எண்கோணம்
உளவுத்துறை என்பது குறித்து புகழ்செய்யப்பட்ட உருவகங்களில் இருந்து மாறுபட்டதாகவே உளவுத்துறையினரின் வேலைகள் இருக்கின்றன. உளவுத்துறையின் முக்கிய பொறுப்பு கிடைக்கும் பல தகவல்களை ஆராய்ந்து என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, அதை செய்பவர் யாராக இருக்கக்கூடும், இனி என்ன நடக்கும் எனக் கண்டறிவது. அதன் அடிப்படையில் இனி அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பது வேறு ஒரு துறை சார்ந்தது. அதைச் சார்ந்த கதைகள்தான் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அதீதப்படுத்தப்பட்டு காட்டப்படும் உண்மைகள். ஆனால், இவ்விரண்டு துறையினருக்கும் பொதுமையான முக்கிய தேவை சம்பத்தப்பட்ட மனிதர்களின் குணங்களைக் கண்டறிவது.
திண்ணையின் நெடுங்கால வாசகனாகிய நான், தொழில் நிமித்தமாய் ஒரு மனோ சாத்திர புத்தகத்தைப் படிக்கும்போது கிடைத்த கீழ்க்கண்ட தகவலும், நிகழ்வாழ்வில் நான் காணும் சில கருத்துக்களும் எங்கனமேனும் ஒத்துப்போகின்றன. ஆச்சரியம்தான்.
….that distress was more likely when social encounters were unfamiliar, involved power or status differences, difference in gender, or the presence of a group of people….. (page 18. Crozier, W. Ray; Alden, Lynn E. International Handbook of Social Anxiety: Concepts, Research, and Interventions Relating to the Self and Shyness. New York John Wiley & Sons, Ltd. (UK), 2001.)
வட அமெரிக்காவின் பத்திரிக்கைகளில் ஏறத்தாழ அனைத்தையும் இடதுசாரி வலதுசாரிகளாகப் பிரித்துவிடலாம். முற்றிலும் இடதுசாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட சூழலில் குறைந்த தீவிரம் காட்டுபவை வலதுசாரிப் பத்திரிக்கையாகவும், மிகத் தீவிரமான இடதுசாரிப் போக்கை முன்நிறுத்துபவை நடுநிலைப் பத்திரிக்கைகளாகவும் காட்டப்படுகின்றன. அதைபோலவே வலதுசாரிகளினால் ஆக்கிரமிப்பிற்கு உள்ளானவையும். இப்பத்திரிக்கைகள் அவற்றை நடத்துபவர்களின் லாபங்களுக்காக, கருத்துக்களுக்காக நடத்தப்படுவதுதான் இதற்குக் காரணம். இவ்வகை அமைப்புக்களில் கருத்துக்கள் கட்டமைப்பின் உச்சாணியில் இருந்து கீழ்நோக்கிப் பாய்கின்றன. பெரும்பாலான ஸோஷியலிஸ – கம்யூனிஸ நாடுகளில் இந்தப் போக்குதான் காணப்படும். இதற்கு மாறானதாக தனிப்பட்ட மனிதர்கள், சமூகத்தின் அடித்தள குழுக்கள் தங்களது மகிழ்ச்சி, கவலை, பயங்கள், நையாண்டி போன்றவற்றை கதை, கவிதை, கட்டுரை, கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்துவதை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் ஒரு சார்பற்ற பத்திரிக்கைகள் மிகவும் குறைவு. இக்குறைவான பத்திரிக்கைகளில் ஒன்றாக திண்ணையைக் காணலாம். திண்ணை எனும் இந்த இணைய இதழின் சிறப்பே பல்வேறு கருத்துக்களையும் அனுமதிக்கும் அறிவுசார்ந்த திறந்த மனதுதான். நேசக்குமாரும், நல்லடியாரும் தங்களது விவாதங்களை முன்வைத்து படிப்பவர்களை களிப்படையச் செய்தனர். அரவிந்தன் நீலகண்டன், ரவி ஸ்ரீனிவாஸ், ரசூல், ஐயன் காளி, பிறைநதிபுரத்தான், ஜடாயு உள்ளீடாக பல வண்ணங்களில் வானவில்கள் திண்ணையில் பூக்கின்றன.
ஆனால், இந்த திறந்த மனது எல்லாருக்கும் ஏற்புடையதாக அமையாது. முக்கியமாக சமூகமானது அறிவில் சிறந்த ஒரு குழுவால் மட்டுமே முற்றிலும் வழிநடத்தப்படவேண்டும் என்கிற கொள்கைவாதிகளால். இவர்களுடைய வாழ்க்கை பற்றிய புரிதல்களுக்கு மாறானதாக ஏற்படும் நிகழ்வுகளை இவர்களால் தகவமைத்துக்கொள்ள இயலாது.
திண்ணையில் உலகம் அறிந்த எழுத்தாளர்களோடு, என்னைப்போல தன்னைத்தானே அறியத்துடிக்கும் எளியவர்கள்வரை அனைவரும் எழுதுகிறார்கள். திண்ணையின் அளவுகோல் எழுதுபவர்களின் கருத்துக்கள் வெளிப்படும் நாகரீகம் குறித்ததாக இருக்கின்றது. ஏனெனில், நாகரீகம் குறித்து வரையறை செய்வதும் அதை நேர்மையாய் பயன்படுத்துவதும் எளிதானது. அதுவன்றி, அறிவில் சிறந்தவை எவை என்பது குறித்து முன்வைக்கப்படும் முடிபுகள் பெரும்பாலும் குருத்துக்களை வெட்டிவிட்டு உயர வளர்ந்த ஓக் மரங்களை மட்டும் எதிர்பார்க்கும் நிலையை உருவாக்கிவிடும் அபாயத்தை ஏற்படுத்தும்.
குருத்தாய் இருந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த பல வாய்ப்புக்களால் கொஞ்சம் கொஞ்சமாய் உரமேற்றி ஓக் மரங்களாகின்றனர். இந்த பல வாய்ப்புகளையும் இருவருக்கும் அளிப்பது திண்ணை செய்துவரும் பெரும்பணி. குருத்துக்களும், ஓக் மரங்களும் ஒருவரிடமிருந்து ஒருவர் பயன் பெறுகின்றனர் என்பது இயற்கை-வாழ்வாதார-சுழற்சி குறித்த இயற்கை ஆர்வலர்கள் கண்டறிந்த உண்மை.
வாஸந்தி என்பவர் தமிழ் நாவல்கள், கதைகள் படிக்கும் சூழலில் வளர்ந்தவர்கள் அறிந்த பெயர். இவரது கட்டுரையை திண்ணையில் நானும் கண்டேன். பாய்ந்து செல்லும் புகைவண்டி சன்னலின் வழியே கண்ணுக்குத் தெரியும்போதே மறைந்துவிடும் காட்சிகளின் அனுபவங்கள்போல அழகாய் புனையப்பெற்ற கட்டுரைகள். இக்கட்டுரைகளின் ஆதாரங்களையும், கட்டமைப்பையும் குறித்து ஜயராமன் என்பவர் கேள்விகள் எழுப்பினார். வாஸந்தியின் கட்டுரையில் பின்நவீனத்துவ பாணிபோல் எழுதப்பெற்ற துணுக்குத் தோரணங்களை சுவைத்தவர்களுக்கு ஜயராமன் என்பவர் எழுப்பியிருந்த கேள்விகளிலும் உண்மைகள் உள்ளன என்றே தோன்றியது (இதில் மாறுபடுபவர்களும் உண்டு). மலர்மன்னன் என்கிற ஒரு சிறந்த இலக்கியவாதியும் இக்கட்டுரை குறித்து கேள்விகள் எழுப்பினார். சனநாயகத்தோடு நடக்கும் ஒரு திறந்த சூழலில் இது குறித்த ஒரு சரியான எதிர்வினையை எதிர்பார்த்திருந்த என் போன்ற வாழ்நாள் மாணவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து, எதிர்பார்க்கக்கூடிய முறையில் இரண்டு கடிதங்களே பதிலாக வந்தன. இவ்விரண்டு கடிதங்களும் ஒன்றையொன்று மறுக்கும் போக்கில் அமைந்திருப்பது இன்னும் வேடிக்கையாக உள்ளது. ஒரு கடிதமோ ஜயராமன் என்பவர் யாராலும் அறியப்படாத பாமரன் அதனால் அவருடைய கருத்துக்களை வெளியே சொல்லப்படவேண்டியதில்லை என்கிறது. மற்றொரு கடிதமோ அனைவரும் அறிந்த மலர்மன்னனின் கடிதங்களை அனுமதிப்பது அவருடைய எதேச்சதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்கிறது.
ஜயராமன் குறித்த கடிதத்தில் அவரைக் குறிக்க பயன்படுத்தப்படும் காளான் என்கிற வார்த்தை ஒரு வசவுச் சொல். சமூகத்தில் ஏற்பட்டுள்ள களை என்கிற பொருளைத் தருவது. நேற்றைய மழையில் இன்று முளைத்த காளான் எனும் பொருளும் தருகிறது. இரண்டு பொருளிலும் ஒருவரை அழைக்க ஓக் மரத்தின் உச்சாணிக்கு அதிகாரம் உண்டு. அல்லது ஓக் மரத்தில் ஏறிய மரம்வெட்டியின் பார்வையிலும் இந்த உபயோகங்கள் சரியானவையே. அவரும் உயரத்திலிருந்துதானே குருத்துக்களைப் பார்க்கிறார்.
ஆனால், என் போன்ற திண்ணையின் வாசகர்களுக்கு அறிவுத் தென்றல் வருவது இளங்குருத்துக்களிடமிருந்தா, அல்லது உயர்ந்து வளர்ந்துவிட்ட ஓக் மரங்களிடமிருதா என்கிற கவலை இல்லை. திண்ணை ஆசிரியர் குழுவின் பங்கோ இத்தென்றலில் துர்நாற்றம் கலந்துவிடக்கூடாது என்பதோடு முடிந்துபோகிறது.
உதாரணமாய், “நல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:” என்கிற எனது கடிதம் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=80707263&format=html) இங்கே ஞாபகம் வருகிறது. என்னுடைய இஸ்லாமிய நண்பர்களோடு சேர்ந்து சில இந்துத்துவ நண்பர்களை எதிர்த்து வாதிட்டதால் எழுந்த விளைவு அது. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நடுவில் பொதுவான கேள்விகள் எழுப்பினால் இஸ்லாமியர்களால் பதிலளிக்க முடியாது என்ற இந்துக்களின் மூக்கை அறுக்க நான் செய்த முயற்சி அந்தக் கடிதம். மலர்மன்னன் பதிலளித்திருந்தார் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708021&format=html). நல்லடியாரிடமிருந்து எந்தப் பதிலும் காணாமல், சற்றே அதிகக் கேலியோடு எழுதியிருந்த எனது அடுத்த கடிதத்தையும் தணிக்கை செய்தே திண்ணை வெளியிட்டது. கேலியாக இருந்த கடிதம் கண்ணியமாக வெளிவந்தது. எனக்கு லேசான வெட்கம்தான். வெட்கப்பட்டதுதான் மிச்சம். நல்லடியாரிடமிருந்து இதுவரை பதில் இல்லை. யார் மூக்கையோ அறுக்கப்போய் என் மூக்கு அறுந்தது.
அதேபோல திண்ணையில் கண்டவரை ஜயராமனும் வாஸந்தியின் எழுத்தையே விமர்சித்திருந்தார். வாஸந்தியை அல்ல. ஜயராமனுடைய கருத்தில் ஏரணம் இல்லையெனில், அது வெறுப்பின் அடிப்படையில் எழுந்தது எனில், அது அங்கனம் இருக்கிறது என்பதை தருக்கத்தோடு அழகாய் சொல்லியிருக்கலாம். தருக்கம் என்பது காரண-அனுமானங்களின் அடிப்படையில் எழுவது. விமர்சனம் கருத்தினடிப்படையில் அமைய கற்றுக்கொண்டே இருப்பதும், பதிந்துவிட்ட பழைய பாடங்களை புதிய கருத்துக்களின் தாக்கத்தால் மறுதலிக்கவோ, மாற்றவோ, உள்வாங்கி உன்னதப்படுத்தவோ செய்யலாம். கல்லுதல் இல்லாதபோது தனிமனித வசவுகள் இலக்கியமாகின்றன.
அதே போல மலர்மன்னன் நாட்டாமை செய்து மற்றவரை விரட்டி அடிக்கிறார் என்றோர் குற்றச்சாட்டு. (ஆச்சரியமாக, என் வீட்டிலும் இப்போது நாட்டாமை படத்தைத்தான் என் மனைவியும், பேரக்குழந்தைகளும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கவுண்டர்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் குறித்துச் சொல்லிச் செல்லும் இந்தப் படத்தை என் பேரக்குழந்தைகள் கேலி செய்துகொண்டும், என் மனைவியோ ரசித்துக்கொண்டும் இருக்கிறாள். அவளது மெய்மறந்த ரசனை இந்த கிழவயதிலும் அவளை அழகாகவே காட்டுகிறது !) இந்தக் கருத்து மலர்மன்னனைவிட இந்திரா பார்த்தசாரதியையும், வாஸந்தியையும் அவமானப்படுத்துகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. நான் கவனித்தவரை தொட்டாற்சுருங்கும் மனப்பான்மை அவர்களிடம் இருந்ததில்லை. பதில் தரத் தகுந்ததாய் அவர்கள் கருதுவார்கள் எனின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறனும் அவர்களுக்கு உண்டு. ஆனால், அவர்களிடம் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு கடவுளின் சார்பாய் கிடையாடும், சாராயமும் கேட்கும் பூஜாரிகள் போல எழும் கடிதங்கள் தமிழ் இலக்கிய உலகின் தேவதைகளான இந்திரா பார்த்தசாரதியையும், வாஸந்தியையும் அவமானம் செய்கின்றன. இந்த புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்கு எங்கு எப்போது பதிலளிக்கவேண்டும் என்பது தெரியும். பதிலளிக்கத் தகுந்தவை அல்ல என முடிவு செய்ய எந்த மனிதருக்கும் உரிமையும் உண்டு.
மேலும், ஒருவரைக் குறித்து எழுத சமகாலத்தவராய் இருப்பது போதாது. அவருடைய வீட்டில் சமையற்காரர்களாகவோ, காரியதரிசிகளாகவோ இருந்திருக்கவேண்டும் என்பது நான் இதுவரை அறியாத புது நிபந்தனை. அலெக்ஸாண்டர் குறித்தும், நெப்போலியன் குறித்தும், நேருவைக் குறித்தும் அவர்களுடைய வீட்டுத் தோட்டக்காரர்களும், சமையற்காரர்களும் எழுதிய புத்தகங்களைத் இனி தேட ஆரம்பிக்கவேண்டும். (அட, இந்த நாட்டாமை படத்தில் வீட்டில் வேலைசெய்யும் தாழ்ந்த சாதிப் பெண்ணோடு தொடர்பு கொண்டதற்காக ஒரு உயர்ந்த சாதிக்காரரை சாட்டையால் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் !)
ஜயராமனை மிக எளிதாக காளான், முகவரி இல்லாதவர் என ஓக் மரத்தின் உயரத்திலிருந்து திட்டமுடிந்தாலும், மலர்மன்னன் அவர்களோடு விவாதம் செய்ய கீழிறங்க வேண்டும் என ஒரு சாக்கு; உச்சாணி தீட்டுப்பட்டுவிடும் போலும். மேலும், “வளவள பளபள பத்திரிகைகள் தேவைக்கு ஏற்ப எழுதச் சொன்னால் மலர்மன்னன் போன்றவர்கள் ஓடோடிப் போய் எழுதமாட்டார்களா என்ன?” என்கிற கீழ்த்தரமான தாக்குதல் வேறு.
மலர்மன்னன் இந்துத்துவ சார்புடையவர் என்பது அவரே சொல்லுவதுதான். ஆனால், அவருடைய கட்டுரைகள் பாஜகவின் அதிகாரபூர்வ கட்டுரைகள் என்பது இதுவரை யாரும் அறியாதது. இந்துத்துவவாதி என்றாலே பாஜக எனும் புரிதல், மேலே பறக்கும் பருந்திற்கு காடும் கழனியும் ஒன்றாய் தெரியும் சமத்துவப் பார்வையின் விளைவுதான். இந்த முன்னூகத்தின் அடிப்படையில் இனி இஸ்லாமியர்கள் தனிப்பட்ட முறையில் எழுதுவது தமிழக முஸ்லீம் லீக்கின் கருத்து எனவும், மார்க்கஸிஸ்ட்டுகள் தனிப்பட்ட முறையில் எழுதுவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து எனவும், கிருத்துவம் பற்றி எழுதுபவர்களுடைய கருத்துக்கள் பாப்பல் புல்லாகவும் முடிவு செய்யப்படவேண்டும் போலும். அறிவு பெறத்தான் திண்ணையைப் படிக்கிறோம். ஆனால், நீட்ஷேயின் தத்துவங்களை எளிதாய் கிரகிக்க முடிந்த எனக்கு இந்த தத்துவங்கள் தரும் அறிவு தலையை சுற்றவைக்கிறது !
ஹிட்லருடைய ஜெர்மனியிலும், முசோலியினுடைய இத்தாலியிலும், மாவோவின் சீனாவிலும், லெனினுடைய ருஷ்யாவிலும்தான் மாறுபட்ட கருத்தைத் தெரிவிப்பவர்கள் அழிக்கப்படவேண்டிய யூதசதிகாரர்களாகவும், மக்கள் விரோதிகளாகவும், பூர்ஷ்வாக்களாகவும், பழமைவாதிகளாகவும் வர்ணிக்கப்பட்டனர். இந்தியாவில் இந்துத்துவவாதி என்பதும் ஏறத்தாழ இதே உபயோகத்தில் இருக்கிறது. ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் நாட்டாமை படத்தில் வரும் வில்லனுக்கு இந்த பதங்களின் பதவிசு தெரியவில்லை போலும். “நாட்டாமை, தீர்ப்பை மாத்து” என்று கத்திக்கொண்டிருக்கிறான். இந்த திரைப்படத்தில் உலகம் நாட்டாமைகளாலும், அவர்களது தீர்ப்பை மாற்றச் சொல்லும் வில்லன்களாலும் நிரம்பியுள்ளது. இங்கேயுள்ள மனிதர்கள் பலருக்கும்கூட தமிழ் திரைப்படத்தைத் தாண்டியதாக உலகம் இல்லை.
நாட்டாமை தீர்ப்பை மாற்றுகிறாரோ இல்லையோ தெரியாது. ஆனால், யார் நாட்டாமை எது சரியான தீர்ப்பு என்பதை சுதந்திரமாக (இதுவரை) உள்ள உலகத்தின் புத்திசாலி வாசகர்களே முடிவு செய்கிறார்கள்.
எண்கோணம்
saakshin@gmail.com
- 20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு
- இழுக்காதே எனக்குரியவனை !
- அன்புள்ள திரு சிவகுமார்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சம் எத்தனை பெரியது ? (கட்டுரை: 2)
- இறந்தவன் குறிப்புகள் – 1
- பி.கே.சிவகுமார் கண்ணோட்டம்
- திரு பி.கே.சிவக்குமார் கடிதம் பற்றி
- நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2
- நான்தான் சட்டுவம் பேசுகிறேன்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 6 மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்
- படித்ததும் புரிந்ததும்..(9) பாகிஸ்தான் நெருக்கடியும் : இந்தியாவின் செருப்புக்கடியும்;
- பாட்டு வாத்தியார் – ஜெ. ராம்கியின் பாகவதர்
- தீபாவளி பற்றி ஒரு கடிதம்
- தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு!
- இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் வரவேற்பு
- பெண்ணியத்தின் மூன்றாம இதிகாசத்தின் அமானுஷ்ய பக்கங்கள்
- சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்
- உதயகுமரன் கதை
- திரு.பிகே.சிவகுமார் கருத்தைப் படிக்கும்போது
- லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 1 – அம்பாளின் தொப்புள்கொடி
- நினைவுகளின் தடத்தில்
- கடிதங்கள் குறித்த கடிதங்கள் குறித்த ஒரு கடிதம்
- கல்லறைக் கவிதை
- கடிதம்
- பி.கே. சிவகுமாரின் கடிதம்…
- த.கோவேந்தனின் ‘வானம்பாடி’ இதழ் அறிமுகம்
- அமெரிக்காவும் விழுமியங்களும்
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 35
- வேரற்றுப் போகிறவர்கள்
- பண்பாட்டிற்கு எதிரானது
- சுநாதர்
- இருபது ரூபாய் நோட்டு
- யார் அகதிகள்?
- “பயன்பாடு”
- குறிப்பேட்டுப் பதிவுகள் சில……
- சிந்தாநதி சகாப்தம்
- நாவடிமை (கண்ணிகள்)
- தாகூரின் கீதங்கள் -2 கண்ணுக்குப் பின்னே அமர்ந்துள்ளாய் !
- இல்லாமல் போனவர்கள்
- தீபாவளித் திருநாளில்
- கிளி ஜோசியம்!
- இலை போட்டாச்சு 37 – ரவா லாடு
- லா.ச.ரா
- இலஞ்சி சொக்கலிங்கனார் கண்ட ‘சமய கிண்டர்கார்டன்(அ) ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்’