கடிதம் 14,2004

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

காசி


அன்புள்ள ஆசிரியருக்கு,

அக்டோபர் 10 தேதியிட்ட திண்ணை இதழில் வெளியான ‘யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல் ‘ ( http://www.thinnai.com/pl1007041.html )என்ற கட்டுரையினை வாசித்தேன். இம்மாதிரி என்றும் நம்மைப் பாதிக்கக் கூடிய தொழில்நுட்ப விஷயங்களையும் அளிப்பதில் திண்ணையின் பரந்துபட்ட பார்வை தெரிகிறது. பாராட்டுக்களும் நன்றியும்.

அதே சமயம் ஒன்றைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அந்தக் கட்டுரையில் பல இடைச் செருகல்கள் இருப்பதாக என் அனுமானம். ஒரு நேர்மையான நேர்காணலாக அது இல்லை என ஐயுறுகிறேன். அந்த நேர்காணலில் முதல் கட்டத்தில் திரு.துரைப்பாண்டி சொல்லியதுபோல எழுதப்பட்டிருக்கும் ‘கணினியில் எழுத்துக்கள் கையாளப்படும் விதம் ‘ பற்றிய சில சொற்றொடர்கள் அப்படியே என் வலைப்பதிவில் நான் சென்ற ஏப்ரலில் எழுதி, பலராலும் இன்னும் வாசிக்கப்பட்டுவரும், ‘என் கோடு, உன் கோடு, யுனிகோடு, தனி கோடு ‘ என்ற கட்டுரைத்தொடரிலிருந்து ஒத்தி ஒட்டப்பட்டுள்ளன. இந்த மடலை எழுதும் நேரம், கூகிளில் ‘யுனிகோடு ‘ என்று தேடினால் வரும் முதல் விடையே இந்தக் கட்டுரைதான். அப்படியே ஒத்தி ஒட்டப்பட்டுள்ளது என்பது நான் உதாரணமாகக் காட்டிய எண்களைக் (15, 1345) கூட மாற்றாமல் கொடுத்திருப்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம். என் கட்டுரையின் சுட்டி:

http://kasi.thamizmanam.com/index.php ?itemid=78

எந்த ஒரு கட்டுரையிலும் அதை எழுதுபவர் அதிலுள்ள ஒவ்வொரு சொல்லையும் தானே உருவாக்கியிருக்கவேண்டிய அவசியமில்லைதான். பல இடங்களில் நாம் வாசிப்பது, நாமே ஒன்றை செய்யும்போது உணர்வது, சிந்துத்துத் தெளிவு பெற்று மறுபடியும் வெளியிடுவது என ஒரு கலவையாகவே இது இருக்கும். ஆனால், சில சமயம் வேறு ஒரு மூலத்திலிருந்து எளிமைக்காகவோ, தெளிவுக்காகவோ அப்படியே எடுத்தாளவும் செய்வோம். ஆனால் அப்படி நம் சுய சொற்களால் அல்லாமல் பிற இடத்திலிருந்து எடுத்தாளும்போது அந்த மூலத்தைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிப்பது நல்லோர் மரபு. இணையம் வந்தபின் இப்படியான மூல எழுத்துக்களை வெறுமனே குறிப்பிடுவதோடு நிற்காமல் சுட்டி (hyperlink) ஆகக் கொடுத்து வாசகர் இன்னும் பரந்துபட்ட அறிவை பெற வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பது இன்னும் செம்மையான வழிமுறை.

இணைய இதழ்களிலே அதிகம் வாசகரைக் கொண்டிருக்கும் என்று நான் நம்புகிற, திண்ணை, இந்த விசயத்தில் ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். எனவே அந்தக் கட்டுரையில் என் மூலக் கட்டுரையை சுட்டிக் காட்டவும், இனிமேல் இதுபோல நேராமல் இருக்க எழுத்து ஆக்கங்களை அனுப்புபவரிடம் சில ஒப்புமைகளைப் பெற வழிமுறைகளை ஏற்படுத்தவும் வேண்டிக்கொள்கிறேன்.

உங்கள் பார்வைக்காக அந்தக் கட்டுரையிலும் என் கட்டுரையிலும் நான் காட்டவிரும்புகிற அந்தச் சொற்றொடர்களை இந்தப் படத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

http://www.thamizmanam.com//blog/media/thinnai-uni.gif

http://www.thamizmanam.com//blog/media/kasi-uni.gif

இம்மாதிரி சுட்டிக்காட்டிய உடனே சர்ச்சைக்குறிய பகுதியையோ அல்லது முழுக்கட்டுரையையோ நீக்கிவிடவேண்டியதில்லை. இந்தப் பொருளில் பலரும் விவாதிக்கவேண்டும், அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் சொல்கிறேன். அதை மாற்றி அமைப்பதானால், என் கட்டுரையைக் குறிப்பிட்டு, (முடிந்தால் சுட்டியுடன்;-) எழுதினாலே சரியாக இருக்கும்.

அன்புடன்,

-காசி

http://kasi.thamizmanam.com/

பி.கு. கட்டுரை ஆசிரியரின் மின்னஞ்சலுக்கும் நகலிடுகிறேன்.

Series Navigation

காசி

காசி