினையும் அறிய முடியும். இந்த ரேடியோ அலைவரிசையை உணரக்கூடிய அல்லது பதிவு செய்யக்கூடிய சிறு கருவிகள் மூலம் ஒரு பொருள் எங்கிருக்கிறது என்பதை அறிய முடியும். அடிப்படையில் இது பொருட்களுக்கென்றாலும், இதன் மூலம் மனிதர்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்க முடியும். இந்த சில்லுகள் மிகச்சிறிய அளவில் இருப்பதால் அவற்ைறை சட்டை, கைப்பை, ஏன் பாட்ஜ்களில் கூட சந்தேகம் எழா வண்ணம் பொதிக்க முடியும். ஒவ்வொரு பொருளின் மீது பதிக்கப்பட்டுள்ள எண்ணை எப்படி கடைகளில் உள்ள ஸ்கானர்கள் கண்டறிகின்றனவோ அது போல் இந்த சில்லுகளிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைவரிசைகளை அறியும் கருவிகளை பல இடங்களில் வைத்தால் அதன் மூலம் அந்த சில்லு எங்கிருக்கிறது என்பதை அறியமுடியும்.
உதாரணமாக ஒருவரின் பாட்ஜில் பொதிக்கப்பட்டுள்ள சில்லிருந்து வெளிப்படும் ரேடியோ அலை, அந்த சில்லுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பிரத்தியேக எண் இவற்றை கண்டறியும் கருவிகள் எங்கெல்லாம் உள்ளனவோ அங்கிருந்து அவை தரும் தகவல்களிலிருந்து இந்த எண் தரப்பட்டுள்ள சில் பதிக்கப்பட்டுள்ள பாட்ஜ் அணிந்திருப்பவர் எங்கிருக்கிறார் என்பதை அறிய கண்டறியும் கருவிகளை நிறுவினால் போதும். பின் தொடர ஒரு ஒற்றர் தேவையில்லை. இது போன்ற தொழில் நுட்பங்கள் கண்காணிப்பினை பரவலாக்குவதுடன், கண்காணிக்கப்படுகிறோம் என்ற உண்ர்வினையும் எழுப்புவதில்லை. இது இன்னும் மிகப்பரவலாக ஆகவில்லை, காரணம் ஒரு சில்லினைத் தயாரிக்க ஆகும் செலவுதான். இது குறையக் கூடும் என்பதால் நிறுவனங்கள் இதில் இப்போது ஆர்வம் காட்டினாலும், மிகக் குறைந்த அளவிலேயே இதைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக ஒரு பொருளைக் கண்காணிக்க ஆகும் செலவு 25 ரூபாய் என்றால் அதைச் செலவு செய்யுமளவிற்கு அது விலை உயர்ந்ததா, முக்கியமானாதா என்று யோசிக்கிறார்கள்.
2
ஒற்றர்கள், உளவு பார்த்தல் போன்றவை மிகப் பழையவை. ஆனால் கண்காணிப்பு என்பதை நாம் இங்கு ஒரு பரந்த பொருளில் குறிப்பிடுகிறோம். கண்காணிப்பு சமுதாயத்தில் கண்காணிப்பு என்பது அரசு மட்டுமே செய்கிற ஒன்றல்ல. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைக் கண்காணிப்பது, சக போட்டி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது என்பதையும் சேர்த்தே இங்கு குறிப்பிடுகிறோம். உதாரணமாக பல நிறுவனங்களில் ஊழியர்கள் கணிணிகளைப் பயன்படுத்துவது, மின்ஞ்சலைப் பயன்படுத்துவது, இணையத்தில்
பார்க்கும் தளங்கள் உட்பட பல கண்காணிக்கப்படுகின்றன. இது தவிர கண்காணிப்பு சாதனங்கள் மிகவும் பரவலாக உள்ள ஒரு காலகட்டம் இது. எனவே கண்காணிப்பு என்பது புதிதல்ல என்றாலும் கண்காணிக்கும் முறைகள், அதன் பின்னுள்ள தத்துவம், அரசியல் இவை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். மேலும்
உலகமயமாதலின் ஒரு விளைவு கண்காணிப்பு என்பது இன்று உலகளாவிய அளவில் சாத்தியமாகியுள்ளது.
தகவல்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி நாம் மேற்கொள்ளும் செயல்கள் குறித்த தகவல்கள், ஒருவரின் உடல் நலம், மருந்துகள் குறித்த தகவல்கள், வேறு பல முக்கிய தகவல்கள், உதாரணமாக பாஸ்போர்ட் குறித்த தகவல்கள், தகவல்தொகுப்புகளில் தொடர்ந்து பதிவாகிக்கொண்டிருக்கின்றன. இவற்றை வைத்து ஒருவரை பின் தொடராமலே, நேரில் சந்திக்காமலே அவர் குறித்த மிக முக்கியமான தகவல்களை அறிய முடியும். இவற்றிலிருந்து அவரது ஆளுமை, தெரிவுகள் குறித்து யூகிக்க முடியும். நூலகங்களில் யார் யார் என்னென்ன நூல்கள், பத்திரிகைகளை இரவல் பெறுகிறார்கள் என்பதைக் கொண்டு சிலவற்றை யூகிக்க முடியும். இப்படி பல்வேறு தகவல் தொகுப்புகளிலிருந்து ஒருவரைப் பற்றிய முக்கியமான தகவல்களைப் பெறுவதுடன் அதன் அடிப்படையில் அவரை வகைப்படுத்த முடியும்.
கண்காணிப்பின் ஒரு முக்கிய நோக்கம் இப்படி வகைப்படுத்த உதவுவதே. இதனடிப்படையில் ஒருவரை ஆபத்தானவர்,ஆபத்தற்றவர், தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியவர், இவரது சில நடத்தைகள்,செயல்பாடுகள் குறிப்பாக கண்காணிக்கப்பட வேண்டியவை என்ற வகைப்பாடுகளில் எதில் சேர்க்க வேண்டும் என்பதை முடிவெடுக்க கண்காணிப்பு உதவுகிறது. எனவே கண்காணிப்பு என்பது ஒருவரது நடமாட்டத்தைம் மட்டும் அறிவதல்ல. மாறாக அவரது நடமாட்டம், செய்கைகள் இவற்றுடன் வேறு பலவற்றையும் தொடர்புபடுத்தி அலசி ஆராய்வதுமாகும்.
செப்டம்பர் 11,2001க் குப்பின் அமெரிக்க அரசு பயங்கரவாதத்தினை ஒழிப்பது என்ற பெயரில் நிறைவேற்றிய Patriot சட்டம் முன்னெப்போதும் இருந்திராத வகையில் தனிப்பட்ட நபர்களை, அமைப்புகளை அரசும்,அரசின் அமைப்புகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கண்காணிக்க வழி செய்தது. இதன் பின் இன்னும் அதிக அதிகாரங்களையும், மேலும் பரவலான,விரிவான கண்காணிப்பு வகை செய்யும் திட்டம் ஒன்று எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. அதே சமயம் சில உரிமைகளை விட்டுக்கொடுப்பது நம் பாதுகாப்பிற்காக, நாட்டுப் பாதுகாப்பிற்காக, எனவே அரசை சந்தேகிக்க வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு பயங்கரவாதம் ஒரு பெரும் ஆபத்தாக சித்தரிக்கப்பட்டது. மக்களிடையே நிலவிய அச்சமும், ஆபத்து குறித்த பயயுணர்வும் இப்படி கண்காணிப்பினை அதிகரிக்க உதவின. இப்போது பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் கண்காணிப்பும், சிவில் உரிமைகளை பாதிக்கும் சட்டங்களை நிறைவேற்றுவதும் அரசுகளுக்கு எளிதாகிவிட்டது. இவ்வளவிற்கும் அரசுகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டே வந்துள்ளன. அமெரிக்காவில் FBI தொடர்ந்து தனி நபர்களையும், அமைப்புகளையும் கண்காணித்தே வந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், பனிப் போர் நிலவிய போது பெரிய அளவிலான கண்காணிப்பு அமைப்புகள் செயல்பட்டே வந்துள்ளன. இவை தொலைபேசி உரையாடல்கள், தந்திகள் உட்பட பலவற்றை தொடர்ந்து பதிவு செய்தோ அல்லது வேறு விதமாகவோ கண்காணித்து வந்துள்ளன. நாடுகள் கண்காணிப்பின் அடிப்படையில் தகவல்களை பரிமாறிக் கொள்வதும் பெரிய அளவில் நடந்துள்ளது. இவற்றின் பரிணாம வளர்ச்சியாகவே இப்போதுள்ள கண்காணிப்பு அமைப்புகளையும், முறைகளையும் காண முடியும். மேலும் கண்காணிக்கப்படுவோர் என்பது முன்பு சிலர் என்பதலிருந்து இப்போது கிட்டதட்ட அனைவருமே என்ற நிலை உண்டாகியுள்ளது. முன்பு அரசுகள் தங்களுக்கு எதிரானவர்கள், கலகக்காரர்கள் போன்றவர்களை nகண்காணித்தன, அமைப்புகளும், நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை கண்காணித்தன. இன்று நுகர்வோர்,பயணிகள் உட்பட பல்வேறு பிரிவினரும் கண்காணிக்கப்படுகின்றனர். ஒருவரின் முந்தைய பயண விபரங்களைக் கூட தகவல் தொகுப்புகளிலிருந்து தெரிந்து கொள்ள முடியுமென்பதால் ஒருவர் முன்பதிவு செய்துவிட்டு ஒரிரு முறை பயணம் செல்லாமலிருந்தாலும் அது கருத்தில் கொள்ளப்பட்டு அவர் மீது அதிக கண்காணிப்பு செலுத்துவது, அவர் அறியாமலே, இன்று சாத்தியமாகியுள்ளது.
மேலும் இப்போது ஒருவரது ரேகைகள் தவிர, விழிகள், முகத்தின் புகைப்படம் அல்லது பதிவு ஆகியவையும் கண்காணிக்க பயன்படுத்தப்படுவது சாத்தியமாகியுள்ளது. இப்படி ஒருவரின் உடல் அடையாளங்களைக் கொண்டு கண்காணிக்கப்படுவதன் மூலம் ஒருவரின் நடவடிக்கைகள் எளிதில் வேவு பார்க்கப்படும். எனினும் புதிய தொழில்நுட்பங்கள் காரணமாகவே கண்காணிப்பு அதிகரித்துள்ளது என்பதை விட கண்காணிப்பிற்கு புதிய தொழில் நுட்பங்கள் அதிகமாக பயன்படுகிறதே பொருத்தமானது. ஏனெனில் கண்காணிப்பினை தொழில் நுட்பங்கள் தீர்மானிப்பதில்லை. மாறாக அரசின் அல்லது கண்காணிக்கும் அமைப்புகள் கொள்கைகள், கண்காணிப்பு குறித்த வரையரைகள், தனிமை குறித்த விதிமுறைகள் போன்றவை கண்காணிப்பினை தீர்மானிப்பதிலும், செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால் அனைத்து தொழில் நுட்ப சாத்தியப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவசியமில்லை. எவையெவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதினை தீர்மானிக்கும் காரணிகள் பல. இக்காரணிகள் பலவித தாக்கங்களுக்குள்ளாபவை என்பதால் கண்காணிப்பு என்பதும் நாட்டிற்கு நாடு, சூழலுக்கு சூழல் மாறுபடுகிறது. இதன் விளைவாக தொழில் நுட்ப ரீதியாக சாத்தியமாகக்கூடியவை கண்காணிப்பின் ஒரு பகுதியாக மாறுவதென்பது தற்செயல்லல்ல.
3
தேசிய குடிமக்கள் அடையாள அட்டை என்பது இன்று சில நாடுகளில் அமுலில் உள்ளது. தொழில் நுட்ப ரீதியாக இது சாத்தியமாகக் கூடிய எல்லா நாடுகளிலும் இது அமுலில் இல்லை. ஆனால் இந்தியாவில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் முந்தைய அரசு பெரும் ஆர்வம் காட்டியது. இத்தகைய அடையாள அட்டை இல்லாதவர்கள் குடிமக்கள் அல்ல என்று கண்டறிய முடியும். அதே சமயம் பொது விநியோக அட்டை, வாக்களார அடையாள அட்டை போன்றவற்றைக் கூட இந்தியாவில் குழப்பங்களின்றி,
குழறுபடிகளின்றி விநியோகிக்க முடியாத போது நடைமுறையில் குடிமக்கள் அடையாள அட்டை என்பது எந்த அளவு சாத்தியம். இதில் ஏன் இவ்வளவு அக்கறை. வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாக குடியேறிவர்கள் போன்றவர்களை அடையாளம் காட்ட இந்த அட்டை முறை பயன்படும் என்பதே இது குறித்த அதீத அக்கறைக்கான காரணம் என்பது என் ஊகம். இதை திறம்பட பயன்படுத்தும் அளவிற்கு இங்கு அனைத்தும் இன்னும் கணினிமயமாகவில்லை. இருப்பினும் இந்தியாவில் இதை நடைமுறைப்படுத்துவதன் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா சாதனை படைத்துள்ளது என்றும் கூறிக்கொள்ள முடியும், வெளியே கூற முடியாத அரசியல் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். குஜராத் இனக்கலவரத்தின் போது இருக்கின்ற தகவல்களை வைத்து சிறுபான்மையினர் மீது குறி வைத்து தாக்கியதை இங்கு நினைவு கூற வேண்டும். ஒரு தேசிய அடையாள அட்டை ஒருவரினை மதம், இனம, மொழி அடிப்படையில் அடையாளம் காண உதவுமெனில் ஒரு சில சந்தர்ப்பங்களில் அது அதனடிப்படையில் தாக்குதலுக்கும் வழிவகுக்கக் கூடும்.
தென் கொரியாவில் இது போன்ற ஒரு தேசிய அளவிலான எலெக்ட்ரானிக் அடையாள அட்டையை அரசு 1996ம் ஆண்டு முன் வைத்து, அனைவருக்கும் அடையாள அட்டை தருவதன் மூலம் தேசிய அளவிலான ஒரு திட்டத்தினை அமுல் செய்ய நினைத்தது. இந்த எலெக்ட்ரானிக் அட்டை அமுலில் உள்ள காகித அட்டைகளுக்கு மாற்று அல்ல. இதில் பொதிக்கப்ட்டிருக்கும் ஒருங்கிணைந்த சர்க்யூட் IC மூலம் தகவல்களை அதில் பதிவு செய்வதுடன், அத்தகவல்களை ஒரு தகவல் தொகுப்பில் உள்ளவற்றுடன்
தொடர்படுத்தி அறிய முடியும், அத்தகவல் தொகுப்பில் உள்ளவற்றையும் தேவையானபடி மாற்ற முடியும். அரசு முன்வைத்த திட்டத்தின் படி ரத்த வகை, புகைப்படம், முகவரி உட்பட 42 விதமான தகவல்களை அவ்வட்டையில் பதிவு செய்ய முடியும்.
இதற்கு அடித்தளமாக 1993ல் தேசிய அளவிலான ஒரு தகவல் தொகுப்பினை அரசு உருவாக்கியிருந்தது. அதில் அனைத்து குடிமக்கள் குறித்த அடிப்படைத் தகவல்கள் பதிவாயிருந்தன. எனவே புதிய தேசிய அடையாள அட்டைத்திட்டம் நிர்வாத்தினை எளிமையாக்கும், சேவைகளை வழங்குவது திறம்படச் செய்யப்படும், செலவுகளைக் குறைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தகவல் சேகரிப்பின் போதும், பின் தொகுப்பின் போது எழக் கூடிய தனிமைப் பிரச்சினைகள், கண்காணிப்பின் அபாயங்கள், மனித உரிமை
அம்சங்கள் போன்ற பல காரணங்களை முன் வைத்து மனித உரிமை அமைப்புகள். தொழிலாளர் அமைப்புகள், வழக்கறிஞர்களின் சில அமைப்புகள் உட்பட பல அமைப்புகள் ஒருங்கிணைந்து இதை எதிர்த்தன. இந்த எதிர்ப்பின் விளைவாக அரசு சில மாற்றங்களை முன் வைத்தது. இருப்பினும் எதிர்ப்பு
வலுத்தது. இந்த மாற்ற்ங்களை திட்டத்தினை எதிர்த்த அமைப்புகள் நிராகரித்தன. பலத்த எதிர்ப்புக் காரணமாக 1998ல் இத்திட்டம் இரண்டாண்டுகள் கழித்து நிறைவேற்றப்படும் என்று அரசு அறிவித்தது. பின்னர் 1999ல் இதை முழுமையாகக் கைவிட்டது.
இது இதை எதிர்த்த அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி. ஆனால் கடந்த இருபதாண்டுகளாக அரசு தகவல் தொகுப்புகளை அமைப்பதிலும், தொழில் நுட்பங்களை தகவல் சேகரிப்பிலும் திறம்பட பயன்படுத்தியுள்ளது. எனவே இத்திட்டம் கைவிடப்பட்டதால் அரசு முற்றிலுமாக தோற்றுவிட்டது என்று கூற முடியாது. மாறாக
இத்திட்டம் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியதாலும், இது முறைகேடாக பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளதாலும் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்த எதிர்ப்பின் விளைவாக அரசு கண்காணிப்பு குறித்த தன் கருத்தை, செயல்பாட்டை முற்றிலுமாக மாற்றிக் கொண்டுவிட்டது என்று கருத முடியாது. இது போன்ற ஒரு தேசிய டையாள அட்டை முறை சில நாடுகளில், உதாரணமாக தாய்லாந்து, மலேஷியா, சிங்கப்பூர் அமுலில் உள்ளது. சிலவற்றில் இது குறித்த பூர்வாங்க திட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. எனவே குறிப்பிட்ட பிண்ணியினைக் கணக்கில் கொள்ளாமல் உலகெங்கும் கண்காணிப்பு முறையும், அமைப்பும் ஒன்றேதான் என்று கூற முடியாது. உலகளாவிய கண்கானிப்பு சமூகம் என்று கூறும் போது இந்த வேறுபாடுகளையும் கருத்தில் கொண்டே கூறுகிறோம்.
அமெரிக்காவில் குற்றம் இழைத்தோரை கண்காணிக்க மின்னணு வளையங்கள் கைகளில் பொருத்தப்படும். அதிலிருந்து எழும் சமிக்ஞைகள் மூலம் அவர் எவ்வளவு தொலைவிலிருக்கிறார் என்பதை அறிய முடியும். ஒரு குறிப்பிட்ட பகுதியின் எல்லையை அல்லது குறிப்பிட்ட ஊரின் எல்லையை அவர் தாண்டக் கூடாது என்று நிபந்தனை இருக்கும் போது இவ்வளையங்கள் மூலம் அவரை இப்படிக் கண்காணிக்க முடியும். ஆனால் இதே தொழில் நுட்பம் அமெரிக்கா போல் ஐரோப்பாவில் அதிக அளவு பயன்படுத்தப்படுவதில்லை.
இது போன்ற பல உதாரணங்கள் கண்காணிப்பு என்பது ஏன் மாறுபடுகிறது என்பதை புரிந்து கொள்ள உதவுவதுடன் கண்காணிப்பு என்றால் எங்கும் ஒன்றேதான், உலகெங்கும் அமெரிக்க கண்காணிப்பு முறைதான் பயன்படுத்தப்படுகிறது போன்ற கருத்துக்கள் தவறானவை என்பதை அறியவும் உதவுகின்றன.
இந்தக் கண்காணிப்பின் அரசியல் குறித்து, இதன் தத்துவம், கண்காணிப்பு வகைகள் குறித்தும், தற்போது கண்காணிப்பு சமூகம் என்று கூறப்படும் கருத்தாக்கம் குறித்த விபரங்களையும், விவாதங்களையும் அடுத்த பகுதியில் காண்போம்.
4
ஜான் பெந்தம் முன் வைத்த பான் ஆப்டிகன் என்ற முன்மாதிரி கண்காணிப்பு குறித்த விவாதங்களில் முக்கிய மானது. இதில் ஒரு கண்காணிப்பு கோபுரத்திலிருந்து கைதிகளை அவர்கள் அறியா வண்ணம் கண்காணிக்க முடியும். இப்படி பிறரை அவர்கள் அறியா வண்ணம் பார்ப்பதும், அதற்கு தகுந்தவாறு சிறைச்சாலை, கண்காணிப்பிற்குள்ளாக்க வேண்டிய இடத்தினை அமைப்பதும் ஒரு ஒழுங்குபடுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் நடவடிக்கை அல்லது முறையின் ஒரு பகுதி. இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது சிறை வடிவமைப்பு இதை சாத்தியமாக்கும் விதம். கண்காணிப்பு கோபுரத்திலிருந்து பார்க்க முடியும், ஆனால் கைதி தன் அறையிலிருந்து தன்னைக் கண்காணிப்பதை உணர முடியாது, அதே சமயம் சிறைச்ச்சலை வடிவமைப்பு, ஒளி அமைப்பு, வளைவுகள் போன்றது ஒரு முழுமையான கண்காணிப்பு நிலவும் சூழலை உருவாக்குகின்றன. இங்கு தனிமைப்படுத்தி உடல் கண்காணிக்கப்படுகிறது. இந்த உருவகத்தை வேறுவிதமாக பயன்படுத்தி தன்னிலை என்பதன் உருவாக்கத்தையும், நவீன சமுதாயத்தில் கட்டுப்பாடு என்பது
ஒருவர் தனக்குள் தானே மேற்கொள்ளும் கண்காணிப்பு என்பதுடன் தொடர்புபடுத்தி விரிவாக நவீன சமுதாயம், தன்னிலை, கட்டுப்படுத்தல் குறித்து பூகோ எழுதினார்.
வேறொரு கோணத்தில் பூகோவின் கருத்துக்களை ஆஸ்கர் காண்டி, மார்க் போஸ்டர் போன்றோர் முன்னெடுத்துச் சென்றுள்ளனர். தனி நபர் குறித்த தகவல் சேகரிப்பு, தொகுப்பு, வகைப்படுத்தல் போன்றவை ஒருவிதமான பான் ஆப்டிக் பார்வைதான் என்று கருதும் காண்டி இந்த வகைப்படுத்துதல் மனிதர்களின் பயன்பாடு குறித்த ஒன்று என்கிறார். உதாரணமாக ஒருவரின் வருமானம், செலவுகள் குறித்த விரங்கள், கடனளவு போன்றவற்றை பொருத்து நுகர்வோரை பல வகையாகப் பிரிக்க முடியும்.
பின்னர் இதன் அடிப்படையில் அவர்களை பொருட்களை அறிமுகப்படுத்த, விற்க அணுக முடியும். ஒருவரின் வாங்கும் சக்தியைப் பொருத்து அவருக்கு எந்த சேவைகளை வளங்கலாம், எவற்றை விற்க முடியும் என்பதை ஒரளவேனும் தீர்மானிக்க முடியும் என்பதால் தகவல் தொகுப்புகளிலிருந்து குடும்பங்களையும்,
தனி நபர்களையும் வகைப்படுத்தி குறி வைக்க முடியும். இங்கு சந்தைப் பொருளாதாரத்தின் தர்க்கமும், கண்காணிப்பின் தத்துவமும் இணைகின்றன. இதன் விளைவு ஒரு சிலர் எதற்கும் தகுதியற்றவர்களாக கருதப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள், ஒரு சிலருக்கு சேவைகளை வழங்க, பொருட்களை விற்க ஒரு போட்டியே நடக்கும். தகவல் தொழில் நுட்பம், சமூகம் குறித்தும், தகவல் சமூகம் குறித்தும் முக்கியமான கேவின் ராபின்ஸ், பிராங்க் வெப்ஸ்டர் சமூக முழுமையும் இன்று பான் ஆப்டிக் எந்திரத்தின் பார்வையில் உள்ளது என்பதுடன், முன்பு சிறைச்சாலை, தொழிற்ச்சாலை ஆகியவைதான் கண்காணிக்கப்பட்டன, இன்று சமூகம் முழுதும் கண்காணிப்பிற்கு உள்ளாகியுள்ளது என்று குறிப்பிடுகிறார்கள். மார்க் போஸ்டர் இன்று கண்காணிக்க சுவரோ, கோபுரமோ, காவலாளியோ தேவையில்லை என்பதுடன் புதிய தொழில் நுட்பங்கள் கண்காணிப்பினை விரிவாக செய்ய உதவுகின்றன என்கிறார்.
இவ்விவாதங்களில் தனிமை என்றால் என்ன, இந்தத் தொழில் நுட்ப சமூகத்தில் தனிமை என்பதன் பொருள் என்ன, முற்றிலுமான தனிமை சாத்தியமா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. பொதுவாக தனிமை என்பது பிறர் தலையீடு, குறுக்கீடு இன்றி ஒருவர் இருப்பது என்பதுடன், ஒருவரது தனிப்பட்ட விவகாரங்களில் இன்னொருவர் தலையிடாமல் இருப்பது என்பதாகும். ஆனால் இன்று இத்துடன் நம்மைப் பற்றிய தகவல்கள் மீதான நம் கட்டுப்பாடு என்பதையும் இத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு புறம்
தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, தொகுக்கப்படுவதும், அவை பயன்படுத்தப்படுவதும் நமக்கு நன்மை பயக்கின்றன. உதாரணமாக மருத்துவமனையில் ஒரு நோயாளி குறித்த சரியான தகவல்கள் இருப்பது சிகிச்சைக்கு மிகவும் அவசியமாகிறது. இவை இல்லாமல் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. உடல் நல காப்பீட்டு திட்டங்களுக்கும் இத்தகைய தகவல்கள் தேவை. ஆனால் இத்தகவல்களை யார் அறிந்து கொள்ள வேண்டும், யார் அறிந்து கொள்ளக் கூடாது, யார் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விதிகளும் தேவையாகின்றன. இவை யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம் என்றிருந்தால் பல விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும். உதாரணமாக இத்தகவல்கள் கடன் வழங்கும் நிறுவனங்கள் வசம் கிடைத்தால் அவை அதை வேறுவிதமாக பயன்படுத்தலாம், ஒரு சில வியாதியுள்ளவர்களுக்கு கடன் வழங்க மறுக்கலாம் அல்லது அதிக வட்டிக் கோரலாம். எனவே இன்று தகவல்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதும் ஒருவரின் தனிமை என்பதுடன் தொடர்புடையதாகிறது. முன்பு இருந்தது போல் முற்றிலுமான தனிமை என்பது இன்று சாத்தியமில்லை, தகவல் யுகத்தில் நாம் விரும்பியோ விரும்பாமலோ தகவல் சேகரிப்பும், வ்கைப்படுத்துதலும், அவற்றை பயன்படுத்துவதும் தவிர்க்க இயலாதது என்பதால்
ஒருவர் தன்னைக் குறித்த தகவல்களை பயன்படுத்துவதை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பதை கருத்தில் கொண்டுதான் தனிமையின் எல்லைகளை வரையறை செய்ய முடியும்.
ஆனால் இன்று வலைப்பின்னல் உலகில் தகவல்கள் நொடிப்பொழுதில் நாடு விட்டு நாட்டிற்கு அனுப்ப இயலும் போது தனி நபர் எந்த அளவிற்கு இதைக் கட்டுப்படுத்த முடியும், எந்த அளவிற்கு கண்காணிப்பினை புரிந்து கொண்டு செயல்பட முடியும், அல்லது தன் தனிமை குறித்த ஆபத்துக்களை குறைக்க முடியும் – இது போன்ற கேள்விகளுக்கு தெளிவான விடைகள் இல்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் தனி நபர் தகவல்கள், தகவல் தொகுப்புகளை கையாளுதல் போன்றவை குறித்த சட்டங்களும், விதிகளும் நாட்டிற்கு
நாடு மாறுகின்றன. அமெரிக்காவில் தொலைபேசி மூலம் பொருட்களை, சேவைகளை விற்பது, அறிமுகப்படுத்துவது ஒரு தொழிலாக உருவெடுத்து பல ஆண்டுகளான பின்னே நுகர்வோர் தங்களை தொலைபேசி மூலம் பொருட்களை விற்க போன்றவற்றிருக்கு தொடர்பு கொள்ள வேண்டாம் என்று
பதிவு செய்து கொள்ள சட்டபூர்வமாக ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஒரு ஒப்பீட்டு நோக்கில் அமெரிக்காவை விட இது போன்றவற்றில் ஐரோப்பாவில் சட்டங்கள் வலுவாக உள்ளன. தனி நபர் தகவல்களைப் பாதுக்காப்பதில், தனிமையைப் பேணுவதில் ஐரோப்பாவில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
தகவல் தொகுப்புகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள் எவை அந்தரகத்தகவல்கள், எவை அந்தரங்கத்தகவல்கள் இல்லை என்ற பாகுபாட்டை நீக்கி விட்டன என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு மன உளைச்சல் அல்லது மனச் சோர்வு ஏற்பட்டு அவர் அதற்காக தினசரி மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நெருங்கிய நண்பருடன் பகிர்ந்து கொள்ளத் தயங்கலாம அல்லது தவிர்க்கலாம். ஆனால் அவர் அதை கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் வாங்கியிருப்பார் எனில் அவர் அறியாவண்னம்
அத்தகவலைப் பயன்படுத்தி மனச் சோர்விற்கு ஒரு புதிய மாத்திரையை அல்லது மருந்தினை விற்க முயலும் நிறுவனம் அவர் முகவரிக்கு தகவல் அனுப்ப முடியும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் தகவல்கள் மூலம் ஒரளவிற்கேனும் அவர் எதை வாங்குவார் என்பதை யூகிக்க முடியும். எனவே அந்தரங்கள் என்பதன் எல்லைகளை சுருக்கக் கூடிய தொழில் நுட்ப யுகத்தில் நாம் வாழும் போது தனிமை குறித்த கருத்துக்களும், வரையரைகளும் மாற்றமடைவதில் வியப்பில்லை.
1980 களில் கண்காணிப்பு குறித்த ஆய்வுகளும், விவாதங்களும் ஒரு புதிய கட்டத்தினை எட்டின. அதற்கு ஒரு முக்கிய காரணம் கணினி தொழில் நுட்பம் சிலவற்றை சாத்தியமாக்கியதும், எதிர்க்காலத்தில் இது எப்படி கண்காணிப்பிற்கு உதவும் என்பது குறித்த ஊகங்களும். அப்போது தகவல் யுகம் குறித்தும் விவாதம் எழுந்தது.கணிணி யுகத்தின் பயன்கள் குறித்து பலர் எழுதிய போது சிலர் இதன் கண்காணிப்பு, கட்டுபட்டுத்தும் பரிமாணங்கள் குறித்து ஆய்ந்தனர். இடதுசாரி ஆய்வாளர்கள் பலர் தகவல் யுகத்தில்
முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் எப்படி இருக்கும், தொழில் நுட்ப மாற்றம் என்பது எப்படி தொழிலாளரைக் கட்டுப்படுத்தவும், அவர்கள் திறனை மட்டுப்படுத்தவும், அவர்கள் மீதான கண்காணிப்பினை அதிகரிக்கவும் உதவும் என்பது குறித்து விவாதித்தனர்.
1985 ல் காரி மார்க்ஸ் எழுதிய ஒரு முக்கியமான கட்டுரையில் புதிய கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள். முந்தயைய வழக்கமான தொழில் நுட்பங்களிலிருந்து ஒன்பது விதங்களில் மாறுபடுவதைச் சுட்டிக்காட்டினார். இவை கண்ணுக்கு புலனாகதவித்ததில் இருப்பதையும்,கண்காணிப்பு என்பது புதிய பகுதிகளுக்கும், அம்சங்களுக்கும் விரிந்திருப்பதையும், அது உடல் குறித்த கண்காணிப்பாக மட்டும் இல்லாமல் ஆளுமை, சுயம் குறித்த கண்காணிப்பாக இருப்பதையும் சுட்டிக் காட்டினார். பின்னர் அவரது ஆய்வில் இந்தக் கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் எப்படி நியாயப்படுத்தப்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டார். பில் ஆக்ரே 1990 களின் மத்தியில் தனிமை, கண்காணிப்பு குறித்து ஆராய்ந்தார். அவர் பழைய கண்காணிப்பு முறையையும், புதிய தொழில் நுட்பங்களால் சாத்தியமான கைப்பற்றுதல் (capture) முறையையும் வேறுபடுத்தி பின்னது இன்று முதன்மை பெற்றுள்ளதைக் குறிப்பிட்டார். இப்போது கைப்பற்றுதல் முறையின் கீழ் தகவல் தொகுப்பென்பது ஒரு மையத்தில் மற்றும் இருக்க வேண்டியதில்லை. பல்வேறு தகவல் தொகுப்புகளிலிருந்து
தகவல் மூலம் கண்காணிப்பு சாத்தியம். ஒருவர் பயன்படுத்தும் கருவிகள், தொலதொடர்பு சாதனங்கள் கொண்டு அவர் அறியா வண்னம் அவரது உரையாடல்கள், மின்னஞ்சல்கள் கண்காணிக்கப்படலாம். மேலும் ஒருவர் இருப்பிடத்தை அறிய அவரது செல் போன் போதும் என்ற அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. டேவிட் லயான் கண்காணிப்பு என்பது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்றதுடன் கண்காணிப்பு சமூகம் குறித்து விரிவாக எழுதினார், எழுதி வருகிறார். இன்று கண்காணிப்பு
சமூகம் குறித்த விவாதங்களில் டிஜிடல் ஆளுமை DIGITAL PERSONALITY குறித்து பேசப்படுகிறது.
நாம் விரும்பியோ விரும்பாமலோ அறிந்தோ அறியாமலோ தகவல்கள் மூலம் நம்மைப் பற்றிய ஒரு ஆளுமையை உருவாக்க முடியும். கண்கானிப்பு என்பது அனைத்து நடவடிக்கைகள், தகவல் பரிமாற்றம் குறித்த ஒன்றாக இருக்கும் போது தனிமை என்பதன் பொருளும், தனி, பொது என்பதன் வரையரைகளும் மாறுகின்றன.
இதற்கு உதாரணமாக கண்காணிக்க உதவும் டெலிவிஷ்ன பெட்டிகள் பரவலாக இருப்பதை குறிப்பிடலாம். 1990 களில் பிரிட்டனில் இவை மிகப் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டன. சில குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளைப் பிடிக்க இவை உதவின. அப்போது பிரிட்டனில் IRA திவீரவாதம் குறித்து ஒரு அச்சம் நிலவியது.
குண்டு வெடிப்புகள் போன்றவற்றை தவிர்க்க, தீவிரவாதம், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த இவை உதவுவதால் இந்தக் கண்காணிப்பினை ஏற்கலாம என்ற மனோபாவம் வலுப்பெற்றது. இதன் விளைவாக இன்று உலகின் வேறெந்த நாட்டையும் விட பிரிட்டனில் பொது இடங்களில் இப்படித் தொலைக்காட்சி மூலம் கண்காணிப்பது அதிகமாக உள்ளது. தீவிரவாதத்தினால் ஏற்படும் ஆபத்து, பாதுகாப்பு என்ற பெயரில் இன்று இத்தகைய கண்காணிப்பு விரிவாக்ப்பட்டுள்ளதால் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தை அல்லது கடை வீதிகள், பல் பொருள் அங்காடிகள் போன்றவற்றில் இவை இருப்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது.
5
ஆய்வாளர்கள் தவிர சிவில் உரிமை அமைப்புகள், நுகர்வோர் அமைப்புகள், கணினி,எலெக்ட்ரானிக் தொழில்நுட்பங்கள் குறித்து ஆயும் அமைப்புகளும் கண்காணிப்பு, தனிமை குறித்து அக்கறை காட்டுவதுடன் இது குறித்த விதி முறைகள், சட்டங்கள் குறித்தும் செயல்பட்டு வருகின்றன. உலகெங்கும் ஒரே மாதிரியான கண்காணிப்பு இல்லை என்ற போதும், தனி நபர் தகவல்கள் பாதுகாக்கப்படுவது, தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, தனி நபர் உரிமைகள் மதிக்கப்படுவது போன்றவை குறித்து உலகளாவிய அளவில் குறைந்தபட்சமாக பொதுவிதிகள் வகுப்பட வேண்டும் என்று இவை கோருகின்றன.
கண்காணிப்பு இப்படி பரவலாக உள்ள நிலையில் ஒருவர் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது.சில வழிகள் மூலம் கண்காணிப்பினால் ஏற்படும் தாக்கத்தினைக் குறைக்க முடியும். முதலில் தேவையற்ற தகவல்களை கொடுப்பதைத் தவிர்க்கலாம். ஒரு விண்ணப்ப படிவத்தில் கட்டாயம் என்று குறிப்பிடப்படும் தகவல்களை மட்டும் கொடுத்துவிட்டு பிறவற்றை தவிர்க்கலாம். மேலும் நாம் கொடுக்கும் தகவல் எப்படிக் கையாளப்படுகிறது, அந்த நிறுவனத்தின் privacy policy என்ன, நாம் கொடுத்த தகவலை நாமறியாமல்
பகிர்ந்து கொள்வதை நாம் தடுக்க முடியுமா, அப்படியாயின் இது குறித்த சட்ட விதிகள் என்ன – இப்படி பலவற்றை நாம் விழிப்புடன் அறிய வேண்டும். மேலும் நாம் தகவல்களை எதற்குத் தருகிறோம் அதன் பயன், விளைவு என்ன என்பதினை யோசிக்க வேண்டும். கூடுமான வரை முகவரி, குடும்ப தகவல்கள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், புகைப்படங்கள் போன்றவற்றை தருவதை தவிர்க்க வேண்டும். இன்னும் எச்சரிக்கையாக இருக்க விரும்புபவர்கள் மின்னஞ்சல்களை encrypt செய்து அனுப்பலாம்.
கண்காணிப்பு, கண்காணிப்பு சமூகம் என்பதை பல கோணங்களிலிருந்து அணுகலாம். தனிமை குறித்த சட்டங்கள்,தகவல் சேகரிப்பு, பகிர்வு குறித்த சட்டங்கள், வழக்குகள், தீர்ப்புகள் என்ற கோணத்தில் இதை அணுகலாம். அமெரிக்காவில் நுழைய வெளி நாட்டவர் கைரேகை பதிவினை அமெரிக்க அரசு கட்டாயமாக்கிய போது அகெம்பன் என்ற இத்தாலிய தத்துவ அறிஞர் அதை எதிர்த்தார். நவீன சமூகம் ஏதென்ஸ் போலில்லை, நாஜிகள் யூதர்களை அடைத்து கண்காணித்த அஸ்ட்விட்ஸ் போலாகிக் கொண்டிருக்கிறது
என்கிறார். இந்தக் கோணத்திலிருந்து, நாஜிக்கள் உடல்களை கண்காணித்த விதம், இன்றைய உலகளாவிய கண்காணிப்பு குறித்து விவாதிக்கலாம். வேறொரு கோணத்தில் உலக மயமதால், தகவல் யுக முதலாளித்துவம், மனித உரிமைகள், கண்காணிப்பு குறித்து பேச முடியும்.
இக்கட்டுரை ஒரு அறிமுகக் கட்டுரை என்பதால் பல்வேறு கோணங்களிலிருந்து இதை விவாதிக்கவில்லை. மேலும் விரிவஞ்சியும், வேறு சில காரனங்களாலும் கருத்துக்கள் முடிந்த அளவு எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளன. தனிமை குறித்த விரிவான ஒரு அலசலை இக்கட்டுரையில் தரவில்லை. அதற்கு ஒரு காரணம். அது குறித்த கலைச் சொற்கள் நானறிந்த வரை தமிழில் இல்லை. இக்கட்டுரைக்கு உதவிய, மற்றும் மேலும் அறிய படிப்பதற்கான ஒரு கட்டுரை, நூல் பட்டியல் தரப்பட்டுள்ளது. அதை வாசகர்கள் பயன்படுத்திக் கொண்டு கண்காணிப்பு சமூகத்தின் பன்முக பரிமாணங்களை அறிந்து கொள்ளலாம்.
Agre,P., Rothenberg,m (eds) Technology & Privacy MIT Press 1997
Agre, P.E Suveillance and Capture The Information Society 10: 101- 27, 1994
Beniger, J The Control Revolution Harvard University Press 1986
Castells, M The Rise of Network Society Blackwell 1996
Foucalut, M Discipline & Punish Allen Lane 1975
Gandy,Oscar The Panoptic Sort Westview Press 1993
Green. S A Plague on the Panoptican . Information,
Communication, and Society Vol 2 No 1, 26-44
Lyon, David The Electronic Eye Polity Press 1994
Lyon, David The Surveillance Society Polity Press 2001
Lyon, David Globalising Surveillance International Sociology
Vol 19 No2, June 2004, 135-149
Marx, Gary ‘I ‘ll be Watching You ‘ Dissent Vol 31 No 1 1985
Poster, mark The Mode of Information University of Chicago Press 1990
Kim,Mun-Cho Surveillance, Technology and Social Control International Sociology
Vol 19 No2, June 2004, 193-213
www.ssrc.org/september11/essays/bigo.htm
http://www.surveillance-and-society.org/
http://www.wired.com/wired/archive/9.12/surveillance.html
http://www.aclu.org/Privacy/Privacy.cfm ?ID=11573&c=39
www.eff.org
http://www.epic.org/
http://www.privcom.gc.ca/information/ar/200304/200304_e.asp
(இக்கட்டுரை உயிர்மை டிசம்பர் 2004 இதழில் வெளியானது. )
பிற்குறிப்பு : தனிமை, கண்காணிப்பு சமூகம் குறித்து பல நூல்களும், கட்டுரைகளும் வெளியாகிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் பல்வேறு துறைகளிலிருந்து பெறப்படும் கண்ணோட்டங்கள் முக்கியம்.
தனிமை என்பதை புரிந்துகொள்ள பல்துறைக் கண்ணோட்டம் தேவையாகிறது, அதை
ஒரு வெறும் எதிர்மறை உரிமையாக மட்டும் புரிந்து கொள்ள முடியாது என்பதால்.
தற்போது நான் வாசித்து வரும் Information Ethics : Privacy, Property and Power (Ed) Adam D. Moore – University of Washington Press- 2005 என்ற நூலில் பல முக்கியமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இது போல் பல நூல்களை சுட்ட முடியும். மேற்கில் தனிமை, தனி மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து பல காலமாக நடைபெற்று வந்துள்ளன.உதாரணமாக இத்தொகுப்பில் 1890ல் ஹார்வர்ட் லா ரிவ்யுவில் வெளியான புகழ் பெற்ற கட்டுரையான The Right to Privacy by Samuel D.Warren and Louis. D.Brandies இடம் பெற்றுள்ளது. மேற்கத்திய பல்கலைகழகங்களில் ஒரு பாடத்திட்டம் வகுக்கும் போது முக்கியமான கட்டுரைகள், நூற்களின் அத்தியாயங்கள் உட்பட பலவற்றையும் சேர்த்தே வகுப்பார்கள். தமிழ் வாசகர்கள் பொருத்தமான பாடத்திட்டங்களை இணையத்தில் தேடி அவற்றிலிருந்து தாங்கள் படிக்க வேண்டியவை குறித்த ஒரு பட்டியலை உருவாக்கிக் கொள்ள முடியும். தமிழில் Information Ethics : Privacy, Property and Power
போன்ற நூல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே ஆங்கிலத்தில் இருப்பதைத்
தான் நாம் நாட வேண்டியிருக்கிறது.ஆரம்பகட்ட அறிமுக நூல்கள், கட்டுரைகள் கூட தமிழில் இல்லாத போது ஒரு கட்டுரையாசிரியர் ஒரு பொருளை அறிமுகப்படுத்தி, மேலும் எவற்றைப் படிக்கலாம் என்று
பரிந்துரைக்க மட்டுமே செய்ய முடியும். ஒரு வேளை தமிழ் கலைக்களஞ்சியங்களில் தனிமை குறித்து
ஒரு அறிமுகம் இருக்கலாம். தனிமை குறித்து ஒரு அறிமுகக் கட்டுரையை 3000 அல்லது
4000 வார்த்தைகளில் தமிழில் விக்கிபீடியாவில்தான் எதிர்பார்க்க முடியும். சிறு பத்திரிகைகளுக்கு
இதிலெல்லாம் ஆர்வம் இருப்பது போல் தெரியவில்லை ஆனால் தமிழில் விக்கிபீடியா கடக்க வேண்டிய
தூரம் மிக மிக அதிகம்.
ravisrinivas.blogspot.com
- விம்பம் – குறும்படவிழா
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II
- தெளிவு
- சுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம்
- கவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….
- எழுத்தில் ஒளிரும் பெருஞ்சுடர்
- 24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005
- திறந்திடு சீஸேம்!
- கேள்வி-பதில்
- அறிவுஜீவிகளின் குஷ்பி(வி)சம்.
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலயங்கள் -4 (The Great Abu Simbel Temples of Egypt)
- நண்பர் சுரா அவர்களுக்கு
- கைகளை நீட்டி வா!
- பெரியபுராணம் – 62
- கற்புச் சொல்லும் ஆண்!
- இதயம் முளைக்கும் ?
- புதுமையும்,பெண்ணியமும்!
- இலையுதிர் காலம்
- அலறியின் மூன்று கவிதைகள்
- காலம்
- கவிதைகள்
- பூவக பூலோக வாழ்க்கை ! (Earth Life in Florida)
- ஆயிரத்து முன்னூறு ரூபாய்
- பால்வீதி
- 4: 03
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து)
- என் புருஷன் எனக்கு மட்டும்
- கண்காணிப்பு சமுதாயம்
- அமெரிக்க தகவல் மையத்திற்கு ஒரு ‘ஸி.ஐ.ஏ. ஏஜெண்ட் ‘(!) எழுதிய கடிதம்
- தொழிற்றுறை விரிவும்,மனிதவதையும்!
- தேசியப் பொருளாதாரம்
- பெண்ணீயம் என்பது
- மழலைச்சொல் கேளாதவர்
- புத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்
- ஒரு கடல் நீரூற்றி
- கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை
- ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு
- தீயில் கரையத்தானே
- சாவி ? ? ?
- தீயில் கரையத்தானே
- கீதாஞ்சலி (46) – வாசல் முன் நீ வந்தாய்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- இதயம் முளைக்கும் ?