கடிதங்கள் ஏப்ரல் 15,2004

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

நாகூர் ரூமி – அப்துல் சலாம் – ஜெயமோகன் – கார்த்திக் ராமசாமி – பித்தன்


கொஞ்ச நாட்களுக்கு முன் வந்த இஸ்மாயீல் அவர்களுடய ‘வாப்பாக்காக ‘ என்ற கதையை இன்று படித்தேன். ரொம்ப அற்புதமாக இருந்தது. நாகூர் பக்கம் வாழ்கின்ற முஸ்லிம்களுடைய வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பிரதி நிதித்துவப்படுத்துவதாக இருந்தது. வாழ்த்துக்கள்.

பிச்சினிக்காடு இளங்கோவின் ‘யார் நிரந்தரம் ? ‘ கவிதை அருமை. சாத்தான் அதிக ஆற்றலுள்ளவனா அல்லது ஆண்டவனா என்று கேட்பதுண்டு. அதைப்போன்றதொரு தத்துவப்பூர்வ தொனியில் அழகாக அமைந்திருந்தது கவிதை. ‘உன் முத்தம் எங்களுக்கு மூல மந்திரம் ‘ என்ற வரிகளில் 2000 ஆண்டுகால வரலாறும் அதன் தொடர்ச்சியும் சுட்டப்பட்டுவிடுகிறது.

பா.சத்தியமோகன் கவிதைகளில் ஒரு தத்துவ இழையை கொஞ்ச நாட்களாக காணவும் ரசிக்கவும் முடிகிறது. ‘பச்சை தீபங்கள் ‘ என்ற படிமம் அழகானது.

நாகூர் ரூமி

ruminagore@yahoo.com


ஆசிரியரவர்களுக்கு

இந்த மின் பத்திரிக்கையைப் பற்றி கேள்விப்பட்டு இப்போதுதான் படித்தேன். இந்துத்துவ விசம் கக்கும் இதழாக உள்ளது. பலர் இஸ்லாம் மதத்தினைப்பற்றி தெரியாமல் வெறுப்பை கக்குகின்றார்கள்.

சூடானில் நடக்கும் சில பூசல்களை பெரிதுபடுத்தி திண்ணை காம் போன்ற மற்றும் இந்துத்துவ பார்ப்பன இதழ்கள்போடும் செய்திகளை புரிந்துகொள்வது கஷ்டமேயல்ல. அவை இஸ்லாமிய மதத்துக்குள் நடக்கும் சிறிய சண்டைகள்தான். இஸ்லாமியர் தங்கள் அமைதிமதத்தில் உள்ள தலைமையின் மூல அதை எளிதாகப் பேசி தீர்க்கமுடியும். ஒவ்வொரு இஸ்லாமியனும் இன்னொரு இஸ்லாமியனைப் பார்ர்கும்போது ‘ உனக்கு அமைதி உண்டாகட்டும் ‘ என்று தான் சொகிறான். ஆகவே ஒரு உண்மையான இஸலாமியன் இன்னொரு உண்மையான இஸ்லாமியனைக் கொல்வது நடக்கவே நடக்காது. சூடான் விஷயத்துக்குள் அமெரிக்க சதி இருக்க வாய்ப்பு அதிகம். யூத பார்ப்பனிய வெறியர்கள் இஸ்லாமை அழிக்க உலகளாவிய முயற்சிகளை மேற்கொண்டுவருவதன் ஒரு பகுதியாகவே இதை நாம் காணவேண்டும். இஸ்லாமுக்குள் இனப்பிரச்சினை உள்ளது ஆகவே இந்திய சாதிப்பிரச்சினைக்கு அது ஒரு தீர்வை அளித்திட முடியாது என்று காட்ட விரும்பும் பிராமண சக்திகளினால் ஊடகங்களிலே பெரிதுபடுத்தப்படும் விஷயம்தான் இது .இம்மாதிரியான அனேகம் சவால்களை நேர்கொண்டு வென்றதே புனித தீன். இது அதற்கு ஒரு பொருட்டே அல்ல இன்ஷா அல்லா!

அப்துல் சலாம்

zalamabdul@yahoo.co.in

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)


திண்ணை இணைய இதழில் வந்து நூல்களாக வந்துள்ள ஆக்கங்களைப்பற்றிய குறிப்பு கண்டேன் இரு முக்கிய விடுபடல்கள் உள்ளன. வெ வெங்கடரமணனின் ‘குவாண்டம் கணினி ‘ நீலகண்டன் அரவிந்தநின் ‘ கடவுளும் நாற்பது ஹெர்ட்ஸும் ‘ ஆகிய இரு நூல்களும் திண்ணையில் வெளியான அறிவியல்கட்டுரைகளின் தொகுப்புகள். இவை தமிழினி வெளியீடாக வந்துள்ளன. எளிய ஆர்வமூட்டும் நடையில் முறையில் அறிவியலை எழுதியுள்ள வெங்கட் ரமணனின் நூல் பரவலாக ரசிக்கப்பட்டு வருகிறது. அரவிந்தன் நூல் இன்னும் கடைகளுக்குவரவில்லை

ஜெயமோகன்

jeyamohanb@hotmail.com


திண்ணையில் ஆசாரகீனன் என்பவர் தந்தை பெரியாரின் கட்டுரைகளை தட்டச்சி அனுப்பி வெளியிடுகிறார்.

அவரது முயற்சி கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விடாது ஒரு தவம் போல் செய்து வருகிறார்.

நான் பெரியாரை அவர்களை மிகவும் மதிப்பவன். சமத்துவத்தை மிகவும் பேணுபவன். ஆதிக்கத்தை, பிராமணீயமாயினும் அல்லது எந்த வடிவத்தில் இருந்தாலும் எதிர்ப்பதற்காக யோசித்து தூக்கம் வராமல் தவிப்பவன். பெரியார் மிகப்போற்றும் சமத்துவம் என் வாளின் மறுமுனையாம். இருப்பினும்,

நாத்திகத்தின் கருத்தாங்களின் பிடியில் அறிவு மழுங்கடிக்கப்படுகிறது என்பதுதான் என் புரிதல்.

முடிந்தால் ஆசாரகீனன் என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு தொடர்ந்துபதில் சொல்லிவிட்டு கட்டுரைகளை மேற்கொண்டு எழுதிச் செல்லட்டும்.

உதாரணமாய் கடவுளை சிலை மட்டுமே என்கிற மூடத்தனத்தை பெரியாரியம் பரப்புவதை அடியோடு வெறுக்கிறேன். என்வேதான் பெரியாரிகளுக்கு,சிலைக்கு செருப்பு மாலை போடும் மிக இழிந்த ஒரு யோசனை உருவாயிற்று. இது பெரும் பாலான மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல் என்பதை கூடவா அந்த இயக்கத்தால் யோசிக்கமுடியவில்லை. இவர்களில் பலர் நாய்க்கும், பாம்புக்கும் பயப்படுபவர்கள். ஆனால் கடவுளுக்கு பயப்படாதவர்கள் என்னே இவர்களது வீரம்.

உதாரணமாய் ஒரு கேள்வி,

ஒரு மாம்பழத்தில் எப்படி புழு உண்டாகிறது ? அதாவது உயிரற்ற பல பொருட்களின் கூட்டு சேர்க்கையில், ஒரு அசையும் தன்மையுடைய உயிர் உருவாவது எப்படி. இந்த முறையின்கண் இந்த அவனியையும் அண்டங்களையும் படைத்த பொருள் எது ? அந்த பொருளை ‘கடவுள் ‘ என்ற வார்த்தையிட்டு நான் அழைத்தால் , எங்கே போய் செருப்பு மாலை போடுவீர்கள் ?

இவர்கள் ‘கொழுனன் ‘ என்றால் புருசன் என்று அர்த்தம் கற்பிப்பார்கள்.

‘கற்பு ‘ என்றால் உடல் ரீதியானது என்று அர்த்தம் செய்துகொண்டு,கற்பு என்பது என்ன என்று கேள்வி எழுப்புவார்கள். பெய் என்று சொன்னால் மழை பெய்யலையே, அதனால் எல்லா பெண்களும் கற்பில்லாதவர்களா என்று வாய் கூசாமல் கேட்பார்கள்.

ஜால் சாப்பு செய்யாமல், கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். பெரியார் கடவுளை ஒத்துகொண்ட இடம்

கட்டுரைகளில் எழுதப்படாமல் இருக்கலாம். நீங்களும் படிக்காமல் இருக்கலாம். வரலாற்று சம்பவங்களையும், பெரியார் ‘எனக்கு பின்னால் ஒரு கூட்டம் வளர்ந்து விட்டது, என்னால் இனி என் நிலைப்பாட்டை மாற்றிகொள்ள முடியாது ‘ என்று சொன்னதை பார்த்தவர்களும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்களை எனக்கு நன்றாகத்தெரியும்.

இது போல் ஆயிரம் கேள்விகளை என்னால் அள்ளி வீசமுடியும். என் நோக்கம் அதுவல்ல.

பெரியாரிகளையோ, அவரது கருத்துகளை இகழ்வதோ என் நோக்கமல்ல. மாறாக பெரியாரியத்தை பேணுபவர்கள் சிந்திக்க மறுக்கிறார்களோ என்ற என் ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன்.

karthikramas@yahoo.com


திரு. அரவிந்தன் நீலகண்டனின் கடிதம் வழக்கம்போல அரைத்த மாவையே அரைத்திருக்கிறது. எந்த மாவரைக்கும் எந்திரமும் இவருடன் போட்டியிட முடியாதென நினைக்கிறேன்! வழக்கம் போல பெரியார் பிரச்சாரம் விஷமத்தனம், விஷத்தனம், இனவாதப் பிரசாரம் etc. etc. 2 அல்லது 3 வாரங்களுக்கு ஒரு முறை வந்து பெரியார் இனவாதப் பிரசாரம் செய்தார் என்றும் இன்னும் என்னவெல்லாம் அவரை திட்டமுடியுமோ அவ்வளவையும் திட்டாவிட்டால் அவருக்கு தூக்கம்

வராது போலிருக்கிறது. (பாவம் அப்படி ஒரு நிலை!). மற்றபடி யாராவது பெரியார் பெயரை சொன்னாலே போதும், எந்த காரணம் என்று கூடப் பார்க்காமல், விஷம், விஷமம் என்று ஆரம்பித்துவிடுகிறார். யாருக்கு விஷம் என்றெல்லாம் ஏற்கனவே

ஆராய்ச்சி செய்தாகிவிட்டது. மக்களுக்கும் தெரியும். எனவே இனி எப்படி புலம்பினாலும் ஒன்றுமில்லை. எங்கள் வாதம் சம்ஸ்கிருதம் எதற்காகத் தேவை ? என்ற கேள்வியுடன் ஆரம்பித்ததாக ஞாபகம். அந்த தேவைக்கான நியாயமான இப்போதையக் காரணம் எதாவது ஒன்றையாவது சொன்னால்தான் மேற்கொண்டு விவாதிப்பதிலே அர்த்தமிருக்கும் என்று போன கடிதத்திலேயே சொல்லியாகிவிட்டது. அதை சொல்லாத வரை இதில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை.

சம்மந்தமில்லாமல் ஆர்.எஸ்.எஸ் பாட்டு ஒன்றை சொல்லியிருக்கிறார். எதற்கென்று புரிபடவில்லை. இந்தியா ஒன்று என்று சொல்ல இந்த பாடல் எதுவும் தேவையில்லாமலிருக்கிறது. அதுதான் முழுபாடலா இல்லை இன்னும் இருக்கிறதா என்று அறிய ஆவல். கல்லு தெய்வம், மண்ணு தெய்வம் என்பதோடு நின்றுவிடுகிறதா அல்லது, வேளாங்கண்ணி சிலுவை செய்த இரும்பு தெய்வம், ஆக்ராவில மசூதி செய்த சலவக் கல்லும் தெய்வம் என்பதாக எதாவது இருக்கிறதா என்று அறிவதற்காக கேட்கிறேன். அப்படி எதாவது இல்லையென்றால், இந்த பாடலில் உள்ள இந்தியா ஒன்றுதான் எந்த அர்த்தமுமில்லை. வெறும் மேடைப் பிரச்சாரம் என்பதற்குமேல் அதில் எதுவுமில்லை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி ரக இந்துத்துவக் கும்பல்களுக்குத்தான் தேசப்பற்று இருக்கிறது என்பதுபோல ஒரு பெரிய மாயையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.மத விகிதப்படி பிரித்து ஒரு 20 சதவிகித மக்களை சிறுபான்மையினர் என்று சொல்லி வருகிறார்கள். (அப்படி சொல்லப் படுபவர்கள் சாதி விகிதத்தில் பிரித்துவிட்டால் யார் சிறுபான்மை என்பது எல்லோருக்கும் தெரியும்! 3 சதவிகிதம் உள்ள இனத்தவர் அதிகாரத்திலிருந்து ஆட்சி செய்யும் நாட்டில் 20 சதவிகித மக்கள் ஏன் சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுகிறார்கள் என்பது இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது!). 20 சதவிகிதம் என்பது 20 கோடி மக்கள்! பல நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகம். 20 கோடி மக்களையும், அவர்களின் உணர்வுகளையும் ஒதுக்கிவைத்து விட்டு இந்தியா ஒன்றுதான் என்று பாட்டுப் பாடினால் அது எப்படிப் பட்ட போலி பிரச்சாரம் என்பதும், எப்படிப் பட்ட நாட்டுப் பற்று என்பதும் மக்களுக்குப் புரியட்டுமாக.

****

மழைகாலங்களில் சாலையில் சும்மா நின்று கொண்டிருப்பவர் மேல் சேறையிறைத்துவிட்டு செல்லும் வாகனம் போல திரு. முரளி ஆனந்த் போகிற போக்கில் ‘பித்தன் என்று ஒருவர் ஜெயமோகனை எல்லாரும் திட்டுவது பற்றி மிக சந்தோசமாக எழுதுகிறார் ‘ என்று இறைக்கிறார். அப்படி அவர் நினைப்பதற்கான எந்த காரணத்தையும் தராமல்!

திரு. ஜெயமோகனுக்கு நான் எழுதிய முதல் கடிதத்தைப் பார்த்திருந்தாலே, இலக்கிய உலகிலுள்ள சண்டைகளையும் பூசல்களையும் கண்டு மனம் வெதும்பித்தான் ஏன் இப்படி ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொள்கிறீர்கள். சமுதாயத்தில் மாற்றத்தைக்கொண்டு வரவேண்டிய எழுத்தாளர்கள் எதற்காக இப்படிக் கீழ்த்தரமாக நடந்துகொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறேன். ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கொள்வதும், அடித்துக்கொள்வதும் தேவையற்றது என்றும்

மோசமானது என்றும் சொல்லிக்கொண்டிருக்கும் நான், ஜெயமோகனை மற்றவர்கள் திட்டுவது கண்டு சந்தோசப் பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நினைப்பது போல முட்டாள்தனம் ஏதுமில்லை. ‘தனிமனித சாடல்கள் (இப்போது ஜெயமோகனை எல்லோரும் திட்டிக்கொண்டிருப்பதையும் சேர்த்து) எப்போதும் மோசமானவை, தவறானது ‘ என்று மிகத்தெளிவாகவே அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். மேலும் ஜெயமோகன் நன்றாகவே எழுதுகிறார் என்றும், அவரின் மற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்கு மரியாதை தராத கர்வமும், அவரே அவ்வப்போது சொல்லும் தனிமனித சாடல்களாலுமே அவருக்கு வசைகள் கிடைக்கின்றன என்றும்தான் குறிப்பிட்டிருந்தேன். இதையெல்லாம் திரு முரளி படித்தாரா என்பதே கேள்வி குறியாக இருக்கிறது. எழுத்தாளர்கள் தங்கள் கர்வத்தை நிலை நாட்டவும், தனித்தன்மை பெறவேண்டும் என்ற நினைப்பாலுமே சக எழுத்தாளர்களை திட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும், எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்பதை நிர்ணயிப்பதை காலத்திடம் விட்டுவிடுங்கள், எதற்கு சண்டை என்பதும் தான் ஜெயமோகனுக்கான என் எதிர்வினை என்று படித்தாலே தெரிந்துவிடும். மற்றும் எது இலக்கியம் என்று ஜெயமோகன் வரையறுக்கிறாரோ, அந்த வரையறைக்குள் இருக்கும் பலவற்றையும் வேறு காரணங்களுக்காக (வணிக எழுத்து, நடை சரியில்லை…) இலக்கியமில்லை என்று சொல்லி அவர் வரையறையிலிருந்தே அவர் வேறுபடுகிறார் என்றும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

ஜெயமோகனுக்கான உங்கள் பக்தியைப் பாராட்டலாம். ஆனால் எல்லோருக்கும் அப்படிப் பட்ட பக்தி இருக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம். ஜெயமோகனோ (அல்லது வேறு யாருமோ) விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நான் நினைக்கவில்லை. திரு. கிருஷ்ணா என்பவர் நாண்டாடெய்ல் மாதிரி கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் என்று, மட்டம் தட்டுவதாக நினைத்து புகழ்ந்திருக்கிறீர்கள். அனேகமாக அவர் உங்களுக்கு நன்றி சொல்லக்கூடும். கல்கி, ஜெயகாந்தன் போன்றோரின் கதைகள் கூட நாண்டாடெய்லில் இருந்திருக்கிறது என்பதையாவது தெரிந்துகொள்ளுங்கள். அல்லது ஜெயகாந்தன் நாண்டாடெய்லில் எழுதியிருக்கிறார் என்பதால் அவரும் ஜெயகாந்தனை விமர்சிக்கக் கூடாதா ?!

என் கடிதங்கள் ஜெயமோகனை நோக்கி எழுதப்பட்டிருந்தாலும், அதில் எல்லா எழுத்தாளர்களும் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வியே உள்ளது. குழுக்களாகப் பிரிந்து சண்டையிட்டுக்கொள்வது, தனிமனித வாடலில் ஈடுபடுவது, தனித்தன்மை பெறவேண்டும் என்று பல படைப்புக்களை உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக விலக்குவது, தங்கள் கர்வத்தை நிலை நிறுத்த வாசகர்களையும், சக எழுத்தாளர்களையும் சாடுவது என்பது போன்ற தவறான கருத்துக்கள் கொண்டிருக்கும் அனைத்து எழுத்தாளர்களுக்குமான சாடலே என் கடிதங்கள். படித்தாலே சிரிப்பாக இருக்கிறது என்பது போன்று மழுப்பாமல், ஜெயமோகனுக்கான (எழுத்தாளர்களுக்கான) என் கடிதங்களில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் குறிப்பிட்டு பேசினால் நன்றாக இருக்கும். இலக்கிய வாசனையே இல்லாதவர்கள் என்று சில பேரை சொல்லியிருக்கிறீர்கள், அதை எப்படி கண்டுபிடித்தீர்கள், அதற்கான காரணம் என்ன என்றும் விளக்கினால் நன்றாக இருக்கும். இப்படி ஏதுமில்லாமல் தனிமனித சாடலில் சிலர் இருங்குவதால் தான் பூசல்களே வருகின்றன. நீங்கள் அந்த தவறை செய்துவிட்டு, மற்றவர்கள் ஏன் பூசல்களில் ஈடுபடுகிறார்கள் என்று வியப்பதை என்ன சொல்ல ?! எந்த காரணமும் இல்லாமல் போகிறபோக்கில் மற்றவரை சாடுவது விஷமத்தனம். அதை இனி நீங்கள் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

****

இந்த வாரமும் பல கவிதைகள் அருமை. குறிப்பாக திரு.சலாம் அவர்களின் மேலான படைப்பு.

– பித்தன்.

piththaa@yahoo.com


Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி