நாக.இளங்கோவன் – மு. சுந்தரமூர்த்தி – சின்னக்கருப்பன்
திரு.இராசேசு அவர்களின் இரா.சு.ச-காந்தியடிகள் பற்றிய கட்டுரைக்கான எதிர்வினை:
இந்துக்களை சாதிக்கூறு போட்டது பிரித்தானியர் என்றும் அவர்களுக்குப்பிறகு அந்நிய நிதி
உதவியில் கிறித்தவ மற்றும் இசுலாமியர் என்றதோடு நக்சலைட்டுகளையும் சேர்த்துக்
கொண்டு விடுகிறார் திரு.இராசேசு. வாயைப்பிளந்து கொண்டு அப்-அப்-அப்-அப் என்று கையால் அடித்துக் கொள்ள வைக்கிறார் தனது எழுத்து வன்மையால். சாதிக்கூறுகள் செய்த மனுநீதி சூத்திரங்களை இராசேசு படித்திருப்பார் நிச்சயமாக; தற்போதைய வசதிக்கு அதை மறந்துவிட்டிருக்கக் கூடும். இல்லாவிடில் இவ்வளவு வசதியாக எழுத முடியாதல்லவா ?
மனுநீதிக்கெல்லாம் போக வேண்டாம். அவரின் வாதப்படியே கேட்கிறேன்; ஒன்னரை வருடத்திற்கு முன்னர் மரீனாக் கடற்கரையில் சங்கரர், ‘அவரவர் அவரவர் இடத்தில் இருந்து விட்டால் பிரச்சினையிராது ‘ என்று பெருங்கூட்டத்திற்கு மத்தியில் முழங்கினாரே, சாதிக்கூறு போட்டாரே! அப்போ சங்கரர் நக்சலைட்டா ? பிரித்தானியரா அல்ல வெளிநாட்டு கைக்கூலியா ? அந்தப் பேச்சை இரா.சு.ச கண்டித்ததா ? காந்தியார் கொலையானதில், இரா.சு.சவிற்குத் தொடர்பில்லை; இரா.சு.ச ஒரு சாத்வீகமான இயக்கம் என்று எண்ணி நாதுராம் அதை விட்டு விலகி விட்டான் என்று கூறுகிறார் இராசேசு. அதோடு காங்கிரசு சார்பாக பல தேசிய போராட்டங்களை நடத்தினான் நாதுராம் என்றும் கூறுகிறார் நண்பர் திரு.இராசேசு. இரா.சு.சவின் மேல் தனக்கு இருக்கும் அன்பு மிகுதியால் நாதுராம் கோட்சேயை இரா.சு.சவில் இருந்து விலக்கிவிட்டாரா, அல்லது, நாதுராம் மேல் இருந்த அன்பால்
நாதுராமிடம் இருந்து இரா.சு.சவைக் கழட்டி விட்டாரா திரு.இராசேசு என்பது புரியவில்லை. இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் நாதுராமே என்ன சொல்கிறார் என்பதையும் பார்க்கவேண்டும். நாதுராம் சொல்கிறார், ‘நான் 1930ல் மாணவப் பருவத்தில் இருந்தபோது, பேராயக்கட்சி (காங்கிரசு) நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு பொதுத் தொண்டனாக ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டேன். அந்த இயக்கம் முடிவுற்றபோது இந்து-இசுலாமியர் பிரச்சினை முன்னிலை வகித்தது. அப்போது 1932ல் இரா.சு.சவின் கிளையை டாக்டர்.எட்கேவர் மராட்டியத்தில் துவங்கினார். அதனால் ஈர்க்கப்பட்டு இரா.சு.சவில் இணைந்தேன் ‘. ஆக, நாதுராம் பேராயக்கட்சியில் சேர்ந்தேன் என்று கூட சொல்லவில்லை. அக்கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஒரு பொதுநலத் தொண்டனாக பங்கு பெற்றேன் என்றுதான் சொல்கிறார். ஆனால், இரா.சு.சவில் இருந்து என்றும் அவர் விலகியதாகச் சொல்லவேயில்லை.
இரா.சு.சவின் முதல் சில உறுப்பினர்களில் நாதுராமும் ஒருவர். அமைப்பின் கல்வி/பயிற்சித் துறையின் தலைவராக குறுகிய காலத்தில் உயர்ந்தவர் நாதுராம். (இன்றைய சகா வகுப்புகளுக்கு முன்னோடி என்று நாதுராமைச் சொல்லலாம்) இரா.சு.சவில் உறுப்பினராக இருந்து கொண்டே, இவரும் இவர் சகோதரருமான கோபால் கோட்சேயும் இந்து மகா சபையின் (தற்கால பா.ச.க) அரசியல் பணிகள் பலவற்றில் கலந்து கொண்டு செயலாற்றியிருக்கின்றனர். 1940ல் இந்து மகா சபை நடத்திய, அய்தராபாத் அரசை (இசுலாமிய அரசை) எதிர்க்கும் போராட்டத்தில் இவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 1943ல் நாதுராம் பீகாரில் தடையை மீறி இந்து மகா சபையினரின் கூட்டத்தை நடத்துவதில் முனைப்பாக இருந்துள்ளார். நாதுராம் தூக்கிலிடப்பட்ட காலம் வரை (நவம்பர் 1948) அவர் இரா.சு.சவில் இருந்து விலக்கப் பட்டதாகவோ, அல்லது இந்து மகா சபையில் இருந்து விலகியதாகவோ சொல்லவேயில்லை. மாறாக அவ்வியக்கத்தினருடன் குறிப்பாக சவர்க்கருடன் தொடர்ந்து செயல்பட்டுதான் வந்துள்ளார். இதை கோபால் கோட்சேயும் உறுதி செய்கிறார்.
(கோபால் கோட்சே, காந்தியார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். சவர்க்கர்
குற்றம் நிறுவப்படவில்லை என்று விடுதலை ஆனவர் மற்றும் இந்து மகா சபையின் தலைவராக இருந்தவர்)
இப்படி நகமும் சதையுமாக இரா.சு.சவில் இருந்தவரை இரா.சு.சவிற்கும் நாதுராமிற்கும்
தொடர்பேயில்லை என்றால் எப்படிச் சரியாகும் ? ஏன் இதை மறைக்க முயல்கிறார் நண்பர் இராசேசு ? அத்வானி இதேபோலச் சொன்னபோது இரா.சு.ச அமைப்பு அத்வானி மேல் அதிருப்தி கொண்டு கண்டித்தது.
தற்காலத்தில் கூட, தேர்தல் முடிந்தவுடன், திருநாவுக்கரசர், அ.தி.மு.க கூட்டணியால்தான்
தோற்றோம் என்றார். உடனே பா.ச.க தலைமை அது கட்சியின் கருத்து அல்ல, அவரின் சொந்தக் கருத்து என்று அறிக்கை விட்டது. அதனால் திருநாவுக்கரசர் பா.ச.க கட்சியை சேர்ந்தவர் அல்லர் என்றாகிவிடுமா ?
பா.ச.க தலைமை மட்டுமல்ல எல்லா அரசியல் கட்சிகளும், நெருடலான விசயங்களில் ‘அது அவரது சொந்தக் கருத்து/செயல் ‘ என்று சம்பந்தப்பட்டவரை கழட்டி விட்டுவிடும். அப்படித்தான் இரா.சு.சவும் நாதுராமின் உறுப்பியத்தில் நடந்து கொண்டிருந்திருக்கிறதே தவிர வேறொன்றுமில்லை. அதோடு இரா.சு.ச மேல் விழுந்த தடையை அகற்றுவதற்காகப் பல முயற்சிகளை அவர்கள் செய்துள்ளனர் என்பது வரலாறு.
மற்றொன்று, இரா.சு.சவின் பரப்புரைகளைப் (பிரச்சாரங்கள்) பற்றியது. பரப்புரை வல்லுனர்கள்
இரா.சு.சவினர். மிக அழகாக, இனிமையாக, நேர்மையாளர்களாகப் பேசுவதில் வல்லவர்கள்.
ஒரு சிறிய வாய்ப்புக் கிடைத்தாலும் உடனே ‘பிரச்சாரம் ‘ செய்து விடுவார்கள். எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லவேண்டும். நாதுராம் கோட்சே காந்தியாரைக் கொன்று விட்டார். நீதிமன்றங்களுக்குப் போய் வந்து கொண்டிருக்கிறார் அது தொடர்பான வழக்குக்காக. அப்படி ஒரு தடவை போன போது, நீதி மன்ற வளாகத்தில் காந்தியாரின் மகனான
தேவதாசு காந்தியைப் பார்க்கிறார். தேவதாசும் நாதுராமைப் பார்க்கிறார். நாதுராம் தேவதாசிடம் பேசுகிறார். ‘நிச்சயமாக எனக்கும் உங்கள் தந்தையாருக்கும் எந்த சொந்தச் சரவலும் இல்லை; அரசியல் காரணத்திற்காக மட்டும்தான் நான் அவரைக் கொன்றேன் ‘ என்கிறார் நாதுராம். தேவதாசிடம் எந்த முக அசைவும் இல்லை. நாதுராமோ மேலும், ‘நான் உங்கள் தந்தையாரைக் கொன்றதைக் குறித்து விளக்கமளிக்கிறேன் – ஒரு அரைமணி நேரம்
கேட்க முடியுமா ? ‘ என்றாரே பார்க்கலாம்! காவலர்கள் உடனே அவரை அழைத்துச் சென்று
விட்டனர்.
இப்படிப் பாதகங்களைச் செய்து விட்டு பாதிக்கப் பட்டவர்களிடமே அதை ஞாயப்படுத்த
முனையும் இவர்களின் பரப்புரைக்கும் திறமை அபாரமானது. இதை உணர்ந்தவர்கள்
இரா.சு.சவினரை இம்மியளவும் கண்டுகொள்வதில்லை. உணராதவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
elangov@md2.vsnl.net.in
தேர்தல் அரசியலில் பா.ஜ.க. தலைதூக்கும் வரை, இந்தியாவில் தேசபக்தியை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து வைத்திருந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள். கடந்த சில ஆண்டுகளாக அந்த குத்தகை இந்துதுத்துவவாதிகளின் கைகளுக்கு மாறியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் புது குத்தகைக்காரர்கள் பழைய குத்தகைக்காரர்களுடன் கொஞ்சம்கூட பகிர்ந்துகொள்ள மறுப்பது. இவர்களின் அரசியல் நகைச்சுவைகளின் தொடர்ச்சியாக ஒரு சோகமான நிகழ்வைக்கூட தேச பக்தியை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில் தங்கள் அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள யத்தனிக்கும் முயற்சியே எல்லைக் காவல் படையினருக்கு சின்னக்கருப்பன் செலுத்தியிருக்கும் அஞ்சலி. இது போன்ற கொடுமையான இறப்புகளை அரசியல் காரணங்களுக்காக ஊதாசீனப்படுத்துவதைவிட மட்டமான செயல் அவற்றை அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்ள முயல்வது.
இந்த பத்திரிகையில் சளைக்காமல் வெளிவரும் மையக்கிழக்கு பிராந்தியத்தைப் பற்றிய விமர்சனங்கள் பெரும்பாலும் இந்துத்துவவாதிகளின், மேற்குலகின் கிறிஸ்துவ மூளைகளின் அச்சுகளில் வார்க்கப்பட்ட அரைவேக்காட்டுச் சரக்குகளாகவே இருக்கும். இவற்றுக்கிடையே சென்ற இதழில் வெளியான எச். பீர்முஹம்மதுவின் ‘பாலைவன மூளைகளும், பேரீத்தமரங்களும் ‘ மையக்கிழக்கு அரசியல், சமூகம், கலாச்சாரம் பற்றிய விமர்சனக் கட்டுரை ஒரு மாறுதலாக இருந்தது. பீர்முஹம்மது இந்த விஷயங்களைப் பற்றி இன்னும் விரிவாக எழுதவேண்டும்.
மு. சுந்தரமூர்த்தி
munirathinam_ayyasamy@yahoo.com
திரு மதிவாணன் அவர்கள் என் கட்டுரையைப் படித்து சொன்ன கருத்துக்கு நன்றி.
நான் ஜாக்கிச்சான் வேலை செய்கிறேன் என்று சொல்கிறார். நன்றி. எனக்கு ஜாக்கிச்சான் மிகவும் பிடிக்கும். எனக்குத் தெரிந்து எந்த வாசகரும் எனக்கு கை தட்டியதாகத் தெரியவில்லை. திண்ணையில் அப்படி ஏதேனும் கடிதங்கள் இருந்தால் சொல்லுங்கள். படித்து சந்தோசப்பட்டுக்கொள்கிறேன். அவ்வாறு கைதட்டவேண்டும் என்பதற்காக எழுதுபவன் அல்ல என்பது பலருக்குத் தெரியும் என்றே கருதுகிறேன்.
நான் காற்றில் விஷம் பரப்புகிறேன் என்று எழுதுகிறார். நான் இரா குழலினிக்கு எழுதியகட்டுரையில் எங்கே என்ன தவறு இருக்கிறது என்று தெளிவுபடுத்தினால் தவறை திருத்திக்கொள்கிறேன். சும்மா காற்றில் விஷம் என்று எழுதுவது என்ன விமர்சனம் என்று தெரியவில்லை.
நான் இந்தியர் அல்லது இந்து என்ற மாயையைக் கட்டமைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறுகிறார். இந்தியர் என்பதோ இந்து என்பதோ மாயை என்ற இவரது கருத்து கண்டு ஆச்சரியப்படுகிறேன். இதற்கான பதில்கள் பழைய திண்ணை கட்டுரைகளில் இருக்கின்றன. நான் திருப்பிச் சொல்வது தேவையற்றது. உணவு வேலை வாழ்க்கை எல்லா இந்தியர்களுக்கும் முக்கியமானதுதான். அதனை நோக்கி மக்கள் செல்லும் வழிதான் வேறுபட்டது. வெவ்வேறு வழிகளை மக்கள் சிபாரிசு செய்யலாம் என்பதை ஒப்புக்கொள்வதுதான் ஜனநாயகம். ‘அதோ சோவியத்தைப் பார். இதோ செஞ்சீனத்தைப் பார் ‘ அதுதான் ஒரே வழி ‘ என்று சொல்பவர்கள், வேறு வழிகளும் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்பவர்கள் மீது கொள்ளும் கோபத்தைத்தான் அவரது கடிதங்களில் காண்கிறேன். மேலும் அப்படி இந்து என்ற மாயையில் முழுகிவிடுவார்கள் என்று பயந்து முஸ்லீம் என்ற மாயையின் சுயநிர்ணய உரிமைக்காக பாகிஸ்தான் வேண்டும் என்று ஏன் இடதுசாரிகள் ஓலை எழுதிக்கொண்டிருந்தார்கள் என்றும் விளக்குவார் என்று கருதுகிறேன்.
சோனியா ஏன் பிரதமராகக்கூடாது என்று இரண்டு மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவற்றையும் படித்துவிட்டுகருத்து சொன்னால் நன்றாக இருக்கும். கூடவே தமிழ்நாட்டில் தமிழ்மக்கள் காங்கிரசுக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று சார்புநிலை எடுத்தே ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறேன். அடுத்து பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் போராடப்போவதாக வேறு பயமுறுத்துகிறார். அப்படி நடந்தால் இந்த ஆட்சி ஆறு மாதம் தாக்குப்பிடித்தாலே ஆச்சரியம்.
என் குற்றம் நான் என்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்வதுதானோ என்னமோ. இந்து என்று தங்களைக் கூறிக்கொள்ளாதவர்கள் மட்டுமே காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு ஓட்டுப்போடவேண்டும் என்று மதிவாணன் விரும்பினால், இந்தியாவில் மூன்று அல்லது நான்கு தொகுதிகளில் மட்டும்தான் காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் நிற்கவேண்டும்.
இந்து என்ற மாயையையும் இந்தியர் என்ற மாயையையும் எதிர்க்கிறோம் என்று தெளிவாக எல்லா தொகுதிகளிலும் திமுகவினரும் கம்யூனிஸ்டுகளும் இதர இடதுசாரிகளும் காங்கிரசாரும் பேசட்டும். எனக்கொன்றும் இல்லை. ஏனெனில் நஷ்டம் மக்களுக்கல்ல.
நட்புடன்
சின்னக்கருப்பன்
karuppanchinna@yahoo.com
- உலகத் தமிழ் குறும்பட/ஆவணப்பட விழா-கனடா டோரோண்டோவில்
- சமீபத்தில் வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா
- இசை கேட்டு…
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)
- வண்ணாத்திக்குளம்-குறுநாவல்-ஒரு வாசகாின் கண்டோட்டம்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி – 3
- நியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்
- நியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா
- ஆட்டோகிராஃப் ‘மூத்தவள்(ன்) நீ கொடுத்தாய் ‘
- கடிதங்கள் – ஜூன் 10,2004
- கடிதம் ஜூன் 10, 2004
- கடிதம் ஜூன் 10, 2004
- அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்
- கடிதம் ஜூன் 10,2004
- கடிதம் ஜூன் 10 ,2004
- கடிதம் – ஜூன் 10,2004
- வண்ணத்துப்பூச்சி விளையாட்டு….
- எலக்ட்ரான் எமன்
- கவிதைகள்
- மல மேல இருக்கும் சாத்தா.
- வாழ்வைப் பறிக்கும் பூச்சிக்கொல்லிகள்
- பூச்சிக்கொல்லி பாதிப்புகள்
- நஞ்சில் விளையும் பருத்தி
- இந்தியாவில் பூச்சிக்கொல்லிகள்
- கடிக்காமல் விடுவேனோ ?
- முகமிருக்கையில் முகமூடி எதற்கு ?
- போர்வை
- பூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்
- பெண் ஒன்று கண்டேன்
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 23
- மனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார்
- வாரபலன் – ஜூன் 10,2004 – தெருவில் மலரும் கலைகள் , மறந்துடுங்க வேறே கூட்டணி , வேட்டி போச்சு வேகம் வந்துச்சு
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 8
- சென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்)
- சூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்
- பிறந்த மண்ணுக்கு – 5
- தமிழவன் கவிதைகள்-ஒன்பது
- தீந்தழல் தோழியொருத்தி…!!!
- அம்மாவின் கடிதம்!
- நாத்திக குருக்கள்
- கவிக்கட்டு 10 -கதையாகிப் போனவளே !
- பறத்தல் இதன் வலி
- நிழல்
- பாரதத்தில் முன்னேறி வரும் பூதக் காற்றாடி யந்திர மின்சக்தித் துறைகள் [Giant Wind Power Development in India]
- தேனீ – அடை கட்டுமானமும் தற்காப்பும்
- தாய்மை – ஒரு உளவியல் பரிசோதனை
- புதிய உயிரினம் பிறப்பதை அறிவியலாளர்கள் கண்ணெதிரே பார்க்கிறார்கள்