கடித இலக்கியம் – 49

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

வே.சபாநாயகம்



கடிதம் – 49

திருப்பத்தூர்.வ.ஆ.
24-2-65

பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு,

வணக்கம்.

முன்பொருமுறை எழுதி அனுப்பினேனே, ‘தமிழ் ஒளி’யின் கவிதைகள் சில, அவைகள் எப்படி? நீங்கள் அவற்றைக் குறித்து எழுதவில்லை என்று கருதுகிறேன். அதிலே ‘கண்ணம்மா பாட்டு’ எனக்கு மிகவும் பிடித்தது. அதில் தென்படும் ஆழ்ந்த
சோகம் அற்புதமானது. என் நினைவுகளை அது அடிக்கடி தனது அந்தச் சோகத்தால் இப்பொழுதெல்லாம் இடைமறிக்கிறது. ‘தமிழ் ஒளி’யின் உள்ளம், வண்ணங்கள் குழைப்பதில் தெய்வத்தின் வரப்பிரசாதம் பெற்ற ஓர் அபூர்வ சித்ரக் கலைஞனைப்
போல் எத்தகைய சௌந்தர்யத்தோடிருக்கிறது! இந்த நூற்றாண்டின் மூன்றாவது தமிழ்க் கவிஞன் அவன். அவனுக்கு டி.பி. அவனுக்கு இருப்பிடம் இல்லை! ஏன் அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதே தெரியவில்லை!

‘தமிழ் ஒளி’ அந்த நாட்களில் எழுதிய ‘வீராயி’ என்கிற காவியத்தை, சென்னை செல்லும்போதெல்லாம் ‘கன்னிமாரா’ என்கிற கடலுக்குள் வலைவீசித் தேடுகிறேன். இன்னும் கிடைக்கவில்லை. வேறு, புதிதாகவும் எதுவும் கிடைக்கவில்லை.

‘தமிழ் ஓளி’ இந்த நூற்றாண்டின் மூன்றாவது தமிழ்க்கவி என்கிற விஷயத்தை நான் பிரஸ்தாபித்தபொழுது, வல்லிக்கண்ணன் வீட்டில் தி.க.சிவசங்கரன் என்ற விமரிசக நபருக்கும் (‘தாமரை’யில் பார்த்திருப்பீர்கள்) எனக்கும் அது சம்பந்தமாக
அபிப்பிராயபேதம் ஏற்பட்டது. கடைசியில், அதுபற்றி ஒரு பட்டிமன்றத்திலேயே பேசத் தயார் என்று அறிவித்துவிட்டேன்.

மறந்திருக்கக் கூடும் – இப்பொழுது நினைவுகூர்வதில் நீங்கள் மகிழக்கூடும் என்று கருதி அவனது சில பழைய கவிதைகளை எழுதுகிறேன்.

சூறைக் காற்று……….மழையைப்பற்றி:

‘மக்கள் தொடுத்திடும் யுத்தம் – என
வானமும் மண்ணும் இருண்டு நடுங்க
செக்கென ஆட்டுது காற்று – பெருந்
செல்வர் மணிமுடி சட்டம் சிறைகள்
பொக்கென வீழ்வது போலே – யாவும்
போயின! பொட்டென்று விட்டது காற்று
செக்கச் சிவந்தது வானம் – அன்னை
சேல்விழி காட்டினள் காலை’.

* * * * * * * * * * * * * * *

‘தட்டி யெழுப்பினாள் காற்றை – அது
தாவி யுருட்டுது மாமரக்காட்டை’

* * * * * * * * * * * * * * *

கார்த்திகை மாதத்து மின்மினிகளைப் பற்றி வருணனை:

‘கீர்த்தி இளமை கிழியாப் பழம் பெருமை
சீர்த்தியிவை நான்கும் சிறப்புரு பெற்றதுபோல்
தென்னையின் பாளை சிதறும் புதுமலர் போல்
பொன்னை உருக்கும் புதுமை போல், மற்றும்
அகழ்வாரைத் தாங்கும் அவல நிலத்தில்
புகழுருவம் ஒன்று புறப்பட்ட தோற்றம் போல்
பொய்யே மலிந்த புலையிடையே நன்னெஞ்சம்
‘ஐயோ’ என்றேங்கி அழுத கண்ணீர்த்துளி போல்
பிரிந்தார் அகத்திற் பிறந்ததோர் வேட்கை
எரிந்த பொரியாகி எங்கும் பறந்தது போல்
நெற்றித் திலகம் நிறம் பெற்றெழுந்தது போல்
சுற்றித் திரிந்து சுடர்கின்ற பொன்விளக்கு
சொல்லுக் கடங்காது தோன்றுகின்ற கற்பனைபோல்
அல்லுக்கடங்காத ஆனந்த மின்விளக்கு!
ஐப்பசித் தூதை அனுப்பி வைத்துக் கார்த்திகையைக்
கைப்பிடித்த வாளின் ககனத் திருவிளக்கு!
பூவின் இதழ்ஒன்று பொன்சிறகு பெற்றதுபோல்
நாவின் சிறுசொல் நறுக்குப்போல், நல்லோர்கள்
வாழும் இடத்திற்கு வாழ்த்தாகி வான்விருந்தாய்ச்
சூழும் சுடர்போன்ற தோற்றங்காண்! மின்மினிகாண்!’.

இங்கே எனது இலக்கிய முயற்சிகள் சற்று ஒய்ந்திருக்கின்றன. ஒருக்கால், நிரந்தரமான சாவுக்கு இவை முன்னறிகுறிகளோ என்னவோ? P.U.Cக்குப் படிக்கிற ஒரு சாக்கு. ஆனால் அதையும் ஒழுங்காகச் செய்யவில்லை. முன்பு விகடனுக்கு ஒரு கதை எழுதிக் கொண்டிருப்பதாய்ச் சொன்னேனே, அது இன்னும் ஆரம்பப் பாராவைக் கூடத் தாண்டவில்லை.

சிறுகதை என்றால் என்ன என்பது ஓரளவுக்குப் பிரக்ஞையில் நன்றாக உறைத்து விட்டது. அதன் dimensions அனைத்தையும் அறிந்திருக்கிற காரணத்தால், நம் காரியங்களை அளவுகடந்த ஜாக்கிரதையுணர்ச்சியோடு செய்ய வேண்டியிருக்கிறது. இடையில், சேகரிக்கிற ஒவ்வொரு இலக்கியத் தகவலும் நம்மை மிரட்டிக்கொண்டிருக் கின்றன. ஓ, இலக்கியம்! அது பெரிய விஷயம் –

– அதே சமயத்தில், வற்றாது வரளாது சமயாசமயங்களில் பீரிட்டுக் கிளம்புகிற நம் உற்சாகமும் இன்னும் ஓயவில்லை.

எனவே பார்ப்போம்! ஜெயகாந்தன் சொல்கிறபடி, “சரஸ்வதி தேவியின் அருள் பெற்று, அவள் கரம்பற்றி நடந்த எத்தனையோ கோடி கலைக் குழந்தைகளில்” நாம் ஒன்றாக முடியாதா?

‘சரஸ்வதி’ என்கிறது வெறும் சமயத்தைக் குறிக்கிற பிரதிமை மட்டுமன்று. அது ஒரு கலையின் பெரிய உருவகம். எனவே, ஜைனராகிய உங்களுக்கும் அவ்வுருவத்தின் அழகு விளங்காது போகாது. பாஞ்சாலி சபதத்தின் ஆரம்பத்தில் பாரதி எழுதுகிறானே அதைப் பாருங்கள்:

அவள் – அந்த சரஸ்வதி –

வேதத் திருவிழியாள் -அதில்
மிக்கபல் லுரையெனும் கருமையிட்டாள்

போத மென் நாசியினாள் – நலம்
பொங்கும்நல் சாத்திர வாயுடையாள்

கற்பனைத் தேனிழதாள் – சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையினாள்’.

– எப்பொழுதாவது கவிதைகள் எழுதுகிறேன். ஆயினும் கவனம் சிறுகதைகளின் மீது அதிகம் காதல் கொள்கிறது. இது சிருஷ்டி விஷயத்தில் மட்டும்தான். ரஸனை, வாசிப்பு, லயிப்பு எல்லாம் கவிதைதான். அல்லும் பகலும் வாய் கவிதையையே அலப்பிக்கொண்டிருக்கிறது. படிப்பதும் கவிதையே. சிறுகதைகளை தொடுவதுமில்லை.

– ஏனெனில் நாம் படிக்கிற தகுதியுள்ள சிறுகதைகள் இன்று தமிழ்நாட்டில்
பிரசுரமாவதேயில்லை – ஜெ.கா.வைத் தவிர்த்து.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்