வெங்கடரமணன்
பொத்தி வைத்த இரகசியத்தால் புரட்சி உண்டுபண்ண முடியுமா ? முடியும் என்கின்றார்கள் சிலிக்கன் பள்ளத்தாக்கின் புதிய வன்கலன் நிறுவனத்தார். புரட்சி துவங்குகின்றது என்று பறைசாற்றுகின்றனர் கணினி உலகின் வித்தகர்கள். புரட்சிக்கானச் சாத்தியக்கூறுகள் அவசியம் தென்படுகின்றன. ஜனவரி 19ம் 2000ல், கணினி நாகரீகத்தின் தொட்டிலான சிலிக்கன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற ஒரு புதிய நிறுவன அழைப்புவிழா சமீபத்தில் வேறெந்த நிறுவனமோ, கோட்பாடோ பெறாத வரவேற்பையும்,அதிர்ச்சியையும் உண்டுபண்ணியிருக்கிறது. கூட்டுப்புழுவாய் இயங்கிவந்த ட்ரான்ஸ்மெட்டா எனும் ஐந்தாண்டு நிறுவனம் தன் சிறகைவிரித்தது அன்று. விழாவிற்கான அழைப்பிதழில் ‘எங்கள் ட்ரான்ஸ்மெட்டா நிறுவன அறிமுகத்திற்கும், உலகின் முதல் மென்கலன் அடிப்படையிலான நுண்செயலி அறிமுகத்திற்கும் உங்களை அன்புடன் அழைக்கின்றோம் ‘ என்னும் சற்றே உரத்த அழைப்புடன் அது தன் கூட்டையுடைத்தது. கூட்டினுள்ளே இருந்த இரகசியம் ஒருவருக்கும் அதுவரை தெரியாது.
ஆனால் எல்லோருக்கும் தெரிந்திருந்தது ஒன்று; இன்றைக்கு கணினி உலகின் மிகப்பெரும் நிறுவனமான மைக்ரோசாப்ட்டுக்கும், அதன் நிறுவனரான உலகின் பெரும் பணக்காரரான திரு. பில் கேட்ஸ்க்கும் பெரும் தலைவலியை உண்டுபண்ணியிருக்கும் இயக்குதளம் லினக்ஸ். இது உதிரியான சில கணினி வித்தகர்களால் தயாரிக்கப்பட்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. இந்த லினக்ஸ் கணினி இயக்குதளத்தின் தோற்றுநரான லினஸ் டோர்வால்டை வேலையிலமர்த்திய முதல் நிறுவனம் ட்ரான்ஸ்மெட்டா. தன் கல்லூரி நாட்களில் பொழுதுபோக்காக எழுதத்தொடங்கி, பின்னர் ஊடுவலையின் ஆர்வலர்கள் உதவியுடன் அதனை மிகவும் வலுவுள்ள இயக்குதளமாக மாற்றி, ஆரம்ப நாள்முதல் இன்றுவரை (என்றும்) அதனை இலவசமாகக் கிடைக்க வழிசெய்தவர் லினஸ். தளையறு இயக்குதளமாகிய தன் லினக்ஸ் போலவே, இவரும் தளையில்லாமல் வாழ்ந்துவந்தார் – மூன்று வருடங்களுக்கு முன்வரை. இவர் ட்ரான்ஸ்மெட்டாவில் பணியிலமர்ந்ததும் பலரும் புருவம் உயர்த்தினர், லினஸ்க்கு வேலைகொடுக்க முடியுமெனில் ட்ரான்ஸ்மெட்டாவில் ஏதோவொரு உன்னத அடிப்படையில் புரட்சிகரமான சித்தாந்தம் இருக்கவேண்டும் என்பது பலரின் கணிப்பு.
ஆம், அது இருந்தது. மென்கலன் வழியான நுண்செயலி எனும் புதிய கோட்பாடு. இன்றையை கணினி உலகின் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட கணினிகள் இன்டெல் நிறுவனத்தின் x86 எனும் நுண்செயலியின் அடிப்படையில் அமைந்தவை. இது எழுபதுகளில் தோற்றுவிக்கப்பட்ட கோட்பாடு. இன்றைய அதிவேக கணினிகள் எல்லாம், x86ன் கட்டளைத்தொடர் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை. குறைகடத்தி உற்பத்தித்திறன் பெருக, நுண்செயலிகளின் வேகமும் அதிகரித்தது, ஆனால் அடிப்படையில் இவை எல்லாம் ஒரே கட்டளைத்தொடர்களால் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஒருமுக்கிய காரணம், இன்டெல் நுண்செயலிகளின் பிரசித்தம். கணினி ஆணைநிரல்களும், திறன் பெருக்கப்படும் இயக்குதளங்களும், ஏற்கனவே இருக்கும் நுண்செயலிகளுக்கு ஏற்புடையவையாக இருக்கவேண்டியிருந்தது. இதற்கான அவசியம் வெளிப்படை, உங்கள் நிறுவனம் ஒரு அதிவேக புதிய கணினியைத் தருவிக்கும் பொழுது, நிறுவனத்தின் செயலில் இருக்கும் ஒருமின்னஞ்சல் நிரல் தொடர்ந்து புதிய கணினியிலும் ஓடவேண்டும் என எதிர்பார்ப்பது இயற்கையே. ஆனால் வெளியில் தெரியாத ஒரு அவசியமும் கணினி உலகில் இருந்தது, புதிதாகத் தயாரிக்கப்படும் நுண்செயலி பழையதன் இயங்குமுறைக்கு ஒத்ததாக இருக்கவேண்டும் என்பது அது. இதனால் நுண்செயலி வடிவமைப்பில் பெரிதும் புதிதான அடிப்படை மாற்றங்கள் நிகழ்த்துவது என்பது இயலாததாகப் போய்விட்டது (படம் – 1)
ஆனால் கணினி பயன்பாட்டில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. விலை குறையக் குறைய புதுப்புழக்கங்கள் தோன்றத் தொடங்கின. நடைகணிப்பு இதில் முக்கியமான ஒன்று. கைக்கு அடக்கமான (பைக்கு அடக்கமான) வடிவுகளில் நோட்டுப்புத்தகக் கணினிகள் தோன்றிவிட்டன, ஒருவருடத்திற்கு முன்னால் ஒரு பெரிய அலமாரியைப்போல் இருந்த கணினி எவ்வளவு வேகமாக இயங்கிற்றோ அதைவிட வேகமாக இன்றைய ஏடுகணினிகள் இயங்குகின்றன. இன்னும் இதைவிட ஒருபடி மேலேபோய் உள்ளங்கைக்கு அடக்கமான கணினிகள் தோன்றத் தொடங்கியுள்ளன (இவற்றின் கதையை விரைவில் திண்ணையில் உங்களுக்கு வழங்கவிருக்கிறோம்). இதுவிடுத்து கண்ணுக்குத் தெரியாத கணினிகள் பதிக்கப்பட்ட நுகர்வோர் சாதனங்களும் பெருகிவருகின்றன. இன்றைய செல்பேசிகள் மூலம் மின்னஞ்சல் அனுப்பவியலும். கொரிய நிறுவனமான சாம்ஸங்கின் புதிய நுண்ணலை அடுப்பில் ரொட்டி சுட நீங்கள் மாவைப் பிசைந்து உள்ளே வைத்து, எப்படிப்பட்ட ரொட்டி என்று பொத்தானை அழுத்தினால் போதும். அது தானாக இணையத்திலிருந்து அதற்கான சமையற்குறிப்பை இறக்குமதி செய்து, அதனைப் புரிந்து கொண்டு உங்களுக்குச் சுடச்சுட ரொட்டி தயாரிக்கும். இதனுள்ளே ஒரு சிறிய கணினி உள்ளது, அதற்கு குறிப்பு தருவிக்கவும், அதைப் புரிந்துகொண்டு சமையல் செய்யவும் (அது மட்டுமே) தெரியும். இந்த அடுப்பு(கணினி) இணையத்தில் எங்கே சமையல் குறிப்பு இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் புரிந்து கொள்ளும். ஆனால் இதற்கு வலையில் மின்னஞ்சல் என்று ஒரு சேவையிருப்பது தெரியாது. இத்தகைய கணினிகளுக்குப் பதிக்கப் பட்ட கணினிகள் என்று பெயர். இவற்றின் செயல்பாடுகளில் முக்கியத்தேவை – சக்தி சிக்கனம். இன்றைய ஏடுகணினிகள் அதிகபட்சம் நான்கு மணிநேர பயன்பாட்டுக்குமேல் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. அமெரிக்கர்கள் கிழக்குக் கடற்கரை நகரொன்றிலிருந்து மேற்குக் கடற்கரை நகருக்கு வானூர்தியில் சென்று சேருமுன்னர் இவற்றின் சேமக்கலன்கள் செயலிழந்துவிடுகின்றன.
இதற்கான அடிப்படைக் காரணம், x86 நுண்செயலிகளின் சக்தித்தேவை. இவை கலவைக் கட்டளைத்தொடர் கணிப்பு எனும் கோட்பாட்டினாலானவை. செயலில் இல்லாது இருக்கும் தூக்கநிலையில் இருப்பதற்குக்கூட இவற்றுக்கு அதிக சக்தி தேவைப்படுகின்றது. ட்ரான்ஸ்மெட்டா நிறுவனத்தின் கண்டுபிடிப்பு இதனையே இலக்காகக் கொண்டது. இதன் நிறுவனரான டேவிட் டிட்செல் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முக்கியத் தூண்களில் ஒருவாரக இருந்தவர். சன்-னின் ஸ்பார்க் நுண்செயலிகள் குறைத்த கட்டளைத்தொடர் கணிப்பு எனும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைக்கப் பெற்றவை. இவை நடுஅளவு கணினிகளில் மிகவும் பரவலானவை (ஐ.பி.எம், டிஜிட்டல், சிலிக்கன் கிராபிக்ஸ், சன் போன்ற பந்தயக்குதிரைகள் இக்கோட்பாட்டை உபயோகிக்கின்றன. வண்டிக்குதிரைகளான மைக்ரோசாப்ட் இயக்குதளத்தின் அடிப்படையிலான கணினிகளில் இன்டெல், மற்றும் ஏ.எம்.டி. போன்றவற்றின் நுண்செயலிகள் புழங்குகின்றன).
ட்ரான்ஸ்மெட்டாவின் முதல் வெளியீடான க்ரூஸோ நுண்செயலியின் வடிவமைப்பு முற்றிலும் புதிதானது. இதன் அடிப்படை மிகநீண்ட கட்டளைச் சொற்றொடர் கணிப்பான் என்பது. இன்டெலின் செயலியில் கட்டளைகள் வரிசையில் வரும் மனிதர்களைப் போன்றது. முதலாமவர் செய்துமுடித்த காரியத்தை அடுத்தவர் தொடர்வார். உதாரணமாக ஒருவர் மரம் இழைத்துவிட்டுச் செல்வார், அடுத்ததாக மற்றொருவர் அதில் வண்ணம் பூசுவார். இதனால் செயல்முறையில் ஒரு ஒழுங்கு ஏற்படுகின்றது. க்ரூஸோவின் அமைப்பில் பலமனிதர்கள் ஒரே சமயத்தில் பல காரியங்களைச் செய்வதைப் போன்றது. இதில் ஒருவர் செய்யும் காரியத்திற்கும் மற்றவர் செய்வதற்கும் தொடர்பு இருக்காது. வண்ணம் பூசுவது இழைப்பு முடிந்தபின்னரே நிகழும், ஆனால் ஒருவர் கதவிற்கு மரம் இழைக்கையில் வேறொருவர் சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பார் (இதனை ஒழுங்குபடுத்துவது நுண்செயலியின் வடிவமைப்பின் இரகசியம் – இதுவே ட்ரான்ஸ்மெட்டாவின் ஆதாரம்). இது முதலாவது புரட்சி. இது நிறுவனர் டேவிட் டிட்செலின் சிந்தையில் உதித்தது.
அதுசரி, மீண்டும் பழைய கேள்வி – இதில் நடைமுறையிலுள்ள விண்டோஸ் இயக்குதளத்தின் ஆணைநிரல்களும் இயங்குமா ? ஆம். இதற்கு ஒருபடி மேலேபோகின்றது க்ரூஸோ செயலி. இதில் எல்லா இயக்குதளங்களும் இயங்கும். மைக்ரோசாப்ட் விண்டோஸை இயக்கும் க்ரூசோவே சிலிக்கன் கிராபிக்ஸ் நிறுவனத்தின் ஐரிக்ஸ் இயக்குதளத்தை இயக்கவியலும். இதை எப்படி செயற்படுத்த இயலுகின்றது ? இதற்கு ட்ரான்ஸ்மெட்டா காப்புரிமை பெற்ற ‘குறி உருமாற்றம் ‘ எனும் கோட்பாடு உதவுகின்றது. அடிப்படையில் இது எந்த ஒரு இயக்குதளத்திற்காகவும் எழுதப்பட்ட ஆணைநிரல்களை உருமாற்றி க்ருஸோவிற்காக வடிவமைக்கின்றது. இதனால் உருமாற்றப் பட்ட கட்டளைத்தொடர்களே மிகநீண்ட கட்டளைச் சொற்றொடர் கணிப்பானுக்கு வழங்கப்படுகின்றது. இந்த குறி உருமாற்றம் மென்கலன் வடிவில் நிகழுகின்றது. இதனால் மென்கலனை எளிதில் மாற்றி விண்டோஸிலிருந்து ஐரிக்ஸ்-க்குத் தாவ இயலும். இதில் கட்டளை வாக்கியங்கள் முதன்முறை முற்றிலும் உருமாற்றப் படும், பின்னர் அடிக்கடி நிகழும் கட்டளைகளுக்கான உருமாறிய வடிவம் செயலியின் சேமிப்பில் இடப்பட்டுத் தொடர்சியான நிகழ்வு துரிதப்படுத்தும் (figure -2). இது இரண்டாவது புரட்சி. இதில் லினஸ் டோர்வால்ட் பங்காற்றியிருக்கிறார்.
முதல் தவணையாக இரண்டு க்ரூஸோ செயலிகள் வெளியிடப்படுகின்றன. ஒன்று TM3120 (400 மெஹா ஹெர்ட்ஸ் வேகமுள்ளது), இது ஐ.பி.எம் குறைக்கடத்தித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு ஏற்கனவே பல்வேறு கணினி தயாரிப்பாளர்களுக்கு இதன் அடிப்படையிலான ஏடுகணினிகளை வடிவமைக்க வழங்கப்பட்டு விட்டது. விழாவில் சில கணினிகள் இயக்கிக்காட்டப் பட்டன. மற்றது PM5400 (700 மெஹா ஹெர்ட்ஸ் வேகம்). இது இவ்வாண்டின் மையத்தில் வெளியிடப்படும். இவை டிரான்ஸ்மெட்டாவின் காப்புரிமை பெற்ற லாங்ரண் எனும் சக்தி நிர்வாக இணைச்சில்லுடன் இணைந்து செயல்படுகின்றன. இவற்றின் சக்தித்தேவை இன்டெலின் தற்பொழுதைய செயலிகளின் தேவையில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவு. மேலும், இதில் வெளியிடப்படும் வெப்பம் 48 செல்சியஸ்தான் (இன்டெல் பெண்டியம்-III 113 செல்சியஸ் வெளியிடுகின்றது), எனவே செயலியைக் குளிர்விக்க காற்றாடி அவசியம் இல்லை – சக்தித் தேவை இன்னும் குறைகின்றது.
அமைப்பில், குறி உருமாற்ற மென்கலனை அடிப்படையாகக் கொண்ட மிகநீண்ட கட்டளைச் சொற்றொடர் நுண்செயலியே க்ரூஸோ. அழைப்பிதழின் புதிரான வாக்கியத்திற்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு விளக்கம் கிடைத்தது. நிகழ்ச்சியில் பலகேள்விகள் கேட்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலும் டோர்வால்டின் ஆளுமை மற்றும் செயல்படு முறையின் அடிப்படையிலானவை. க்ரூஸோ பெருகிவரும் லினக்ஸ் இயக்குதளத்திற்காக வடிவமைக்கப்பட்டதா ? நிறுவனத்தின் பதில், ஆம் மற்றும் இல்லை. அடிப்படையில் x86 செயற்பாட்டிற்கு உத்தரவாதம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதால் இது பெரிதும் உபயோகத்திலுள்ள விண்டோஸ் இயக்குதளத்திற்கான நுண்செயலியாகும். எனினும் இயக்குதளத்தின் எதிர்காலம் என்று உணரப்படும் லினக்ஸ், ட்ரான்ஸ்மெட்டா நிறுவனத்தின் முக்கிய வணிக தந்திரமாக இருக்கும். சிறிய கணினிகளுக்குக்கான மொபைல் லினக்ஸ் ட்ரான்ஸ்மெட்டாவினால் எழுதப்பட்டு வருகின்றது. இதனால் மேசைமேல் வைக்கப்படும் இல்லக்கணினிகளில் மாற்றம் நிகழுமா ? பெரிதும், இல்லை என்பதே பதில். சக்தி சேமிப்பை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட க்ரூஸோவின் குறி நடைக்கணினிகள் மற்றும் பதிக்கப்பட்ட கணினிகளே. விழாவில் கையடக்க வலையட்டை ஒன்று செயல்படுத்திக் காட்டப் பட்டது. இதன் மூலம் நீங்கள் இணையத்தை உலாவ முடியும்.
லினக்ஸைப் பின்பற்றி குறி உருமாற்றத்தின் அடிப்படை கட்டளை நிரல் திறந்தவடிவில் இலவசமாக வினியோகிக்கப்படுமா ? இதற்கு ட்ரான்ஸ்மெட்டாவின் பதில் புன்னகை. இதன் காப்புரிமையே இவர்களுக்குச் சோறு (அறுசுவை விருந்து ? ?) போடப் போகின்றது. பொன்முட்டையிடும் வாத்தை வெட்டுவார்களா ? ஆனால், ட்ரான்ஸ்மெட்டாவினால் சுருக்கி எழுதப்படும் மொபைல் லினக்ஸ், மற்ற லினக்ஸ் வடிவங்களைப் போலவே தளையின்றி கிடைக்கும். விழாவில் க்ரூஸோ கொண்டு வடிவமைக்கப்பட்ட இரண்டு ஏடுகணினிகளில் ஒன்றில் லினஸ் டோர்வால்டும், மற்றதில் மிகவும் பெயர்பெற்ற, வடிவமைப்பில் உயர்ந்ததாகக் கருதப்படும், குவாக் விளையாட்டை வடிவமைத்த டேவ் டெய்லரும் விளையாடினார்கள் – லினஸ் தோற்றார்.
குழந்தையான ட்ரான்ஸ்மெட்டா ஒரே சமயத்தில் இன்றைய கணினி உலகின் இரண்டு அசைக்க முடியாததெனக் கருதப்படும் தூண்களான இன்டெல் மற்றும் மைக்ரோஸாப்ட் இரண்டுக்கும் அறைகூவல் விடுத்திருக்கிறது. x86க்கு மாற்றாகக் க்ரூஸோவை வடிவமைத்தன் மூலம் இன்டெலுக்கு நடுக்கத்தைத் தந்துள்ளது. இதற்கு உடனடி விடையாக இன்டெல் தனது புதிய நுண்செயலிகளில் ஸ்பீட்ஸ்டெப் எனும் காப்புரிமை பெற்ற திட்டத்தின் அடிப்படையில் வடிவமைப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில் உபயோகப் படுத்துபவரின் தேவைக்கேற்ப இதனை இருவித வேகங்களில் இயக்கிச் சக்தியைச் சேமிக்க இயலும். எனினும் இது அவ்வளவு புரட்சிகரமானதாகத் தோன்றவில்லை. எந்த ஒரு இயக்குதளத்திற்கும் எழுதப்படும் நிரல்களை குறி உருமாற்றி இயக்குவதன் முலமும், அடிப்படையில் 128-பிட்டு செயலியாக இருப்பதாலும் (தற்பொழுது மைக்ரோஸாப்டின் இயக்குதளங்கள் 32-பிட்டில் அமைந்தவை, லினக்ஸ் 64-பிட்டில் கிடைக்கிறது. அதிவேக 128-பிட் இயக்குதளத்திற்கும் லினக்ஸ் தயாராகிவருகின்றது) மைக்ரோஸாப்டுக்குத் தலைவலியை அளித்திருக்கிறது. இதனால் கணினி உலகின் ஆதார வணிக அமைப்புகள் மாற்றப்படுமா ? இது புதிய அலையைத் தோற்றுவிக்குமா ? கூட்டுப்புழுவிலிருந்து வளர்சிதை மாற்றம் கொண்டு சிறகடிக்கத் தொடங்கியிருக்கும் அழகிய வண்ணத்துப் பூச்சியா ? இல்லை, விழாவில் நடந்த விளையாட்டில் லினஸ் டோர்வால்டின் தோல்வி கோடிகாட்டுவதைப் போல் இது இன்னமொரு பெரு வர்த்தக முதலையின் தோற்றாமா ?
எது எப்படியோ, உழைத்துச் சம்பாதித்துச் சிறுகச் சேமித்த என் பணத்தைக் கொண்டு வாங்குவதாக இருந்த புதிய ஏடுகணினியை ஆறு மாதங்களுக்காவது ஒத்திப் போட்டிருக்கிறேன்.
வெங்கடரமணன்
தோக்கியோ. 19. பிப்ரவரி 2000
தொடர்புள்ள கலைச்சொற்கள்.
hardware – வன்கலன்
software – மென்கலன்
operating system – இயக்குதளம்
internet – ஊடுவலை
web, worldwide web, – இணையம்
free software – தளையறு மென்கலன்
microprocessor – நுண்செயலி
semiconductor – குறைகடத்தி
mobile computing – நடைகணிப்பு
notebook computer – ஏடுகணினி
mobile phone – செல்பேசி
microwave oven – நுண்ணலை அடுப்பு
embeded systems – பதிக்கப்பட்ட கணினிகள்
battery – சேமக்கலம்
CISC – Complex Instruction Set Computing – கலவைக் கட்டளைத் தொடர் கணிப்பு
RISC – Reduced Instruction Set Computing – குறைத்த கட்டளைத் தொடர் கணிப்பு
VLIW – Very Large Instruction Word – மிக நீண்ட கட்டளைச் சொற்றொடர்
Code Morphing – குறி உருமாற்றம்
chip (electronic) – சில்லு
WebPad – வலையட்டை
தொடர்புள்ள இணையப் பக்கங்கள்
பிற பத்திரிக்கைகளின் செய்திகள்
Get the Scoop on Crusoe- A ZDnet report
http://www.zdnet.com/zdtv/siliconspin/specials/story/0,3725,2425259,00.htm
Silicon Secrets – An ABC news report
http://abcnews.go.com/onair/WorldNewsTonight/wnt_000119_CL_secretchip_feature.html
The Secret of Success – Asianow CNN ‘s technology report
http://cnn.com/ASIANOW/asiaweek/technology/2000/0204/tech.internet.html
If you prefer the news for nerds – read this running commentry on
Crusoe unveiling show in slashdot
http://slashdot.org/articles/00/01/19/1320214.shtml
நுண்செயலிகள் குறித்த எளிய அறிமுகம்
Microprocessor http://www.whatis.com/micropro.htm
Microprocessors
http://webopedia.internet.com/TERM/m/microprocessor.html
தொழில்நுட்ப முழுவிபரங்களுக்கு
The technology behind Crusoe chip (your need adobe acorbat reader to see this pdf file)
http://www.transmeta.com/crusoe/download/pdf/crusoetechwp.pdf
Intel ‘s SpeedStep Technology
http://www.intel.com/mobile/pentiumiii/ist.htm
நிறுவனங்கள்
Transmeta, http://www.transmeta.com
Linux http://www.linux.org
Microsoft http://www.microsoft.com
Intel http://www.intel.com
AMD http://www.amd.com
SUN Microsystems http://www.sun.com
- கற்கள்
- வாஜ்பாயியின் சவடாலும், வாட்டர் பற்றிய வரட்டுவாதமும்
எறும்பு தின்னி *
- கடைசி வரை… ஒருவர்!
- கணினி உலகின் புதிய விண்மீன்
- ஜெயமோகன் கவிதைகள்
- ஆதிவாசிகள்