கடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

சோதிப் பிரகாசம்


திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்!

நண்பர் ஜோதிர் லதா கிரிஜா வருத்தம் அடைகின்ற அளவுக்கு அப்படி என்ன ஒரு கேள்வியினை அவரிடம் நான் கேட்டு விட்டேன் என்பது எனக்குப் புரிய வில்லை.

ஒரே ஒரு சாதியினருக்கு மட்டும் உரிய ஒரு மடமாகச் சங்கர மடம் நீடித்துக் கொண்டு வருவதை எதிர்த்துப் பல் வேறு சமயங்களிலும் பல் வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடு பட்டுக் கொண்டு வந்து இருக்கின்றன என்பது ஊர் அறிந்த ஓர் உண்மை!

இந்தச் சூழலைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான்—-நண்பர் ஜோதிர் லதா கிரிஜாவின் வாசகன் என்கின்ற முறையில்—-சங்கர மடத்தின் சாதியம் பற்றிய ஒரு விளக்கத்தினை அவரிடம் நான் கேட்டேன்.

இதில் வருத்தப் படுவதற்கு என்ன இருக்கிறது ?

‘ஒரு சாதியின் மடமாகச் சங்கர மடம் நீடித்துக் கொண்டு வருவதை நான் எதிர்க்கிறேன் ‘ என்று மிகவும் தெளிவாக எனது கேள்விக்கு அவர் விளக்கம் அளித்து இருக்கலாமே!

சாதி-மத அடையாளங்கள் எவையும் எனக்கு இல்லை; அவற்றைக் கருத்தில் வைத்துக் கொண்டு யாரையும் நான் எதிர் கொள்வதும் இல்லை!

32 ஆண்டுகளுக்கு முன்னர், ‘பணி புரியும் பெண்களின் பிரச்சனைகள் ‘ பற்றிய ஒரு விவாதத்தின் பொருட்டு நண்பர் ஜோதிர் லதா கிரிஜாவை நான் சந்தித்த பொழுது, அவரிடம் சாதியப் பான்மை எதையும் நான் காண வில்லை. அவரிடம் மட்டும் அல்ல, அவர் அறிமுகப் படுத்திய அவரது தோழியர்களிடமும் நான் காண வில்லை!

பேருந்துப் பயணத்தின் போதும் பணியின் போதும் ஆண்களால் பெண்களுக்கு இழைக்கப் பட்டு வந்த இன்னல்களைப் பற்றி அவரது தோழியர்கள் எடுத்துக் கூறினார்கள். வலிமை இல்லாதவர்கள் என்று ஆண்களைக் கிண்டல் அடிப்பதற்கும் அவர்கள் தவற வில்லை.

ஒரு காலைத் தளர்த்தி வைத்துக் கொண்டு மறு காலில் மட்டும் நின்று கொண்டு பயணம் செய்வது ஆண்களின் வழக்கம் என்றும் பெண்களோ நிமிர்ந்து நின்று கொண்டு பயணம் செய்பவர்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டு இருந்தது என்றும் நான் மறந்திட முடியாதது!

எப்படியும், சாதியப் பான்மையில் அல்லாமல் சாதி ஒழிப்புப் பான்மையில்தான் சங்கர மடம் பற்றிய கேள்வியினை நான் எழுப்பி இருந்தேன்!

சரி, அது போகட்டும்! பழைய இந்திய மரபில் பெண்களுக்குச் சாதி உண்டா ? இல்லையா ? தெரிந்தவர்கள் விளக்கம் அளித்திட முன் வர வேண்டும்.

ஒரு ஹிந்துவாகப் பிறந்து தொலைத்து விட்டேனே என்று முன்பு ஜோதிர் லதா கிரிஜா எழுதி இருந்த கட்டுரையினை நான் படித்தேன். ‘பிறப்பினில் இல்லை உயர்வும் தாழ்வும் ‘ என்பதைத்தான் இவ்வாறு அவர் குறிப்பிடுகிறார் போலும் என்று ‘மெய்மையின் மயக்கத்தின் ‘ ஒரு தொடரில் அது பற்றி நான் எழுதியும் இருந்தேன்; பிறை நதி புரத்தாரும் அதற்கு மறு வினை புரிந்து எழுதி இருந்தார்.

இப்படி, தமது சாதியையும் மதத்தையும் பற்றி நண்பர் ஜோதிர் லதா கிரிஜா எழுதி இருந்த காரணத்தினால்தான்—-உறுதியான விளக்கத்தினை அவரிடம் இருந்து பெற்றுக் கொள்கின்ற நோக்கத்தில்—-சங்கர மடத்தின் சாதியம் பற்றிய கேள்வியினை நான் எழுப்பிட நேர்ந்தது. சாதியையும் உள்ளடக்கிய ஒரு சொல்தான் ஹிந்து என்னும் சொல் என்பது அவரது மடலில் இருந்து தெரியவும் வந்து இருக்கிறது.

மற்ற படி, தவறாக அவரைப் புரிந்து கொள்கின்ற முயற்சியோ அல்லது வருத்தமுறச் செய்கின்ற நோக்கமோ எனக்கு இல்லை. அதே நேரத்தில், ஆதி சங்கரருக்குக் கற்பிக்கப் படுகின்ற ஓர் இழிவுதான் சங்கர மடத்தின் சாதியம் என்றும் நான் கருதுகிறேன்.

எனக்கு நெருக்கமான தலித் நண்பர் ஒருவர் எனது சாதியைப் பற்றி ஒரு முறை என்னிடம் பேசினார். எனக்குச் சாதி இல்லை என்று உறுதியாக அவரிடம் நான் கூறினேன். எனக்கு மட்டும் அல்ல, எந்த ஒரு மார்க்சிய வாதிக்கும் சாதி என்பது இருந்திட முடியாது என்றும் அவருக்கு நான் விளக்கம் அளித்தேன்.

மனிதர்களாக மனிதர்கள் வாழ்ந்திடத் தக்க ஒரு சமுதாயமாக இந்தச் சமுதாயம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு இருப்பவர்கள்தாம் மார்க்சிய வாதிகள்! விடுதலையான தனி மனிதர்களின் விடுதலையான உறவுகளாக விரிகின்ற ஒரு சமுதாயத்தைக் கனவு கண்டு கொண்டும் அவர்கள் வருகிறார்கள்!

இப்படி, தனி மனித விடுதலையினை முன் மொழிகின்ற அவர்களுக்குச் சாதி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை—-அதனை ஒழிப்பதைத் தவிர! எனவேதான், ஒடுக்கப் பட்டுக் கிடக்கின்ற சாதியின் பக்கம் நின்று கொண்டு சாதி ஒழிப்பிற்காகக் குரல் கொடுப்பது அவர்களின் கடமை ஆகிறது.

சங்கர மடத்தின் அதிபதிகளைப் பற்றி நண்பர் ஜோதிர் லதா கிரிஜா எழுதுவது கூட, ஒடுக்கப் பட்டுக் கிடக்கின்ற மக்களின் பக்கத்தில் நின்று கொண்டுதான் என்றே அவரை நான் புரிந்து கொண்டும் இருக்கிறேன்.

எல்லா மதங்களும் நல்ல மதங்கள்தாம் என்றால், மதங்களின் பெயரால் பெண் அடிமைத் தனத்தினையும் சாதிய ஒடுக்கு முறைகளையும் மனித நேயம் இல்லாத மிருக வெறிகளையும் ஒரு சிலரால் கடை பிடித்திட முடிகிறதே, எப்படி ? மதக் கோட்பாடுகளின் சீர்திருத்தம் பற்றிய ஒரு கேள்வி இங்கே எழுந்திட வில்லையா ?

சாதி அமைப்புகள் அனைத்தும் ஒழித்துக் கட்டப் பட வேண்டும் என்பது ஒரு நல்ல கோட்பாடுதான்! ஆனால், அந்தக் காலம் வருகின்ற வரைக்கும் சங்கர மடத்தை அப்படியே விட்டு வைத்து விடலாம் என்னும் ஒரு கருத்தும் இதில் உள்ளுணர்த்தப் படுவதாக இல்லையா ?

எனவே, எனது கேள்வியைத் தவறாகப் புரிந்து கொள்வதில் எந்தப் பொருளும் இல்லை. ஒரு கேள்வியை எழுப்பி விளக்கம் பெறுகின்ற உரிமை கூட ஒரு வாசகனுக்கு இல்லையா, என்ன ?

உலகு எங்கும் எழுப்பப் பட்டு வருகின்ற பெண் விடுதலை முழக்கங்கள் எவையும் நண்பர் ஜோதிர் லதா கிரிஜாவின் காதுகளில் விழுவது இல்லை போலும்!

ஏனென்றால், பெண்களின் விடுதலை பிரச்சனை என்பது வெறுமனே ஓர் உடைப் பிரச்சனையோ அல்லது பார்வைப் பிரச்சனையோ, அல்லது, வேறு சிலர் கருதிட முற்படுவது போல, வெறும் காமத்துப் பிரச்சனையோ அல்ல! மாறாக, ஆண்-பெண் உறவுகளின் பிரச்சனை; குடும்ப உறவுகளின் பிரச்சனை; மனித மாண்பின் பிரச்சனை!

ஆனால், ஜோதிர் லதா கிரிஜாவோ ஆண் ஆதிக்கத்திற்குள் பெண்கள் அடங்கிக் கொள்வதுதான் பெண்களின் அமைதிக்குச் சிறந்த வழி என்பது போன்ற கருத்துகளை வெளிப் படுத்திக் கொண்டு வருகிறார்—-அயோத்தி தாசப் பண்டிதரைப் போல!

இன்று எழுதி நாளை தீர்ந்து விடுகின்ற ஒரு பிரச்சனையாக எந்தப் பிரச்சனையையும் நான் பார்க்க வில்லை. அதே நேரத்தில், தொலை நோக்கான ஒரு பார்வையினை வாசகர்களின் முன் வைப்பது எழுத்தாளர்களின் கடமை என்றும் நான் கருதுகிறேன்.

எப்படியும், கேள்விகளை எழுப்புகின்ற உரிமையினைத் தமது வாசகர்களுக்கு ஜோதிர் லதா கிரிஜா மறுத்திட மாட்டார் என்பதில் ஐயம் இல்லை.

அன்புடன்,

சோதிப் பிரகாசம்

05-02-2005

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்