கடித இலக்கியம் – 23

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

வே.சபாநாயகம்


கடிதம் – 23

நாகராஜம்பட்டி
29-10-80
அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தாங்கள் இங்கிருந்து புறப்பட்ட பிறகு, ஆர அமர நிதானமாகத் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிற அவகாசமும் மனநிலையும் இப்போதுதான் கிடைத்துள்ளன. தங்களுடைய ஆர்வம் கலந்த எதிர்பார்ப்புக்கு இன்னமும் ஏமாற்றமளிக்ககூடாது என்கிற உணர்வின் உறுத்தலால்தான் இதுவும் இப்போது சாத்யமாகிறது. இல்லையேல் இன்னும் எவ்வளவு தாமதமாகியிருக்குமோ?

கடந்த ஒரு மாத காலமாக நான் தொடர்ச்சியாகவும், சாவதானமாகவும் வீட்டில் இருக்க முடியவில்லை. அதற்கப்புறம் ஒருபயணம் ஆலங்காயமும் வெள்ளக் குட்டையும் போனேன். இந்தமாதம் 12ஆம் தேதி வரை சென்னையில் இருந்தேன்.

சென்னையில், நான் சென்றபோது எதிர்பாராத விதமாக, ரஷ்யாவிலிருந்து திரும்பி இருந்த JK வைப் பார்த்துச் செல்வதற்காக, வையவனும் வந்திருந்தார். ஜீவகன் அவரிடம் நமது மலைப் பயணத்தின் மகிழ்ச்சி பற்றி நிறையச் சொல்லியிருக்
கிறான். நிறைய விசாரித்தார்.

தங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருந்தாலும், எங்களுக்கு என்னவோ ஏராளமான குறைதான். நினைத்துப் பார்த்தால் எங்கள் உபசாரங்களில் எவ்வளவோ அசௌகரியமான அம்சங்கள் தெரிகின்றன. கோரைப் பாயும் கொசுவும், குளியல்
போன்றவைகளும் ஒரு third class guest house தான். காவிரி நீர் பாயாத கலாச்சாரம். வடாற்காடு ஜில்லாவின் பாமர வாடை. வாழ்க்கைப் போராட்டங்களில் ஆசாரங்களை மறந்த மனிதர்கள். எனது திட்டமிடப்படாத, பாங்கற்ற, வெறும், பேச்சை மட்டுமே பிரதானமாககொண்ட treatment………..

ஆயினும், தாங்கள் இவற்றை மறுப்பீர்கள் என்பதும், இன்னும் சொல்லப் போனால், இவையெல்லாம் இவ்வாறாகத் தங்கள் பார்வைக்குப் பட்டிராது என்பதும் எனக்கு நன்கு தெரியும். இப்படி ஒரு உயர்நிலை இருப்பதாலேயே நாம் நண்பர்கள் ஆனோம். நண்பர்கள் எனில், கால தேச வர்த்தமானங்களையும், தேக வாழ்க்கை யையும் கடந்த நண்பர்கள்……

எங்களுக்கு இம்முறை மிகவும் மகிழ்ச்சியளித்த விஷயம், குடும்ப சமேதரான உங்கள் காட்சிகளின் தரிசனம்தான். இதை வாய் விட்டு, வார்த்தைகளில் எழுதுவதில் எங்கள் உணர்வின் அன்யோன்யம் தெரியவராது. அவ்வாறு நாங்கள் உணர்ந்தோம்.
புத்¢ய முகங்களையோ புதிய மனிதர்களையோ பார்ப்பது போல் அல்லாமல், சபாநாயகம் என்கிற சாளரத்தின் வழியே கண்ட ஜன்மஜன்மாந்திர அறிமுகங்கள் கொண்ட பிம்பங்களாகப் பாப்பாவும் தம்பியும் அனைவரும் தெரிந்தனர். ஒரு தகப்பனாரின் மனநிறைவும் தாயின் மனநிறைவும் என்கிற மகத்தான உணர்வனுபவத்தை நாங்கள் மிக எளிதாக லகுவாக எட்டினோம். ” நன்று. நன்று. உலகம் இனியது….” என்று நவநவமாய்க் கவி புனைய மனிதகுல மன நாக்கை தூண்டுவதற்கு, மூல காரணமான
பொக்கிஷமாக ஒரு நல்லுணர்வு தேவையன்றோ? அதனைத் தாங்களும் துணைவியாரும் குழந்தைகளும் – உங்கள் எல்லாருக்கும் பின்னால் நிற்கின்ற குடும்பம் என்னும் சீரிய தத்துவத்தின் கட்புலனாகாத தோற்றமும் தந்ததை, பின்னால் ஒரு கடிதத்தில்
தான் விவரித்துச் சொல்லவேண்டும் என்று நான் அப்போதே நினைத்துக் கொண் டேன்.

ஒரு வெட்கமும் பிறக்கிறது. “மற்றை நாட்டவர்முன் நின்றிடும் போழ்து மண்டும் என் வெட்கத்தின் ஆணை” என்று பாரதியின் மாஜினி கூறுவது போன்ற ஒரு வெட்கம் அது. தங்கள் துணைவியாரின் மிக உயர்ந்த பாங்கு கொண்ட உபசாரத்தின் முன்னும், அவர்கள் கவனித்தும் போஷித்தும் கைகொடுத்தும் வளப்படுத்தியிருக்கும் உங்கள் அன்றாடவாழ்கை ஒழுங்கு என்கிற நியமத்தின் முன்னும் வருகிற வெட்கம் அது. சரசுவுக்கு அவர்களிடம் தான் பாராட்டுப் பெறும் அளவுக்குப் பேசி நடந்து கொள்ள முதலில் தன்னால் முடியுமோ என்கிற பிரமிப்பு இப்போது ஏராளமாய் ஏற்பட்டு விட்டி ருக்கிறது. அவர்களைச் சந்தித்தால் ரொம்ப exciting ஆகவும் nervous ஆகவும் இருப்பாள் என்று நினைக்கிறேன். ஆனால் அந்தச் சந்திப்பு வெகு விரைவில் சட்டென்று நடந்து தீர்வதாக இருப்பின் அது சரியில்லை. காலத்தின் கர்ப்பப்பையில் வெகு பத்திரமாகவும் ஆவலாகவும் வளர்த்து வர வேண்டிய கனவு அது. எப்படியும் பாப்பா சம்பந்தமான ஒரு மங்கள அழைப்பு இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னால், எங்கள் “மலை நாட்டு வளம்” காண அவர்களெல்லாம் வருவது என்னும் திட்டம் ஒன்றை, நாம் இருவரும் மிக ஆசையோடு பேசியது எனக்குக் கவனம் வருகிறது. உங்களுக்கு அது கவனத்தில் சதா இருக்க வேண்டும்.

இம்முறை உங்களுக்குக் கொஞ்சம் தேனும் கொடுத்து அனுப்பி இருந்தால், அது ஒரு குகனின் பரிசு போல் இருந்திருக்குமே என்றும், அகிலனும் ஒரு குழந்தை தான் என்பதைச் சரியான நேரத்தில் கவனம் கொள்ளாமல், தோழமையுணர்வு
கொள்ளத் தக்க ஒரு மூத்த பிம்பமாக மனசுக்குள் பார்த்து விட்டோமோ என்கிற சிந்தனையும் – இவ்வாறு தாங்கள் சென்ற பின்பு நாங்கள் நினைத்து அலசியது நிறைய.

மொத்தத்தில் நீங்கள் தான் ஒரு நடமாடும் விருந்துக் கூடமாக வந்து எங்களையெல்லாம் உபசரித்தது போலும், ஆட்பட்டவர்களும் அனுபவித்தவர்களும் நாங்கள் தான் போலும், தாங்கள் வந்து சென்ற நாட்கள் எங்களுக்கு மனம் நிறைய நிறைய நிற்கின்றன. அவ்வப்போது ஆனந்தமாக அசை போடுகிறோம்.

ஓரிரு நாட்களில், அடுத்த கடிதத்தில், தொடர்கிறேன்.

– பி.ச.குப்புசாமி
30-10-80

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்